புதன், 20 ஏப்ரல், 2022

குறுமதியாளர்களின் குறுக்குச் சிந்தனை

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

மனிதன் இவ்வுலகில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கான எல்லா வளங்களையும் வல்லோன் அல்லாஹ் வழங்கியிருக்கின்றான். ஒவ்வொரு மனிதனும் வல்லோன் அல்லாஹ் விதித்த கட்டளைகளைப் பின்பற்றி நடக்கத் தொடங்கிவிட்டால் அனைவரும் மகிழ்ச்சியாக வாழலாம். ஆனால் அந்தோ பரிதாபம்! இறைவன் இட்ட கட்டளைகள் மீறப்படுவதாலும் குறுமதியாளர்களின் குயுக்தியாலும் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றார்கள்; நிம்மதியிழக்கின்றார்கள்; சிரமத்திற்குள்ளாகின்றார்கள்; பசியால் வாடுகின்றார்கள். செல்வர்களின் பேராசையால் ஏழைகள் ஏழைகளாகவே இருக்கின்றார்கள்.

 

குறுமதியாளர்களின் குறுக்குச் சிந்தையால் கொலை, கொள்ளை, கையூட்டு, விதிமீறல், அநியாயம், ஏமாற்று, சூழ்ச்சி, திருட்டு முதலானவை நாள்தோறும் நடந்தேறுகின்றன. குறுமதியாளர்களான வியாபாரிகள் அளவையிலும் நிறுவையிலும் அநியாயம் செய்து விற்பனை செய்வதாலும் கலப்படம் செய்து பொருள்களை விற்பனை செய்வதாலும் எவ்வளவோ பேர் பாதிக்கப்படுகின்றார்கள்; எத்தனையோ பேர் உடல் உபாதைக்கு ஆளாகின்றார்கள்.

 

செல்வம் கொழித்த பெருவணிகர்கள் - செல்வத்தைப் பெருக்கத் தேவையற்றவர்கள் - எரிபொருள்களின் விலையை நாளுக்கு நாள் உயர்த்திக்கொண்டே செல்வதால் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். எரிபொருள்களின் உயர்வால் மக்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற அத்தியாவசியத் பொருள்கள் அனைத்தும் விலை உயர்வடைகின்றன. அதனால் மக்கள் பெருமளவில்  சிரமப்படுகின்றார்கள்.

 

இவ்வளவு உயர்த்தி விற்பனை செய்து பணத்தைப் பெருக்கும் அவர்கள் அதையெல்லாம் உண்டு கழிக்கப்போகின்றார்களா? இல்லவே இல்லை. இதுவெல்லாம் அவர்களின் கௌரவ விளையாட்டு. உன்னைவிட நான் அதிகம் வைத்துள்ளேன் என்று இவன் சொல்ல, அப்படியா, உன்னைவிட நான் அதிகமாகப் பெருக்கிக் காட்டுகிறேன் என்று சூளுரைத்து, அவன் தனது விற்பனைப் பொருள்களின் விலையை உயர்த்துகிறான். இப்படியே அவர்களுள் ஒவ்வொருவரும் தமக்குள் கௌரவப் போட்டி போடுகின்றனர்.

 குறுமதிகொண்ட கோணல் புத்தியுடைய ஆட்சியாளர்கள் கீழ்த்தரமான ஆட்சி செய்கின்றார்கள்.  மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான எந்த முயற்சியும் செய்யாமல் அவர்களை மேன்மேலும் வதைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் செய்துவருகின்றார்கள். வாக்குறுதிகளை அள்ளிவீசி மக்களின் வாக்குகளை வாங்கிக்கொண்டு பதவியில் அமர்ந்ததும் அவர்களை நசுக்குவதற்கான எல்லா வேலைகளையும் செய்து வருகின்றார்கள். பெருவணிகர்களோடு சேர்ந்துகொண்டு அவர்களின் நலன்களுக்காகவே உழைக்கின்றார்கள். 

 

ஒரு பக்கம் விலைவாசி உயர்வால் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுகின்றார்கள்; மற்றொரு புறம் மதத்தின்மீது நம்பிக்கை கொண்டு, ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்ந்து வருகின்ற மக்கள் மத்தியில் துவேஷத்தைத் தூவிவிட்டு, குழப்பத்தை ஏற்படுத்தி, கலவரங்களைத் தூண்டி மனதளவில் நிம்மதியைப் பறிக்கின்றார்கள். இந்து-முஸ்லிம் ஒற்றுமையைச் சிதைத்து மத நல்லிணக்கத்தைக் குலைத்து, மதவாரியாக மக்களைப் பிரிக்கப் பார்க்கின்றார்கள். அதன்மூலம் ஒரு குறிப்பிட்ட மதத்தாரின் வாக்குகளைப் பெற்றுப் பதவியில் நீடிக்க முயல்கின்றார்கள். ஆக இதுவரை மக்களுக்கு எந்த நன்மையையும் செய்ய முன்வராத குறுமதியாளர்கள் இவர்கள்.

 

 

மக்கள்மீது கருணை காட்டி, அன்பு செலுத்தும்வண்ணம் ஆட்சி செய்து, அவர்கள் வளமாக வாழ என்னென்ன திட்டங்கள் உள்ளனவோ அவற்றைச் செயல்படுத்தினால், அடுத்த தடவை  அதே ஆட்சியாளனுக்கு மக்கள் தாமாகவே வாக்களிக்கத்தானே செய்வார்கள்? நேரிய சிந்தனை கொண்டவன் அவ்வாறுதான் செய்வான்; மக்களை நேசிப்பவன் அவ்வாறுதான் செயல்படுவான். ஆனால் குறுமதியாளர்கள் மக்களை வதைப்பதற்கான திட்டங்களையே செயல்படுத்த முனைகின்றார்கள்; பெருவணிகர்கள் பயனுறும் வகையில் திட்டங்களைத் தீட்டுகின்றார்கள்; அவர்களுக்குச் சாதகமாக எல்லாவற்றையும் மாற்றியமைக்கின்றார்கள். இறுதியில் தேர்தல் நிதி எனும் பெயரில் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் பணத்தைப் பெற்றுக்கொள்கின்றார்கள்.

 

மக்களுக்குத் தொண்டு செய்வதற்காகவும் அவர்களின் பசியைப் போக்குவதற்காகவும் கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும் தொண்டு நிறுவனங்களும் இயக்கங்களும் ஆங்காங்கே இயங்கி வருகின்றன. மக்கள்மீது இரக்கம் காட்டுவோர் இறைவனின் அன்பையும் கருணையையும்  பெற வேண்டுமென்ற நோக்கம் கொண்டோர் பற்பல சேவைகளைச் செய்துவருகின்றார்கள். அவர்களின் செயல் பாராட்டுக்குரியது. ஆனால் குறுமதியாளர்களோ மக்களை மதரீதியாகப் பிரிப்பதற்கும் இனவழிப்புச் செய்வதற்கும் பல்வேறு பெயர்களில் இயக்கங்கள் நடத்துகின்றார்கள். அதிலுள்ள இயக்கச் சிறார்களின் மனங்களில் நஞ்சை விதைக்கின்றார்கள்; இளைஞர்களின் மனங்களில் கொலைவெறியூட்டுகின்றார்கள்.

 

கட்டற்ற காளையர்கள் தாம் செய்வதறியாது, ஏவப்பட்ட ஏவல் பணிகளைச் செவ்வனே செய்து முடிக்கின்றார்கள்; குறிப்பிட்ட இனத்தாரைக் குறிவைத்து அவர்களின் சொத்துகளைச் சூறையாடுதல், பொருள்களை அழித்தல், வணக்கத்தலங்களைச் சேதப்படுத்துதல், அவர்களின் பெண்களை அச்சுறுத்தல் உள்ளிட்ட கொடும் செயல்களைச் செய்து வருகின்றார்கள். அவர்களுக்குத் தம் வாழ்வில் இலக்கேதும் இல்லை. ஏன் பிறந்தோம், ஏன் வாழ்கிறோம், மரணத்திற்குப்பின் என்ன நிகழும் என்ற எந்தச் சிந்தனையும் இல்லை. இலக்கு ஏதுமின்றி அவிழ்த்துவிடப்பட்ட காளை மாடுகளைப் போன்று களத்தில் புகுந்து, கண்ணுக்கு எதிர்ப்பட்டவர்களைக் குத்திக் கிழிப்பதுதான் இலக்கு. ஏன் செய்கிறோம், யாருக்காகச் செய்கிறோம் என்ற சிந்தனையற்ற சிறுமதியாளர்கள் அவர்கள்.

 

அவர்கள் (நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில்) போர் நெருப்பை மூட்டும்போதெல்லாம் அல்லாஹ் அதனை அணைத்துவிடுகின்றான். ஆனால், (இன்னும்) அவர்கள் பூமியில் விஷமம் செய்து கொண்டே அலைகின்றார்கள். அல்லாஹ், விஷமம் செய்பவர்களை நேசிப்பதே இல்லை (5: 64) என்ற இறைவசனம் இவ்விடத்தில் நம்மைச் சிந்திக்கத்தூண்டுகிறது.

 

எவ்வளவு அழகான உலகை இறைவன் படைத்துள்ளான்; ஒவ்வொன்றையும் துல்லியமாகத் திட்டமிட்டுப் படைத்துள்ளான். புவியிலுள்ள ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகு. அவையனைத்தும் ஏதோ ஒரு வகையில் மனிதனுக்குப் பயனளித்துக் கொண்டிருக்கின்றன. அதுபோலவே ஒவ்வொரு மனிதனும் பிறருக்குப் பயனுள்ளவனாக இருக்க முடியும். இறைத்தூதர் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்த அடியார் யார்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "மக்களுக்கு மிகவும் பயனுள்ளவரே ஆவார்'' என்று பதிலளித்தார்கள். (ஹுலிய்யத்துல் அவ்லியா)

 

ஆனால் குறுமதியாளர்கள் தம்மால் இயன்ற பயன்களைப் பிறருக்கு வழங்குவதற்குப் பதிலாகதம்மால் இயன்ற அளவுக்கு மனிதர்களை அச்சுறுத்தி, அந்த அச்சத்தின் எச்சத்திலேயே அவர்கள் வாழ நினைக்கின்றார்கள். இத்தகைய வாழ்க்கையில் ஏதாவது பொருள் இருக்கிறதா? யாருக்கேனும் ஏதாவது பயன் இருக்கிறதா?

 

வீரத்தைக் காட்ட வேண்டிய இடத்தில் காட்டாமல், சிறார்களிடமும் சிறுமியர்களிடமும் வீரத்தைக் காட்டி அவர்களை அச்சுறுத்துவது, துப்பாக்கி முனையில் அவர்களை இழுத்துச் சென்று தொல்லை கொடுப்பது அல்லது வன்புணர்வில் ஈடுபடுவது என்னவிதமான மனிதச் செயல்? அன்பு காட்ட வேண்டிய மாணவிகளிடம், காமவேட்கை கொண்டு, அவர்களை அச்சுறுத்துவதும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதும் இழிந்த மனிதர்களின் இழிசெயல் அல்லவா? படிக்க வந்தவர்களுக்குப்  படிப்பைச் சொல்லிக் கொடுப்பதோடு நீதிக்கதைகளையும் சொல்லி அவர்களைச் செம்மைப் படுத்துவதுதான் அறிவார்ந்த ஆசிரியர்களின் அறச்செயல். ஆனால் அதைவிடுத்து, கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவது குறுமதியாளர்களின் செயலல்லவா?

 

வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் அழகு. இங்கு பல்வேறு மதங்கள், பற்பல இனங்கள், பன்முகப் பண்பாடுகள், பற்பல மொழிகள், ஒவ்வொரு மதத்தாருக்கும் ஒவ்வொரு விதமான ஆடைப் பழக்கங்கள், உணவுப் பழக்கங்கள், பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன. இவை அனைத்தும் நிறைந்த பன்முகக் கலாச்சாரம் கொண்ட நாடுதான் இந்தியா. அழகிய இந்தியாவை அழிவை நோக்கி அழைத்துச் செல்லும் ஆட்சியாளர்கள் குறுமதியாளர்களேயாவர்.

 

அவர்கள் தம் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள பெருவணிகர்களோடு சேர்ந்துகொண்டு அவர்களின் குரோத எண்ணப்படி ஆட்சி நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது என்பதே மக்களின் எண்ணம். பெரும்பாலான மக்கள் ஒருங்கிணைந்து இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது என்று எண்ணினால் பிரபஞ்ச விதியின் அடிப்படையில் இறைவன் இந்த ஆட்சியாளர்களை அகற்றிவிடுவான் என்பது திண்ணம். ஆகவே நாம் அனைவரும் இதுபோன்ற காட்டுமிராண்டி ஆட்சியாளர்களை அகற்றிவிடுமாறு  நம் ஆழ்மனத்தில் எண்ணினால் போதும். நிச்சயம் இவர்களின் ஆட்சி அதிவிரைவில் காணாமல் போய்விடும்.   

 

அழகிய இவ்வுலகில் நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற பயன்களைப் பிற மனிதர்களுக்கு நல்கி, பிறர் மகிழ வாழ்வோம்; நாமும் மகிழ்வோம். குறுமதியாளர்களின் குறுக்குச் சிந்தனைகளை அகற்றி நேரிய சிந்தனையோடு நடைபோடுவோம். 

===================

கருத்துகள் இல்லை: