புதன், 6 நவம்பர், 2019

பிறர் குறைகளை மறைப்போம்!



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மனிதன் தன்னையறியாமல் சின்னச் சின்னத் தவறுகளை அவ்வப்போது செய்துவிடுகின்றான். சில பெருந்தவறுகளையும் சிலவேளை செய்துவிடுகின்றான். அவற்றுள் சில மக்களுக்குத் தெரிந்துவிடுகின்றன; சில அவனுள்ளேயே புதைந்துவிடுகின்றன. ஆனால் அவன், தான் செய்த தவறுகளுக்கும் பாவங்களுக்கும் அளப்பரிய கருணையாளனாகிய அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுத் திருந்தி வாழ நினைக்கின்றான்; திருந்தி வாழ்ந்து கொண்டிருக்கிறான். அத்தகைய மனிதரைப் பற்றி, அந்த மஹல்லாவிற்குப் புதிதாக வந்துள்ள ஒருவரிடம் சென்று, “உங்களிடம் சிரித்துச் சிரித்துப் பேசுகிறாரே, அவர் யார் தெரியுமா? அவருடைய முந்தைய நிலை தெரியுமா? அவர் இப்படி இப்படி. ஆனால் அவருடைய கடந்த காலம் எப்படி இருந்ததென்று எனக்குத்தான் தெரியும். அவர் ஓர் ஏமாற்றுப் பேர்வழிஎன்று கூறி, அவருடைய கடந்த காலக் குறைகளையும் பாவங்களையும் சொல்லிவிடுகிறார் ஒருவர்.

அவர் கடந்த காலத்தில் அறிந்தோ அறியாமலோ சில தவறுகளைச் செய்துவிட்டார்; ஏமாற்றிப் பிழைத்துவிட்டார்; எப்படியோ சம்பாதித்துவிட்டார். அதெல்லாம் எப்போதோ கடந்துவிட்டது. அவர் அதற்கான பாவமன்னிப்பைக் கேட்டு, தற்போது திருந்தி வாழ்கிறார். இப்போது ஐவேளைத் தொழுகையையும் செவ்வனே நிறைவேற்றுகிறார். அவரைப் பற்றிய நன்மதிப்பு மக்கள் மத்தியில் உள்ளது. அவரின் தொடக்கக் கால விவகாரங்கள் தெரியாதோர் அவரிடம் மரியாதையாகப் பழகுகின்றார்கள்; அன்பாகப் பேசுகின்றார்கள்.

இத்தருணத்தில் அவர்களிடம் சென்று, அவரின் கடந்த காலக் குறைகளைச் சொல்வதன் மூலம் அவர்மீது மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பைக் குலைத்துவிடுகிறார்; அவரைப் பற்றி இதுவரை அறியாதோரும் அவரை அவமரியாதையாகப் பார்க்கும் சூழ்நிலையை ஏற்படுத்திவிடுகின்றார். இதனால் கலங்கமில்லாமல் பழகியவர்கள் மனத்தில் அவரைப் பற்றிய மதிப்பு குறைந்துவிடுகின்றது. பிறரின் குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் இதுபோன்ற மனிதர்களால் சமுதாயத்திற்குப் பயனேதும் உண்டா? பிறரின் குறைகளை இவ்வாறு வெளிச்சம் போட்டுக் காட்டலாமா?

இஸ்லாமியப் பார்வையில் இது மிகப்பெரும் குற்றமாகும். பிறர் குறையை மறைக்க வேண்டுமே தவிர பிறருக்கு அதைப் பரப்பக்கூடாது. இதுதான் நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டலாகும்.

யார் ஒரு முஸ்லிமுடைய பாவத்தை மறைத்தாரோ அவருடைய பாவத்தை அல்லாஹ் இவ்வுலகிலும் மறுமையிலும் மறைக்கின்றான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா: 2534)

தண்டனைக்குரிய குற்றத்தை ஒருவர் மறைமுகமாகச் செய்துவிட்டாரெனில் அதைப் பார்த்தவர், மக்கள் மத்தியில் அதைப் பகிரங்கப்படுத்தாமல் மூடிமறைப்பதே சாலச் சிறந்தது. அது அல்லாஹ்வுக்கும் அவருக்கும் இடையே உள்ள விவகாரம் என்ற பரந்த எண்ணத்தோடு அதை விட்டுவிட வேண்டும். இதுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கருணையான அறிவுரை. தண்டனைக்குரிய குற்றம் செய்வதை மறைப்பது ஒருபுறம் இருக்கட்டும். ஒருவர் செய்கின்ற சின்னச் சின்னத் தவறுகளைக்கூட ஊதிப் பெரிதாக்கி, அவருடைய மதிப்பைக் குறைப்பதில் மனிதர்கள் முனைப்புக் காட்டுகின்றார்கள். புதிதாக அந்தப் பகுதிக்குக் குடியேறியவரிடம், அச்சமுதாயத்தில் நன்மதிப்போடு வாழ்கின்றவரைப் பற்றி, அவர்தம் கடந்த காலக் குறைகளையும் குற்றங்களையும் பரப்புவது எவ்வளவு பெரிய தவறு என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
அதுபோலவே கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் தம் துணையிடம் உள்ள குறைகளை மறைக்க வேண்டும். புதுமணத் தம்பதிகளாக உள்ள கணவனோ மனைவியோ தன் துணை குறித்த சின்னச் சின்னக் குறைகளைத் தன் பெற்றோரிடமோ உறவினர்களிடமோ சொல்லக்கூடாது. கணவன் ஒழுங்கான முறையில் பொருளாதாரத்தை ஈட்டாதவனாகவோ இல்லறத்தில் ஆர்வத்தோடு ஈடுபடாதவனாகவோ இருக்கலாம். இது ஆரம்ப நிலைதான். போகப் போக எல்லாம் சரியாகிவிடும் என்ற பக்குவம் மனைவிக்கு இருக்க வேண்டும். அதுவே காலப்போக்கில் அவளுடைய வாழ்க்கை மேம்பட உதவும். அவளுடைய பொறுமையின் காரணமாக அல்லாஹ் அவளுடைய கணவரின் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவான்.

பக்குவமற்ற, பொறுமையற்ற பெண் தன் கணவன் குறித்த சின்னச் சின்னத் தவறுகளையும் குறைகளையும் தன் தாயிடம் உடனுக்குடன் கூறிவிடுகின்றாள். தன் கணவன் தன் தாய் வீட்டாரைப் பற்றி ஏதாவது தவறாகப் பேசிவிட்டால் உடனே அலைபேசியில் அதைத் தெரிவித்துவிடுகின்றாள். இதனால் மருமகன் மீதுள்ள மதிப்பும் மரியாதையும் குறைந்துவிடுகின்றன. அவன் தன் மாமியார் வீட்டுக்குச் செல்கின்றபோது, அவனைப் பற்றிய தவறான பிம்பம் அவளுடைய தாய் வீட்டில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவர்கள் அவனைச் சரியான முறையில் மதிப்பதில்லை; உபசரிக்க வேண்டிய முறைப்படி உபசரிப்பதில்லை. அதன்பின் அவன் அங்கு செல்வதை நிறுத்திவிடுகின்றான். கணவனின் சின்னச் சின்னத் தவறுகளையும் குறைகளையும் தன் தாயிடமும் உறவினர்களிடமும் அவ்வப்போது தெரிவித்து, அதனால் ஏற்பட்ட தவறான பிம்பத்தின் விளைவுதான் இது.

இதுபோலவே மனைவியின் சின்னச் சின்னத் தவறுகளையும் குறைகளையும் கணவன் தன் தாயிடமோ உறவினர்களிடமோ கூறினால் என்னாகும்? “அவ அப்படித்தான்டா; அவ என் பேச்சே கேக்குறதில்ல; அவ முகமே சரியில்ல; பார்த்தாலே திமிரு பிடிச்சவ மாதிரி தெரியுதுஎன்று சொல்லி, அவனுக்கு இன்னும் கொஞ்சம் அவள்மீது வெறுப்பு ஏற்படுமாறு செய்துவிடுவார்கள்; அவள்மீதுள்ள அன்பைக் குறைக்கவே முயல்வார்கள். காலப் போக்கில் கணவன்-மனைவி இடையே பிணக்கு ஏற்பட்டு, இறுதியில் மணமுறிவும் ஏற்பட்டுவிடும். பெரும்பாலான இடங்களில் மணமுறிவு ஏற்பட இருதரப்பு குடும்பத்தாரே முக்கியக் காரணம் என்றால் அது மிகையில்லை. ஒரு பெண்ணோ ஆணோ தன் தாயிடம் தன் துணையைப் பற்றிக் குறை கூறினால், “ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும்; போகப்போகச் சரியாகிவிடும்என்ற அறிவுரையை வழங்கி ஆற்றுப்படுத்தினால் அத்தம்பதிகள் அமைதியாக வாழ்வார்கள். மாறாக, அதில் கொஞ்சம் எண்ணெய் வார்த்தால், இறுதியில் மணமுறிவுதான். எனவே இதுவிஷயத்தில் பெற்றோர் கவனமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்.

ஒரு பெண் தன் கணவனின் சின்னச் சின்னக் குறைகளை மறைத்து, தன் தாயிடமும் உறவினர்களிடமும் தன் கணவன் தன்னை நன்றாகக் கவனித்துக் கொள்வதாகவும் தன்மீது அன்பாக இருப்பதாகவும் தெரிவித்தால் அதைக் கேட்டுப் பெற்றோர் மகிழ்ச்சியடைவார்கள். அத்தோடு தன் கணவன்மீது அவர்களுக்கு நன்மதிப்பு ஏற்படும். காலப்போக்கில் கணவனின் உள்ளத்தில் மாற்றம் ஏற்படும். இருவரின் இல்வாழ்வு சிறக்கும்.

ஒரு பெண் தன் கணவன்மீதுள்ள கோபத்தில், தன் பிள்ளைகளிடம், “உங்க அப்பா இப்படி இப்படிஎன்று அவரது குறைகளைக் கூறினால், அவர்களின் மனத்தில் தந்தையைப் பற்றிய தவறான பிம்பம் பதிந்துவிடும். அது தந்தை சொல் கேளாப் பிள்ளைகளை உருவாக்கிவிடும். பின்னர் அப்பிள்ளைகள் தாய்க்குக் கட்டுப்படாத, தாயையும் மதிக்காத பிள்ளைகளாக மாறிவிடுவார்கள். எனவே இதில் ஒரு பெண் கவனமாக இருக்க வேண்டும்.

கணவன் அவ்வப்போது தனக்குச் சின்னச் சின்ன முரண்பாடுகளைச் செய்தாலும் அவற்றை மனத்தில் கொள்ளாமல், தன் கணவன்மீது தன் பிள்ளைகளுக்கு மரியாதை ஏற்படும் விதத்திலான வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். தந்தை சொர்க்கத்தின் நடுவாசல்என்ற நபிமொழியை பிள்ளைகளின் மனத்தில் பதிய வைக்க வேண்டும். அதுவே பிள்ளைகள் தம் தந்தையை மதிப்பதற்கும் மரியாதை செலுத்துவதற்கும் உகந்ததாக அமையும். அத்தோடு அப்பிள்ளைகள் தாயையும் மதித்து நடக்கத் தொடங்குவார்கள்.

அதுபோலவே ஓர் ஆண் தன் மனைவி மீதுள்ள சினத்தில், தன் பிள்ளைகளிடம் அவள்மீதுள்ள குறைகளையோ குற்றங்களையோ கூறிவிடாமல், அவள்மீது பிள்ளைகளுக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்படும் வகையிலான வார்த்தைகளையே சொல்ல வேண்டும். தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளதுஎன்ற நபிமொழியை அவ்வப்போது எடுத்துக்கூறி, தாய்மீதான மரியாதையையும் உயர்வையும் ஏற்படுத்த வேண்டும். அதுதான் சிறந்த பிள்ளைகளை உருவாக்கும்.

மேலும் ஆசிரியர்-மாணவர் உறவு ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாத உறவு. அதில் கலங்கம் ஏற்பட்டு விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆசிரியர் என்ன தவறு செய்கிறார் என்ற கண்ணோட்டம் மாணவர்களுக்கு அறவே இருக்கக்கூடாது. ஆசிரியரின் குறைகளைத் துருவி ஆராயக்கூடாது. ஏனெனில் மாணவர்களின் மனத்திலிருந்து ஆசிரியர்கள்மீதான மரியாதை அகன்று விட்டால் அவர்கள் சொல்லித் தருகின்ற எதுவும் அம்மாணவர்களின் மனத்தில் ஏறாது. அதனால் மாணவர்களுக்குத்தான் இழப்பே தவிர ஆசிரியர்களுக்கு அல்ல. இது குறித்துப் பெற்றோர் விழிப்போடு இருக்க வேண்டும். தம் பிள்ளைகள் வகுப்பாசிரியர் குறித்து ஏதேனும் முரணாகவோ அவமரியாதையாகவோ பேசினால் உடனடியாக அதைக் கண்டிக்க வேண்டும். ஆசிரியர்மீது பிள்ளைகளுக்கு மரியாதை ஏற்படும் விதத்தில் அவர்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்க வேண்டும்.

ஆக, ஒருவருக்கொருவர் பிறரின் குறைகளை மூன்றாம் மனிதரிடம் கூறுவதற்குப் பதிலாக அவர் குறித்த நல்ல செய்தி ஏதேனும் இருந்தால் தெரிவிக்கலாம்; இல்லையேல் மௌனமாக இருந்துவிடலாம். அதுவே சாலச் சிறந்தது. 

யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைகொண்டாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும்; இல்லையேல் மௌனமாக இருந்துவிடட்டும்என்ற நபிமொழி இங்கு நினைவுகூரத்தக்கது. அதை விடுத்து, ஒருவரின் குறைகளை மூன்றாம் மனிதரிடம் கூறத் தொடங்கினால், நம் குறைகளை யாரோ ஒருவர் நமக்கு அறிமுகமானோரிடம் கூறிக்கொண்டிருப்பார். அது நமது மதிப்பையும் மரியாதையையும் குலைத்துவிடும். எதை விதைக்கிறோமோ அதுவே விளையும்என்ற அடிப்படையில் நாம் பிறர் குறைகளை மறைத்தால் பிறர் நம் குறைகளை மறைக்கும் விதத்தில் அல்லாஹ் நமக்கு உதவி செய்வான்.

யார் தம் சகோதர முஸ்லிமுடைய மானத்தை மறைத்தாரோ அவருடைய மானத்தை அல்லாஹ் மறுமையில் மறைப்பான். எவன் தன் சகோதர முஸ்லிமுடைய மானத்தை வெளிப்படுத்தினானோ அவனுடைய மானத்தை அல்லாஹ் வெளிப்படுத்தி, அதன்மூலம் அவனுடைய வீட்டிலேயே அவனைக் கேவலப்படுத்துவான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா: 2536)

எனவே நாம் பிறரின் குறைகளை மறைப்போம். நம் குறைகளை அல்லாஹ் இவ்வுலகிலும் மறுமையிலும் மறைப்பான். ஒவ்வொருவரும் தத்தம் குறைகளை முதலில் திருத்த முனைவோம். அதுவே நாம் பிறர் குறைகளைக் காணாதிருக்க உதவும்.
===========================================








கருத்துகள் இல்லை: