வியாழன், 9 மே, 2024

இறையன்பைப் பெற எளிமையான வழிகள்


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28

  

இறையன்பையும் திருப்தியையும் பெற இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மனித சமுதாயத்திற்கு எளிமையான வழிமுறைகளைக் கற்றுத்தந்துள்ளார்கள். அவை அனைவராலும் எளிமையாகப் பின்பற்றத்தக்கவை ஆகும். கோடி கோடியாய் நற்செயல்கள் செய்வதைவிடக் குறைவான நற்செயல்களாக இருந்தாலும் தொடர்படியாகச் செய்வதே இறைதிருப்தியைப் பெறுவதற்கான வழியாகும்.

 

இன்று சமூக ஊடகங்களில் அவ்வப்போது காண நேரிடுகிற ஒரு செய்தி, ஒரு கோடி ஸலவாத் அர்ப்பணம்பத்துக்கோடி ஸலவாத் அர்ப்பணம்; நூறு கோடி ஸலவாத் அர்ப்பணம் என்பதுதான். மேலும் ஒரே இரவில் முழுக் குர்ஆனையும் ஓதித் தொழுகை நடத்தப்படும் என்ற செய்தியையும் அண்மையில் காண நேரிட்டது.

இதையெல்லாம் அவர்கள் ஏதோ ஒரு முறைதான் செய்ய இயலும். யாரோ சிலரால்தான் செய்ய இயலும். தொடர்படியாகச் செய்ய இயலாது. ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் சமுதாய மக்களுக்கு வழிகாட்டியதோ மிக எளிய வழிமுறைகள் ஆகும்.

 

அது மட்டுமின்றி இது மாதிரி தீனில் மிகையான போக்கைக் கடைப்பிடிக்கின்ற மனிதர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்டித்திருக்கிறார்கள் என்பதுதான் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியதாகும். அதிகமான  நற்செயல்கள் செய்வது தவறா என்று கேட்போருக்கு, ‘ஆம் தவறுதான் என்றுகூடச் சொல்லலாம். ஏனெனில் ஒருவர் மிகுதியான நற்செயல்களில் ஈடுபடுகிறபோது அவருடைய குடும்ப உறுப்பினர்கள், மனைவி, பிள்ளைகள் பாதிக்கப்படுவார்கள் என்பது நிதர்சன உண்மை. பின்வரும் நிகழ்வு அதற்குத் தக்க சான்றாகும்.  

 

அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: பாரம்பரியமிக்க ஒரு பெண்ணை என் தந்தை எனக்கு மணமுடித்து வைத்தார்கள். (என் தந்தை) அம்ர் ரளியல்லாஹு அன்ஹு தம் மருமகளை அணுகி  அவளுடைய கணவர் குறித்துக் கேட்பது (அதாவது என்னைப் பற்றி விசாரிப்பது) வழக்கம்.

அப்போது அவள், “அவர் நல்ல மனிதர்தாம்; (ஆனால்,) அவர் படுக்கைக்கு வரவுமில்லை; அவரிடம் நான் வந்து சேர்ந்தது முதல் எனக்காகத் திரைச் சீலையை அவர் இழுத்து மூடவுமில்லை'' என்று சொல்வாள். இதே நிலை நீடித்தபோது, (என் தந்தை) அம்ர் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (இதைப் பற்றிக்) கூறினார்கள். அப்போது, “என்னை வந்து சந்திக்குமாறு உங்கள் மகனிடம் சொல்லுங்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். பிறகு நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், “நீ எப்படி நோன்பு நோற்கிறாய்?'' என்று கேட்டார்கள். நான், “நாள்தோறும் நோன்பு நோற்கிறேன்'' என்று சொன்னேன். ("குர்ஆனை) எப்படி ஓதி முடிக்கிறாய்'' என்று கேட்டார்கள்.

 

நான், “ஒவ்வோர் இரவிலும் (குர்ஆனை ஓதி முடிக்கிறேன்)'' என்று சொன்னேன். அவர்கள், “மாதந்தோறும் மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக்கொள். குர்ஆனை ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை முழுமையாக) ஓதிக்கொள்'' என்று சொன்னார்கள். நான் இதைவிட அதிகமாக (நோன்பு நோற்க) ஆற்றல்பெற்றுள்ளேன்'' என்று கூறினேன். அவர்கள் வாரத்தில் மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக்கொள்'' என்றார்கள். நான் இதைவிட அதிகமாக (நோன்பு நோற்க) எனக்கு ஆற்றல் உண்டு'' என்று கூறினேன். இரண்டு நாள்கள் நோன்பை விட்டுவிட்டு, ஒரு நாள் நோற்றுக்கொள்!'' என்று சொன்னார்கள். நான் இதைவிட அதிகமாக (நோன்பு நோற்க) ஆற்றல் பெற்றுள்ளேன்'' என்று கூறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “(இறைத்தூதர்) தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உயர்ந்த நோன்பு வழக்கப்படி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றுக்கொள்! மேலும், ஒவ்வோர் ஏழு இரவுகளிலும் (ஒரு முறை குர்ஆனை) ஓதி(முடித்து)க்கொள்'' என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழங்கிய இந்தச் சலுகையை நான் ஏற்று நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்! காரணம் நான் (இப்போது) தள்ளாமை வயதை அடைந்து மிகவும் பலவீனம் அடைந்துவிட்டேன். (புகாரீ: 5052)

 

இந்த நபிமொழியில் நபியவர்கள் முதன்முதலாகச் சொன்னது மக்கள் அனைவரும் பின்பற்ற எளிதான நடைமுறையாகும். அதாவது ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்பதும், ஒவ்வொரு மாதமும் குர்ஆனை ஓதி முடிப்பதும் ஒவ்வொரு மனிதருக்கும் மிக எளிதான நற்செயல்கள் ஆகும். அதைத்தான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு, “நபியவர்கள் கொடுத்த சலுகையை நான் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்; அப்படிச் செய்திருந்தால் அது எனக்கு இந்தத் தள்ளாத வயதில் எளிதாக இருந்திருக்கும் என்று சொல்கிறார்கள். அதாவது எல்லா வயதிலும் செய்ய முடிகிற அளவைத்தான் நபியவர்கள் கூறினார்கள். ஆனால் அவரோ இளமைத் துடிப்பில் தமக்கு ஆற்றல் இருப்பதாகக் கூற, கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, இறுதியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்குமாறு நபியவர்கள் கூறிவிட்டார்கள். அவர்களிடம் செய்வதாக உறுதியளித்து விட்டதால், அந்தச் செயல்பாடுகளை இறுதிவரை தொடர வேண்டிய நிர்ப்பந்த நிலை அவருக்கு ஏற்பட்டது.

 

அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு தொடர்படியாக நற்செயல்கள் செய்வதில் ஈடுபட்டதால் அவரால் தம் மனைவியின் தேவையை நிறைவேற்ற முடியவில்லை என்பதை அறிகிறோம். இன்றும் இத்தகைய மனிதர்கள் இருக்கவே செய்கின்றார்கள். மிகுந்த நற்செயல்கள் செய்வதில் ஈடுபடுதல் அல்லது மிகுந்த வேலைப்பளு காரணமாகத் தம் மனைவியின் உரிமைகளை நிறைவேற்ற முடியாமல் இல்லற வாழ்வில் தோற்றுப்போன இளைஞர்கள் இருக்கின்றார்கள். அத்தகையோர் கவனிக்க வேண்டிய நபிமொழிதான் இது.

 

இரவெல்லாம் இறைவனை வணங்குவதும் பகலெல்லாம் நோன்பு நோற்பதும் தவறா என்றால், தவறில்லை. எனினும் ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய அன்றாட வாழ்க்கையை மேற்கொள்வதற்கு இதெல்லாம் தடையாக  இருக்கும் என்பது எல்லோருக்கும் புரியும். இவையெல்லாம் எல்லா மனிதர்களாலும் பின்பற்ற இயலாதவை. எனவேதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரைத் தடுத்தார்கள்.

 

ஒரே இரவில் முழுக் குர்ஆனையும் ஓதி முடிப்பது குறித்து யாரும் குறை சொல்ல முடியாது; அதைத் தவறென்று சொல்ல முடியாது. ஆனால் அது அவருடைய இல்லற வாழ்வைப் பாதிக்கும். மனைவியின் உரிமையைப் பறிக்கும்; கடைசியில் இல்வாழ்வு முறிந்துபோய்விடும். எனவேதான் நபியவர்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

 

ஒரு தடவை நபியவர்கள் மஸ்ஜிதுந் நபவியின் ஒரு தூணில் கயிறொன்று கட்டப்பட்டிருந்ததைக் கண்டு, அது குறித்து விசாரித்துவிட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். அது குறித்த முழுமையான செய்தி இதோ:

 

அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளி வாசலுக்குள்) வந்தபோது இரண்டு தூண்களுக்கிடையே நீண்ட கயிறு ஒன்று காணப்பட்டது. "இந்தக் கயிறு என்ன (ஏன்)?'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள். அதற்கு மக்கள், “இது (தங்கள் துணைவியார்) ஸைனப் பின் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும்போது) சோர்வடைந்தால் இந்தக் கயிற்றைப் பிடித்துக்கொள்வார்'' என்று கூறினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “வேண்டாம். இதை அவிழ்த்துவிடுங்கள். உங்களுள் ஒருவர் உற்சாகமான மனநிலையில் இருக்கும்போது (உபரியான தொழுகைகளைத்) தொழட்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்துகொள்ளட்டும்'' என்று கூறினார்கள். (புகாரீ: 1150)

 

பொதுவாக மனிதர்கள் யாவரும் பலவீனமானவர்கள். அவர்களுக்குத் தூக்கம் இன்றியமையாதது. அந்தத் தூக்கத்தோடு இறைவழிபாட்டில் ஈடுபட வேண்டாம் என்பதை  வலியுறுத்தியே நபியவர்களின் அறிவுரை இருந்தது. தூக்கத்தோடு ஒருவர் இறைவழிபாட்டில் ஈடுபட்டால், அவர் தொழும்போது கேட்கும் துஆகூட வார்த்தை மாற்றங்களால் தமக்கு எதிராக ஆகிவிடலாம். ஆகவே உற்சாக நிலையில் இருக்கும்போது மட்டுமே வழிபாட்டில் ஈடுபட வேண்டும்; தூக்கம் மேலிட்டால் தூங்கிவிட வேண்டும் என்ற எளிய வழிமுறையை இச்சமுதாயத்திற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டியுள்ளார்கள்.

 

இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக்கொண்டால், அது அவரை மிகைத்துவிடும். எனவே, (கூடுதலான வணக்கங்கள் உட்பட அனைத்துச் செயல்பாடுகளிலும்) நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; (கூடுதல் வணக்கங்களை உற்சாகத்துடனும் நிரந்தரமாகவும் நிறைவேற்றிட) காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் ஒத்தாசையாக்கிக் கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 39)

 

இந்த மார்க்கம் எளிதானது என்றும் இயன்றவற்றைக் கடைப்பிடியுங்கள் என்றும் காலை, மாலை, இரவு நேரங்களில் இயன்ற அளவிற்கு வழிபாட்டில் ஈடுபடுங்கள் என்றும் நபியவர்கள் இச்சமுதாய மக்களுக்கு நல்வழிகாட்டியுள்ளார்கள். ஆக நபியவர்கள் காட்டியுள்ள வழிமுறை அனைவரும் பின்பற்றும் விதத்தில் இருக்கிறது. அதுதான் இம்மார்க்கத்தின் சிறப்பு. ஆதலால் சமூக ஊடகங்களின் வெளிச்சத்திற்காக நாம் இம்மார்க்கத்தில் சிரமத்தை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. அது தனிப்பட்ட வழிபாடாக இருந்தாலும் சரி, கூட்டு வழிபாடாக இருந்தாலும் சரி.

கடமையான தொழுகை முடிந்ததும் எவ்வளவு வேண்டுமானாலும் திக்ரு செய்யலாம்; தஸ்பீஹ் ஓதலாம். அது அவரவர் விருப்பம். ஆனால் நபியவர்கள் கூறியுள்ள அளவு அனைவரும் பின்பற்றும் விதத்தில் உள்ளது. அதனால்தான் நபியவர்களை, ‘எளிய வழிகாட்டிய ஏந்தல் நபி என்று நாம் போற்றுகின்றோம்.

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? (அதை நீங்கள் செயல்படுத்திவந்தால் இந்தச் சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்டவர்களையும் உங்களுக்குப் பின்னால் வருபவர் களையும் நீங்கள் எட்டிவிடுவீர்கள். இதைப் போன்று செய்தால் தவிர, வேறு எவரும் நீங்கள் செய்ததற்கு நிகராகச் செய்திட முடியாது. (அது யாதெனில்,) நீங்கள் (கடமையான) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் பத்து முறை "சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும், பத்து முறை "அல்ஹம்து லில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்றும், பத்து முறை "அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் கூறுங்கள்'' எனச் சொன்னார்கள். (புகாரீ: 6329)

 

தொழுதுவிட்டு அவசரமாக அவசரமாக வெளியே புறப்படுவோரும்கூட இவ்வளவு குறைவான திக்ரை ஓதாமல் செல்ல மாட்டார். அந்த அளவிற்கு மிகக் குறைவான எண்ணிக்கையை நபியவர்கள் கூறியுள்ளார்கள். இன்றைய அவசர உலகில் வாழும் பலர், இமாம் கேட்கின்ற துஆவுக்குக்கூட ஆமீன் கூற நேரமில்லாதவர்களாக உள்ளனர். அத்தகையோரையும் சற்று நிதானமாகச் சிந்திக்க வைக்கின்ற நபிமொழிதான் இது. இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் நிறைவான நன்மை உண்டு என்பதை அவர்கள் அறிந்துகொண்டால் நிச்சயம் இதை நாள்தோறும் ஓதத் தொடங்கிவிடுவார்கள்.

 

அதுபோலவே திருக்குர்ஆனை ஓதி முடிப்பது குறித்து வழிகாட்டுகிறபோது, முதலில் நாற்பது நாள்களுக்கு ஒரு தடவை என்று கூறினார்கள். இது ஓதலில் ஆர்வமுடையோருக்கு மிகக் குறைந்த அளவுதான். 10 முதல் 15 நிமிடங்களில் ஓதிவிடலாம். அதன்பிறகு மிகுதியான ஓய்வுநேரம் உள்ளோருக்காக வழிகாட்டியுள்ளார்கள். அதன்படி முப்பது நாள்களில் அல்லது இருபது நாள்களில் அல்லது பதினைந்து நாள்களில் அல்லது பத்து நாள்களில் அல்லது ஒரு வாரத்தில் ஓதி முடிப்பதாக இருந்தாலும் முடிக்கலாம். அது அவரவர் ஓய்வுநேரத்தைப் பொருத்தது. ஆக முதன்முதலில் அவர்கள் கூறியது அனைவரும் பின்பற்றத்தக்க எளிய வழியாகும். அதன்பின்னர் மனிதர்கள் தத்தம் ஓய்வுநேரத்திற்கேற்ப அதனை அதிகப்படுத்திக்கொள்ளலாம். அது குறித்த நபிமொழி இதோ:

 

அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்கள் கூறியதாவது: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “எத்தனை நாள்களில் குர்ஆன் நிறைவாக ஓதி முடிக்க வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நாற்பது நாள்களில் ஒரு முறை என்றார்கள். பிறகு (நான் அதைவிடக் குறைவான காலத்தில் ஓதிமுடிக்க எனக்கு ஆற்றல் உள்ளது என்று கூறியபோது) மாதத்தில் ஒரு முறை என்றார்கள். பிறகு “(நான் அதைவிடக் குறைவான காலத்தில் ஓதி முடிக்க எனக்கு ஆற்றல் உள்ளது என்று கூறியபோது) இருபது நாள்களில் ஒரு முறை என்றார்கள். பிறகு, “பதினைந்து நாள்களில் ஒரு முறை என்றார்கள். பிறகு, “பத்து நாள்களில் ஒரு முறை என்றார்கள். பிறகு, “ஏழு நாள்களில் ஒரு முறை என்று கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதைவிடக் குறைவான காலத்தில் ஓதிமுடிக்க அனுமதிக்கவில்லை. (அபூதாவூத்: 1187)

 

ஒருவர் ஆர்வத்தோடு ஒரு நாள் அல்லது சில நாள்கள் இரவின் நடுநிசி நேரத்தில் எழுந்து, எட்டு ரக்அத்கள் தஹஜ்ஜுத் தொழுகிறார். பின்னர் பல நாள்கள் தொழாமல் விட்டுவிடுகிறார். இவரைவிட, நாள்தோறும் நடுநிசி நேரத்தில் எழுந்து ஆர்வத்தோடு இரண்டு ரக்அத்கள் மட்டும் தஹஜ்ஜுத் தொழுபவர் மேலானவர். ஏனெனில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது என்று நபியவர்களிடம் கேட்கப்பட்டபோது, “குறைவாக இருந்தாலும் நிரந்தரமாகச் செய்வது என்று சொன்னார்கள். (புகாரீ: 6465)

 

ஆக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம். ஆனால் மக்களோ அதை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கிக்கொள்கின்றார்கள்.  மிகக் குறைந்த செலவில் திருமணத்தை மஸ்ஜிதில் நடத்தி, எளிய முறையில் விருந்து ஏற்பாடு செய்து, எளிதாக முடிக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும் தம்முடைய கௌரவத்தை அதில் வெளிப்படுத்த முயன்று, வாழ்நாளெல்லாம் சம்பாதித்த பணத்தை அதிலேயே செலவழித்துவிடுகின்றார்கள்; தமக்குத்தாமே சிரமத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். எனவே இனி வரும் காலங்களிலாவது நாம் அனைவரும் மார்க்கத்தின் எல்லாச் செயல்களையும் எளிய முறையில் செய்து, இந்த மார்க்கம் மிக எளிமையானது என்பதை இந்தச் சமுதாய மக்களுக்கு உணர்த்தி, இறையன்பைப் பெற்று இன்புற்று வாழ்வோம்.

============================௦ 












இளைஞர்களே! தாயகம் திரும்புவீர்!

  

கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி கள்ளக்குறிஞ்சி அருகிலுள்ள மாத்தூர் காட்டுக்கொட்டாயில், தம் கள்ளத்தொடர்பு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தம் மாமியாரையே கொன்றுவிட்டனர் இரண்டு மருமகள்கள்.

 

அதன் விவரமாவது, தவ்லத் (24), மதினா பேகம் (22) இரு பெண்களின் கணவர்களும் வெளிநாட்டில் வேலை செய்கின்றனர். மதினா பேகத்தின் மாமன் மகனிடம் அந்த இரு பெண்கள் கள்ளத்தொடர்பு (உடலுறவு) வைத்திருந்தனர். இதையறிந்த அவர்களின் மாமியார், என் மகனுக்கு நீங்கள் துரோகம் செய்யலாமா? என்று திட்டியிருக்கின்றார். அந்த கள்ளக் காதலனை விரட்டியிருக்கின்றார். இது தம் கணவர்களுக்குத் தெரிந்து விடலாம் எனும் அச்சத்தில் கள்ளக் காதலன் அப்துல் ரசாக்குடன் சேர்ந்து இரு மருமகள்களும் தம் மாமியாரைக் கொலை செய்து விட்டனர். (செய்தி: தினத்தந்தி: 23-03-2002)

ஒரு பெண் தன் மாமியாரையே கொலை செய்கிற அளவிற்கு அவளைத் தூண்டியது எது? முதலில் கள்ளத் தொடர்பு. அந்தக் கள்ளத் தொடர்புக்கு அவளை ஆட்படுத்தியது அவளின் இளமைதான். ஒரு பெண்ணின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ளாதவன் ஏன் மணம் செய்து கொள்ள வேண்டும்?

இளவயதான ஆண் -பெண் தம் உடலியல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும் இனிய இல்லறத்தை மேற்கொள்வதற்குமே திருமணம். அதற்காகத்தான் பலர் முன்னிலையில் சட்ட முறைப்படி ஈருள்ளங்கள் இணைகின்றன. ஆனால் கணவன் தன் மனைவியின் தேவையைப் பூர்த்தி செய்யாமல் பொருளாதாரத்  தேவைக்காக வெளிநாடு சென்றுவிட்டால் அவளின் காம உணர்வுகளைத் தணிப்பது யார்?

 

ஓர் ஆண் வெளிநாட்டிலிருந்து சம்பாதித்து அனுப்பும் பணம் பெண்ணின் வயிற்றுப்பசியைத்தான் தீர்க்குமே தவிர அவளின் காமப்பசியைத் தீர்க்க முடியுமா?

 

மட்டுமல்ல, அந்தப் பணத்தின் மூலம் சிலர் களவு முறையில் கலவி புரியவும் தயங்குவதில்லை. ஆடம்பர வாழ்க்கை வாழவும் தொடங்கி விடுகின்றனர். இத்துணைப் பிரச்சனைகளுக்கும் காரணம் மணமுடித்து விட்டு வெளிநாடு சென்றுவிடும் இளைஞர்களே எனில் அது மிகையாகாது.

 

நோன்பு வைத்துக் கொண்டும் இரவு முழுவதும் தொழுது கொண்டும் இருந்த தோழரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்டித்து, “உன் உடலுக்கு உன்மீது கடமை உண்டு. உன் மனைவிக்கும் உன்மீது கடமை உண்டு என உபதேசித்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். (நூல்: புகாரீ) இத்தகைய ஆடவர் பலரின் காரணத்தால்தான் இன்றைய பெண்டிர் பற்பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுகின்றது.

 

ஒர் ஆணைவிட வீட்டில் தங்கியிருக்கும் பெண்ணுக்குத்தான் ஆசைகளும், உணர்ச்சிகளும் அதிகம் என்பேன். காரணம் ஓர் ஆண் தன் வேலைகளைக் கவனிப்பதிலும், உழைப்பதிலுமே பொழுதைக் கழித்து விடுகின்றான், ஆனால் வீட்டில் தங்கியிருக்கும் ஒரு பெண் தன் சமையல், துணிதுவைத்தல் உள்ளிட்ட வேலைகள் போக எஞ்சியுள்ள நேரங்களில் தன் கணவனைப் பற்றியும், கலவியைப் பற்றியுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறாள். இளவயது பெண்களுக்கு இது பற்றிய சிந்தனை அதிகமாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

 

மணமுடிக்கப்பட்ட இரண்டு மாதங்களிலேயே வெளிநாடு சென்று விடும் கணவன் தன் தாயகம் திரும்ப மூன்று அல்லது நான்காண்டுகள் ஆகின்றன. (தற்போது அந்தக் கால அளவு குறைந்துள்ளது) அதுவரை தன் ஆசைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஓர் இளமங்கை பூட்டுப்போட வேண்டும் என நிர்ப்பந்திப்பது எவ்விதத்தில் நியாயமாகும்? இன்று இவ்விரு பெண்களின் விஷயம் வெளிச்சமாகிவிட்டது. இன்னும் எத்தனையோ மங்கைகள் இருட்டுக்குள் புலம்புவது யாருக்குத் தெரியும்?

 

என் மனைவி நல்லவள்; தவறேதும் செய்யமாட்டாள் என வாதிடுவதை விட்டுவிட்டு நீங்கள் உங்கள் துணைவியரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் அவர்களோடு இணங்கி வாழ்வதிலும் அக்கறை காட்டுங்கள். அதுவே பிரச்சனைகள் தீர வழிவகுக்கும்.

 

''ஒவ்வொருவரும் பொறுப்பாளியே ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பு பற்றி கேட்கப்படுவார். ஓர் ஆண் தன் குடும்பத்தினர் பற்றியும் ஒரு பெண் தன் கணவனின் இல்லம் பற்றியும் அவனின் குழந்தைகள் பற்றியும் கேட்கப்படுவாள்"- (நூல் : புகாரீ) எனும் நபிமொழியை நெஞ்சில் நிறுத்தி, மணம் முடித்துவிட்டு வெளிநாடு சென்றுள்ள இளைஞர்களெல்லாம் உடனே தம் தாயகம் திரும்புங்கள் எனக் கனிவுடன் அழைக்கின்றேன். வாருங்கள்! நம் துணைவியோடு இன்பமாய் வாழ்ந்து நம் நாட்டிலேயே தொழில்செய்து சம்பாதிப்போம்; உழைப்போம்! உயர்வடைவோம்!

 

"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்

ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?’

எனும் கவிதை வரிகளை நெஞ்சில் பதித்து மகிழ்வாய் நாம் உழைப்போம்;

நிறைவாய் நாம் வாழ்வோம்! வாரீர்! வாரீரென அன்புடன் அழைக்கின்றேன்.

 

இப்படிக்கு பாகவியார் - ஆலங்குடி.

அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமியா ஏப்ரல் 2002

========================================

 

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை இது. அயல் நாடு சென்று உழைப்பது தவறில்லை. ஆனால் மனைவியோடு சென்று, இல்வாழ்வில் ஈடுபட்டவாறே உழைக்க வேண்டும். அல்லது நான்கு-ஆறு மாதங்களுக்குள் ஒரு தடவை தாயகம் வந்து மனைவியோடு சேர்ந்து வாழ வேண்டும். இந்த நிபந்தனைக்கு உட்பட்டால் அயல்நாடு சென்று உழைக்கலாம். அத்தோடு படித்தவர்கள் சென்றால்தான் அங்கு மதிப்பும் அதற்கேற்ற நல்ல சம்பளமும் கிடைக்கும். படிக்காதவர்கள் சென்றால் அவர்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். அதற்குப் பதிலாக அவர்கள் உள்நாட்டிலேயே இருந்துவிடலாம்.

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெளியூர்ப் பயணம் மேற்கொண்டால் தம்மோடு தம் மனைவியையும் அழைத்துச் செல்வது வழக்கம். இதை ஒவ்வொரு முஸ்லிமும் நினைவில் நிறுத்துவது அவசியமாகும்.

 

அன்புடன்

நூ. அப்துல் ஹாதி பாகவி

09 05 2024

=====================







வியாழன், 2 மே, 2024

வஃபாத் அறிவிப்பு

 நேற்றுதான் (01.05.2024) என்னிடம் செல்பேசியில் தொடர்புகொண்டு பேசினார்கள். துபையிலிருந்து தாம் வந்துவிட்டதாகத் தெரிவித்தார்கள்.

அந்தோ,
சில வாரங்களுக்கு முன்புதான் அவர்களின் மனைவி துபையில் வஃபாத் ஆனார். அதன்பின் தாம் தனியாக வந்து சேர்ந்ததாகத் தெரிவித்தார்கள்.
இதோ இன்று (02.05.2024) அவரை அல்லாஹ் தன்பால் அழைத்துக் கொண்டான்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அவருடைய பாவங்களை மன்னித்து ஏக இறைவன் அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சொர்க்கத்தில் இடமளிப்பானாக.
அவரைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை உயர்ந்தோன் அல்லாஹ் வழங்குவானாக.
______
மூத்த ஆலிமும் பல்வேறு அரபிக் கல்லூரிகளில் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றிய மெளலவி டாக்டர் T. M. அப்துல் காதிர் அன்வரி ஃபாஜில் ஜமாலி ஹள்ரத் அவர்கள் நேற்று இரவு வஃபாத் ஆகிவிட்டார்கள்.
ஃபீ ஸபீல் எனும் மாத இதழை நடத்தியவர்.
பல்வேறு நூல்களை எழுதியவர்.
தற்போது திருக்குறளை அரபியில் கவிதை நடையிலும் உரை நடையிலும் எழுதிக் கொண்டிருந்தார். அரபு - தமிழ் அகராதியையும் எழுதிக் கொண்டிருந்தார்.
-----
ஜனாஸா வைக்கப்பட்டுள்ள இடம்:
127, ஹமீதா மன்ஜில்,
ECR பனையூர்,
சென்னை.
(பனையூரில் மெயின் ரோடு KSA CONSTRUCTION அலுவலகம் அருகில்)
வருத்தத்துடன்
நூ.அப்துல் ஹாதி பாகவி



புதன், 1 மே, 2024

நேர்மறை எதிர்வினையாற்றுவோம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

 

ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு. நாம் ஒரு நகைச்சுவை சொன்னால் சிரிப்பார்கள்; துக்கமான செய்தியைச் சொன்னால் வருத்தப்படுவார்கள்; நாம் பிறரைத் திட்டினால் அவர்கள் நம்மைத் திட்டுவார்கள்; நாம் அடித்தால் அவர்கள் நம்மை அடிப்பார்கள்; நாம் பிறரிடம் மரியாதையாகவும் ஒழுக்கமாகவும் நடந்துகொண்டால் அவர்கள் நம்மை மரியாதையாக நடத்துவார்கள். நாம் அன்பாக நடந்துகொண்டால் அவர்களும் நம்மிடம் அன்பாக நடந்துகொள்வார்கள். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு. ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒருவர் நன்மை செய்தாலும் தீமை செய்தாலும் அவருக்கு அவர்கள் நன்மையே செய்வார்கள். அதுதான் அவர்களின் எதிர்வினை. ஆக அவர்களின் எதிர்வினை எப்போதும் நேர்மறை எதிர்வினையாகவே இருக்கும். அதைத்தான் பரபரப்பும் படபடப்பும் நிறைந்த இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

 

 

அவர்களுக்குத் தொடக்கக் காலத்தில் தொல்லை கொடுத்த மக்காவாழ் மக்களை, அதனை வெற்றிகொண்ட தருணத்தில் அவர்களுள் யாரையும் பழிவாங்கவில்லை மாறாக அவர்கள் அனைவரும் மன்னித்தார்கள். தாயிஃப் நகர மக்கள் கடுஞ்சொற்களால் வதைத்து, சிறுவர்களை ஏவிவிட்டு, கல்லால் அடித்துக் காயப்படுத்தியபோது, மலைகளின் பொறுப்பாளரான வானவர் வந்து நபியவர்களிடம், “இந்த இரு மலைகளுக்கிடையே உள்ள இந்த ஊர்மக்களை அப்படியே நசுக்கிவிடட்டுமா என்று பணிவோடு கேட்டுநின்ற வேளையில், “இவர்கள் என்னை ஏற்காவிட்டாலும் இவர்களின் சந்ததிகள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு என்று கூறினார்கள்; அவர்களின் அறியாமைச் செயலை மன்னித்தார்கள்.

 

முஹம்மதே பைத்துல் மால் சொத்திலிருந்து எனக்கு வழங்குங்கள் என்று கூறி, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேல்துண்டை கடுமையாக இழுத்தவாறு கோரிய கிராமத்து அரபியரை மன்னித்து, புன்னகையோடு அவரை நோக்கி, “அவருக்குத் தேவையானதை வழங்குங்கள் என்று கட்டளையிட்டார்கள். இப்படி ஏராளமான நிகழ்வுகளில் நபியவர்களின் எதிர்வினை நேர்மறையாகவே இருந்தது. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற கோணத்தில் நபியவர்கள் செயல்பட்டதே இல்லை. அத்தகைய நேர்மறை எதிர்வினையைத்தான் தம் தோழர்களுக்கும் போதித்தார்கள்.

 

 

உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள் என்னிடம், “உக்பா பின் ஆமிரே! உன் உறவைத் துண்டித்தவரோடு நீ சேர்ந்து வாழ்; உனக்குத் (தராமல்) தடுத்துக்கொண்டவருக்கு நீ கொடு; உனக்கு அநியாயம் செய்தவரை மன்னித்துவிடு என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மத்: 17452)

 

 

நம்முடைய நெருங்கிய உறவினர் நம் உறவைத் துண்டித்துக்கொள்கிறார்; நம்மைக் கண்டால் பேசுவதில்லை; நம்மை மதிப்பதில்லை; எந்த நிகழ்வுக்கும் நம்மை அழைப்பதில்லை. இப்படி நடந்துகொள்கிற நம் உறவினரிடம் நம்முடைய எதிர்வினை எவ்வாறு இருக்கும்? நாமும் அவரோடு பேசக்கூடாது; அவரை மதிக்கக்கூடாது; நம் வீட்டு எந்த நிகழ்வுக்கும் அவரை அழைக்கக்கூடாது என்றுதான் ஒரு சாதாரண மனிதனின் உள்ளத்தில் தோன்றும். ஆனால் நபியவர்களைப் பின்பற்றுகிற  ஒரு முஸ்லிமின் அணுகுமுறை-எதிர்வினை அவ்வாறு இருக்காது. அவர் நம்மை மதிக்கவில்லையென்றால் என்ன, நாம் அவரை மதித்து, அவரை நம் வீட்டு நிகழ்வுக்கு அழைப்போம்; அவருடைய வீட்டிற்கு அவ்வப்போது சென்று அவருக்கு ஸலாம் கூறி, உறவைப் புதுப்பித்துக்கொள்வோம் என்றுதான் தோன்றும்; அவ்வாறுதான் நம் மனத்தில் தோன்ற வேண்டும். அதையே நபியவர்கள் கற்பித்துள்ளார்கள்.

 

 

நமக்கு ஒருவன் அநியாயம் செய்துவிட்டான்; நம்மை ஏமாற்றிவிட்டான்; நம்முடைய சொத்தை அபகரித்துக்கொண்டான்; நமக்கு வர வேண்டிய இலாபத்தைத் தடுத்துநிறுத்திவிட்டான்; தொழில் போட்டி காரணமாக நம்மிடம் வரவேண்டிய வாடிக்கையாளர்களை (கஸ்டமர்ஸ்) வேறு பக்கம் திருப்பிவிட்டான். அத்தகைய செயலில் ஈடுபட்டவனை நாம் பழிவாங்கத் துடிப்போம். அதுதான் சாதாரண மனிதனின் இயல்பு. அப்படித்தான் அவனது மனம் தூண்டும். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ, “அவனை மன்னித்துவிடு என்று போதித்துள்ளார்கள். நமக்கு அநியாயம் செய்தவனுக்கு நம்முடைய எதிர்வினை இப்படித்தான் இருக்க வேண்டுமா? ஆம்! நாம் அவனை மன்னித்துவிடுவதால், அடுத்தடுத்த செயல்களில் நாம் இயல்பாக ஈடுபட முடியும்; ஒரு பக்கம் அவன் தடுத்துவிட்டாலும் இன்னொரு பக்கம் இறைவன் தருவான் என்ற நம்பிக்கையோடு நாம் செயல்பட முடியும்.

 

 

வசதியாக வாழ்கின்ற நம்முடைய உறவினர் நம்முடைய ஏழ்மை நிலையிலும் நம்மைக் கண்டுகொள்ளாமல், நமக்குப் பொருளாதார உதவி செய்யாமல் தடுத்துக்கொள்கிறார். அவரது நிலத்தில் விளைகின்ற நெல் உள்ளிட்ட பயிர்களையோ தானியங்களையோ நமக்குத் தராமல் சேமித்து வைத்துக் கொள்கிறார். இத்தகைய ஒருவர்மீது நமக்குக் கோபம் வருவது இயல்பு. ஆனால் அவர்மீதான நம்முடைய எதிர்வினை அவ்வாறு இருக்கக்கூடாது. மாறாக, நமக்குக் கொடுக்காமல் தடுத்துக்கொள்வோருக்கு நாம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு, உழைத்துச் சம்பாதித்து, நாம் அவருக்குக் கொடுக்கும் நிலைக்கு உயர வேண்டும் என்ற வைராக்கியத்தையும் சுயமரியாதையையும்தான் நபியவர்கள் மேற்கண்ட நபிமொழியில் கற்பித்துள்ளார்கள்.

 

 

மற்றொரு நபிமொழியில் மேற்கண்ட செய்திகளோடு உனக்குத் தீங்கிழைத்தவருக்கு நீ நன்மைசெய் (முஅஜம் பின் அல்அஉராபீ: 1464) என்ற செய்தியும் இடம்பெற்றுள்ளது. நமக்குத் தீங்கிழைத்தவனை நாம் மன்னிப்பதே பெரிய  விஷயம். அத்தோடு அவனுக்கு நன்மை வேறு செய்ய வேண்டுமா என்று நம் மனத்துக்குள் தோன்றும். ஆம்! நம்மைக் கடித்த நாயை நாம் பதிலுக்குக் கடிப்பதில்லை. அதுபோலவே நமக்குத் தீங்கிழைத்தவரை நாம் மன்னித்து, விட்டுவிடுவதோடு வாய்ப்புக் கிடைக்கும்போது அவருக்கு உதவியும் உபகாரமும் செய்ய வேண்டும். அதுதான் நாம் அவர்மீது காட்டும் எதிர்வினையாக இருக்க வேண்டும். மாறாக நமக்குத் தீங்கிழைத்தவருக்கு நாம் தீங்கிழைக்க வேண்டும் என்று நபியவர்கள் ஒருபோதும் நமக்குப் போதிக்கவில்லை; அவர்களும் அவ்வாறு நடந்துகொண்டதில்லை.

 

 

இந்தச் செய்தியை அல்லாஹ்வும் திருக்குர்ஆனில் பதிவுசெய்கிறான்:   

நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால், நபியே! தீமையை) நீங்கள் நன்மையைக் கொண்டே தடுத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால், உங்களுடைய கொடிய எதிரியை அதே சமயத்தில் உங்களுடைய உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப்போல் காண்பீர்கள். பொறுமையுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். மேலும் பெரும் பாக்கியம் உடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். (41: 34-35) நமக்குத் தீங்கு செய்தவனை நாம் மன்னிப்பதோடு, அவனுக்கு நன்மையும் செய்தால், நிச்சயம் அவனது மனம் உருகிவிடும்; பிறகு அவனே நம்முடைய நெருங்கிய நண்பனாக ஆகிவிடுவான். நண்பர்களைப் பெருக்கிக்கொள்ள வேண்டுமே தவிர, எதிரிகளைப் பெருக்கிக் கொள்ளக்கூடாது. இவ்வாறு பிறரின் குறைகளை மன்னிப்பது பொறுமையுடையோருக்குத்தான் சாத்தியம் என்கிறான் இறைவன்.

     

 

பெரும்பாலும் நமக்குத் துன்பமோ இடையூறோ அநியாயமோ செய்வோர் நம்மோடு நெருங்கி வாழ்கின்ற, நெருங்கிய உறவினர்கள் அல்லது நம்மோடு நட்புகொண்டிருப்பவர்கள்தாம். எனவே நாம் மன்னிப்பது நம் உறவினர்களையும் நண்பர்களையும்தான். எனவே அவர்களை மன்னித்துவிட்டு, நம்முடைய அடுத்தடுத்த வேலைகளைச் செய்வதில் நாம் ஈடுபட்டுவிட வேண்டுமே தவிர, அவர்கள் செய்த துரோகத்தை, தொல்லையை நம் மனத்தினுள் அசைபோட்டுக்கொண்டே இருக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் நம்முடைய ஆக்கப்பூர்வமான செயல்களில் நாம் முழுமனத்தோடு ஈடுபட முடியாமல் போய்விடும்.

 

 

கணவன் தன் மனைவிக்கு அநியாயம் செய்வதும், மனைவி தன் கணவனுக்கு மாறு செய்வதும்  அன்றாட வாழ்க்கையில் இயல்பாகிவிட்டது. தன்னுடைய மனைவிதானே என்று அவளை மன்னித்து வாழ்பவன் இனிதே இல்வாழ்வைத் தொடர்வான். மன்னிக்க மனமின்றி எதிர்மறையாக வினையாற்றுபவன் தன் வாழ்க்கையை நிம்மதியின்றித் தொலைப்பான்.

 

 

தன்னுடைய கணவன்தானே என்று கருதி, அவன் செய்த சின்னச்சின்னத் தவறுகளை, அநியாயங்களை, குற்றங்களை மன்னித்துவிட்டால், அவனோடு அவள் நிம்மதியாகச் சேர்ந்து வாழலாம்; எஞ்சிய காலத்தை இனிதே கழிக்கலாம். இல்லையேல் அவ்விருவரும் சண்டையிட்டுக்கொண்டு பிரிந்து போக நேரிடும்; தொடக்கத்தில் இடைவெளி ஏற்படும்; பின்னர்  தொடர்பறுந்துபோய், இறுதியில் பிரிவு ஏற்பட்டுவிடும். ஆகவே கணவன்-மனைவி இடையே பிணக்குகள் ஏற்பட்டால் அல்லது ஏதேனும் தவறு செய்துவிட்டால் அதை உடனடியாக மன்னிக்கும் பண்பு இருவருக்கும் இருக்க வேண்டும். அதுவே இருவரின் இனிய இல்வாழ்வுக்கு இலக்கணமாகும்.

 

 

நம் வீட்டில் அல்லது கடையில் வேலை செய்கிற பணியாளர்கள், ஓட்டுநர்கள் தம் பணியில் அவ்வப்போது தவறிழைக்கும் நிலை ஏற்படலாம்; பணியில் அவ்வப்போது குறை ஏற்படலாம். அதையெல்லாம் மனத்தில் வைத்துக்கொண்டு, இவன் சரியில்லை என்று முடிவு கட்டி, வேலையைவிட்டுத் துரத்திவிடக்கூடாது. சரி, நான் எத்தனை தடவைதான் அவனை மன்னிப்பது, அவன் அடிக்கடி தவறு செய்துகொண்டே இருக்கின்றானே என்று நொந்துகொள்வோர் பின்வரும் நபிமொழியைக் கவனமாகப் படியுங்கள்.

 

 

ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் என்னுடைய பணியாளரை எத்தனை தடவை மன்னிக்க வேண்டும்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அமைதியாக இருந்தார்கள்.  பிறகு அவர் (மீண்டும்) அல்லாஹ்வின் தூதரே! நான் என்னுடைய பணியாளரை எத்தனை தடவை மன்னிக்க வேண்டும்?” என்று கேட்டார். ஒவ்வொரு நாளும் எழுபது தடவை என்று பதிலளித்தார்கள்.  (திர்மிதீ: 1949) ‘எழுபது தடவை என்பதன்மூலம் எண்ணிக்கையைக் குறிப்பிடுவது நோக்கமன்று. மாறாக அடிக்கடி மன்னித்துக்கொண்டே இரு என்பதுதான் அவருக்கான, நமக்கான அறிவுரை.

 

 

ஒரு பணியாளரையே இத்தனை தடவை மன்னிக்க வேண்டுமென்றால், நம்மோடு ஒன்றாக இணைந்து, நமக்காகவே எல்லாப் பணிவிடைகளையும் செய்து, நமக்காக வாழ்கின்ற நம் மனைவி, தன் குடும்ப வாழ்க்கையில் அவ்வப்போது தவறிழைக்கும்போதும், பணிவிடை செய்வதில் அவ்வப்போது குறை ஏற்பட்டுவிடும்போதும், சிலவேளைகளில் சமையல் சுவையற்றுப் போய்விடும்போதும் நாம் எத்தனை தடவை மன்னிக்க வேண்டும் என்பதை இன்றைய இளைஞர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். மாறாக இவள் சரியில்லை என்று முடிவு கட்டிவிட்டு, வேறொருத்தியைத் தேடக்கூடாது. ஆக பணியாளரோ மனைவியோ யாராயினும் தவறுகள் செய்துவிட்டால் அதற்கான நம்முடைய எதிர்வினை அவர்களை மன்னிப்பதாகவே இருக்க வேண்டும்; தண்டிப்பதாக இருக்கக்கூடாது.

 

 

மனிதர்கள் தவறிழைத்துவிடும்போது அல்லாஹ்வின் எதிர்வினை அந்த அடியார்களை மன்னிப்பதாகவே இருக்கிறது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எத்தனையோ பேர் தொல்லை கொடுத்து, துன்பமிழைத்தபோது அவர்களின் எதிர்வினை அந்த அறியா மக்களை மன்னிப்பதாகவே இருந்தது. அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டு வாழும் நாம், அவனுடைய நற்குணத்தையும் அவனுடைய தூதரின் நற்குணத்தையும் நம் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்து அல்லாஹ்வின் திருப்தியைப் பெற முயல வேண்டும். மன்னிப்பைக் கடைப்பிடிப்பீராக; நன்மையை ஏவுவீராக; அறியாமக்களைப் புறக்கணித்துவிடுவீராக (7: 199) என்ற இறைவசனத்தை நம் மனத்தில் ஆழமாகப் பதித்துக்கொள்வோம். அறியா மக்களின் அறியாமைச் செயல்களை மன்னித்து நேர்மறை எதிர்வினையாற்றுவோம்.

==================








சனி, 27 ஏப்ரல், 2024

செவ்வாய், 16 ஏப்ரல், 2024

தினமணி வாசகர் கடிதம் (16 04 2024)


 

நாணயம் மனிதனுக்கு அவசியம் - மா. இராமச்சந்திரன் எழுதியிருந்த  (09 04 2024) துணைக்கட்டுரை  வாசித்தேன். நா நயம் உள்ளவரே பிழைக்க முடியும் என்ற நிலை எப்போதோ உருவாகிவிட்டது. நாணயம் என்பது யாரோ சிலரிடம் இருக்கிறது என்று நம்பலாம். பேச்சு ஒன்று, செயல் வேறாக இருப்பவன்தான் பெரும் பெரும் பொறுப்புகளில் இருக்கின்றான்; அவன்தான் மக்களை ஆள்கிறான். நாணயமாகவும் நேர்மையாகவும் இருப்பவன் தோல்வி காண்கிறான். எல்லாப் பணி வாய்ப்புகளிலும் உள்ளடி வேலைகள் நடக்கின்றன; பணம் குறுக்கு வழியில் பாய்கிறது; பதவியைப் பெற்றுத்தருகிறது. இதுதான் இன்றைய யதார்த்த நிலை. அரசியல், விளையாட்டு, கல்வி, பணிவாய்ப்பு முதலான எல்லாவற்றிலும் நாணயம் நசுங்கிப்போய்விட்டது; பணம் மட்டுமே ஆள்கிறது. இந்நிலை மாற வேண்டுமெனில் நாணயமாக இருப்பதுதான் நம் மரணத்திற்குப் பின்னும் நம்மைப் பற்றிப் பேசவைக்கும் என்ற உண்மையை உணர்ந்தால் மட்டுமே சாத்தியமாகும். 

 

நூ. அப்துல் ஹாதி பாகவி

பட்டினம்பாக்கம், சென்னை-28

=============


புதன், 10 ஏப்ரல், 2024

விவாத மேடை (தினமணி நாளிதழ் 03 04 2024)

 


 

பிரதமர் மோடியால் மட்டுமே கச்சத்தீவை மீட்க முடியும் என்று ஜி.கே. வாசன் கூறியிருப்பது நகைப்புக்குரியது. இது மக்களவைத் தேர்தலில் மக்களை ஏமாற்றுவதற்காகச் சொல்லப்படுகிற பொய்யான வாக்குறுதிகளுள் ஒன்று. பத்தாண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த மோடி அதை மீட்டிருக்க வேண்டியதுதானே? யார் தடுத்தார்?

 

கச்சத்தீவு குறித்த பேச்சு தேவையற்றதும் மக்களின் பார்வையை மடைமாற்றுவதும் ஆகும். ஏனெனில் மோடி ஆட்சியில் சீனா அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து, புதிய பெயர்களையும் சூட்டிவிட்டது. அது ஆக்கிரமித்துள்ள அளவு கிட்டத்தட்ட கேரள மாநிலத்தின் பரப்பளவைவிடப் பெரியது என்று சொல்லப்படுகிறது. இவ்வளவு ஆக்கிரமிப்புக்குப் பிறகும் சீனாவுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காதவர் கச்சத்தீவை மீட்பார் என்று எவ்வாறு நம்ப முடியும்? இழந்ததை மீட்கப் போராடுவதைவிட இருப்பதை இழக்காமல் பாதுகாப்பதே புத்திசாலித்தனமாகும்.

 

நூ. அப்துல் ஹாதி பாகவி

பட்டினம்பாக்கம், சென்னை-28