செவ்வாய், 5 நவம்பர், 2019

வேதமொழியில் இருப்பவை யாவும் புனிதமானவையா?



----------------------------------------------------------------------

தொழுகை, குத்பா உள்ளிட்ட வழிபாடுகள் அரபியில் அமைந்திருப்பது அஃபீஷியல் அடிப்படையில் ஆகும். அதாவது நமது தேசிய மொழி ஹிந்தி. அது பிற மாநில மக்களுக்குத் தெரியாவிட்டாலும், மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட இடங்களிலெல்லாம் அது இடம்பெறும். அது போலவே நம் வழிபாடுகளில் உள்ள அரபி உலக அளவில் அஃபீஷியல்-அலுவல் மொழியாக உள்ளது. அதை இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் எவ்வாறு கற்றுக் கொடுத்தார்களோ அப்படித்தான் நாம் பின்பற்ற வேண்டும்.
வழிபாடுகள் தவிர பிறவற்றை அவரவர் தத்தம் தாய்மொழியில் படித்துக்கொள்ளலாம். அந்த அடிப்படையில் நபியின் புகழ்ப்பாவை நாமே உருவாக்கிக்கொண்டோம். அதைத் தாய்மொழியில் புகழ்ந்தால்தான் நம்மைச் சுற்றி இருப்போருக்கு விளங்கும். நபியின் தியாகமும் அவர்கள் இச்சமுதாய மக்கள்மீது கொண்டிருந்த அன்பும் கருணையும் புரிய வரும். கேட்போரின் கவனத்தை ஈர்க்கும்.

குர்ஆனைப் பொறுத்த வரை, பொருள் உணர்ந்து படித்தாலும், உணராமல் படித்தாலும், ஓர் எழுத்துக்குப் பத்து நன்மை என்ற நபிமொழியின் அடிப்படையில் நன்மை கிடைத்துவிடும். அதில் ஐயம் கொள்ள வேண்டியதில்லை. அதனால் பொருள் உணராமல் அல்ஹம்து சூரா ஓதினாலும் இறைவன் அதற்கான நன்மையைக் கொடுத்துவிடுவான்.

குத்பாவைப் பொறுத்த வரை முதலில் தாய்மொழியில் பயான் செய்துவிட்டுத்தான் பிறகு சுன்னத்என்ற அடிப்படையில் அரபியில் ஓதுகிறோம். அதுவும் அஃபீஷியல்தான். தொழுகைக்குப் பிறகு ஓதும் துஆவிலும் குர்ஆன் வசனங்களே பெரும்பாலும் இடம்பெறுகின்றன. அது மட்டுமல்ல, துஆவைப் பொறுத்த வரை, அதை ஓதுபவருக்குப் பொருள் தெரிந்தாலே போதுமானது. ஆமீன் சொல்பவருக்குப் பொருள் தெரியாவிட்டாலும் அதற்கான பிரதிபலன் எல்லோருக்கும் கிடைத்துவிடும். இமாமின் துஆ (அஃபீஷியல்) முடிந்தபின் அவரவர் தாய்மொழியில் பிரார்த்தனை செய்துகொள்ள எந்தத் தடையும் இல்லையே.

ஸலாமைப் பொறுத்த வரை, உலக முஸ்லிம்கள் மொழி வேறுபாடின்றி ஒருவருக்கொருவர் தம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த சுன்னத்-வழிமுறை. அதை அவரவர் தாய்மொழியில் சொல்லத் தொடங்கினால் பிற மாநிலங்களிலும் நாடுகளிலும் நாம் நம்மை அறிமுகம் செய்துகொள்ள இயலாது. அது மட்டுமல்ல, அதற்குரிய நன்மை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்னால் பத்து நன்மை; அத்துடன் வ ரஹ்மத்துல்லாஹி என்று சேர்த்துக் கூறினால், இருபது நன்மை; அத்துடன் வ பரக்காத்துஹு என்று இணைத்துக் கூறினால், முப்பது நன்மை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேறு மொழிகளில் கூறினால், அத்தகைய நன்மையை நாம் இழந்துவிடுவோம். நபிமீது ஸலவாத் அரபியில்தான் கூறுகிறோம். அதற்கான நன்மை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் இவையெல்லாம் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த சுன்னத்-வழிமுறைகள். எனவே அவற்றை அப்படியேதான் பின்பற்ற வேண்டும். அவற்றை மாற்றியமைக்க நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.


பொருளை விளங்கிக்கொள்வதற்காகத் திருக்குர்ஆனைத் தமிழில் படிக்கிறோம். அதை அரபியில் படித்தால்தான் ஓர் எழுத்துக்குப் பத்து நன்மை. பிற மொழிகளில் படித்தால் அத்தகைய நன்மை கிடையாது. அதுபோலவே நபிமொழியை-ஹதீஸை அரபியில் படித்தால் எத்தனை நன்மை என்று யாரும் சொல்ல முடியாது. ஏனெனில் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அதைச் சொல்லவில்லை. அதே நேரத்தில் அதைத் தமிழில் படித்து, அதன்படி செயல்பட்டால் நன்மை உண்டு.

அரபியில் செய்தித்தாள் படித்தால் நன்மை உண்டா? எத்தனை நன்மை? அரபியில் எழுதப்பட்ட நாடகங்கள், புதினங்கள் முதலானவற்றைப் படித்தால் எத்தனை நன்மை? யாராவது சொல்ல முடியுமா? ஏனெனில் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அதைச் சொல்லவில்லை. அதனால் நாம் எதையும் சொல்ல முடியாது.

பொதுவாக, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கட்டளையிட்ட செயல்பாடுகளுக்குரிய நன்மை தெளிவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜமாஅத்துடன் தொழுதால் இருபத்தைந்து மடங்கு நன்மை என்றும் தானம் செய்தால் ஏழு முதல் எழுநூறு மடங்கு நன்மை என்றும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கான நன்மை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நபி புகழ்ப்பாவை அரபியில் பத்து வரி படித்தால் எத்தனை நன்மை, நூறு வரிகள் படித்தால் எத்தனை நன்மை என்று யாராவது கூற முடியுமா?

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் புகழ்ப்பாவை அரபியில் மட்டும் படிப்பதால்தான், குர்ஆன் இடம்பெற வேண்டிய இடங்களிலெல்லாம் சுப்ஹான மவ்லிது நங்கூரமிட்டு அமர்ந்துகொண்டுள்ளது. அதனால்தான் எல்லா சுபகாரியங்களுக்கும் துக்கமான நிகழ்வுகளுக்கும் அதனை ஓதும் பழக்கம் மக்கள் மத்தியில் பரவிவிட்டது. திருக்குர்ஆனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அது முன்னணியில் இடம்பிடித்துக்கொண்டது. இதற்குக் காரணம் அரபியில் இருப்பதுதான். அரபியில் இருப்பதெல்லாம் வேதமென்றும் புனிதமென்றும் கருதத் தொடங்கினால் அரபியிலுள்ள நாடகங்களும் புதினங்களும் புனிதமானவையே. இதை யாராவது ஒத்துக்கொள்வாரா?

புதிதாக வீடு கட்டிய ஒருவர், புதுமனைப் புகுவிழாவிற்கு சுப்ஹான மவ்லிதை ஓதுவதற்குப் பதிலாக, தமிழ்க் கவிஞர்கள் அழகு தமிழில் எழுதிய அண்ணலின் அழகிய சரிதையை, கவிதையை வாசிக்க முற்படுவாரா? அதற்கான சபையை வீட்டில் ஏற்பாடுசெய்வாரா? மாட்டார். ஏனெனில் இது தமிழில் உள்ளது. அதுவோ அரபியில் உள்ளது. அது புனிதமானது என்று அவர் நம்புகிறார்.

ஆகவே தவறான புரிதலில் காலம் கழித்தது போதும். புதிய சிந்தனைக்குள் வாருங்கள். மார்க்கம் எதுவெனச் சிந்தியுங்கள். எல்லோருக்கும் புரியும் மொழியில் அண்ணல் நபியவர்களைப் புகழ வாருங்கள்.

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, மணலி, சென்னை.

==========================================

கருத்துகள் இல்லை: