திங்கள், 18 நவம்பர், 2019

இமாமாக உள்ளோர் கவனிக்க...



-----------------------------------------
தற்காலத்தில் பெரும்பாலானோரின் கைகளில் அறிதிறன் கைப்பேசி (ஸ்மார்ட் ஃபோன்) உள்ளது. பல்வேறு செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக்கொள்கிறார்கள். உலகச் செய்திகளைக்கூட உடனுக்குடன் தெரிந்துகொள்கிறார்கள். இருப்பினும் தம் மஹல்லா-பகுதிக்குள் என்ன நடக்கிறது, யார் இறந்தார், யாருக்குத் திருமணம், யார் நோய்வாய்ப்பட்டுள்ளார், யாருக்கு உதவி வேண்டும் முதலான எதுவும் பலருக்குத் தெரிவதில்லை. எனவே இந்நிலையை மாற்றியமைக்கும் விதத்தில் ஒவ்வோர் இமாமும் தத்தம் பகுதியில் வசிப்போரின் அறிதிறன் கைப்பேசி எண்களைப் பெற்று, கட்செவி (வாட்ஸ்அப்) குழு ஒன்றை உருவாக்கி, அதில் பதிவு செய்துகொள்ள வேண்டும். தம் பகுதி சார்ந்த இறப்புச் செய்தி, திருமணச் செய்தி, வெள்ளிக்கிழமை பயான், மத்ரஸா நேரம், தொழுகை நேரம், அவ்வப்போது வருகின்ற ஜமாஅத்துல் உலமாவின் அறிக்கைகள், அறிவிப்புகள் முதலான தகவல்களைப் பதிவு செய்தால் மக்கள் பயன்பெறுவார்கள்.

அத்தோடு திருமணத்திற்காக மணப்பெண்-மணாளர் தேடுவோரின் விவரங்களைப் பதிவுசெய்து பிற குழுக்களிலும் பகிரலாம். அதனால் அவர்களுக்கு மிகத் துரிதமாக மணப்பெண்-மணாளர் அமையக்கூடிய வாய்ப்பு ஏற்படும். (சேவை அடிப்படையில் தெரிவிக்க வேண்டிய தகவலை இன்று பணத்திற்கு விற்கிறார்கள். இதனால் பலரின் திருமணம் தள்ளிப்போவதைக் காண முடிகிறது. இதற்காகவே திருமணத் தகவல் மையங்கள் பல முளைத்திருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.)

ஒவ்வோர் இமாமும் இதன்மூலம் தத்தம் மஹல்லா மக்களை இயன்ற அளவு ஒருங்கிணைக்க முடியும்.

ஏற்கெனவே இமாம்கள் சிலர் இவ்வாறான வாட்ஸ்அப் குழுவை ஏற்படுத்தி, சேவை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். மற்ற இமாம்களும் இச்சேவையில் ஈடுபட்டால் மக்கள் பலரும் பயன்பெறுவார்கள் என்பது திண்ணம். அதுவே என் எண்ணம்.

ரமளான் மாதத்தில், ஸகாத் பெறத் தகுதியானோர் பட்டியலைத் தயார் செய்து தளத்தில் வெளியிட்டால் ஸகாத் கொடுக்கும் செல்வர்கள் தம் ஸகாத்தை உரியவர்களுக்கு நேரடியாக வழங்க ஏதுவாக இருக்கும்.

திடீர் உதவி தேவைப்படுவோர் குறித்த விவரத்தைப் பதிவு செய்தால் விரும்புவோர் அவருக்கு நேரடியாக உதவி செய்ய வசதியாக இருக்கும்.

இப்படிப் பற்பல சேவைகளை மேற்கொள்ள வசதியாக உள்ள வாட்ஸ்அப் குழுவை ஒவ்வோர் இமாமும் உருவாக்கி, சேவை செய்வது தற்காலத்தில் தவிர்க்க முடியாததாகும்.

பின்குறிப்பு: அட்மின் (இமாம்) மட்டுமே செய்திகளைப் பதிவிடுமாறு வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தேவையற்ற செய்திகளைத் தவிர்க்க முடியும்.

அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி
18.11.2019 20.03.1441
===============================

கருத்துகள் இல்லை: