திங்கள், 4 நவம்பர், 2019

தமிழில் மவ்லிது ஓதக்கூடாதா?



(மஹல்லாவில் உள்ள ஒருவருக்கும் இமாமுக்குமிடையே ஓர் உரையாடல்)

அவர்: ஹலோ, இமாம் ஸாப் அஸ்ஸலாமு அலைக்கும்.

இமாம்: வ அலைக்கும் ஸலாம். யாரு?

அவர்: நான்தான் முஹம்மது பாய் பேசுறேன். புதுவீடு கட்டி முடிச்சாச்சு இமாம்ஸாப். வீட்ல மவ்லிது ஓதி, அந்த பரக்கத்தோட புதுவீட்ல குடியேறணும். அதனால நீங்கதான் வந்து மஜ்லிச சிறப்பா நடத்திக் கொடுக்கணும்.

இமாம்: அப்படியா பாய்? சரி. சிறப்பா செய்துடலாம். மஜ்லிசுல எத்தனை பேர் உக்காருவாங்க பாய்?

அவர்: நம்ம சொந்தக்காரங்க நாற்பது அம்பது பேர் உக்காருவாங்க.

இமாம்: சரி, முஹம்மது பாய். என்னிடம், கவிஞர் மு. மேத்தா எழுதிய நாயகம் எங்கள் காவியம், கவிஞர் வலம்புரி ஜான் எழுதிய நாயகம் எங்கள் தாயகம், உமறுப் புலவர் எழுதிய சீறாப் புராணம், கவிஞர் சிராஜ் பாகவி எழுதிய நெஞ்சில் நிறைந்த நபிமணி, பன்னூலாசிரியர் கவிஞர் எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம் எழுதிய நபிகள் நாயகக் காவியம் முதலான புத்தகங்கள் இருக்கு. இதுல எதை ஓதலாம்?

அவர்: இதெல்லாம் என்ன இமாம்ஸாப்?

இமாம்: இதெல்லாம் தமிழ் மவ்லிது புத்தகங்கள்.

அவர்: இதெல்லாம் நான் கேள்விப்பட்டதே இல்லையே? இதெல்லாம் வேண்டாம். இமாம்ஸாப் உங்களிடம் சுப்ஹான மவ்லிது இருக்கா? அதக் கொண்டுவாங்க. அதைத்தானே நாம் ஓதணும்? அதுதானே ரசூலுல்லாஹ் மவ்லிது?

இமாம்: இருக்கு. அது அரபியில் அல்லவா இருக்கு? உங்களுக்கு அரபி தெரியுமா? அரபி உங்க தாய்மொழியா? அல்லது அங்கே சபையில் அமர்வோருக்கு அரபி தெரியுமா?

அவர்: இல்லை. எனக்கும் அரபி தெரியாது. என் உறவினர்களுக்கும் அரபி தெரியாது. என்னோட தாய்மொழி தமிழ்தான். எங்க உறவினர்களுக்கும் தமிழ்தான் தெரியும்.

இமாம்: பிறகேன் நாம் அரபியில் ஓதணும்? தமிழ்ல ஓதலாமே?

அவர்: என்ன இமாம்ஸாப் புதுசா பேசுறீங்க? மவ்லிதுன்னா அது அரபியில் உள்ள சுப்ஹான மவ்லிதுதானே? அதைத்தானே நாம் ரசூலுல்லாஹ்வுக்கு ஓதணும்? நீங்க என்னமோ புதுசு புதுசா பேசுறீங்களே? அரபியில் ஓதினால்தானே நன்மை கிடைக்கும்? பரக்கத் கிடைக்கும்?

இமாம்: அப்படின்னு யார் சொன்னது முஹம்மது பாய்? நமக்குத் தெரிந்த மொழியில்தானே நாம் ரசூலுல்லாஹ்வைப் புகழணும்? அர்த்தமே புரியாத மொழியில புகழ்ந்தால் அது வெற்றுச் சடங்காகத்தான் இருக்குமே தவிர உணர்வுப்பூர்வமான புகழா இருக்குமா? தாய்மொழியில் ஓதினால்தான் சபையில உக்காந்து கேக்குறவங்களுக்கும் விளங்கும்? ரசூலுல்லாஹ்வின் தியாகம் விளங்கும்? அவங்க மேல அன்பு ஏற்படும்?

அவர்: இமாம்ஸாப், நீங்க எப்பப் பாத்தாலும் இப்படித்தான் எடக்கு மடக்காவே பேசுறீங்க. ஆண்டாண்டு காலமா நம் முன்னோர்கள் இந்த சுப்ஹான மவ்லிதைத்தான் ஓதிவர்றாங்க. நீங்க மட்டும் இப்ப புதுசா பேசுனா எப்டி?

இமாம்: அந்தக் காலத்துல தமிழ் மவ்லிது இல்லை. அதனால யாரோ எழுதி வச்ச அரபி நூலைப் படிக்க ஆரம்பிச்சாங்க. அதை ஒரு புகழ்ப்பாவாகத்தான் ஓதுனாங்க. நாளடைவில் மக்கள் அதில் பரக்கத்எனும் வார்த்தையையும் ஒட்டிக்கிட்டாங்க. அவ்வளவுதான். நீங்க நெனச்சு வச்சிருக்கிற மாதிரி, அரபியில் ஓதினால் பரக்கத் கிடைக்குமென்பது உண்மைன்னா, அதே பரக்கத் தமிழ்ல ஓதினாலும் கிடைக்கத்தானே செய்யும்? எல்லா மொழிகளும் சமம்தானே முஹம்மது பாய்? ஒரு தமிழாசிரியரா இருக்குற நீங்களே, தமிழைப் புறக்கணித்தால் பிறகு யார்தான் தமிழ்ல மவ்லிது ஓதுவாங்க?

அவர்: அதெல்லாம் வேண்டாம். நீங்க ஒத்து வரமாட்டீங்க. நான் வேற ஆளப் பாத்துக்கிறேன். வச்சுடுங்க.

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, மணலி, சென்னை.

================================================================



கருத்துகள் இல்லை: