கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி கள்ளக்குறிஞ்சி அருகிலுள்ள மாத்தூர் காட்டுக்கொட்டாயில், தம் கள்ளத்தொடர்பு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தம் மாமியாரையே
கொன்றுவிட்டனர் இரண்டு மருமகள்கள்.
அதன் விவரமாவது, தவ்லத் (24), மதினா பேகம் (22) இரு பெண்களின் கணவர்களும் வெளிநாட்டில் வேலை செய்கின்றனர். மதினா
பேகத்தின் மாமன் மகனிடம் அந்த இரு பெண்கள் கள்ளத்தொடர்பு (உடலுறவு) வைத்திருந்தனர்.
இதையறிந்த அவர்களின் மாமியார், என் மகனுக்கு நீங்கள் துரோகம் செய்யலாமா? என்று திட்டியிருக்கின்றார். அந்த கள்ளக் காதலனை விரட்டியிருக்கின்றார். இது தம்
கணவர்களுக்குத் தெரிந்து விடலாம் எனும் அச்சத்தில் கள்ளக் காதலன் அப்துல் ரசாக்குடன்
சேர்ந்து இரு மருமகள்களும் தம் மாமியாரைக் கொலை செய்து விட்டனர். (செய்தி: தினத்தந்தி:
23-03-2002)
ஒரு பெண் தன் மாமியாரையே கொலை செய்கிற அளவிற்கு அவளைத் தூண்டியது
எது? முதலில் கள்ளத் தொடர்பு.
அந்தக் கள்ளத் தொடர்புக்கு அவளை ஆட்படுத்தியது அவளின் இளமைதான். ஒரு பெண்ணின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ளாதவன் ஏன் மணம் செய்து கொள்ள
வேண்டும்?
இளவயதான ஆண் -பெண் தம் உடலியல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும்
இனிய இல்லறத்தை மேற்கொள்வதற்குமே திருமணம். அதற்காகத்தான் பலர் முன்னிலையில் சட்ட
முறைப்படி ஈருள்ளங்கள் இணைகின்றன. ஆனால் கணவன் தன் மனைவியின் தேவையைப் பூர்த்தி செய்யாமல்
பொருளாதாரத் தேவைக்காக வெளிநாடு சென்றுவிட்டால்
அவளின் காம உணர்வுகளைத் தணிப்பது யார்?
ஓர் ஆண் வெளிநாட்டிலிருந்து சம்பாதித்து அனுப்பும் பணம் பெண்ணின்
வயிற்றுப்பசியைத்தான் தீர்க்குமே தவிர அவளின் காமப்பசியைத் தீர்க்க முடியுமா?
மட்டுமல்ல, அந்தப் பணத்தின் மூலம் சிலர் களவு முறையில் கலவி புரியவும் தயங்குவதில்லை. ஆடம்பர
வாழ்க்கை வாழவும் தொடங்கி விடுகின்றனர். இத்துணைப் பிரச்சனைகளுக்கும் காரணம் மணமுடித்து
விட்டு வெளிநாடு சென்றுவிடும் இளைஞர்களே எனில் அது மிகையாகாது.
நோன்பு வைத்துக் கொண்டும் இரவு முழுவதும் தொழுது கொண்டும்
இருந்த தோழரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்டித்து, “உன் உடலுக்கு உன்மீது கடமை உண்டு. உன் மனைவிக்கும் உன்மீது கடமை
உண்டு” என உபதேசித்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். (நூல்: புகாரீ) இத்தகைய ஆடவர்
பலரின் காரணத்தால்தான் இன்றைய பெண்டிர் பற்பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுகின்றது.
ஒர் ஆணைவிட வீட்டில் தங்கியிருக்கும் பெண்ணுக்குத்தான் ஆசைகளும், உணர்ச்சிகளும் அதிகம் என்பேன். காரணம் ஓர் ஆண் தன் வேலைகளைக்
கவனிப்பதிலும், உழைப்பதிலுமே பொழுதைக் கழித்து
விடுகின்றான், ஆனால் வீட்டில் தங்கியிருக்கும்
ஒரு பெண் தன் சமையல், துணிதுவைத்தல் உள்ளிட்ட வேலைகள்
போக எஞ்சியுள்ள நேரங்களில் தன் கணவனைப் பற்றியும், கலவியைப் பற்றியுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறாள். இளவயது பெண்களுக்கு இது பற்றிய
சிந்தனை அதிகமாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
மணமுடிக்கப்பட்ட இரண்டு மாதங்களிலேயே வெளிநாடு சென்று விடும்
கணவன் தன் தாயகம் திரும்ப மூன்று அல்லது நான்காண்டுகள் ஆகின்றன. (தற்போது அந்தக் கால
அளவு குறைந்துள்ளது) அதுவரை தன் ஆசைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஓர் இளமங்கை பூட்டுப்போட
வேண்டும் என நிர்ப்பந்திப்பது எவ்விதத்தில் நியாயமாகும்? இன்று இவ்விரு பெண்களின் விஷயம் வெளிச்சமாகிவிட்டது. இன்னும்
எத்தனையோ மங்கைகள் இருட்டுக்குள் புலம்புவது யாருக்குத் தெரியும்?
‘என் மனைவி நல்லவள்; தவறேதும் செய்யமாட்டாள்’ என வாதிடுவதை விட்டுவிட்டு நீங்கள் உங்கள் துணைவியரின் தேவைகளைப்
பூர்த்தி செய்வதிலும் அவர்களோடு இணங்கி வாழ்வதிலும் அக்கறை காட்டுங்கள். அதுவே பிரச்சனைகள்
தீர வழிவகுக்கும்.
''ஒவ்வொருவரும் பொறுப்பாளியே
ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பு பற்றி கேட்கப்படுவார். ஓர் ஆண் தன் குடும்பத்தினர்
பற்றியும் ஒரு பெண் தன் கணவனின் இல்லம் பற்றியும் அவனின் குழந்தைகள் பற்றியும் கேட்கப்படுவாள்"-
(நூல் : புகாரீ) எனும் நபிமொழியை நெஞ்சில் நிறுத்தி, மணம் முடித்துவிட்டு வெளிநாடு சென்றுள்ள இளைஞர்களெல்லாம் உடனே
தம் தாயகம் திரும்புங்கள் எனக் கனிவுடன் அழைக்கின்றேன். வாருங்கள்! நம் துணைவியோடு
இன்பமாய் வாழ்ந்து நம் நாட்டிலேயே தொழில்செய்து சம்பாதிப்போம்; உழைப்போம்! உயர்வடைவோம்!
"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?’
எனும் கவிதை வரிகளை நெஞ்சில் பதித்து மகிழ்வாய் நாம் உழைப்போம்;
நிறைவாய் நாம் வாழ்வோம்! வாரீர்! வாரீரென அன்புடன் அழைக்கின்றேன்.
இப்படிக்கு பாகவியார் - ஆலங்குடி.
அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமியா ஏப்ரல் 2002
========================================
இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை இது. அயல் நாடு
சென்று உழைப்பது தவறில்லை. ஆனால் மனைவியோடு சென்று, இல்வாழ்வில் ஈடுபட்டவாறே உழைக்க வேண்டும். அல்லது நான்கு-ஆறு மாதங்களுக்குள் ஒரு
தடவை தாயகம் வந்து மனைவியோடு சேர்ந்து வாழ வேண்டும். இந்த நிபந்தனைக்கு உட்பட்டால்
அயல்நாடு சென்று உழைக்கலாம். அத்தோடு படித்தவர்கள் சென்றால்தான் அங்கு மதிப்பும் அதற்கேற்ற
நல்ல சம்பளமும் கிடைக்கும். படிக்காதவர்கள் சென்றால் அவர்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
அதற்குப் பதிலாக அவர்கள் உள்நாட்டிலேயே இருந்துவிடலாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெளியூர்ப் பயணம் மேற்கொண்டால்
தம்மோடு தம் மனைவியையும் அழைத்துச் செல்வது வழக்கம். இதை ஒவ்வொரு முஸ்லிமும் நினைவில்
நிறுத்துவது அவசியமாகும்.
அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி
09 05 2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக