-------------------------------------------------------------
நாட்டின் தற்போதைய நிலையும் அரசின் போக்கும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்த பின்னும் அரசியலைவிட்டு அப்பால் நின்றுகொண்டு ஆலிம்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், முஸ்லிம்களை அரசியல்ரீதியாக வழிநடத்துவது யார்? ஆலிம்கள் அரசியலில் தடம் பதிக்காமல் முஸ்லிம் சமுதாயத்திற்கு விமோசனம் இல்லை என்பதை எப்போது உணரப்போகிறோம்?
ஜமாஅத்துல் உலமாவின் ஒருங்கிணைந்த ஒற்றைக் குரலுக்காகக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகத் திமுகவிற்கு வாக்களித்தார்கள். ஆனால் முஸ்லிம்களுக்கான திமுகவின் அறிக்கையையும் குரலையும் நாம் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம்.
போதும். பிற கட்சிகளுக்குத் தோள் கொடுத்தது போதும். ஜமாஅத்துல் உலமாவில் ஓர் அரசியல் பிரிவு உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு தேர்தலையும் நேரடியாகச் சந்திக்க வேண்டும். வெற்றிபெற்ற ஆலிம்களின் குரல் சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் அதிரடியாக ஒலிக்க வேண்டும்.
எதிர்வரும் சட்டசபைத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டாம். இதோ விரைவில் வரவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலிலேயே களம் காணுவோம். நகர் மன்றச் சபைகளில் முதலில் குரலை உயர்த்துவோம்; பின்னர் அடுத்தடுத்து உயர்வோம். முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக மாசற்ற மனதோடு சேவையாற்ற ஆலிம்களையன்றி யாரை முன்னிலைப்படுத்த முடியும்?
ஆலிம்களின் குரல் மிம்பர் மேடைகளோடு முடங்கிவிட வேண்டாம். அரசியலில் ஆர்வத்துடிப்போடு சேவையாற்ற விரும்புவோர் அனைவரும் இன்றே முன்வாருங்கள். ஜமாஅத்துல் உலமா சபையைத் தட்டியெழுப்புங்கள்.
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, மணலி, சென்னை.
===========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக