சனி, 19 மார்ச், 2022

ஒன்றிணைந்து உயர்வடைவோம்!

  

 


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

இவ்வுலகில் யாரும் தனிமனிதனாக வாழ்ந்துவிட முடியாது. ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருவகையில் பிறரைச் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது. சிலருக்குப் பலரின் தேவை ஏற்படலாம். வேறு சிலருக்கு மிகச் சிலரின் தேவையே போதுமானதாக இருக்கலாம். தனிமனிதரைப் பொருத்த வரை, சார்புநிலை கூடுதல் குறைவாக இருக்கலாமே தவிர பிறரின் உதவி எனக்குத் தேவையில்லை என யாரும் ஒதுங்கிக்கொள்ள முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பிறரின் தேவையும் உதவியும் இன்றியமையாதவர்களாகவே உள்ளனர்.

 

நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றைச் சமுதாயமாக வாழ முற்பட்டால் நம்மால் மற்றவர்களுக்குப் பற்பல நன்மைகள் உண்டாகும். பல்வேறு தீமைகள் அகலும். ஆனால் நம் சமுதாயத்தின் துர்பாக்கியநிலை என்னவெனில், ஒரே கொள்கையைக்கொண்ட நாம் ஒரே கொடியின்கீழ் இணைவதில்லை என்பதுதான். அதனால் நம் சமுதாயத்திற்கு பெருமளவில் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், தொழில், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

 

ஒன்றிணைந்து வாழ ஒற்றுமையாக இருப்பதும், தன் சகோதரனுக்காக விட்டுக்கொடுப்பதும் முக்கியமானதாகும். விட்டுக் கொடுத்தால்தான் நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக ஒரே குடையின்கீழ் வாழ முடியும். அது நமக்கு மத்தியில் இல்லாததால்தான் பிற சமுதாயத்தினர் நம்மைப் படிக்கட்டுகளாகப் பயன்படுத்தி, நம்மீது ஏறி உச்சத்தை அடைகின்றனர். நாமோ எச்சமாகக் கீழ்நிலையிலேயே கிடக்கின்றோம்.

 

நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நம்முடைய ஒற்றுமையின்மையால் பல்வேறு வார்டுகளைப் பிற சமுதாயத்தினர் தட்டிச் சென்றுள்ளனர். ஒரே வார்டில் ஐந்து முஸ்லிம் சகோதரர்கள் களம் கண்டனர். பிற சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் குறைந்த வாக்குகளையே பெற்றாலும், முஸ்லிம்களின் வாக்குகள் ஐந்து பேருக்குப் பிரிந்து, சிதறிப்போய்விட்டதால் அவரே வெற்றி பெற்றுவிட்டார். முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் ஊரில் ஒரு வார்டையே கைப்பற்ற முடியவில்லை. இந்நிலை பல ஊர்களில் பல வார்டுகளில் ஏற்பட்டது. இதுவே நமது ஒற்றுமையின்மைக்கும் விட்டுக்கொடுக்காமைக்கும் தக்க சான்றாகும்.

 

தன்னைவிடத் தன் சகோதரனை முன்னிலைப்படுத்துவது பூரண இறைநம்பிக்கையின் அடையாளம் ஆகும்.  அதற்கு வரலாற்றில் ஒரு நிகழ்வு உண்டு. அதை இத்தருணத்தில் நாம் அனைவரும் தெரிந்துகொள்வது சாலப் பொருத்தமாகும்.

 

யர்மூக் போரில் அம்புகளால் தாக்கப்பட்டு, காயங்களோடு இரத்த வெள்ளத்தில் கிடந்த இக்ரிமாவையும் அவர்தம் சிற்றப்பா ஹாரிஸையும் இழுத்து வந்தனர். அய்யாஷ் என்பவரையும் கொண்டு வந்து கிடத்தினர். மூவரும் குற்றுயிராக, உயிர் போய்விடும் நிலையில் இருந்தனர். இரத்த வெள்ளத்தில் இருந்த இக்ரிமாவை காலித் பின் வலீத் அவர்களின் மடியிலும் அவரின் கால்பகுதியில் அவர்தம் சிற்றப்பாவையும் கிடத்தினர். காலித் பின் வலீத் அவ்விருவரையும் தாங்கியவராய் கால்நீட்டி அமர்ந்திருந்தார்.

 

உயிர்போகும் அவ்வேளையில் தண்ணீர் தாகம் ஏற்பட்டது. ஹாரிஸ் தண்ணீர் கேட்டார். தண்ணீர் எடுத்துக் கொண்டுவந்து கொடுக்கப்பட்டது. அப்போது அதை இக்ரிமா பார்த்தார். உடனே  ஹாரிஸ் தண்ணீரைக் குடிக்காமல், "அவருக்குக் கொடுங்கள்'' என்று இக்ரிமாவின் பக்கம் சாடை காட்டினார். இக்ரிமாவுக்குக் கொடுக்க முனைந்தபோது அவர் அருகில் கிடத்தப்பட்டிருந்த அய்யாஷ் தாகம் என்றார். எனவே இக்ரிமா, தாம் அதைப் பருகாமல் "அவருக்குக் கொடுங்கள்''  என்று கூறினார்.

 

அவருக்குக் கொண்டு சென்று கொடுப்பதற்குள் அவர் இறந்துவிட்டார். தண்ணீரை எடுத்துக்கொண்டு மீண்டும் முதலாமவரிடமும் இரண்டாமவரிடமும் வந்தால் அவ்விருவரும் இறந்துவிட்டனர். ஆக மூவரும் தண்ணீர் பருகாமலேயே இறந்துபோய்விட்டனர். இறக்கின்ற அந்தத் தருணத்திலும் தம்மைவிடப் பிறரை முன்னிலைப்படுத்திய  சகோதரத்துவமும் மனிதநேய உணர்வும் இஸ்லாமிய மார்க்கத்தில் தவிர வேறெங்கும் காண இயலாது.

 

மரணத் தருவாயில் கிடந்தபோதும் தம்மைவிடத் தம் சகோதரருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற ஈமானிய உணர்வுதான் அவர்களின் வெற்றிக்குக் காரணமாகும். "உங்களுள் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்'' (புகாரீ: 13) என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உரைத்த பொன்மொழிக்கேற்ப வாழ்ந்து மறைந்தார்கள். எனவேதான் உயர்ந்தோன் அல்லாஹ் அவர்களுக்கு உயரிய மதிப்பையும் கண்ணியத்தையும் இருமையிலும் வழங்கினான்.

 

நாம் அனைவரும் ஒன்றுபட்டால் நமக்கான வங்கியை நாமே உருவாக்கிக்கொள்ள முடியும். நாம் ஒன்றுபட்டால் நமக்கான பொருளாதார உதவி மையத்தை (பைத்துல் மால்) உருவாக்கிக் கொள்ளலாம். நாம் ஒன்றுபட்டால் நமக்கான பள்ளிக்கூடங்களையும் கல்லூரிகளையும், பெண்களுக்கான பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றையும் நிர்மாணித்துக்கொள்ள முடியும். நாம் அனைவரும் ஒன்றுபட்டால் நமக்கான மருத்துவக் கல்லூரிகளையும் உருவாக்கலாம். இன்னும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தீட்டி, அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரலாம்.

 

நம்மை அழித்தொழிக்க வேண்டுமெனக் கருதும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரின் சதித்திட்டங்களும் சூழ்ச்சிகளும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றன. நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் சென்ற தடவையைவிடக் கூடுதலான இடங்களில் பிஜேபி வேட்பாளர்கள் வென்றுள்ளனர் என்பது அவர்களின் வளர்ச்சியைக் காட்டுகிறது. அவர்களுடைய இயக்கங்களைச் சார்ந்தவர்கள்தாம் அரசுத் துறையின்  பல்வேறு பதவிகளில் அமர வைக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் என்றதும் ஏதாவது ஒரு வகையில் அவருக்குச் சிரமத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். அரசு அலுவலகங்களில்  நாம் எளிதாக எதையும் செய்து முடித்துவிட இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இத்தகைய மிகக் கடினமான தருணத்திலும் நாம் ஒன்றிணையாமல் இருந்தால் நம்மைவிடச் சுயநலவாதிகள் யாரும் இருக்க முடியாது.

 

"இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (இப்படிக் கூறியபோது) நபியவர்கள் தமது கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள் என அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (புகாரீ: 2446)

 

"ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் ஏற்பட்டுவிடுகிறது'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.  (புகாரீ: 6011)

 

இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதன்மூலம் சமுதாயத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும் ஓர் உடலைப் போன்று செயல்பட வேண்டும் என்றும் மேற்கண்ட நபிமொழிகள் கூறுகின்றன.  ஆகவே நம் சமுதாயத்தில் ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவருக்காக நாம் துணைநிற்க வேண்டும். அவர் அநியாயமாகப் பாதிக்கப்பட்டிருந்தால் அவருடைய உரிமையைப் பெற்றுத்தர நாம் அனைவரும் ஓரணியில் போராட வேண்டும். இதுவே நாம் நம்முடைய முஸ்லிம் சகோதரனுக்குச் செய்ய வேண்டிய கடமையாகும்.

 

நாம் அனைவரும் ஒன்றாக ஒன்றிணைந்து ஒரே குடையின்கீழ் செயல்பட முடிவெடுத்துவிட்டால், முதலில் நம் மஹல்லா ஜமாஅத்திற்குக் கட்டுப்பட வேண்டும். ஒவ்வொரு வரும் தத்தமது மஹல்லா ஜமாஅத்திற்குக் கட்டுப்பட்டால், அந்தந்தப் பள்ளி நிர்வாகக் குழுவினர்  ஒன்றிணைந்து ஆலோசித்து, அந்த மஹல்லா சார்பாக ஏகமனதாக ஒரு வார்டு வேட்பாளரை நிறுத்தலாம். எல்லோரும் அவருக்கே வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்யலாம். முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்கின்ற ஒவ்வொரு மஹல்லாவிலும் இவ்வாறு செய்தால் பற்பல வார்டுகளை வெல்லலாம். அதுபோலவே ஒரு எம்எல்ஏ தொகுதியில் உள்ள அத்துணை பள்ளிவாசல் நிர்வாகிகளும் ஒன்றிணைந்து ஆலோசித்து, தமக்கான வேட்பாளரைச் சுயேச்சையாக நிறுத்தி வெற்றிபெறச் செய்யலாம். அல்லது நம் சமுதாயத்திற்கு நன்மைகள் செய்கின்ற, மதச்சார்பற்ற ஒரு வேட்பாளருக்கு நாம் ஆதரவு தெரிவிக்கலாம்.

 

நபியவர்கள் மக்காவிலிருந்து மதீனா சென்றதும், மக்கா முஹாஜிர்களுக்கும் மதீனாவின் அன்ஸாரித் தோழர்களுக்கும் இடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தி அவர்களை மனதளவில் ஒன்றிணைத்தார்கள். முஹாஜிர்களுள் ஒருவர், அன்ஸாரித் தோழர்களுள் ஒருவர் என அனைவருக்கும் மத்தியில் அன்புப் பாலத்தை உண்டாக்கி, சகோதரத்துவ உணர்வை வளர்த்தார்கள். அவ்வாறு செய்தபோது, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்களுக்கும் சஅத் பின் ரபீஉ அவர்களுக்கும் இடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்.

 

அப்போது சஅத் பின் ரபீஉ அவர்கள், "நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என் இரு மனைவியருள் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக விவாகரத்துச் செய்கிறேன். அவரது இத்தா முடிந்ததும் அவரை உமக்கு மணம் முடித்துத் தருகிறேன்!'' எனக் கூறினார். (புகாரீ: 2048) தம் மார்க்கச் சகோதரருக்காகத் தம் செல்வத்தையும் அன்பான மனைவியையும் விட்டுக்கொடுக்க முன்வந்த தோழர்களை இஸ்லாமிய வரலாற்றில்தான் நாம் காணமுடியும். அத்தகைய தியாக உள்ளம் கொண்டோரின் வழியில் வந்த நாம் இன்னும் ஒன்றிணையாமல் ஓரணியில் நிற்காமல், தனித்தனியாக ஒதுங்கி நின்றால் நாம் வெற்றி பெறுவது எப்போது? இழந்த உரிமைகளை மீட்பது எப்போது?

 

நபியவர்களின் தலைமையில் அந்த அன்ஸாரித் தோழர்களும் முஹாஜிர்களும் ஒன்றிணைந்து ஓரணியில் நின்றதால்தான் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்தார்கள்; போர்க்களத்தில் வென்றார்கள். இறுதியில் அவர்கள் தம் தோழர்களோடு சேர்ந்து மக்காவையே வென்றார்கள். எனவே இனிவரும் காலங்களில் நாம் அனைவரும் மஹல்லாதோறும் ஓரணியில் ஒன்றுபட்டு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வெற்றிப் பாதை நோக்கி நடைபோடுவோம். இழந்த நம் உரிமைகளைப் போராடிப் பெற்று உயர்வடைவோம்.

====================







கருத்துகள் இல்லை: