சனி, 17 அக்டோபர், 2015

பசித்தோருக்கு உணவு வழங்குவோம்!

   -மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,

1979ஆம் ஆண்டு முதல் உலக உணவு நாள் (World Food Day) ஆண்டுதோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. "உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோரே'', "தானத்தில் சிறந்தது அன்னதானம்'' ஆகிய முதுமொழிகள் உணவு வழங்குவதன் சிறப்பையும் உயர்வையும் எடுத்துரைக்கின்றன.

"தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்'' என்ற பாரதியாரின் குரல்  உணவின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற அதேவேளையில், "அண்டைவீட்டார் பசித்திருக்க வயிறு நிறைய உண்பவன் இறைநம்பிக்கையாளன் இல்லை'' என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறிய முத்தான வார்த்தைகள் உணவைப் பகிர்ந்துண்ண வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. 

"ஒருவரின் உணவு இருவருக்குப் போதும்; இருவரின் உணவு நால்வருக்குப் போதும்; நால்வரின் உணவு எண்மருக்குப் போதும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: திர்மிதீ: 1743) இதன்மூலம் ஒருவர் தம் உணவைப் பிறருக்குப் பகிர்ந்து கொடுத்து உண்ண வேண்டும் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அது மட்டுமல்ல, சிறிதளவு உணவே ஒருவருக்குப் போதும் என்பதையும் இதன்மூலம் நாம் அறிகிறோம்.

உணவு கிடைக்காமல் ஆண்டுதோறும் பட்டினியால் இறப்போர் 3 கோடிக்கும் மேல் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. எத்தனையோ வசதி வாய்ப்புகள் இருந்தும், பசுமைப் புரட்சியெல்லாம் ஏற்பட்டும் என்ன பயன்? உணவு கிடைக்காமல் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றார்களே! சிலருக்கு  ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான் கிடைக்கிறது. சிலருக்கு அரைவயிற்றுக் கஞ்சிதான் கிடைக்கிறது!

"சலாமைப் பரப்புங்கள்; (பசித்தோருக்கு) உணவு வழங்குங்கள்; மக்கள் உறங்கும் நடுநிசி வேளையில் (எழுந்து) தொழுகுங்கள்; அமைதியாகச் சொர்க்கத்தில் நுழைவீர்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  பசித்தோருக்கு உணவு வழங்குவது சொர்க்கத்தில் நுழையக் காரணமாக அமைகிறது என்பதை அறிகிறோம்.

உணவு வழங்குவதன் முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் மிகவும் வலியுறுத்திக் கூறியுள்ளதை உணர்ந்துள்ள முஸ்லிம்கள் பிறருக்கு உணவு வழங்குவதை அவர்களின் அடிப்படைப் பண்பாகக் காணமுடிகிறது. அதனால்தான் மக்காவில் ஹஜ்ஜின்போது அல்லாஹ்விற்காக அறுக்கப்படுகின்ற  ஆடு, ஒட்டகம் ஆகியவற்றின் இறைச்சிகள் ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. ஆனால் அதேநேரத்தில் சில பணக்கார நாடுகளில் தம் தேவைக்கு எஞ்சிய பொருள்களைக் கடலில் கொட்டுகின்றார்கள்.  சந்தையில் பொருள்களின் விலை குறைந்துவிடாமல் ஒரு கட்டுக்குள் இருப்பதற்காக இவ்வாறு செய்கின்றார்கள். தன் நாட்டு மக்களுக்கும் கொடுப்பதில்லை. பிற நாட்டு மக்களுக்கும் கொடுப்பதில்லை. இதனால் ஒரு பக்கம் அமோக விளைச்சல் இருந்தும் மறுபக்கம் பட்டினிச் சாவுகளும் வறுமையும் தாண்டவமாடுகின்றன.

படைத்தோன் அல்லாஹ் பாரிலோர் அனைவருக்கும் குறைவின்றி நிறைவாக உணவுப் பொருள்களை விளையச் செய்கின்றான். உணவுப் பொருள்களை அபரிமிதமாக வழங்குகின்றான். ஆனால் குறுமதி கொண்ட மனிதனோ அவ்வுணவுப் பொருள்களை வீணாக்குகின்றான். உரிய முறையில் சேமித்து வைக்காமலும் தேவையுடையோருக்குக் கொடுக்காமலும் விரயம் செய்கிறான். இதனால்தான் இவ்வளவு பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. உணவுப் பற்றாக்குறையும் வறுமையும் ஏற்படுகின்றன. 

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் உணவுண்ணும்போதெல்லாம் தம்மோடு ஒரு விருந்தினர் இல்லாமல் உண்ணமாட்டார்கள். அத்தகைய உயர்பண்பு அவர்களிடம் இருந்ததால்தான் அவர் இறைவனின் நேசத்திற்குரிய நண்பரானார். பசித்தோருக்கு உணவு வழங்குவதைக் கண்டு படைத்தோன் இறைவன் மட்டில்லா மகிழ்ச்சியடைகிறான் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இறைவனின் உவப்பை நாடி உணவு வழங்குவதைத் திருக்குர்ஆனில் உயர்ந்தோன் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிக்கின்றனர். (தம்மிடம் பெறுபவர்களை நோக்கி) "நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்தை நாடியேயன்றி, உங்கüடம் நாம் யாதொரு கூலியையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ கருதவில்லை'' என்று கூறுகின்றார்கள். (76: 8-9)

மேலும் திருக்குர்ஆனைப் புரட்டி வாசிக்கின்றபோது சில குற்றங்களுக்கு உணவு வழங்குவதையே பரிகாரமாக ஆக்கியுள்ளான்.
எவரேனும் தங்கள் மனைவிகளைத் (தம்) தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிய பின்னர், அவர்களிடம் திரும்ப(ச் சேர்ந்துகொள்ள) விரும்பினால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே (இவ்வாறு ஒப்பிட்டுக் கூறிய குற்றத்திற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதனை (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசம் செய்கின்றான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.

(விடுதலை செய்யக்கூடிய அடிமையை) எவரேனும் பெற்றிருக்காவிடில், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே, (அவன்) இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். (இவ்வாறு நோன்பு நோற்கச்) சக்தி பெறாதவன் அறுபது ஏழைகளுக்கு (நடுநிலையான) உணவளிக்கட்டும். (58: 3-4)

"அபூதர்ரே! நீ குழம்பு சமைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்திக்கொள்; உன் அண்டைவீட்டினரையும் கவனித்துக்கொள்'' என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: 4758) நபிகள் நாயகத்தின் வாக்குப்படி, ஒவ்வொருவரும் தம் அண்டைவீட்டாரைக் கவனித்துக்கொண்டால், ஒவ்வோர் ஊராரும் தம் அண்டையிலுள்ள ஊர்களைக்  கவனித்துக்கொண்டால், ஒவ்வொரு மாவட்டத்தாரும் தம் அண்டை மாவட்டத்திலுள்ளோரைக் கவனித்துக்கொண்டால், ஒவ்வொரு மாநிலத்தாரும் தம் அண்டை மாநிலத்தாரைக் கவனித்துக்கொண்டால், ஒவ்வொரு நாட்டினரும் தம் அண்டை நாட்டினரைக் கவனித்துக்கொண்டால் இவ்வுலகில் பசி ஏது? பட்டினி ஏது?

==============================================



கருத்துகள் இல்லை: