செவ்வாய், 10 மார்ச், 2020

பணத்தை எடுத்து எங்கு பாதுகாப்பது?
--------------------------------------------------------

அண்மைக்காலமாக ஒரு செய்தி அதிகமாகப் பகிரப்படுகிறது. அதாவது “முஸ்லிம்கள் தம் சேமிப்புப் பணத்தை வங்கிகளிலிருந்து எடுத்து, அதன்மூலம் அரசுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்த வேண்டும். இது ஒரு வகையில் சாத்தியம் என்றாலும், மக்கள் மனதில் உள்ள ஒரே கேள்வி, அவசியத் தேவைக்காக இலட்சக்கணக்கில் பணம் வைத்திருப்போர் தம் பணத்தை எடுத்து எங்கு பாதுகாப்பது என்பதுதான். அதற்கான தீர்வைச் சொல்லாமலே, “பணத்தை எடுத்துவிடுங்கள் என்று கூறுவது சரியாகாது.

வட்டியின் அடிப்படையில் இயங்குகின்ற பொது வங்கிகள் பெரு நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் தொகை திரும்ப வராவிட்டால் திடீரெனத் திவாலாகிவிடும். திவாலானால் மக்களின் சேமிப்புப் பணம் முழுமையாக அவர்களுக்குத் திரும்பக் கிடைக்காது. அதில் ஒரு பகுதிதான் கிடைக்கும். அண்மையில் எஸ் பேங்க் திவாலானதாக அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இன்னும் சில வங்கிகள் திவாலாகும் நிலையில் உள்ளதாக மேல்மட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே மக்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

வட்டியிலிருந்து விடுதலை பெறவும் நம் பணத்திற்கான உரிய மதிப்பைப் பெறவும் மாற்றுத் திட்டத்தைக் கையாள வேண்டும். நாம் நம் சேமிப்புப் பணத்தின் மூலம் தங்க நாணயங்களை வாங்கி வைத்துக்கொள்ளலாம். அதன்மூலம் தங்கத்தின் விலை ஏற ஏற நம்முடைய பணமதிப்பும் கூடிக்கொண்டே போகும். இதனால்தான் விவரமறிந்த சிலர் தம் பணத்தின்மூலம் தங்க நகைகளையும் நாணயங்களையும் வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். பணத் தேவை ஏற்படும்போது தங்க நகைகளை விற்று, பணத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் முஸ்லிம்கள் வங்கி வட்டியிலிருந்து தவிர்ந்துகொள்வதோடு இலாபத்தையும் பெறுகின்றார்கள்.

மற்றொரு மாற்று ஏற்பாடும் உள்ளது. அதுதான் இஸ்லாமியக் கூட்டுறவு வங்கி. கூட்டுறவு வங்கிச் சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் அது அனுமதிக்கப்பட்டு, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கியில் நாம் நம் பணத்தைச் சேமித்தால் நம் சேமிப்புப் பணத்திற்கு வட்டி கிடையாது. ஆனால் அதேநேரத்தில் இலாபப் பங்கு கிடைக்கும். அதாவது நாம் சேமிக்கின்ற பணம், பெரும் பெரும் தொழில்களில் முதலீடு செய்யப்பட்டு, அவற்றில் கிடைக்கின்ற இலாபத்தின் ஒரு பங்கு நமக்கு வழங்கப்படுகிறது. இதுதான் இஸ்லாமிய வங்கி செயல்படுகின்ற முறையாகும். வேறொரு வார்த்தையில் சொல்வதானால், நாம் அனைவரும் அந்த வங்கியின் பங்குதாரர். அந்த வங்கியே நேரடியாக ஈடுபடுகின்ற அல்லது தொழில்களில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கின்ற இலாபத்தின் ஒரு பகுதியை நமக்கு வழங்குகின்றனர்.

இஸ்லாமிய எதிரிகள் திட்டமிட்டு முஸ்லிம்களின் பொருளாதாரத்தைச் சிதைக்க எண்ணுகின்ற இவ்வேளையில் நாம் நம் பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொள்வது மிக மிக அவசியமாகும். இஸ்லாமிய வங்கிகளில் சிறுசேமிப்புக் கணக்கைத் தொடங்கி நமக்கு நாமே தோள்கொடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

வங்கி தொடர்பு எண்: ௦44 2855 5256

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி 


10 03 2020/ 14 07 1441
====================================================

கருத்துகள் இல்லை: