சனி, 7 மார்ச், 2020

பொருளாதார வீழ்ச்சியின் பின்னணி என்ன?



-
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
--------------------------------------------
ஒரு நாட்டுக்கும் வீட்டுக்கும் பொருளாதாரப் பலம்தான் அடிப்படை. பொருளாதாரத்தை வீழ்த்திவிட்டால் சீரான நிர்வாகத்தைச் சிதைத்துவிடலாம். சீரான நிர்வாகம் சிதைந்துவிட்டால் சட்ட ஒழுங்கு கெட்டுவிடும். அதன்பின் குற்றங்கள் மலிந்துவிடும். பின்னர் மனிதனை மனிதன் அடித்து அல்லது பறித்துச் சாப்பிடுகிற அவல நிலை உருவாகும். பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த சிலபல நாடுகளின் இன்றைய நிலை இதுதான். இதுவெல்லாம் எதற்கு? குறிப்பிட்ட ஓரினத்தை அழிப்பதற்காகத்தான்.

ஆம்! எத்தனையோ விஷயங்களைத் திட்டமிட்டுச் செய்கிற அரசுக்கு, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழியா தெரியாது? பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருக்கின்ற வரை ஓரினத்தை அவ்வளவு எளிதாக அழித்துவிட முடியாது. பொருளாதாரம் என்பது மனிதனின் இரண்டு கால்கள் போன்றது. இரண்டு கால்கள் இருக்கின்ற வரை ஒருவன் தான் நாடிய இடத்திற்குச் சென்று கொண்டிருப்பான். ஒரு காலை உடைத்துப்போட்டுவிட்டால் ஒரே இடத்தில் முடங்கிப் போய்விடுவான். அதுபோலவே முஸ்லிம் இனத்தை அழிப்பதற்கு நாடு தழுவிய பொருளாதார நெருக்கடி வலிந்து உருவாக்கப்படுகிறது. பிறகு நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பதற்காக மக்களின் சேமிப்புப் பணத்தில் கைவைக்கப்படும். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாகக் கைவைத்து, தனி மனிதப் பொருளாதாரம் கேள்விக்குறியாக்கப்படும். தனி மனிதப் பொருளாதாரமே சிதைந்து கொண்டிருக்கும்போது, அரசு யாரை அழிக்கிறது; யாருக்குத் துரோகம் செய்கிறது என்பது பற்றி யாருமே கவலைகொள்ள மாட்டார். அவரவர் தம்மைப் பற்றியும் தம் பசியைப் பற்றியுமே சிந்தித்துக்கொண்டிருப்பார்.

பொருளாதாரச் சிதைவை ஏற்படுத்த, புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்தது; ஜிஎஸ்டி வரி விதிப்பைச் செயல்படுத்தியது; சிறிய வங்கிகளைப் பெரிய வங்கிகளுடன் இணைத்தது ஆகிய மூன்று திட்டங்களைச் செயல்படுத்தியது மதவாத அரசு. புழக்கத்திலிருந்த ரூபாய் நோட்டுகளைத் திடீரென மதிப்பிழக்கச் செய்து அதன்மூலம் வங்கிக்குத் திரும்ப வராத பணத்தை அப்படியே மூட்டையாகக் கட்டிக்கொண்டது மத்திய அரசு. அது குறித்த கணக்கு எதுவும் வெளிவரவில்லை. கடைசியில், 97 சதவிகிதப் பணம் திரும்ப வந்துவிட்டது என்று அரசு அறிவித்தது. இது ஒரு தோல்வியான திட்டம் என்பது நிரூபணமாகிவிட்டதோடு, இதில் அரசுக்கு மிகப் பெரிய இழப்பும் ஏற்பட்டுள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறினார்கள். ஆனால் மதவாத அரசின் திட்டம் இதன்மூலம் வெற்றி பெற்றுள்ளது என்பதுதான் மற்றொரு கோணத்தின் பார்வை.

ஜிஎஸ்டி வரியை 28 சதவிகிதம் வரை உயர்த்தி, மிகப் பெரும் வரிச்சுமையை மக்கள்மீதும் நிறுவனங்கள்மீதும் சுமத்தியதால் பல்வேறு முதலாளிகள் தம் நிறுவனங்களை இழுத்துமூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சிறு குறு வியாபாரிகள் தம் தொழிலில் நலிவடைந்தனர். விறுவிறுப்பான வியாபாரம் இல்லாததால் பலர் சோர்ந்துபோயினர். பலர் தாம் செய்த தொழிலை நிறுத்திவிட்டு, மாதச் சம்பள வேலைக்குச் சென்றுவிட்டனர். மிகுந்த வரிச்சுமையால் மக்களின் கொடுக்கல் வாங்கலில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதிகப்பட்ச வரியால் செல்வர்கள் தம் பணத்தை அவ்வளவாகச் செலவழிக்க அஞ்சுகிறார்கள். இதுதான் இன்றைய பொருளாதார நிலை. இதெல்லாம் மதவாத அரசு எதிர்பார்த்ததுதான். மதவாதக் கூட்டத்தின் திட்டம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

தற்போது ஓர் அறிவிப்பு வந்துள்ளது. அதாவது வங்கிகள் திவாலானால் முதலீட்டாளர்களுக்கும் சிறுசேமிப்பாளர்களுக்கும் அதிகப்பட்சமாக ஐந்து இலட்சம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தற்போது எல்லா மக்களிடையேயும் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டிச் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தை நஷ்டம்என்ற பெயரில் அரசே எடுத்துக்கொள்ளப்போகிறதே என்ற கவலை வங்கியில் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, நிரந்தர வைப்புக் கணக்கு தொடங்கியுள்ள ஒவ்வொருவரையும் கலக்கமடையச் செய்துள்ளது. இந்த அறிவிப்பு பரவலானால் வங்கியில் பணம் போட்டவர்கள் தம் பணத்தை எடுக்கத் தொடங்குவார்கள். அதனால் உண்மையிலேயே வங்கியில் பண இருப்பு குறையத் தொடங்கிவிடும். அதன் பொருளாதாரப் பரிவர்த்தனைகளில் சுணக்கமும் முடக்கமும் ஏற்படும். அதன்பிறகுதான் உண்மையிலேயே வங்கி திவாலாகும் நிலை உண்டாகும். இதுவும் மதவாத அரசின் திட்டமே.

திவாலான பின்னர், வங்கியில் தம் பணத்தைச் சேமிப்பில் வைத்திருந்தவர்களுக்கு அவர்களின் தொகைக்கேற்ப ஒரு சிறுதொகையை வழங்கத் தொடங்குவார்கள். கோடிக்கணக்கில் வைத்திருந்தவர்களுக்குச் சில இலட்சங்களும், இலட்சக்கணக்கில் வைத்திருந்தவர்களுக்குச் சில ஆயிரங்களும், ஆயிரக்கணக்கில் வைத்திருந்தவர்களுக்கு சில நூறுகளும் திருப்பி வழங்கப்படும். இப்போது ஒரு கேள்வி எழலாம். ஐந்து இலட்சம் அல்லவா சொன்னார்கள். நீங்கள் சில இலட்சங்கள் என்கிறீர்களே? ஆம். அதிகப்பட்சமாக ஐந்து இலட்சம்என்றுதான் சொல்லியுள்ளார்கள். எனவே அவர்கள் குறைந்தபட்சமாக எவ்வளவு தந்தாலும் அதை வாங்கிக்கொண்டு வாய்மூடி இருந்துவிட வேண்டியதுதான். எதிர்த்துப் பேசினால் தேசத் துரோகியாகச் சித்திரிக்கப்படுவீர்கள்.

இதெல்லாம் எதற்காக? நாட்டு மக்கள் யாவரும் தத்தம் வேலையைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்துவிட வேண்டுமென்பதற்காகத்தான். பிறர் தாக்கப்படும்போது, அழிக்கப்படும்போது என் இனம், என் சாதி என்று யாரும் முன்வரமாட்டார். ஒவ்வொருவரும் தத்தம் பசியையே முக்கியமாகக் கருதுவார்களே தவிர பிறரைப் பற்றிய சிந்தனையோ பொதுநலனோ அறவே இருக்காது. இப்போதே நகரங்களில் மக்கள் பலர் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். இப்போது சிலருக்காவது பொதுநலன் குறித்த அக்கறை உள்ளது. நாட்டில் மிகுந்த வறுமை வாட்டுகின்றபோது, யாரும் யாரைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். அத்தகைய சூழலை உருவாக்குவதுதான் ஆளும் பி.ஜே.பி. அரசின் கனவுத்திட்டம். அத்தகைய சூழல் உருவாகிவிட்டால், குறிப்பிட்ட இனத்தை அழிப்பது மிக எளிது.

முஸ்லிம்களுக்குப் பிரச்சனை என்றால் பிற சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் குரல் கொடுக்கின்றார்கள். இது இன்றைய நிலை. ஆனால் இன்னும் சில ஆண்டுகள் கடந்தபின், பொருளாதாரம் அதல பாதாளத்திற்குச் சென்று எங்கும் வறுமை தாண்டவமாடும்போது அவரவர் தத்தம் வேலையைப் பார்த்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். நமக்காகக் குரல் கொடுக்க யாரும் இருக்க மாட்டார். இதை நீங்கள் கற்பனை என்று நினைக்கலாம். இதை நாம் புரிந்துகொள்ள, இருபத்தைந்து வருடங்களுக்கு முந்தைய நிலையைச் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். முஸ்லிம்என்ற இனவேறுபாடு அன்று இருந்ததா? சமயக் காழ்ப்புணர்வு இருந்ததா? முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்கு விடமாட்டோம் என்று யாராவது சொன்னாரா? முஸ்லிம்களை தீவிரவாதிஎன்ற கண்ணோட்டத்தோடு யாராவது பார்த்தாரா? ‘முஸ்லிம்என்ற கண்ணியமும் மரியாதையும்தானே அன்று இருந்தது? இன்று அப்படியே தலைகீழாக எல்லாம் நடக்கிறதா, இல்லையா? இன்னும் சில ஆண்டுகளுக்குப்பின் சூழ்நிலை இதைவிட மோசமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. பாய்என்ற மரியாதை இன்று ஓரளவுக்கேனும் உள்ளது. இருக்கின்ற கொஞ்ச மரியாதையையும் அழிப்பதற்கான வெறுப்புப் பிரச்சாரமே இன்று தீவிரமாகச் செய்யப்படுகிறது. மீண்டும் மீண்டும் முஸ்லிம்களுக்கெதிரான காட்சிகள் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட எல்லாவித ஊடகங்களிலும் பரப்பப்படுகின்றன. அதன் விளைவை நாம் இன்று அனுபவிக்கிறோமா இல்லையா?

பொருளாதாரச் சீரழிவின் மற்றொரு பக்கம், பலருக்கு வேலை இல்லை என்பதே. அதாவது ஏற்கெனவே அவர்கள் வேலை செய்துகொண்டிருந்தவர்கள். அதுபோக ஏற்கெனவே வேலை இல்லாப் பட்டதாரிகள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மட்டும் பல இலட்சங்கள் ஆகும். அவர்களோடு இவர்களும் சேர்ந்துகொண்டால் நாட்டின் நிலைமை என்னவாகும்? திருட்டு, கொலை, கொள்ளை இவையே மிகைக்கும். அது குறித்து ஆட்சியாளர்களுக்கு அக்கறை உண்டா? ஏன் இருக்கப்போகிறது? எல்லாவற்றையும் அவர்கள் திட்டமிட்டுத்தானே செய்துகொண்டிருக்கிறார்கள்?


மேலும் விவசாயிகளை எந்தளவுக்கு நசுக்க முடியுமோ அந்த அளவிற்கு நசுக்கிக்கொண்டே இருக்கிறார்கள். விவசாய நிலங்களில் பெட்ரோல் குழாய்களை அமைத்தல், ஈத்தேன், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் முதலானவற்றை எடுப்பதற்காக விவசாய நிலங்களை அழித்தல் உள்ளிட்ட வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களின் திட்டம் என்ன? உணவுப் பஞ்சத்தை வலிந்து ஏற்படுத்துவதுதான். உற்பத்தியைக் குறைத்தால் உணவுப் பஞ்சம் தானாக ஏற்படப் போகிறது. பின்னர் அரிசி, கோதுமை, பருப்பு முதலானவற்றை அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து ரேஷன் அடிப்படையில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப வழங்குவார்கள். மக்கள் முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நின்று வாங்குவார்கள்.
ஆகவே இந்தியப் பொருளாதாரம் மீண்டும் நல்ல நிலைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு வீணானதாகும். ஏனென்றால் இந்த நிலையை அவர்கள் திட்டமிட்டுத்தான் உருவாக்கியுள்ளார்கள். ஒரு குறிப்பிட்ட இன மக்களை அழிப்பதற்கான அடிப்படைகளுள் மிக முக்கியமானதுதான் பொருளாதாரச் சீரழிவு. இந்தச் சீரழிவு இன்னும் அதிகமாகுமே தவிர குறையாது. அதனால் இனிவரும் காலங்களில் மனிதர்கள் சமய நல்லிணக்கத்தோடு வாழ்வது அரிதாகும். இன்றைய நிலையில் முஸ்லிம்கள்மீது பிற சமுதாய மக்களின் வெறுப்பு ஆங்காங்கே காணப்படுவதை நாம் உணர்கிறோம். இது இன்னும் ஐந்தாண்டுகள் கழித்து, மேலும் அதிகமாகுமே தவிர குறையாது.

மனிதன் அமைதியாக வாழ்வதற்கான எல்லாவித வழிகளையும் இஸ்லாம் சொல்லித்தருகிறது. இஸ்லாமிய மார்க்கம் சொன்ன முறைப்படி பொருளாதாரத் திட்டங்களை அமைத்தால் நம் நாடு மட்டுமல்ல, உலகப் பொருளாதாரமே முன்னேற்றம் காணும். அதனை ஏற்றுக்கொள்ளும் விசாலமான மனப்பான்மை பெரும்பாலான மனிதர்களுக்கு இல்லாததால் இன்று எல்லோருமே சிரமப்படுகின்றார்கள்; பல்வேறு நாடுகள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறாத நிலை உருவாகியுள்ளது; வட்டிப் பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கிறது; அதிலிருந்து மீள வழி தெரியாமல் திணறுகிறது. உலக வங்கியில் கடன்பட்ட நாடுகளாகப் பல்வேறு நாடுகள் உள்ளன. அதில் இந்தியாவின் கடன் மட்டும் பல இலட்சம் கோடிகள் உள்ளன. இதற்கான தீர்வுகளையெல்லாம் இந்த மதவாத அரசு தேடாது. மாறாக மக்களை எப்படியெல்லாம் நெருக்கடிக்குள்ளாக்கலாம்; அதன்பின்னர் முஸ்லிம்களை எப்படியெல்லாம் அழிக்கலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது.

ஆனால் மதவாத அரசின் திட்டங்களெல்லாம் தவிடு பொடியாக வேண்டுமானால் நாம் அனைவரும் ஒரே எண்ணம்கொண்டவர்களாக மாறவேண்டும். நிம்மதியான வாழ்க்கையை அல்லாஹ் நமக்கு மீண்டும் தருவான். நாம் எப்போதும் இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ்வோம்என்ற எண்ணம் மனதில் எப்போதும் இருக்க வேண்டும். ஏனென்றால் எண்ணம்போல் வாழ்வுஎன்பதை நாம் அறிவோம். மேலும் நாம் ஒவ்வொருவரும் மனஉறுதியுடன் அல்லாஹ்விடம், “இறைவா! இந்த மதவாத அரசை ஆட்சியிலிருந்து அகற்றி, எங்களுக்கு நிம்மதியான வாழ்வைத் தா!என்று கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மிக விரைவிலேயே இந்த அநீதியாளர்களின் ஆட்சி அகலும் என்பது திண்ணம்.
=========================================











கருத்துகள் இல்லை: