செவ்வாய், 15 மார்ச், 2022

மனித இனத்தின் பகிரங்க எதிரி!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

நன்மைகள் செய்து நம் வினைச்சுவடியின் எடையை அதிகரித்துக்கொள்ளலாம் என்று எண்ணினால், சோம்பல் எனும் வலையைப்போட்டு முடக்கிவிடுவான்; தானம் செய்து நம் வினைச்சுவடியின் எடையை மிகுதியாக்கிக்கொள்ளலாம் என்று நினைத்தால், “தானம் செய்யாதே; உன் பணம் செலவழிந்துவிடும்; தீர்ந்துவிடும்என்று சொல்லி கஞ்சத்தனத்தைக் கண்முன் காட்டி மயக்கிவிடுவான்; கற்போடும் கண்ணியத்தோடும் வாழலாம் என்று மிகவும் பேணிக்கையாக வாழ்ந்தால், அலங்காரம் செய்துகொண்டு, காலில் கொலுசோடு, தலையில் மல்லிகைப் பூச்சூடிய பெண்ணை நமக்குமுன் நடக்கவைத்து, ‘அவளைப் பார், பார்என்று நம் ஆழ்மன வேட்கையைத் தூண்டிவிட்டு, நம்மைத் தகாத செயலைச் செய்யவைத்துவிட்டுச் சிரித்துக்கொண்டிருப்பான். அவன்தான் ஷைத்தான்; அவன்தான் மனித இனத்தின் பகிரங்க எதிரி.

 

அவனைக் குறித்துத் திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: திண்ணமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரி ஆவான். (12: 5)

 

அவன் மனித இனத்தின் மனங்களில் புகுந்து செய்யாத சேட்டைகளே இல்லை; அவன் மனிதனின் இரத்த நாளங்களிலும் ஊடுருவிச் சென்று சேட்டைகள் செய்பவன்; காலமெல்லாம் சேர்த்து வைத்த கண்ணியத்தையும்  நல்லறங்களையும் கணநேரத்தில் குலைத்துவிடுவான். கற்போடு வாழ்ந்து வருகின்ற ஆணையும் பெண்ணையும் கணநேரத்தில் திக்குமுக்காடச் செய்துவிடுவான். அவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அல்லாஹ்வும்  அவனுடைய இறுதித்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நமக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.

திருக்குர்ஆனின் பல்வேறு இடங்களில் அவன் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அவன் ஆதி மனிதர்  ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர்தம் மனைவியையும் வழிகெடுத்து, தடைசெய்யப்பட்ட மரத்திலிருந்து புசிக்கச் செய்து, சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினான். அவன் பலவீனமானவர்களிடம் எளிதில் புகுந்து ஊடுருவி வழிகெடுத்துவிடுவான். இறைநம்பிக்கையில் உறுதிமிக்கோரை, அதில் பலவீன நிலையிலுள்ளோர் மூலம் ஊடுருவிச் சென்று வழிகெடுக்க முயல்வான்.

 

அவன் மனிதனுடைய ஒவ்வொரு செயலிலும் ஒன்றிணைந்து வந்துகொண்டே இருப்பான். பள்ளிவாசலுக்குச் சென்று, கூட்டாக (ஜமாஅத்) தொழுகையைக் கடைப்பிடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிற ஒருவரை, வீட்டில் தொழுதால் என்ன என்ற எண்ணத்தைப் போட்டு மடைமாற்ற முயல்வான்; தொடர்ந்து குர்ஆன் ஓதுகின்றவரை வழிகெடுத்து, பாடல் கேட்கத் தூண்டுவான். வேறு ஏதாவது கேளிக்கையில் ஈடுபடத் தூண்டுவான்.

 

நேர்மையாக உழைத்துச் சம்பாதிக்கும் வியாபாரியிடம் சென்று, அளவு நிறுவையில் மோசடி செய்து, குறுக்கு வழியில் சம்பாதிக்கத் தூண்டுவான்; பொருளில் கலப்படம் செய்து விற்கச் செய்வான்; அதிகமான இலாபம்  வைத்து விற்கத் தூண்டுவான். அலுவலகத்தில் நேர்மையாகப் பணியாற்றி வருகின்ற ஒருவரை, ‘நேர்மையாக இருந்து என்ன பயன் கண்டாய்என்று யாரோ ஒருவர்மூலம் சொல்லவைத்து ஊழல் செய்யத் தூண்டுவான்; கையூட்டு வாங்க ஆசையூட்டுவான். திடீரென இலஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு, கையும் களவுமாகப் பிடித்துச் சென்று விசாரணைசெய்து, சிறையில் அடைக்கப்பட்டபின் அவரைப் பார்த்து மறைந்துநின்று சிரிப்பான்.

 

கண்கவர் கணவனோடும் அழகான பிள்ளைகளோடும் கற்பொழுக்கம் பேணி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவளிடம் சென்று, யாரோ ஒருவனைக் காட்டி மயக்க முயல்வான்; மீண்டும் மீண்டும் முயல்வான். அவளது மனதை இளகச் செய்து, சபலத்தைப் போடுவான்; தடுமாறச் செய்வான். சரி, இவ்வளவு காலம் இவனிடம் இருந்து என்ன சுகத்தைக் கண்டோம்என்ற நன்றிகெட்ட எண்ணத்தை விதைப்பான். பிறகு ஒரு நாள் அந்தக் கள்ளக்காதலனோடு ஓடச் செய்வான். ஒழுக்கத்தோடு வாழ்ந்தவளுக்கு ஓடுகாலிஎன்ற பெயரைச் சூட்டி மகிழ்வான்; அவளது வாழ்க்கையை அத்தோடு ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவான்.

 

மணந்துகொண்ட மனைவியோடு மனஅமைதியோடு வாழ்ந்துகொண்டிருக்கிற ஆடவனிடம், அவன் பணியாற்றும் இடத்தில் ஒரு பெண்ணை அனுப்பி, அவனது கண்களுக்கு அவளை அழகுபடுத்திக் காட்டுவான். அவனிடம் அவளைச் சிரித்துச் சிரித்துப் பேசவைப்பான்; அவனது மனத்தில் சஞ்சலத்தைப் போடுவான். ஒரு நாளாவது அவளை அடைந்துவிட வேண்டுமென்ற தீய எண்ணத்தை விதைப்பான்; அவள்மீது தீராக் காதலை ஏற்படுத்துவான்.  பிறகு அவ்விருவருக்கிடையே தவறான உறவை ஏற்படுத்திவிட்டு, அவன் ஒதுங்கிக்கொள்வான்.

 

இவ்வாறு அவன் செய்யாத சேட்டைகளே இல்லை எனும் அளவிற்கு எல்லாவிதமான சேட்டைகளையும் செய்வான். எல்லா வயது மனிதர்களையும் கெடுக்க முனைவான்; பலரிடம் வெற்றிபெற்றுவிடுவான். சிலரிடம் மட்டுமே தோற்பான். ஆனால் வல்லோன் அல்லாஹ் அவனைத் தோற்கடிக்கவே மன்னிப்புஎனும் கதவை மனித இனத்திற்காக எப்போதும் திறந்தே வைத்துள்ளான். ஒரு மனிதன் ஷைத்தானின் தூண்டலால் பாவம் செய்துவிடுகிறபோது, உடனடியாக அதை உணர்ந்து, வருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டால், அவன்  அம்மனிதனின் பாவத்தை மன்னித்துவிடுகின்றான். அதைக் கண்டு ஷைத்தான் அழுகின்றான். தான் செய்த அத்தனை முயற்சிகளும் வீணாகிவிட்டனவே என்று புலம்புகின்றான். மீண்டும் அவனைக் கெடுக்க முனைகிறான்.

 

தீர்க்கமான முடிவெடுத்து, எடுத்த முடிவில் உறுதியாக இருந்து செயல்பட்டாலே தவிர அவனிடமிருந்து தப்ப முடியாது. அதாவது நாம் ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரத்தைக் குறிப்பிட்டு வைத்துக்கொண்டு அந்தந்த நேரத்தில் அதையதைச் செய்து முடித்துவிட வேண்டும். இல்லையேல் பிறகு செய்யலாம்; பிறகு செய்யலாம் என ஒத்திப்போடச் செய்து, அதைச் செய்ய விடாமல் தடுத்துவிடுவான். ஆக நேரடியாகக் கெடுப்பது மட்டுமின்றி, ஒரு நல்ல செயலைத் தொடங்கவிடாமல் தடைகளை ஏற்படுத்துவதன்மூலமும் அவன் மனித இனத்திற்கு எதிரியாக உள்ளான் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

 

திருக்குர்ஆனை ஓதத் தெரியாத ஒருவர், குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அதைக் கற்றுக் கொள்ளலாம் என நினைப்பார். ஆனால் அதற்காக நேரம் ஒதுக்காமல் பிறகு பார்க்கலாம்; நாளை ஒதுக்கலாம் என்று ஒத்திப்போட்டுக்கொண்டே போவார். அதற்குள் அடுத்த ரமளான் வந்துவிடும். அம்மாதத்தில் இமாம் திருக்குர்ஆனின் முக்கியத்துவத்தையும் அதை அரபியில் ஓதினால் கிடைக்கும் நன்மைகளையும் தம் சொற்பொழிவில் கூறுவார். அதைக் கேட்கும்போது, திருக்குர்ஆனை நாமும் ஓதக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றும். பெருநாளுக்குப்பின் தொடங்கிவிட வேண்டும் என்று மனத்தில் உறுதி கொள்வார். ஆனால் நேரம் ஒதுக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகும்; அப்படியே காலம் கரைந்துவிடும். இனி நாம் ஓதி என்ன பயன்; நம் பிள்ளைகள் ஓதினால் போதும்என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அத்திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவான்; அவன் தன் திட்டத்தில் வெற்றிபெற்றுவிடுவான்.

 

இதனால்தான் நல்ல செயல்பாடுகளை ஒத்திப்போடக் கூடாது என்று சொல்வார்கள். ஏனென்றால் இன்றைய நாள் நம்முடையது. நாளை வரும்போது நாம் இருப்போமா என்பது உறுதியில்லை. அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:  உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சொர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். (3: 133) “செயல்களுள் சிறந்தது எது?” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டபோது, “தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதுஎன்று கூறினார்கள். (அபூதாவூத்: 426) ஆக நல்ல செயல்பாடுகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதை இதன்மூலம் அறியலாம்.

 

இவ்வாறே பள்ளிவாசலில் சென்று ஐவேளைத் தொழுகையைக் கூட்டாகத் தொழவேண்டும் என்று ஒருவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முடிவெடுப்பார். பள்ளியைவிட்டு வெளியே சென்றதும் அந்த எண்ணத்தை மழுங்கடித்து விடுவான்; மறக்கச் செய்துவிடுவான். அதற்குள் அடுத்த வெள்ளிக்கிழமை வந்துவிடும். மீண்டும் அவர் தம் மனத்தில் உறுதிகொள்வார். பின்னரும் அவன் அவருடைய எண்ணத்தை மழுங்கச் செய்துவிடுவான். இவ்வாறே அவன் தன் திட்டத்தில் வெற்றிபெற்றுவிடுவான். மனிதன் மிக உறுதியாகவும் தீர்மானமாகவும் முடிவெடுக்கின்ற வரை இதே நிலைதான்.

 

ஒழுங்காக ஒரு வீட்டில் வாழ்ந்து வருபவரைக் கெடுக்க முனைவான்; பக்கத்திலுள்ள நிலத்தை அபகரித்துக்கொள் என்றோ பக்கத்து இடத்திலிருந்து ஒரு பகுதியை உன் இடத்தோடு இணைத்துக்கொள் என்றோ தூண்டுவான். யார் ஒரு சாண் நிலத்தை அபகரித்தாரோ அவருக்கு மறுமையில் அது போன்ற ஏழு நிலப்பகுதிகள் கழுத்தில் மாலையாகப் போடப்படும்என்ற நபிமொழியை மறக்கச் செய்து, அடுத்தவர் நிலத்தை அபகரிக்கச் செய்வான். பலவீனமான ஈமான்-இறைநம்பிக்கை உள்ளவர் அவனிடம் தோற்றுப்போய்விடுவார். பலமான இறைநம்பிக்கை உள்ளவர் அவனுடைய சூழ்ச்சித் திட்டங்களிலிருந்து தப்பிவிடுவார்.

 

சொத்துச் சண்டையை உண்டாக்கி அண்ணன்-தம்பியை, அக்காள்-தங்கையைப் பிரிப்பான். ஒருவருக்கொருவர் இணைபிரியாத உறவுகளாக வாழ்ந்து வந்த அவர்களைச் சொத்துக்காகச் சண்டையிடச் செய்து பல்லாண்டுகளாகப் பேசவிடாமல் செய்துவிடுவான். ஒழுங்காக வாழ்ந்து வருகிற கணவன்-மனைவி இடையே சின்ன விஷயத்திற்காகச் சண்டையை ஏற்படுத்தி அவர்களைப் பேசவிடாமல் செய்துவிடுவான். பின்னர் அதுவே பெரிதாகி, அவ்விருவரும் பிரிந்துவிடும் நிலை உருவாகும். ஆகவே கணவன்-மனைவி இடையே ஏற்படும் சின்னச் சின்ன மோதல்களைப் பெரிதுபடுத்தாமல் உடனடியாகச் சமாதானம் ஆகிவிட வேண்டும். ஷைத்தானின் சூழ்ச்சிக்கு இலக்காகிவிடாமல், அவர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டால் அதைப் பார்த்து அவன் வெற்றிக் களிப்பில் சிரித்துக்கொண்டிருப்பான்.

 

ஷைத்தான் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரித்துக் கூறியுள்ளார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: 

தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைக்கப்படும்போது ஷைத்தான் பாங்கு சத்தத்தைக் கேட்கக்கூடாது என்பதற்காகச் சத்தத்துடன் காற்றை (அபான வாயு) விட்டுக்கொண்டு திரும்பி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் (மீண்டும்) திரும்பி ஓடுகிறான். இகாமத் சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதருடைய உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, “இதை நினைத்துப் பார்; அதை நினைத்துப் பார்'' என்று அவர் அதற்குமுன் நினைத்திராத விஷயங்களை அவருக்கு நினைவூட்டிக் கூறுகின்றான். எந்த அளவிற்கென்றால், அந்த மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராக மாறிவிடுகிறார். (நூல்: புகாரீ: 608) ஆக நம்மை நிம்மதியாகத் தொழவிட மாட்டான் என்பதை இதன்மூலம் அறிகிறோம்.

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடாத  பிரார்த்தனையே இல்லை எனும் அளவிற்கு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள். அவனைக் குறித்து எச்சரிக்கை செய்யாத இடமே இல்லை எனும் அளவிற்கு எச்சரிக்கை செய்துள்ளார்கள். எனவே வரக்கூடிய காலங்களில் நாம் ஷைத்தானிடமிருந்து எச்சரிக்கையாக இருந்து நம்முடைய நல்லறங்களைத் தொடர்ந்து செய்வோம்.  நாம் செய்யப்போகும் செயல்கள் குறித்துத் தீர்மானமாகவும் தீர்க்கமாகவும் முடிவெடுப்போம். பின்னர் அதில் உறுதியாக இருப்போம். அப்போதுதான் நாம் ஷைத்தானை வெல்ல முடியும். நாம் ஷைத்தானை வெல்லும் வலுவான இறைநம்பிக்கையை நம் மனத்தினுள் அல்லாஹ் விதைப்பானாக.  ==========================








கருத்துகள் இல்லை: