(கவிக்கோவின் கருவூலம் எனும் நூலில் இடம்பெற்றுள்ள எனது ஆக்கம்)
மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,
நான் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் ஓதிக்கொண்டிருந்த காலத்திலேயே கவிக்கோ அவர்களை அறிவேன். அவருடைய கவிதைகளையும் கட்டுரைகளையும் தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். அவருடைய ஆழமான சிந்தனைகளையும் நுண்ணிய கற்பனைகளையும் இரசித்துச் சுவைத்திருக்கிறேன். அவருடைய கவிதைகளில் மிகுதியாக மறுமைச் சிந்தனையையும் இறைவனைப் பற்றிய சிந்தனைத் தூண்டலையும் காண்கிறேன்.
நான் ஒரு தடவை அவரை அவர்தம் இல்லத்தில் சந்தித்து உரையாடியபோது, திருக்குர்ஆன் வசனங்களுக்கும் பொய்யாநபியுரைத்த அறவுரைகளுக்கும் புதியதொரு கோணத்தில் விளக்கவுரை கூறி என்னை வியப்பிலாழ்த்தினார். இத்தகைய கோணத்தில் ஆலிம்கள் சிந்திக்கவில்லையே என நான் அவரிடம் கூறினேன். தங்களைப் போன்ற இளம் மௌலவிகள் புதிய கோணத்தில் திருக்குர்ஆனைச் சிந்தித்து அதன் ஆழிய கருத்துகளை மக்களுக்கு எடுத்தோத வேண்டும் என்று அறிவுரை நல்கினார்.
முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றிய அவருடைய கவிதையில், புதையலுக்குக்கீழ் இருந்துகொண்டு பிச்சையெடுக்கிறோம் என்று எழுதியிருந்தார். ஆம். திருக்குர்ஆன் ஒரு கருத்துப் பெட்டகம்; அது ஒரு கருத்துப் புதையல். மனிதன் எந்த அளவிற்கு ஆழமாகவும் நுட்பமாகவும் சிந்திக்கின்றானோ அதற்கேற்றவாறு பொருள் விரிந்து கொடுக்கக்கூடியதாகும். இந்தச் சமுதாயம் திருக்குர்ஆனையும் ஆலிம்களையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. இரண்டையுமே ஃபாத்திஹாவிற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறது என்று நான் என் உரைகளில் சொல்வதுண்டு. திருக்குர்ஆனைச் செவ்வனே சிந்திக்காமல் அதன் கருத்துகளை ஆராயாமல் பிறரிடம் நாம் தீர்வுகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை இக்கவிதை மூலம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறார்.
எனக்குக் கவித்திறன் கிடைக்கப்பெற்றபோது, திரைப்படப் பாடல் வரிகளை ஆங்காங்கே செவியுற்றுக் கூர்ந்து நோக்கத் தொடங்கினேன். அப்போது, இதைவிடச் சிறந்த பாடல்களை நாமே எழுதலாமே என்று நினைத்தேன். அத்தருணத்தில் ஒரு தடவை கவிக்கோ அவர்களின் கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில், திரைப்படங்களுக்காகப் பாடல்கள் எழுதித் தருமாறு சிலர் அவரிடம் கேட்டபோது, அம்மி கொத்த சிற்பி எதற்கு? என்று அவர் விடையளித்ததைப் படிக்க நேரிட்டது. அவருடைய அந்தக் கவிதை வரி, என்னுடைய எண்ணத்தை மாற்றிவிட்டது.
அவருடைய கவிதை வரியை நான் மற்றொரு கோணத்தில் சிந்தித்தேன். மறுமை குறித்த சிந்தனைதான் அவரை இப்படிப் பேச வைத்துள்ளது. இறைவனால் வழங்கப்பட்ட திறமையை மக்களின் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர, பணம், காசு கிடைக்கிறது என்பதற்காக எதையும் செய்து தன் திறமையை விற்பனை செய்யக்கூடாது என்பதையும் புரிந்துகொண்டேன். ஓர் ஆலிம் அல்லாதவரின் உள்ளத்தில் இறையச்சமும் அவனைக் குறித்த சிந்தனையும் இந்த அளவிற்கு நிழலாடுகிறது என்றால் ஓர் ஆலிமாகிய என் உள்ளத்தில் எத்தகைய சிந்தனை ஏற்பட வேண்டும் என்று என் சிந்தனை விரிவடையத் தொடங்கியது; குறுகிய எண்ணம் சிதைந்துபோனது.
கவிஞன் என்பவன் தன் உயர்சிந்தனையால், அறவே சிந்திக்காமல் தூங்கிக்கொண்டிருக்கும் உள்ளங்களைத் தட்டி எழுப்ப வேண்டும்; மக்களின் கல்வி வளர்ச்சிக்காக, சமுதாய மேம்பாட்டிற்காக, முன்னேற்றத்திற்காகப் பாடுபட வேண்டும்; அவனுடைய சிந்தனை பிறரின் சிந்தையைத் தூண்ட வேண்டும். அத்தகைய சிந்தனையும் நுண்ணறிவும் கொண்ட மக்கள் கவிஞராகத்தான் அண்ணன் கவிக்கோ அவர்களைக் காண்கிறேன். அவருடைய எழுத்தும் பேச்சும் மக்களுக்குப் பயன்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால் முஸ்லிம் சமுதாயம் அவருடைய தமிழையும் எழுத்தையும் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
= என்னுடைய ஆக்கம் இடம்பெற வழிகாட்டி உதவி செய்த ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
========================================

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக