ஞாயிறு, 29 மார்ச், 2020

இஸ்லாமில் சொத்துரிமை சட்டங்கள் (நூல் அறிமுகம்)



---------------------------------------------------
இஸ்லாமில் சொத்துரிமை சட்டங்கள்எனும் நூலை
சென்னை தாருல் ஹுதாவில் பணியாற்றுகின்ற சகோதரர் மௌலவி அப்துல் பாரீ ஸதகீ என்னிடம் வழங்கினார். நூலைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ந்தேன். ஏனெனில் இத்துறையில் தமிழில் வெளிவரும் முதல்நூல் இதுவே.

நூலைக் குறித்து எனது பார்வை...

நீங்கள் ஃபராயிள்-சொத்துரிமைச் சட்டங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதனைக் கற்றுக் கொடுங்கள். ஏனெனில் அது அறிவின் பாதியாகும். அது மறந்துபோகக் கூடியதாகும். எனது சமுதாயத்திலிருந்து முதன்முதலாக அகற்றப்படக்கூடியதுமாகும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா: 2719)

சொத்துரிமைச் சட்டங்களைக் கற்றுக்கொள்ளுதல், கற்றுக்கொடுத்தல் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளதோடு அது அறிவின் பாதியாகும்; முதன் முதலில் அகற்றப்படும் கல்வியும் அதுவேயாகும் என்று கூறியுள்ளமை கவனிக்கத்தக்கது.

எனது சமுதாயத்திலிருந்து முதன் முதலாக அகற்றப்படும் கல்விஎன்பதன் பொருள், திருக்குர்ஆனின் சட்டங்களுக்கு மக்கள் முதன்முதலாக மாறுசெய்வது இதில்தான். அதாவது திருக்குர்ஆனின் கட்டளைப்படிச் சொத்தைப் பங்கிட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்ற முன்னறிவிப்பு இதனுள் உள்ளது.

ஆம்! தற்காலத்தில் மக்கள் மத்தியில் நிலவும் மிகப்பெரும் பிரச்சனையே சொத்துத் தகராறுதான். குறிப்பாக, ஆண்கள் தம் உடன்பிறந்த சகோதரி, தாய், பாட்டி உள்ளிட்டோருக்குச் சட்டப்படியான பங்கைப் பிரித்துக் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அத்தகையோருக்குக் கடுமையான தண்டனை உண்டு என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

தற்காலத்தில் ஒருவர் சொத்துரிமைச் சட்டங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமாயின், மாநிலத் தலைமை காஜி, மாவட்டத் தலைமை காஜி, முஃப்தி ஆகியோரைத்தான் அணுக வேண்டும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமுகமாக, தமிழ் தெரிந்த அனைவரும் எளிய முறையில் இஸ்லாமியச் சொத்துரிமைச் சட்டங்களைத் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார் இலங்கையைச் சேர்ந்த மௌலவி. எம்.ஜே.எம். அரபாத் கரீம் நளீமி அவர்கள். அதனை நல்ல முறையில் மேற்பார்வையிட்டு, சில பிற்சேர்க்கைகளையும் இணைத்துள்ளார் முஃப்தி உமர் ஷரீஃப் அவர்கள்.

தமிழறிந்த எல்லோரும் இஸ்லாமியச் சொத்துரிமைச் சட்டங்களைப் படித்துத் தெரிந்துகொள்ள ஒரு பொன்னான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். எத்தனையோ பேர் ஷரீஅத் முறைப்படி சொத்துக்களைப் பங்கிட்டு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார்கள் என்பதை நான் அறிவேன். அவர்கள் அனைவரும் தவறாமல் படிக்க வேண்டிய நூலிது. இந்நூலை வாங்கிப் படியுங்கள்; பயனடையுங்கள். உங்கள் நண்பர்களையும் படிக்கத் தூண்டுங்கள்.

நூலைப் பெற தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண்: 98401 74121/ 044-25247866
விலை: ரூ. 100/-
பக்கங்கள்: 200

அன்புடன்
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

29 03 2020 / 03 08 1441
=====================================


நூ. அப்துல் ஹாதி பாகவி
நூ. அப்துல் ஹாதி பாகவி 2


கருத்துகள் இல்லை: