(அனுமதி பெறவேண்டிய மூன்று தருணங்கள்)
மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இராக்வாழ் மக்களுள் ஒரு குழுவினர், இப்னு அப்பாஸ் அவர்களே!
"இறைநம்பிக்கைகொண்டோரே! உங்களுடைய பணியாட்களும், உங்களுள் பருவமடையாத (சிறிய) பிள்ளைகளும் (நீங்கள் திரைக்குள் அந்தரங்கமாக இருக்கக்கூடிய) மூன்று தருணங்களில் உங்களிடம் அவர்கள் (வருவாராயின் உங்களுடைய) அனுமதியைக் கோரவேண்டும். (அந்தத் தருணங்களாவன: ஃபஜ்ர்) அதிகாலைத் தொழுகைக்கு முன்னரும் (சிறுஓய்விற்காக உங்கள் வழமையான) ஆடைகளைக் களைந்திருக்கக்கூடிய (ளுஹர்) பகல் வேளையிலும், "இஷா' நேரத்தில் (இரவுத்) தொழுகைக்குப் பின்னரும் ஆகிய (இம்)மூன்று தருணங்களும் நீங்கள் திரைக்குள் அந்தரங்கமாக இருக்கக்கூடிய நேரங்கள். (இவற்றைத் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் உங்கள் அனுமதியின்றியே உங்களிடம் வருவது) அவர்கள்மீது குற்றமில்லை. (ஏனென்றால்,) இவர்கள் அடிக்கடி உங்களிடம் வரக்கூடியவர்களாகவும், உங்களுள் ஒருவர் மற்றவரிடம் அடிக்கடி செல்ல வேண்டியவர்களாகவும் இருப்பதாலும் (அடிக்கடி அனுமதி கோரவேண்டிய அவசியமில்லை.) இவ்வாறு அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும் ஞானமுடையவனும் ஆவான்'' (24: 58) என்று இந்த இறைவசனத்தில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? அதை மக்களும் செயல்படுத்துவதில்லையே?” என்று கேட்டனர்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறியதாவது: திண்ணமாக அல்லாஹ் சகிப்புத்தன்மையுடையவனும் இறைநம்பிக்கையாளர்கள்மீது மிகுந்த அன்புடையோனும் ஆவான். அவன் மறைப்பை விரும்புகின்றான். மக்களின் வீடுகளில் திரைகளோ தடுப்புகளோ இருக்கவில்லை. எனவே சிலவேளை ஒருவர்தம் மனைவியோடு இருக்கும்போது அவருடைய பணியாள் அல்லது அவருடைய பிள்ளை அல்லது (வீட்டில் வளர்கின்ற) அவருடைய அநாதைப்பிள்ளை யாரேனும் ஒருவர் (திடீரென) நுழைந்துவிடலாம். எனவேதான் அம்மூன்று தருணங்களில் (வீட்டிற்குள் உள்ளோரும்) அனுமதி கேட்டுத்தான் (அடுத்தவர் அறையினுள்) நுழைய வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். திரைகளையும் நன்மையையும் மக்களுக்குக் கொண்டுவந்தான். ஆனால் இதை யாரும் செயல்படுத்துவதாக நான் காணவில்லை. (நூல்: அபூதாவூது: 4518)
இன்றைய நவீன காலத்தில் பல்வேறு வீடுகளில் வீட்டின் ஒவ்வோர் உறுப்பினருக்கும் தனித்தனி அறை உண்டு. அதனுள் அவர்கள் தம் விருப்பம்போல் இருக்க நாடுகின்றார்கள். அத்தகைய சூழ்நிலையில் ஒருவர் மற்றொருவரின் அறைக்குள் நுழைய வேண்டுமெனில் அவரின் அனுமதி பெற்றுத்தான் நுழைய வேண்டும் என்பதையே அல்லாஹ் திருக்குர்ஆனில் தெளிவுபடுத்துகிறான்.
குறிப்பாக மூன்று தருணங்களைக் குறிப்பிடுகின்றான். அவை: அதிகாலை நேரம், சிறுஓய்விற்கான பகல்நேரம், இரவு நேரம். இம்மூன்று தருணங்களில் அவரவர் அறையினுள் உள்ளவரிடம் அனுமதி பெற்றபின்னரே உள்நுழைய வேண்டும்.
பொதுவாக, காலை நேரம் என்பது இரவில் துயில் கொண்டு எழுகின்ற நேரம். இரவு அயர்ந்து தூங்கியதில் ஆடைகள் விலகியிருக்கலாம், அவிழ்ந்து இருக்கலாம். கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதிகள் வெளியே தெரியலாம். இத்தகைய தருணத்தில் அங்குள்ள எழுப்புவதற்காகத் திடீரென நுழைந்துவிடக் கூடாது. வெளியில் இருந்துகொண்டே கதவைத் தட்டி எழுப்ப வேண்டும். தன்னுடைய மகனின் அறைதானே? தந்தையின் அறைதானே? தாயின் அறைதானே? என்று மேம்போக்காக எண்ணக்கூடாது.
அதேபோல் தாய், தந்தையை எழுப்புவதற்குச் செல்கின்ற மகனோ மகளோ அவர்களின் அறைக்குள் திடீரென நுழைந்துவிடக் கூடாது. வெளியிலிருந்தவாறே அனுமதி கோர வேண்டும். அவர்கள் அனுமதியளித்த பின்னரே உள்ளே நுழைய வேண்டும். தன்னுடைய தாய், தந்தைதானே என்று எண்ணலாம். எனினும் அவர்களின் தனிமைச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது.
நபித்தோழர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், என் தாயாரின் அறைக்குள் செல்வதற்கும் நான் அனுமதி கோர வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் தாயை அவலட்சணமான தோற்றத்தில் நீ காண விரும்புவாயா?” என்று எதிர்வினாத் தொடுத்தார்கள். “இல்லை (மாட்டேன்)” என்று கூறினார். “அப்படியானால், அனுமதி பெற்றே செல்” என்று கூறினார்கள்.
அதாவது தாயோ, தந்தையோ சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காகத் தம் ஆடைகளை விலக்கிக்கொண்டு இருக்கலாம். அந்நேரத்தில் பிள்ளைகள் திடீரென அவர்களின் அறைக்குள் நுழைந்தால் காணக்கூடாத காட்சிகளைக் காண நேரிடும். அவர்கள் தர்ம சங்கடத்தில் நெளிவார்கள். அல்லது திட்டுவார்கள். இதையெல்லாம் தவிர்க்கவே அடுத்தவரின் அறைக்குள் நுழைந்தாலும் அல்லது வெளியிலிருந்து வருவோர் தம் வீட்டினுள் நுழைந்தாலும் அனுமதி பெற்றபின்னரே உள்ளே நுழைய வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் நமக்குக் கற்பிக்கிறது.
பொதுவாக பகல் வேளைகளில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டுத் தம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காக ஆடைகளை விலக்கி, காற்று வாங்குவதுண்டு.
கோடைக்காலங்களில் இது நாள்தோறும் நடைபெறும் நிகழ்வு. அந்நேரத்தில் ஏதோ ஒரு தேவைக்காக அவர்களின் அறைக்குள் செல்ல வேண்டியது ஏற்படலாம். அப்போது திடீரென அவர்களின் அறைக்குள் நுழைந்துவிடக்கூடாது. அவர்களின் அனுமதி பெற்றபின்னரே நுழைய வேண்டும். இது இரண்டாவது தருணம்.
மூன்றாவது தருணம், இரவு நேரங்களில் உறங்கச் செல்வதற்காகத் தம் ஆடைகளை மாற்றிக்கொண்டு, வேறு சாதாரண ஆடைகளை அல்லது அரைகுறை ஆடைகளை அணிந்திருக்கலாம். இது பொதுவாக எல்லோரும் செய்கின்ற வழமையான ஒன்றுதான். எனவே மகனோ, மகளோ, தாயோ, தந்தையோ யாராக இருந்தாலும் கதவைத் தட்டி அனுமதி கேட்டுவிட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும் என்ற இங்கிதத்தைக் கற்றுத் தருகிறது இஸ்லாம்.
ஆக இம்மூன்று தருணங்களில் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது. இம்மூன்று தருணங்களை முக்கியமாகக் குறிப்பிட்ட காரணம் என்னவெனில், இம்மூன்று தருணங்களே பொருவாக எல்லோரும் தம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்கின்ற நேரம். பிற நேரங்களில் ஒவ்வொருவரும் தத்தம் வேலைகளைச் செய்துகொண்டு இருப்பார்கள். வழமையான ஆடைகளையே அணிந்திருப்பார்கள். அதனால் அத்தகைய தருணங்களில் அவர்களும் எச்சரிக்கையாகவே இருப்பார்கள். வீட்டிற்குள் பணியாள்கள், பிள்ளைகள், பிறர் உள்ளிட்ட எத்தனையோ பேர் வருவார்கள் என்று தெரியும். எனவே கவனத்தோடும் எச்சரிக்கையோடும் இருப்பார்கள் என்பதை நாம் உணரலாம்.
அக்காலத்தில் வீட்டின் அறைகளுக்குத் திரை இருக்காது. எனவே இத்தகைய ஓர் அறிவுரை தேவைப்பட்டது. இன்றைய காலத்தில் ஒவ்வோர் அறைக்கும் கதவுண்டு. தாழ்ப்பாள் உண்டு. எனவே இந்த அறிவுரை தேவையில்லை என்று கூற முற்படலாம். இருப்பினும் அவர்கள் ஒருவேளை கதவை மூடாமல் அல்லது தாழ்ப்பாள் போடாமல் இருந்து, அந்நேரத்தில் திடீரெனப் பிள்ளைகள் நுழைந்து, காணக்கூடாத காட்சிகளைக் கண்டுவிட்டால் இருவருக்குமே தர்மசங்கடம். எனவே இது விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இது எப்போதும் தேவையான ஓர் அறிவுரையே. எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரையாகும். ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளுக்கு இந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்குமாறு சொல்லிக்கொடுக்க வேண்டும்.
உயர்ந்தோன் அல்லாஹ் மூன்று தருணங்களைக் குறிப்பிடுவதால் அம்மூன்று தருணங்களைத் தவிர மற்ற நேரங்களில் அனுமதியின்றி உள்ளே நுழைந்துகொள்ளலாம் என்று அர்த்தமில்லை. அவ்வீட்டில் வேலை செய்கின்றவர்கள் அடிக்கடி வந்து செல்ல நேரிடும். அவர்கள் உள்ளே வருகின்ற ஒவ்வொரு தடவையும் அனுமதி பெற வேண்டுமென்றால் அதற்கே நேரம் போதாது. இருப்பினும் உள்ளே செல்லுமுன் ஏதோ ஒரு வகையில் தம் வருகையை உள்ளே இருப்போருக்கு உணர்த்திவிட்டுச் செல்வதுதான் நற்பண்புமிக்கோர்க்கு அழகாகும். அதுவே ஒழுக்கமும் பேணுதலும் ஆகும்.
----------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக