திங்கள், 30 மே, 2022
திங்கள், 23 மே, 2022
விளிம்புநிலைப் பெண்களுக்குக் கைகொடுப்போம்!
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
புதன், 20 ஏப்ரல், 2022
குறுமதியாளர்களின் குறுக்குச் சிந்தனை
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
பிஎச்.டி.
மனிதன் இவ்வுலகில் நிம்மதியாகவும்
மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கான எல்லா வளங்களையும் வல்லோன் அல்லாஹ்
வழங்கியிருக்கின்றான். ஒவ்வொரு மனிதனும் வல்லோன் அல்லாஹ் விதித்த கட்டளைகளைப்
பின்பற்றி நடக்கத் தொடங்கிவிட்டால் அனைவரும் மகிழ்ச்சியாக வாழலாம். ஆனால் அந்தோ
பரிதாபம்! இறைவன் இட்ட கட்டளைகள் மீறப்படுவதாலும் குறுமதியாளர்களின்
குயுக்தியாலும் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றார்கள்; நிம்மதியிழக்கின்றார்கள்;
சிரமத்திற்குள்ளாகின்றார்கள்;
பசியால்
வாடுகின்றார்கள். செல்வர்களின் பேராசையால் ஏழைகள் ஏழைகளாகவே இருக்கின்றார்கள்.
குறுமதியாளர்களின் குறுக்குச் சிந்தையால்
கொலை, கொள்ளை,
கையூட்டு,
விதிமீறல்,
அநியாயம்,
ஏமாற்று,
சூழ்ச்சி,
திருட்டு
முதலானவை நாள்தோறும் நடந்தேறுகின்றன. குறுமதியாளர்களான வியாபாரிகள் அளவையிலும்
நிறுவையிலும் அநியாயம் செய்து விற்பனை செய்வதாலும் கலப்படம் செய்து பொருள்களை
விற்பனை செய்வதாலும் எவ்வளவோ பேர் பாதிக்கப்படுகின்றார்கள்;
எத்தனையோ
பேர் உடல் உபாதைக்கு ஆளாகின்றார்கள்.
செல்வம் கொழித்த பெருவணிகர்கள் - செல்வத்தைப்
பெருக்கத் தேவையற்றவர்கள் - எரிபொருள்களின் விலையை நாளுக்கு நாள்
உயர்த்திக்கொண்டே செல்வதால் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். எரிபொருள்களின்
உயர்வால் மக்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற அத்தியாவசியத் பொருள்கள் அனைத்தும்
விலை உயர்வடைகின்றன. அதனால் மக்கள் பெருமளவில்
சிரமப்படுகின்றார்கள்.
இவ்வளவு உயர்த்தி விற்பனை செய்து பணத்தைப்
பெருக்கும் அவர்கள் அதையெல்லாம் உண்டு கழிக்கப்போகின்றார்களா?
இல்லவே
இல்லை. இதுவெல்லாம் அவர்களின் கௌரவ விளையாட்டு. உன்னைவிட நான் அதிகம்
வைத்துள்ளேன் என்று இவன் சொல்ல, அப்படியா,
உன்னைவிட
நான் அதிகமாகப் பெருக்கிக் காட்டுகிறேன் என்று சூளுரைத்து, அவன்
தனது விற்பனைப் பொருள்களின் விலையை உயர்த்துகிறான். இப்படியே அவர்களுள்
ஒவ்வொருவரும் தமக்குள் கௌரவப் போட்டி போடுகின்றனர்.
குறுமதிகொண்ட கோணல் புத்தியுடைய ஆட்சியாளர்கள் கீழ்த்தரமான ஆட்சி செய்கின்றார்கள். மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான எந்த முயற்சியும் செய்யாமல் அவர்களை மேன்மேலும் வதைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் செய்துவருகின்றார்கள். வாக்குறுதிகளை அள்ளிவீசி மக்களின் வாக்குகளை வாங்கிக்கொண்டு பதவியில் அமர்ந்ததும் அவர்களை நசுக்குவதற்கான எல்லா வேலைகளையும் செய்து வருகின்றார்கள். பெருவணிகர்களோடு சேர்ந்துகொண்டு அவர்களின் நலன்களுக்காகவே உழைக்கின்றார்கள்.
ஒரு பக்கம் விலைவாசி உயர்வால் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுகின்றார்கள்; மற்றொரு புறம் மதத்தின்மீது நம்பிக்கை கொண்டு, ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்ந்து வருகின்ற மக்கள் மத்தியில் துவேஷத்தைத் தூவிவிட்டு, குழப்பத்தை ஏற்படுத்தி, கலவரங்களைத் தூண்டி மனதளவில் நிம்மதியைப் பறிக்கின்றார்கள். இந்து-முஸ்லிம் ஒற்றுமையைச் சிதைத்து மத நல்லிணக்கத்தைக் குலைத்து, மதவாரியாக மக்களைப் பிரிக்கப் பார்க்கின்றார்கள். அதன்மூலம் ஒரு குறிப்பிட்ட மதத்தாரின் வாக்குகளைப் பெற்றுப் பதவியில் நீடிக்க முயல்கின்றார்கள். ஆக இதுவரை மக்களுக்கு எந்த நன்மையையும் செய்ய முன்வராத குறுமதியாளர்கள் இவர்கள்.
மக்கள்மீது கருணை காட்டி, அன்பு செலுத்தும்வண்ணம் ஆட்சி செய்து, அவர்கள் வளமாக வாழ என்னென்ன திட்டங்கள் உள்ளனவோ அவற்றைச் செயல்படுத்தினால், அடுத்த தடவை அதே ஆட்சியாளனுக்கு மக்கள் தாமாகவே வாக்களிக்கத்தானே செய்வார்கள்? நேரிய சிந்தனை கொண்டவன் அவ்வாறுதான் செய்வான்; மக்களை நேசிப்பவன் அவ்வாறுதான் செயல்படுவான். ஆனால் குறுமதியாளர்கள் மக்களை வதைப்பதற்கான திட்டங்களையே செயல்படுத்த முனைகின்றார்கள்; பெருவணிகர்கள் பயனுறும் வகையில் திட்டங்களைத் தீட்டுகின்றார்கள்; அவர்களுக்குச் சாதகமாக எல்லாவற்றையும் மாற்றியமைக்கின்றார்கள். இறுதியில் தேர்தல் நிதி எனும் பெயரில் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் பணத்தைப் பெற்றுக்கொள்கின்றார்கள்.
மக்களுக்குத் தொண்டு செய்வதற்காகவும்
அவர்களின் பசியைப் போக்குவதற்காகவும் கல்வியில் முன்னேற்றத்தை
ஏற்படுத்துவதற்காகவும் தொண்டு நிறுவனங்களும் இயக்கங்களும் ஆங்காங்கே இயங்கி
வருகின்றன. மக்கள்மீது இரக்கம் காட்டுவோர் இறைவனின் அன்பையும் கருணையையும் பெற வேண்டுமென்ற நோக்கம் கொண்டோர் பற்பல
சேவைகளைச் செய்துவருகின்றார்கள். அவர்களின் செயல் பாராட்டுக்குரியது. ஆனால்
குறுமதியாளர்களோ மக்களை மதரீதியாகப் பிரிப்பதற்கும் இனவழிப்புச் செய்வதற்கும்
பல்வேறு பெயர்களில் இயக்கங்கள் நடத்துகின்றார்கள். அதிலுள்ள இயக்கச் சிறார்களின்
மனங்களில் நஞ்சை விதைக்கின்றார்கள்; இளைஞர்களின்
மனங்களில் கொலைவெறியூட்டுகின்றார்கள்.
கட்டற்ற காளையர்கள் தாம் செய்வதறியாது,
ஏவப்பட்ட
ஏவல் பணிகளைச் செவ்வனே செய்து முடிக்கின்றார்கள்; குறிப்பிட்ட
இனத்தாரைக் குறிவைத்து அவர்களின் சொத்துகளைச் சூறையாடுதல்,
பொருள்களை
அழித்தல், வணக்கத்தலங்களைச்
சேதப்படுத்துதல், அவர்களின்
பெண்களை அச்சுறுத்தல் உள்ளிட்ட கொடும் செயல்களைச் செய்து வருகின்றார்கள்.
அவர்களுக்குத் தம் வாழ்வில் இலக்கேதும் இல்லை. ஏன் பிறந்தோம்,
ஏன்
வாழ்கிறோம், மரணத்திற்குப்பின்
என்ன நிகழும் என்ற எந்தச் சிந்தனையும் இல்லை. இலக்கு ஏதுமின்றி அவிழ்த்துவிடப்பட்ட
காளை மாடுகளைப் போன்று களத்தில் புகுந்து, கண்ணுக்கு
எதிர்ப்பட்டவர்களைக் குத்திக் கிழிப்பதுதான் இலக்கு. ஏன் செய்கிறோம்,
யாருக்காகச்
செய்கிறோம் என்ற சிந்தனையற்ற சிறுமதியாளர்கள் அவர்கள்.
அவர்கள் (நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில்)
போர் நெருப்பை மூட்டும்போதெல்லாம் அல்லாஹ் அதனை அணைத்துவிடுகின்றான். ஆனால்,
(இன்னும்) அவர்கள் பூமியில் விஷமம் செய்து கொண்டே
அலைகின்றார்கள். அல்லாஹ், விஷமம்
செய்பவர்களை நேசிப்பதே இல்லை (5: 64) என்ற இறைவசனம் இவ்விடத்தில் நம்மைச்
சிந்திக்கத்தூண்டுகிறது.
எவ்வளவு அழகான உலகை இறைவன் படைத்துள்ளான்;
ஒவ்வொன்றையும்
துல்லியமாகத் திட்டமிட்டுப் படைத்துள்ளான். புவியிலுள்ள ஒவ்வொன்றும் ஒவ்வொரு
விதத்தில் அழகு. அவையனைத்தும் ஏதோ ஒரு வகையில் மனிதனுக்குப் பயனளித்துக்
கொண்டிருக்கின்றன. அதுபோலவே ஒவ்வொரு மனிதனும் பிறருக்குப் பயனுள்ளவனாக இருக்க
முடியும். இறைத்தூதர் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்களிடம்,
"அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்த அடியார்
யார்?'' என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள், "மக்களுக்கு
மிகவும் பயனுள்ளவரே ஆவார்'' என்று
பதிலளித்தார்கள். (ஹுலிய்யத்துல் அவ்லியா)
ஆனால் குறுமதியாளர்கள் தம்மால் இயன்ற
பயன்களைப் பிறருக்கு வழங்குவதற்குப் பதிலாக, தம்மால் இயன்ற அளவுக்கு
மனிதர்களை அச்சுறுத்தி, அந்த
அச்சத்தின் எச்சத்திலேயே அவர்கள் வாழ நினைக்கின்றார்கள். இத்தகைய வாழ்க்கையில்
ஏதாவது பொருள் இருக்கிறதா? யாருக்கேனும்
ஏதாவது பயன் இருக்கிறதா?
வீரத்தைக் காட்ட வேண்டிய இடத்தில் காட்டாமல்,
சிறார்களிடமும்
சிறுமியர்களிடமும் வீரத்தைக் காட்டி அவர்களை அச்சுறுத்துவது,
துப்பாக்கி
முனையில் அவர்களை இழுத்துச் சென்று தொல்லை கொடுப்பது அல்லது வன்புணர்வில்
ஈடுபடுவது என்னவிதமான மனிதச் செயல்? அன்பு
காட்ட வேண்டிய மாணவிகளிடம், காமவேட்கை
கொண்டு, அவர்களை
அச்சுறுத்துவதும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதும் இழிந்த மனிதர்களின்
இழிசெயல் அல்லவா? படிக்க
வந்தவர்களுக்குப் படிப்பைச் சொல்லிக்
கொடுப்பதோடு நீதிக்கதைகளையும் சொல்லி அவர்களைச் செம்மைப் படுத்துவதுதான்
அறிவார்ந்த ஆசிரியர்களின் அறச்செயல். ஆனால் அதைவிடுத்து, கீழ்த்தரமான
செயல்களில் ஈடுபடுவது குறுமதியாளர்களின் செயலல்லவா?
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின்
அழகு. இங்கு பல்வேறு மதங்கள், பற்பல
இனங்கள், பன்முகப் பண்பாடுகள்,
பற்பல
மொழிகள், ஒவ்வொரு
மதத்தாருக்கும் ஒவ்வொரு விதமான ஆடைப் பழக்கங்கள், உணவுப்
பழக்கங்கள், பல்வேறு நம்பிக்கைகள்
உள்ளன. இவை அனைத்தும் நிறைந்த பன்முகக் கலாச்சாரம் கொண்ட நாடுதான் இந்தியா. அழகிய
இந்தியாவை அழிவை நோக்கி அழைத்துச் செல்லும் ஆட்சியாளர்கள் குறுமதியாளர்களேயாவர்.
அவர்கள் தம் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள
பெருவணிகர்களோடு சேர்ந்துகொண்டு அவர்களின் குரோத எண்ணப்படி ஆட்சி
நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது என்பதே மக்களின்
எண்ணம். பெரும்பாலான மக்கள் ஒருங்கிணைந்து இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது என்று
எண்ணினால் பிரபஞ்ச விதியின் அடிப்படையில் இறைவன் இந்த ஆட்சியாளர்களை அகற்றிவிடுவான்
என்பது திண்ணம். ஆகவே நாம் அனைவரும் இதுபோன்ற காட்டுமிராண்டி ஆட்சியாளர்களை
அகற்றிவிடுமாறு நம் ஆழ்மனத்தில் எண்ணினால்
போதும். நிச்சயம் இவர்களின் ஆட்சி அதிவிரைவில் காணாமல் போய்விடும்.
அழகிய இவ்வுலகில் நாம் ஒவ்வொருவரும் நம்மால்
இயன்ற பயன்களைப் பிற மனிதர்களுக்கு நல்கி, பிறர்
மகிழ வாழ்வோம்; நாமும் மகிழ்வோம்.
குறுமதியாளர்களின் குறுக்குச் சிந்தனைகளை அகற்றி நேரிய சிந்தனையோடு
நடைபோடுவோம்.
சனி, 19 மார்ச், 2022
ஒன்றிணைந்து உயர்வடைவோம்!
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
இவ்வுலகில் யாரும் தனிமனிதனாக வாழ்ந்துவிட முடியாது. ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருவகையில் பிறரைச் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது. சிலருக்குப் பலரின் தேவை ஏற்படலாம். வேறு சிலருக்கு மிகச் சிலரின் தேவையே போதுமானதாக இருக்கலாம். தனிமனிதரைப் பொருத்த வரை, சார்புநிலை கூடுதல் குறைவாக இருக்கலாமே தவிர பிறரின் உதவி எனக்குத் தேவையில்லை என யாரும் ஒதுங்கிக்கொள்ள முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பிறரின் தேவையும் உதவியும் இன்றியமையாதவர்களாகவே உள்ளனர்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றைச் சமுதாயமாக வாழ முற்பட்டால் நம்மால் மற்றவர்களுக்குப் பற்பல நன்மைகள் உண்டாகும். பல்வேறு தீமைகள் அகலும். ஆனால் நம் சமுதாயத்தின் துர்பாக்கியநிலை என்னவெனில், ஒரே கொள்கையைக்கொண்ட நாம் ஒரே கொடியின்கீழ் இணைவதில்லை என்பதுதான். அதனால் நம் சமுதாயத்திற்கு பெருமளவில் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், தொழில், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஒன்றிணைந்து வாழ ஒற்றுமையாக இருப்பதும், தன் சகோதரனுக்காக விட்டுக்கொடுப்பதும் முக்கியமானதாகும். விட்டுக் கொடுத்தால்தான் நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக ஒரே குடையின்கீழ் வாழ முடியும். அது நமக்கு மத்தியில் இல்லாததால்தான் பிற சமுதாயத்தினர் நம்மைப் படிக்கட்டுகளாகப் பயன்படுத்தி, நம்மீது ஏறி உச்சத்தை அடைகின்றனர். நாமோ எச்சமாகக் கீழ்நிலையிலேயே கிடக்கின்றோம்.
நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நம்முடைய ஒற்றுமையின்மையால் பல்வேறு வார்டுகளைப் பிற சமுதாயத்தினர் தட்டிச் சென்றுள்ளனர். ஒரே வார்டில் ஐந்து முஸ்லிம் சகோதரர்கள் களம் கண்டனர். பிற சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் குறைந்த வாக்குகளையே பெற்றாலும், முஸ்லிம்களின் வாக்குகள் ஐந்து பேருக்குப் பிரிந்து, சிதறிப்போய்விட்டதால் அவரே வெற்றி பெற்றுவிட்டார். முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் ஊரில் ஒரு வார்டையே கைப்பற்ற முடியவில்லை. இந்நிலை பல ஊர்களில் பல வார்டுகளில் ஏற்பட்டது. இதுவே நமது ஒற்றுமையின்மைக்கும் விட்டுக்கொடுக்காமைக்கும் தக்க சான்றாகும்.
தன்னைவிடத் தன் சகோதரனை முன்னிலைப்படுத்துவது பூரண இறைநம்பிக்கையின் அடையாளம் ஆகும். அதற்கு வரலாற்றில் ஒரு நிகழ்வு உண்டு. அதை இத்தருணத்தில் நாம் அனைவரும் தெரிந்துகொள்வது சாலப் பொருத்தமாகும்.
யர்மூக் போரில் அம்புகளால் தாக்கப்பட்டு, காயங்களோடு இரத்த வெள்ளத்தில் கிடந்த இக்ரிமாவையும் அவர்தம் சிற்றப்பா ஹாரிஸையும் இழுத்து வந்தனர். அய்யாஷ் என்பவரையும் கொண்டு வந்து கிடத்தினர். மூவரும் குற்றுயிராக, உயிர் போய்விடும் நிலையில் இருந்தனர். இரத்த வெள்ளத்தில் இருந்த இக்ரிமாவை காலித் பின் வலீத் அவர்களின் மடியிலும் அவரின் கால்பகுதியில் அவர்தம் சிற்றப்பாவையும் கிடத்தினர். காலித் பின் வலீத் அவ்விருவரையும் தாங்கியவராய் கால்நீட்டி அமர்ந்திருந்தார்.
உயிர்போகும் அவ்வேளையில் தண்ணீர் தாகம் ஏற்பட்டது. ஹாரிஸ் தண்ணீர் கேட்டார். தண்ணீர் எடுத்துக் கொண்டுவந்து கொடுக்கப்பட்டது. அப்போது அதை இக்ரிமா பார்த்தார். உடனே ஹாரிஸ் தண்ணீரைக் குடிக்காமல், "அவருக்குக் கொடுங்கள்'' என்று இக்ரிமாவின் பக்கம் சாடை காட்டினார். இக்ரிமாவுக்குக் கொடுக்க முனைந்தபோது அவர் அருகில் கிடத்தப்பட்டிருந்த அய்யாஷ் தாகம் என்றார். எனவே இக்ரிமா, தாம் அதைப் பருகாமல் "அவருக்குக் கொடுங்கள்'' என்று கூறினார்.
அவருக்குக் கொண்டு சென்று கொடுப்பதற்குள் அவர் இறந்துவிட்டார். தண்ணீரை எடுத்துக்கொண்டு மீண்டும் முதலாமவரிடமும் இரண்டாமவரிடமும் வந்தால் அவ்விருவரும் இறந்துவிட்டனர். ஆக மூவரும் தண்ணீர் பருகாமலேயே இறந்துபோய்விட்டனர். இறக்கின்ற அந்தத் தருணத்திலும் தம்மைவிடப் பிறரை முன்னிலைப்படுத்திய சகோதரத்துவமும் மனிதநேய உணர்வும் இஸ்லாமிய மார்க்கத்தில் தவிர வேறெங்கும் காண இயலாது.
மரணத் தருவாயில் கிடந்தபோதும் தம்மைவிடத் தம் சகோதரருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற ஈமானிய உணர்வுதான் அவர்களின் வெற்றிக்குக் காரணமாகும். "உங்களுள் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்'' (புகாரீ: 13) என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உரைத்த பொன்மொழிக்கேற்ப வாழ்ந்து மறைந்தார்கள். எனவேதான் உயர்ந்தோன் அல்லாஹ் அவர்களுக்கு உயரிய மதிப்பையும் கண்ணியத்தையும் இருமையிலும் வழங்கினான்.
நாம் அனைவரும் ஒன்றுபட்டால் நமக்கான வங்கியை நாமே உருவாக்கிக்கொள்ள முடியும். நாம் ஒன்றுபட்டால் நமக்கான பொருளாதார உதவி மையத்தை (பைத்துல் மால்) உருவாக்கிக் கொள்ளலாம். நாம் ஒன்றுபட்டால் நமக்கான பள்ளிக்கூடங்களையும் கல்லூரிகளையும், பெண்களுக்கான பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றையும் நிர்மாணித்துக்கொள்ள முடியும். நாம் அனைவரும் ஒன்றுபட்டால் நமக்கான மருத்துவக் கல்லூரிகளையும் உருவாக்கலாம். இன்னும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தீட்டி, அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரலாம்.
நம்மை அழித்தொழிக்க வேண்டுமெனக் கருதும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரின் சதித்திட்டங்களும் சூழ்ச்சிகளும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றன. நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் சென்ற தடவையைவிடக் கூடுதலான இடங்களில் பிஜேபி வேட்பாளர்கள் வென்றுள்ளனர் என்பது அவர்களின் வளர்ச்சியைக் காட்டுகிறது. அவர்களுடைய இயக்கங்களைச் சார்ந்தவர்கள்தாம் அரசுத் துறையின் பல்வேறு பதவிகளில் அமர வைக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் என்றதும் ஏதாவது ஒரு வகையில் அவருக்குச் சிரமத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். அரசு அலுவலகங்களில் நாம் எளிதாக எதையும் செய்து முடித்துவிட இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இத்தகைய மிகக் கடினமான தருணத்திலும் நாம் ஒன்றிணையாமல் இருந்தால் நம்மைவிடச் சுயநலவாதிகள் யாரும் இருக்க முடியாது.
"இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (இப்படிக் கூறியபோது) நபியவர்கள் தமது கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள் என அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (புகாரீ: 2446)
"ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் ஏற்பட்டுவிடுகிறது'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 6011)
இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதன்மூலம் சமுதாயத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும் ஓர் உடலைப் போன்று செயல்பட வேண்டும் என்றும் மேற்கண்ட நபிமொழிகள் கூறுகின்றன. ஆகவே நம் சமுதாயத்தில் ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவருக்காக நாம் துணைநிற்க வேண்டும். அவர் அநியாயமாகப் பாதிக்கப்பட்டிருந்தால் அவருடைய உரிமையைப் பெற்றுத்தர நாம் அனைவரும் ஓரணியில் போராட வேண்டும். இதுவே நாம் நம்முடைய முஸ்லிம் சகோதரனுக்குச் செய்ய வேண்டிய கடமையாகும்.
நாம் அனைவரும் ஒன்றாக ஒன்றிணைந்து ஒரே குடையின்கீழ் செயல்பட முடிவெடுத்துவிட்டால், முதலில் நம் மஹல்லா ஜமாஅத்திற்குக் கட்டுப்பட வேண்டும். ஒவ்வொரு வரும் தத்தமது மஹல்லா ஜமாஅத்திற்குக் கட்டுப்பட்டால், அந்தந்தப் பள்ளி நிர்வாகக் குழுவினர் ஒன்றிணைந்து ஆலோசித்து, அந்த மஹல்லா சார்பாக ஏகமனதாக ஒரு வார்டு வேட்பாளரை நிறுத்தலாம். எல்லோரும் அவருக்கே வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்யலாம். முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்கின்ற ஒவ்வொரு மஹல்லாவிலும் இவ்வாறு செய்தால் பற்பல வார்டுகளை வெல்லலாம். அதுபோலவே ஒரு எம்எல்ஏ தொகுதியில் உள்ள அத்துணை பள்ளிவாசல் நிர்வாகிகளும் ஒன்றிணைந்து ஆலோசித்து, தமக்கான வேட்பாளரைச் சுயேச்சையாக நிறுத்தி வெற்றிபெறச் செய்யலாம். அல்லது நம் சமுதாயத்திற்கு நன்மைகள் செய்கின்ற, மதச்சார்பற்ற ஒரு வேட்பாளருக்கு நாம் ஆதரவு தெரிவிக்கலாம்.
நபியவர்கள் மக்காவிலிருந்து மதீனா சென்றதும், மக்கா முஹாஜிர்களுக்கும் மதீனாவின் அன்ஸாரித் தோழர்களுக்கும் இடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தி அவர்களை மனதளவில் ஒன்றிணைத்தார்கள். முஹாஜிர்களுள் ஒருவர், அன்ஸாரித் தோழர்களுள் ஒருவர் என அனைவருக்கும் மத்தியில் அன்புப் பாலத்தை உண்டாக்கி, சகோதரத்துவ உணர்வை வளர்த்தார்கள். அவ்வாறு செய்தபோது, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்களுக்கும் சஅத் பின் ரபீஉ அவர்களுக்கும் இடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்.
அப்போது சஅத் பின் ரபீஉ அவர்கள், "நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என் இரு மனைவியருள் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக விவாகரத்துச் செய்கிறேன். அவரது இத்தா முடிந்ததும் அவரை உமக்கு மணம் முடித்துத் தருகிறேன்!'' எனக் கூறினார். (புகாரீ: 2048) தம் மார்க்கச் சகோதரருக்காகத் தம் செல்வத்தையும் அன்பான மனைவியையும் விட்டுக்கொடுக்க முன்வந்த தோழர்களை இஸ்லாமிய வரலாற்றில்தான் நாம் காணமுடியும். அத்தகைய தியாக உள்ளம் கொண்டோரின் வழியில் வந்த நாம் இன்னும் ஒன்றிணையாமல் ஓரணியில் நிற்காமல், தனித்தனியாக ஒதுங்கி நின்றால் நாம் வெற்றி பெறுவது எப்போது? இழந்த உரிமைகளை மீட்பது எப்போது?
நபியவர்களின் தலைமையில் அந்த அன்ஸாரித் தோழர்களும் முஹாஜிர்களும் ஒன்றிணைந்து ஓரணியில் நின்றதால்தான் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்தார்கள்; போர்க்களத்தில் வென்றார்கள். இறுதியில் அவர்கள் தம் தோழர்களோடு சேர்ந்து மக்காவையே வென்றார்கள். எனவே இனிவரும் காலங்களில் நாம் அனைவரும் மஹல்லாதோறும் ஓரணியில் ஒன்றுபட்டு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வெற்றிப் பாதை நோக்கி நடைபோடுவோம். இழந்த நம் உரிமைகளைப் போராடிப் பெற்று உயர்வடைவோம்.
====================
செவ்வாய், 15 மார்ச், 2022
மனித இனத்தின் பகிரங்க எதிரி!
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
நன்மைகள் செய்து நம் வினைச்சுவடியின் எடையை அதிகரித்துக்கொள்ளலாம்
என்று எண்ணினால், சோம்பல் எனும் வலையைப்போட்டு
முடக்கிவிடுவான்; தானம் செய்து நம் வினைச்சுவடியின்
எடையை மிகுதியாக்கிக்கொள்ளலாம் என்று நினைத்தால், “தானம் செய்யாதே; உன் பணம் செலவழிந்துவிடும்; தீர்ந்துவிடும்” என்று சொல்லி கஞ்சத்தனத்தைக்
கண்முன் காட்டி மயக்கிவிடுவான்; கற்போடும் கண்ணியத்தோடும் வாழலாம் என்று மிகவும் பேணிக்கையாக வாழ்ந்தால், அலங்காரம் செய்துகொண்டு, காலில் கொலுசோடு, தலையில் மல்லிகைப் பூச்சூடிய
பெண்ணை நமக்குமுன் நடக்கவைத்து, ‘அவளைப் பார், பார்’ என்று நம் ஆழ்மன வேட்கையைத்
தூண்டிவிட்டு, நம்மைத் தகாத செயலைச் செய்யவைத்துவிட்டுச்
சிரித்துக்கொண்டிருப்பான். அவன்தான் ஷைத்தான்; அவன்தான் மனித இனத்தின் பகிரங்க எதிரி.
அவனைக் குறித்துத் திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: திண்ணமாக
ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரி ஆவான். (12: 5)
அவன் மனித இனத்தின் மனங்களில் புகுந்து செய்யாத சேட்டைகளே
இல்லை; அவன் மனிதனின் இரத்த நாளங்களிலும்
ஊடுருவிச் சென்று சேட்டைகள் செய்பவன்; காலமெல்லாம் சேர்த்து வைத்த கண்ணியத்தையும்
நல்லறங்களையும் கணநேரத்தில் குலைத்துவிடுவான். கற்போடு வாழ்ந்து வருகின்ற ஆணையும்
பெண்ணையும் கணநேரத்தில் திக்குமுக்காடச் செய்துவிடுவான். அவனிடம் எச்சரிக்கையாக இருக்க
வேண்டுமென அல்லாஹ்வும் அவனுடைய இறுதித்தூதர்
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நமக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.
திருக்குர்ஆனின் பல்வேறு இடங்களில் அவன் குறித்து எச்சரிக்கை
செய்யப்பட்டுள்ளது. அவன் ஆதி மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம்
அவர்களையும் அவர்தம் மனைவியையும் வழிகெடுத்து, தடைசெய்யப்பட்ட மரத்திலிருந்து புசிக்கச் செய்து, சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினான். அவன் பலவீனமானவர்களிடம் எளிதில் புகுந்து
ஊடுருவி வழிகெடுத்துவிடுவான். இறைநம்பிக்கையில் உறுதிமிக்கோரை, அதில் பலவீன நிலையிலுள்ளோர்
மூலம் ஊடுருவிச் சென்று வழிகெடுக்க முயல்வான்.
அவன் மனிதனுடைய ஒவ்வொரு செயலிலும் ஒன்றிணைந்து வந்துகொண்டே
இருப்பான். பள்ளிவாசலுக்குச் சென்று, கூட்டாக (ஜமாஅத்) தொழுகையைக் கடைப்பிடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிற ஒருவரை, வீட்டில் தொழுதால் என்ன
என்ற எண்ணத்தைப் போட்டு மடைமாற்ற முயல்வான்; தொடர்ந்து குர்ஆன் ஓதுகின்றவரை வழிகெடுத்து, பாடல் கேட்கத் தூண்டுவான். வேறு ஏதாவது கேளிக்கையில் ஈடுபடத் தூண்டுவான்.
நேர்மையாக உழைத்துச் சம்பாதிக்கும் வியாபாரியிடம் சென்று, அளவு நிறுவையில் மோசடி
செய்து, குறுக்கு வழியில் சம்பாதிக்கத்
தூண்டுவான்; பொருளில் கலப்படம் செய்து
விற்கச் செய்வான்; அதிகமான இலாபம் வைத்து விற்கத் தூண்டுவான். அலுவலகத்தில் நேர்மையாகப்
பணியாற்றி வருகின்ற ஒருவரை,
‘நேர்மையாக இருந்து என்ன பயன் கண்டாய்’ என்று யாரோ ஒருவர்மூலம் சொல்லவைத்து ஊழல் செய்யத் தூண்டுவான்; கையூட்டு வாங்க ஆசையூட்டுவான்.
திடீரென இலஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு, கையும் களவுமாகப் பிடித்துச் சென்று விசாரணைசெய்து, சிறையில் அடைக்கப்பட்டபின் அவரைப் பார்த்து மறைந்துநின்று சிரிப்பான்.
கண்கவர் கணவனோடும் அழகான பிள்ளைகளோடும் கற்பொழுக்கம்
பேணி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவளிடம் சென்று, யாரோ ஒருவனைக் காட்டி மயக்க முயல்வான்; மீண்டும் மீண்டும் முயல்வான். அவளது மனதை இளகச் செய்து, சபலத்தைப் போடுவான்; தடுமாறச் செய்வான். ‘சரி, இவ்வளவு காலம் இவனிடம்
இருந்து என்ன சுகத்தைக் கண்டோம்’ என்ற நன்றிகெட்ட எண்ணத்தை விதைப்பான். பிறகு ஒரு நாள் அந்தக் கள்ளக்காதலனோடு ஓடச்
செய்வான். ஒழுக்கத்தோடு வாழ்ந்தவளுக்கு ‘ஓடுகாலி’ என்ற பெயரைச் சூட்டி மகிழ்வான்; அவளது வாழ்க்கையை அத்தோடு
ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவான்.
மணந்துகொண்ட மனைவியோடு மனஅமைதியோடு வாழ்ந்துகொண்டிருக்கிற
ஆடவனிடம், அவன் பணியாற்றும் இடத்தில்
ஒரு பெண்ணை அனுப்பி, அவனது கண்களுக்கு அவளை
அழகுபடுத்திக் காட்டுவான். அவனிடம் அவளைச் சிரித்துச் சிரித்துப் பேசவைப்பான்; அவனது மனத்தில் சஞ்சலத்தைப்
போடுவான். ஒரு நாளாவது அவளை அடைந்துவிட வேண்டுமென்ற தீய எண்ணத்தை விதைப்பான்; அவள்மீது தீராக் காதலை
ஏற்படுத்துவான். பிறகு அவ்விருவருக்கிடையே
தவறான உறவை ஏற்படுத்திவிட்டு, அவன் ஒதுங்கிக்கொள்வான்.
இவ்வாறு அவன் செய்யாத சேட்டைகளே இல்லை எனும் அளவிற்கு
எல்லாவிதமான சேட்டைகளையும் செய்வான். எல்லா வயது மனிதர்களையும் கெடுக்க முனைவான்; பலரிடம் வெற்றிபெற்றுவிடுவான்.
சிலரிடம் மட்டுமே தோற்பான். ஆனால் வல்லோன் அல்லாஹ் அவனைத் தோற்கடிக்கவே ‘மன்னிப்பு’ எனும் கதவை மனித இனத்திற்காக
எப்போதும் திறந்தே வைத்துள்ளான். ஒரு மனிதன் ஷைத்தானின் தூண்டலால் பாவம் செய்துவிடுகிறபோது, உடனடியாக அதை உணர்ந்து, வருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்
கேட்டால், அவன் அம்மனிதனின் பாவத்தை மன்னித்துவிடுகின்றான். அதைக்
கண்டு ஷைத்தான் அழுகின்றான். தான் செய்த அத்தனை முயற்சிகளும் வீணாகிவிட்டனவே என்று
புலம்புகின்றான். மீண்டும் அவனைக் கெடுக்க முனைகிறான்.
தீர்க்கமான முடிவெடுத்து, எடுத்த முடிவில் உறுதியாக இருந்து செயல்பட்டாலே தவிர அவனிடமிருந்து தப்ப முடியாது.
அதாவது நாம் ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரத்தைக் குறிப்பிட்டு வைத்துக்கொண்டு அந்தந்த
நேரத்தில் அதையதைச் செய்து முடித்துவிட வேண்டும். இல்லையேல் பிறகு செய்யலாம்; பிறகு செய்யலாம் என ஒத்திப்போடச்
செய்து, அதைச் செய்ய விடாமல் தடுத்துவிடுவான்.
ஆக நேரடியாகக் கெடுப்பது மட்டுமின்றி, ஒரு நல்ல செயலைத் தொடங்கவிடாமல் தடைகளை ஏற்படுத்துவதன்மூலமும் அவன் மனித இனத்திற்கு
எதிரியாக உள்ளான் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
திருக்குர்ஆனை ஓதத் தெரியாத ஒருவர், குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அதைக் கற்றுக் கொள்ளலாம்
என நினைப்பார். ஆனால் அதற்காக நேரம் ஒதுக்காமல் பிறகு பார்க்கலாம்; நாளை ஒதுக்கலாம் என்று
ஒத்திப்போட்டுக்கொண்டே போவார். அதற்குள் அடுத்த ரமளான் வந்துவிடும். அம்மாதத்தில்
இமாம் திருக்குர்ஆனின் முக்கியத்துவத்தையும் அதை அரபியில் ஓதினால் கிடைக்கும் நன்மைகளையும்
தம் சொற்பொழிவில் கூறுவார். அதைக் கேட்கும்போது, திருக்குர்ஆனை நாமும் ஓதக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றும். பெருநாளுக்குப்பின்
தொடங்கிவிட வேண்டும் என்று மனத்தில் உறுதி கொள்வார். ஆனால் நேரம் ஒதுக்க முடியாமல்
தள்ளிக்கொண்டே போகும்;
அப்படியே காலம் கரைந்துவிடும். ‘இனி நாம் ஓதி என்ன பயன்; நம் பிள்ளைகள் ஓதினால் போதும்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அத்திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவான்; அவன் தன் திட்டத்தில் வெற்றிபெற்றுவிடுவான்.
இதனால்தான் நல்ல செயல்பாடுகளை ஒத்திப்போடக் கூடாது என்று
சொல்வார்கள். ஏனென்றால் இன்றைய நாள் நம்முடையது. நாளை வரும்போது நாம் இருப்போமா
என்பது உறுதியில்லை. அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சொர்க்கத்துக்கும் விரைந்து
செல்லுங்கள். (3: 133) “செயல்களுள் சிறந்தது எது?” என்று அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டபோது, “தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது” என்று கூறினார்கள். (அபூதாவூத்:
426) ஆக நல்ல செயல்பாடுகளை விரைந்து
முடிக்க வேண்டும் என்பதை இதன்மூலம் அறியலாம்.
இவ்வாறே பள்ளிவாசலில் சென்று ஐவேளைத் தொழுகையைக் கூட்டாகத்
தொழவேண்டும் என்று ஒருவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முடிவெடுப்பார். பள்ளியைவிட்டு
வெளியே சென்றதும் அந்த எண்ணத்தை மழுங்கடித்து விடுவான்; மறக்கச் செய்துவிடுவான். அதற்குள் அடுத்த வெள்ளிக்கிழமை வந்துவிடும். மீண்டும்
அவர் தம் மனத்தில் உறுதிகொள்வார். பின்னரும் அவன் அவருடைய எண்ணத்தை மழுங்கச் செய்துவிடுவான்.
இவ்வாறே அவன் தன் திட்டத்தில் வெற்றிபெற்றுவிடுவான். மனிதன் மிக உறுதியாகவும் தீர்மானமாகவும்
முடிவெடுக்கின்ற வரை இதே நிலைதான்.
ஒழுங்காக ஒரு வீட்டில் வாழ்ந்து வருபவரைக் கெடுக்க முனைவான்; பக்கத்திலுள்ள நிலத்தை
அபகரித்துக்கொள் என்றோ பக்கத்து இடத்திலிருந்து ஒரு பகுதியை உன் இடத்தோடு இணைத்துக்கொள்
என்றோ தூண்டுவான். “யார் ஒரு சாண் நிலத்தை
அபகரித்தாரோ அவருக்கு மறுமையில் அது போன்ற ஏழு நிலப்பகுதிகள் கழுத்தில் மாலையாகப்
போடப்படும்” என்ற நபிமொழியை மறக்கச்
செய்து, அடுத்தவர் நிலத்தை அபகரிக்கச்
செய்வான். பலவீனமான ஈமான்-இறைநம்பிக்கை உள்ளவர் அவனிடம் தோற்றுப்போய்விடுவார். பலமான
இறைநம்பிக்கை உள்ளவர் அவனுடைய சூழ்ச்சித் திட்டங்களிலிருந்து தப்பிவிடுவார்.
சொத்துச் சண்டையை உண்டாக்கி அண்ணன்-தம்பியை, அக்காள்-தங்கையைப் பிரிப்பான்.
ஒருவருக்கொருவர் இணைபிரியாத உறவுகளாக வாழ்ந்து வந்த அவர்களைச் சொத்துக்காகச் சண்டையிடச்
செய்து பல்லாண்டுகளாகப் பேசவிடாமல் செய்துவிடுவான். ஒழுங்காக வாழ்ந்து வருகிற கணவன்-மனைவி
இடையே சின்ன விஷயத்திற்காகச் சண்டையை ஏற்படுத்தி அவர்களைப் பேசவிடாமல் செய்துவிடுவான்.
பின்னர் அதுவே பெரிதாகி,
அவ்விருவரும் பிரிந்துவிடும் நிலை உருவாகும். ஆகவே கணவன்-மனைவி இடையே ஏற்படும்
சின்னச் சின்ன மோதல்களைப் பெரிதுபடுத்தாமல் உடனடியாகச் சமாதானம் ஆகிவிட வேண்டும்.
ஷைத்தானின் சூழ்ச்சிக்கு இலக்காகிவிடாமல், அவர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் சண்டைபோட்டுக் கொண்டு
பிரிந்துவிட்டால் அதைப் பார்த்து அவன் வெற்றிக் களிப்பில் சிரித்துக்கொண்டிருப்பான்.
ஷைத்தான் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரித்துக்
கூறியுள்ளார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு
அன்ஹு அறிவித்துள்ளதாவது:
தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைக்கப்படும்போது ஷைத்தான்
பாங்கு சத்தத்தைக் கேட்கக்கூடாது என்பதற்காகச் சத்தத்துடன் காற்றை (அபான வாயு) விட்டுக்கொண்டு
திரும்பி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். தொழுகைக்கு இகாமத்
சொல்லப்பட்டால் (மீண்டும்) திரும்பி ஓடுகிறான். இகாமத் சொல்லி முடித்ததும் முன்னே
வருகின்றான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதருடைய உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை
ஏற்படுத்தி, “இதை நினைத்துப் பார்; அதை நினைத்துப் பார்'' என்று அவர் அதற்குமுன்
நினைத்திராத விஷயங்களை அவருக்கு நினைவூட்டிக் கூறுகின்றான். எந்த அளவிற்கென்றால், அந்த மனிதர் தாம் எத்தனை
ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராக மாறிவிடுகிறார். (நூல்: புகாரீ: 608) ஆக நம்மை நிம்மதியாகத்
தொழவிட மாட்டான் என்பதை இதன்மூலம் அறிகிறோம்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஷைத்தானிடமிருந்து
பாதுகாப்புத் தேடாத பிரார்த்தனையே இல்லை எனும்
அளவிற்கு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள். அவனைக் குறித்து எச்சரிக்கை செய்யாத
இடமே இல்லை எனும் அளவிற்கு எச்சரிக்கை செய்துள்ளார்கள். எனவே வரக்கூடிய காலங்களில்
நாம் ஷைத்தானிடமிருந்து எச்சரிக்கையாக இருந்து நம்முடைய நல்லறங்களைத் தொடர்ந்து செய்வோம். நாம் செய்யப்போகும் செயல்கள் குறித்துத் தீர்மானமாகவும்
தீர்க்கமாகவும் முடிவெடுப்போம். பின்னர் அதில் உறுதியாக இருப்போம். அப்போதுதான்
நாம் ஷைத்தானை வெல்ல முடியும். நாம் ஷைத்தானை வெல்லும் வலுவான இறைநம்பிக்கையை நம் மனத்தினுள்
அல்லாஹ் விதைப்பானாக. ==========================







