வியாழன், 14 நவம்பர், 2019

நபிபுகழைத் தமிழில் பாடுவோம்!



-
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
---------------------------------------------------------------------------------
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்ந்து பாடலாமா என்று ரபீஉல் அவ்வல் மாதத்தில் மிகுதியானோர் கேட்கத் தொடங்கிவிடுகின்றனர். இது குறித்து வினாத் தொடுக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது? ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருமை பெருமைகளையும் சிறப்புகளையும் மேன்மைகளையும் எடுத்துச் சொன்னால்தானே முஸ்லிம்களுக்கு மட்டுமின்றிப் பிற சமுதாய மக்களுக்கும் அவர்களின் முக்கியத்துவம் விளங்கும்? அவர்களைப் பற்றிப் புகழ்ந்து சொல்லாமல் எப்படி அவர்கள் குறித்து பிற மக்கள் அறிந்துகொள்வார்கள்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்பையும் மேன்மையையும் கவிதைகளாக, சொற்பொழிவுகளாக எடுத்துரைப்பதன் மூலம் அவர்களைப் பற்றிப் பிற சமுதாய மக்கள் படிக்கத் தொடங்குவார்கள். இவ்வளவு சிறப்பும் மதிப்பும் கொண்ட அந்த நபி யார்? அவர் இறுதி இறைத்தூதர்தானா என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்குவார்கள். இத்தகைய உயர்நோக்கத்தில்தானே கவிதை பாடுகிறார்கள்? பிறகென்ன தாராளமாக அவர்களைப் புகழ்ந்து பாட வேண்டியதுதானே?

இறைவனுடைய பண்புகளை இறைத்தூதருக்குப் பொருத்தலாமா? அது ஷிர்க்-இணைவைத்தல் ஆகாதா? என்று சிலர் வினாத் தொடுக்கின்றனர். அப்படி என்னதான் அல்லாஹ்வின் பண்பை இறைத்தூதருக்குப் பொருத்திவிட்டார்கள் என்று மறுவினாத் தொடுத்தால், "நீங்கள் பாவங்களை மன்னிக்கக் கூடியவர் (அன்த்த ஃகஃப்பாருல் கத்தாயா)'' என்று புகழ்வது அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாக ஆகாதா? என்று வினவுகின்றனர்.


அதற்கு நீங்கள் கூறும் பொருள் பொருந்தாது. அதன் பொருள், "நீங்கள் பாவங்களை மன்னித்தவர்'' என்பதுதான். தமிழ் இலக்கணத்தில், வினையாலணையும் பெயர் என்று ஒன்று உண்டு. அது முக்காலத்தையும் காட்டும். அதனடிப்படையில் மன்னித்தவர், மன்னிக்கிறவர், மன்னிப்பவர் என முக்காலமும் பொதிந்ததுதான் வினையாலணையும் பெயர். அரபியில் ஃபஉஆல் வாய்பாட்டில் அமைந்துள்ள ஃகஃப்பார் என்பது மிகை வினையாலணையும் பெயர் ஆகும். கவிதையில் இடம்பெற்றுள்ள அவ்வார்த்தைக்குக் கவிஞரின் எண்ணம் என்னவெனில், "நீங்கள் உங்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்களையும் தொல்லைகளையும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பாவங்களையும் மன்னித்தீர்கள். எனவே நீங்கள் பாவங்களை மன்னித்தவர்'' என்பதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைக் கொல்ல வந்த எதிரிகளை மன்னித்துள்ளார்கள்; தமக்குத் தொல்லைகொடுத்த எத்தனையோ பேர்களை மன்னித்துள்ளார்கள். அந்த அடிப்படையில் பாடப்பட்டதுதானே தவிர "நீங்கள் எப்போதும் பாவங்களை மன்னிக்கக்கூடியவர்'' என்ற பொருளில் இல்லை; அது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

ரபீஉல் அவ்வல் மாதத்தில் அனைவரும் அவர்களைப் புகழ்ந்து பாடுவது கட்டாயமா? என்று சிலர் வினவுவதுண்டு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது நேசம் கொண்டுள்ள ஒவ்வொருவரும் அவர்களின் புகழை ஏதாவது ஒருவகையில் வெளிப்படுத்தத்தான் வேண்டும்.

அதேநேரத்தில் கவிதையால்தான் புகழை வெளிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. ரபீஉல் அவ்வல் மாதத்தில் ஒவ்வொருவரும் தத்தம் வீடுகளில் கவிபாடும் சபையை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தமோ, தமக்கு ஓதத் தெரியாவிட்டாலும் ஓதத் தெரிந்தவர்களை அழைத்து கவிபாடித்தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமோ இல்லை.

அறிந்தோர் மட்டும் கவிபாடினால் போதுமானது. அறியாதோர் அமைதியாக இருந்துவிடட்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்த எத்தனையோ வழிகள் உள்ளன. நபியவர்கள் காட்டித்தந்த சுன்னத்தான வழிமுறைகளைச் செவ்வனே பின்பற்றுதல், அவர்கள்மீது ஸலவாத் ஓதுதல், பாங்கு சொல்லி முடித்தபின் வசீலா எனும் சொர்க்கத்தின் உயர்பதவியை அவர்களுக்கு வழங்குமாறு அல்லாஹ்விடம் பரிந்துரை செய்தல் ஆகிய அனைத்தும் அவர்கள்மீதுள்ள அன்பின் வெளிப்பாடுதானே? பாங்கு சொல்லி முடிக்கப்பட்டபின், நபி (ஸல்) அவர்கள்மீது ஸலவாத் சொல்லிவிட்டு, பாங்கு துஆ ஓதினால் மறுமையில் அவர்களின் பரிந்துரை உறுதியாகிவிட்டது (முஸ்லிம்: 628) என்ற நபிமொழி இங்கு நினைவுகூரத்தக்கது. நபியவர்களின் பரிந்துரையைப் பெற மிக எளிய வழியை அவர்களே சொல்லித் தந்துள்ளார்கள். ஆனால் நம்மில் இதைக் கடைப்பிடிப்போர் எத்தனை பேர்?

அறிந்தவர்கள் நபிபுகழை அரபியில் ஓதுகின்றார்கள். அரபி தெரியாத, புரியாத மக்கள் அச்சபையில் அமர்ந்து வெறுமனே கேட்டுக்கொண்டிருப்பதால் அவர்களுக்கு என்ன பயன்? பொதுமக்களுக்குப் புரியாத மொழியில் ஓதப்படுகின்ற புகழால் நபிகள் நாயகத்தின் உயர்வையும் சிறப்பையும் மேன்மையையும் அவர்கள் எங்ஙனம் விளங்கிக்கொள்ள முடியும்? மொழி புரியாமல் ஓதினாலும் "ஓர் எழுத்துக்குப் பத்து நன்மை'' (திர்மிதீ: 2835) என்பது திருக்குர்ஆனுக்கு மட்டுமே பொருந்தும். அதுவல்லாத வேறெதற்கும் அச்சிறப்பு கிடையாது. எனவே மொழி புரியாதவர்கள் அதனை வெறுமனே கேட்டுக்கொண்டிருப்பதால் எந்தப் பயனுமில்லை. அதற்குப் பதிலாக மக்களுக்குப் புரியும் மொழியில் பாடல்களையும் கவிதைகளையும் பாடினால் அவற்றின்மூலம் நபிகள் நாயகத்தின் மேன்மையும் உயர்வும் சிறப்பும் அவர்களுக்குத் தெள்ளென விளங்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னிலையில் கவிதை பாடிய ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரளி) அவர்கள் தம் தாய்மொழியான அரபியில்தான் பாடினார்கள். தமக்குத் தெரியாத அல்லது சபையோருக்கு விளங்காத ஹீப்ரு, ஃபார்சி, சூடானி போன்ற மொழிகளில் பாடவில்லை. எனவே ஒரு சபையில் நபிகள் நாயகத்தைப் புகழ்ந்து கவிதை பாடினால் அச்சபையில் உள்ளோருக்கும் அதனைப் பாடுபவருக்கும் அப்பாடலின் மொழி புரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அதில் அனைவருக்கும் உளப்பூர்வமான ஈடுபாடு ஏற்படும். அது மட்டுமல்ல, ஒருவர் தம் தாய்மொழியில்தான் உணர்வுப்பூர்வமாகப் பாட முடியும்; புகழ முடியும். கற்றுக்கொண்ட மொழிகளில் புகழ்வது உணர்வுப்பூர்வமாக இருக்காது; உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படுபவையாக இருக்க முடியாது.

அரபியில் மட்டும் பாடுவது ஏன்? தமிழில் பாடினால் எல்லோருக்கும் விளங்குமே? உமறுப்புலவர் எழுதிய "சீறாப்புராணம்', கவிவேந்தர் மு. மேத்தா எழுதிய "நாயகம் ஒரு காவியம்', கவிஞர் சிராஜ் பாகவி எழுதிய "நெஞ்சில் நிறைந்த நபிமணி', பன்னூலாசிரியர் கவிஞர் எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம் எழுதிய "நபிகள் நாயகக் காவியம்', இறையருட்கவிமணி அப்துல் கபூரின் "நாயகமே', கலைமாமணி கா.மு.ஷெரீஃப் எழுதிய "நபியே எங்கள் நாயகமே' முதலான பல்வேறு கவிதைகளும் காவியங்களும் தாய்மொழியாம் தமிழ்மொழியில் உள்ளன. அவற்றை யாரும் படிப்பதில்லையே? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த ரபீஉல் அவ்வல் மாதத்தில் இவை போன்ற தமிழ் மவ்லிது நூல்களைப் படித்து அவர்களின் சிறப்பையும் மேன்மையையும் எல்லோருக்கும் எடுத்துரைக்கும் சபை எங்கேனும் நடந்ததுண்டா?

நல்ல கவிதைக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் வரவேற்பு உண்டு. அதன்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த மாதத்தில் அவர்களின் புகழை எல்லோருக்கும் எடுத்துரைக்கும்வண்ணம் கவியரங்கம் நடைபெறுவதுண்டா? நபிபுகழ் உள்ளிட்ட எல்லாவற்றிற்கும் பக்திச் சாயம் பூசப்பட்டுள்ளதால் தமிழறிஞர்களும் மார்க்க அறிஞர்களும் தனித்தனியாக விலகியே இருக்கின்றார்கள். எனவே பக்திச் சாயத்தை நீக்கிவிட்டு, நபிகள் நாயகத்தின் சிறப்பையும் மேன்மையையும் அவர்கள்தம் பொய்யாமொழிகளையும் பட்டிதொட்டியெங்கும் பரப்ப வேண்டும். கவியரங்கம், பட்டிமன்றம், சொற்பொழிவு, சிறுவர் நிகழ்வுகள் முதலான வழிகளிலும் அவர்களுடைய சிறப்பையும் மேன்மையையும் மக்களின் செவிகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான் பிறசமுதாய மக்களுக்கு நபிகள் நாயகத்தின் செய்திகள் செவ்வனே சென்று சேரும்.

நபிகள் நாயகத்தின் புகழைப் பள்ளிவாசல்களுக்குள்ளேயே சுருக்கிக்கொள்வதோ அரபியில் மட்டும் பாடுவதோ போதாது. பரந்த பொதுவெளியில் பொதுமக்கள் முன்னிலையில் அவர்களுக்குப் புரியும் மொழியில் நபிகள் நாயகத்தின் செய்திகள் சொல்லப்பட வேண்டும். அதன்மூலம் அவர்களின் புகழ் பாரெங்கும் பரவலாக அறியப்பட நாம் பாடுபட வேண்டும். அதுதான் அவர்கள்மீது நாம் கொண்டுள்ள அன்பின் அடையாளமாகும்.
==========================







கருத்துகள் இல்லை: