திங்கள், 4 நவம்பர், 2019

பரிந்துரையைப் பெற...


====================

இமாம்ஸாப்! நான் நபி (ஸல்) அவர்கள்மீது மிகுந்த அன்புகொண்டுள்ளேன். மறுமையில் அவர்களின் பரிந்துரை எனக்குக் கிடைக்குமா? அவர்கள்மீதுள்ள எனது அன்பை வெளிப்படுத்துவதற்கும் அவர்களின் பரிந்துரையைப் பெறுவதற்குமான ஒரு வழியைச் சொல்லித் தாருங்களேன் என்று ஒருவர் கேட்டார்.

முஸ்லிம் எனும் நூலில் 628ஆம் எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ள நபிமொழியை அவருக்கு எடுத்துச் சொன்னேன். அதை நீங்களும் பாருங்கள்.

நபி( (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை (பாங்கு) நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது "ஸலவாத்' சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை "ஸலவாத்' சொல்கிறாரோ
அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் "வஸீலா'வைக் கேளுங்கள். "வஸீலா' என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களுள் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

இதை ஒவ்வொருவரும் கடைப்பிடித்து ஓதிவந்தால் நிச்சயம் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும்தானே? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்மீது நேசம் கொண்டுள்ள எத்தனை பேர் இதைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே. இனியாவது இதை ஓதி, அவர்களின் பரிந்துரையைப் பெற முனைவோமே.

பாங்கு துஆ: அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஅவத்தித் தாம்மத்தி வஸ்ஸலாத்தில் காயிமத்தி ஆத்தி முஹம்மதனில் வசீலத்த வல்ஃபளீலத்த வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதனில்லதீ வஅத்தஹு.

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ.

கருத்துகள் இல்லை: