-வழங்குபவர்
மௌலவி நூ அப்துல் ஹாதி பாகவி, இமாம் மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை -68
அதிகாலை தொழுதுவிட்டு நடைப்பயிற்சி மேற்கொள்வோர் பெரும்பாலும் வீதிகளில் செல்வதில்லை. அதற்கென ஆங்காங்கே உள்ள திடலைச் சுற்றி வட்டம் வருகின்றார்கள். ஒவ்வொரு நாளும் பத்து முதல் பதினைந்து வட்டம் போடுகின்றார்கள். இவ்வளவு சிரமப்பட்டு நடைப்பயிற்சி மேற்கொள்வோர், நாள்தோறும் அதிகாலை எழுந்து வீட்டில் உளூச் செய்துவிட்டு, வீட்டிலிருந்து பள்ளிவாசல் வரை நடந்து வந்து தொழுதுவிட்டு, பின்னர் மீண்டும் தத்தம் மஹல்லாவைச் சுற்றி ஒரு வட்டம் வந்தால் போதும் எத்தனையெத்தனை நன்மைகள்! ஒவ்வோர் எட்டுக்கும் நன்மையல்லவா?
ஆம்! அதிகாலை பாங்கு சொன்ன பின்னரும் நம் மஹல்லாவைச் சார்ந்த சகோதரர்கள் பலர் தொழுகாமல் தூங்கிக்கொண்டிருக்கின்றார்கள். நாம் தொழுதுவிட்டு ஒரு பொடி நடையாக நம் மஹல்லாவைச் சுற்றி வந்து யார் தொழுக மஸ்ஜிதை நோக்கி வரவில்லையோ அவர்களுள் ஒருவரை அல்லது இருவரை நாள்தோறும் சென்று சந்தித்து, அதிகாலைத் தொழுகைக்கு வாருங்கள் என்று கூறி அதிகாலைத் தொழுகையின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறி, அதன்மூலம் அவர் தொழுக வந்துவிட்டால் அதற்கான நன்மைகள் நம் கணக்கில் எழுதப்படுமல்லவா?
அதிகாலைத் தொழுகையை முடித்துவிட்டு, நம் மஹல்லாவில் நோயாளிகள் யாரேனும் இருக்கின்றார்களா என்ற செய்தியை அறிந்துகொண்டு அவர் வீட்டிற்கு நேரடியாகச் சென்று அவரைச் சந்தித்து, அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு, அவருக்குத் தேவையான உதவியைச் செய்துவிட்டு, அவருக்காகப் பிரார்த்தனையும் செய்துவிட்டு வந்தால் எத்தனையெத்தனை நன்மை!
இனி அதிகாலைத் தொழுகைக்குப்பின் நன்மையைச் சம்பாதிக்கத் தொடங்குவோம். நடைப்பயிற்சி செல்லும் பாதையை மாற்றுவோம். எங்கோ திடலைத் தேடிச் செல்லாமல் நாம் நமது மஹல்லாவையே வலம் வருவோம். தொழாமல் தூங்குகின்ற நம் சகோதரர்களை நரகப் பாதையிலிருந்து திசைதிருப்பிச் சொர்க்கப் பாதையை நோக்கி அழைத்து வருவோம் வாருங்கள்!
இனி அதிகாலைத் தொழுகைக்குச் செல்ல வாகனம் வேண்டாம். நடைப்பயிற்சியை நம் வீட்டிலிருந்தே தொடங்குவோம். எங்கள் மஹல்லாவில் வாழும் அனைவரும் அதிகாலைத் தொழுகையைப் பேணுபவர்கள் என்ற நிலையை உருவாக்குவோம். ஆம் இது நம் அனைவராலும் முடியும்.
இது நம் காலில்தான் இருக்கிறது.
================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக