வியாழன், 9 மே, 2024

இறையன்பைப் பெற எளிமையான வழிகள்


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28

  

இறையன்பையும் திருப்தியையும் பெற இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மனித சமுதாயத்திற்கு எளிமையான வழிமுறைகளைக் கற்றுத்தந்துள்ளார்கள். அவை அனைவராலும் எளிமையாகப் பின்பற்றத்தக்கவை ஆகும். கோடி கோடியாய் நற்செயல்கள் செய்வதைவிடக் குறைவான நற்செயல்களாக இருந்தாலும் தொடர்படியாகச் செய்வதே இறைதிருப்தியைப் பெறுவதற்கான வழியாகும்.

 

இன்று சமூக ஊடகங்களில் அவ்வப்போது காண நேரிடுகிற ஒரு செய்தி, ஒரு கோடி ஸலவாத் அர்ப்பணம்பத்துக்கோடி ஸலவாத் அர்ப்பணம்; நூறு கோடி ஸலவாத் அர்ப்பணம் என்பதுதான். மேலும் ஒரே இரவில் முழுக் குர்ஆனையும் ஓதித் தொழுகை நடத்தப்படும் என்ற செய்தியையும் அண்மையில் காண நேரிட்டது.

இதையெல்லாம் அவர்கள் ஏதோ ஒரு முறைதான் செய்ய இயலும். யாரோ சிலரால்தான் செய்ய இயலும். தொடர்படியாகச் செய்ய இயலாது. ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் சமுதாய மக்களுக்கு வழிகாட்டியதோ மிக எளிய வழிமுறைகள் ஆகும்.

 

அது மட்டுமின்றி இது மாதிரி தீனில் மிகையான போக்கைக் கடைப்பிடிக்கின்ற மனிதர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்டித்திருக்கிறார்கள் என்பதுதான் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியதாகும். அதிகமான  நற்செயல்கள் செய்வது தவறா என்று கேட்போருக்கு, ‘ஆம் தவறுதான் என்றுகூடச் சொல்லலாம். ஏனெனில் ஒருவர் மிகுதியான நற்செயல்களில் ஈடுபடுகிறபோது அவருடைய குடும்ப உறுப்பினர்கள், மனைவி, பிள்ளைகள் பாதிக்கப்படுவார்கள் என்பது நிதர்சன உண்மை. பின்வரும் நிகழ்வு அதற்குத் தக்க சான்றாகும்.  

 

அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: பாரம்பரியமிக்க ஒரு பெண்ணை என் தந்தை எனக்கு மணமுடித்து வைத்தார்கள். (என் தந்தை) அம்ர் ரளியல்லாஹு அன்ஹு தம் மருமகளை அணுகி  அவளுடைய கணவர் குறித்துக் கேட்பது (அதாவது என்னைப் பற்றி விசாரிப்பது) வழக்கம்.

அப்போது அவள், “அவர் நல்ல மனிதர்தாம்; (ஆனால்,) அவர் படுக்கைக்கு வரவுமில்லை; அவரிடம் நான் வந்து சேர்ந்தது முதல் எனக்காகத் திரைச் சீலையை அவர் இழுத்து மூடவுமில்லை'' என்று சொல்வாள். இதே நிலை நீடித்தபோது, (என் தந்தை) அம்ர் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (இதைப் பற்றிக்) கூறினார்கள். அப்போது, “என்னை வந்து சந்திக்குமாறு உங்கள் மகனிடம் சொல்லுங்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். பிறகு நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், “நீ எப்படி நோன்பு நோற்கிறாய்?'' என்று கேட்டார்கள். நான், “நாள்தோறும் நோன்பு நோற்கிறேன்'' என்று சொன்னேன். ("குர்ஆனை) எப்படி ஓதி முடிக்கிறாய்'' என்று கேட்டார்கள்.

 

நான், “ஒவ்வோர் இரவிலும் (குர்ஆனை ஓதி முடிக்கிறேன்)'' என்று சொன்னேன். அவர்கள், “மாதந்தோறும் மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக்கொள். குர்ஆனை ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை முழுமையாக) ஓதிக்கொள்'' என்று சொன்னார்கள். நான் இதைவிட அதிகமாக (நோன்பு நோற்க) ஆற்றல்பெற்றுள்ளேன்'' என்று கூறினேன். அவர்கள் வாரத்தில் மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக்கொள்'' என்றார்கள். நான் இதைவிட அதிகமாக (நோன்பு நோற்க) எனக்கு ஆற்றல் உண்டு'' என்று கூறினேன். இரண்டு நாள்கள் நோன்பை விட்டுவிட்டு, ஒரு நாள் நோற்றுக்கொள்!'' என்று சொன்னார்கள். நான் இதைவிட அதிகமாக (நோன்பு நோற்க) ஆற்றல் பெற்றுள்ளேன்'' என்று கூறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “(இறைத்தூதர்) தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உயர்ந்த நோன்பு வழக்கப்படி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றுக்கொள்! மேலும், ஒவ்வோர் ஏழு இரவுகளிலும் (ஒரு முறை குர்ஆனை) ஓதி(முடித்து)க்கொள்'' என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழங்கிய இந்தச் சலுகையை நான் ஏற்று நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்! காரணம் நான் (இப்போது) தள்ளாமை வயதை அடைந்து மிகவும் பலவீனம் அடைந்துவிட்டேன். (புகாரீ: 5052)

 

இந்த நபிமொழியில் நபியவர்கள் முதன்முதலாகச் சொன்னது மக்கள் அனைவரும் பின்பற்ற எளிதான நடைமுறையாகும். அதாவது ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்பதும், ஒவ்வொரு மாதமும் குர்ஆனை ஓதி முடிப்பதும் ஒவ்வொரு மனிதருக்கும் மிக எளிதான நற்செயல்கள் ஆகும். அதைத்தான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு, “நபியவர்கள் கொடுத்த சலுகையை நான் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்; அப்படிச் செய்திருந்தால் அது எனக்கு இந்தத் தள்ளாத வயதில் எளிதாக இருந்திருக்கும் என்று சொல்கிறார்கள். அதாவது எல்லா வயதிலும் செய்ய முடிகிற அளவைத்தான் நபியவர்கள் கூறினார்கள். ஆனால் அவரோ இளமைத் துடிப்பில் தமக்கு ஆற்றல் இருப்பதாகக் கூற, கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, இறுதியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்குமாறு நபியவர்கள் கூறிவிட்டார்கள். அவர்களிடம் செய்வதாக உறுதியளித்து விட்டதால், அந்தச் செயல்பாடுகளை இறுதிவரை தொடர வேண்டிய நிர்ப்பந்த நிலை அவருக்கு ஏற்பட்டது.

 

அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு தொடர்படியாக நற்செயல்கள் செய்வதில் ஈடுபட்டதால் அவரால் தம் மனைவியின் தேவையை நிறைவேற்ற முடியவில்லை என்பதை அறிகிறோம். இன்றும் இத்தகைய மனிதர்கள் இருக்கவே செய்கின்றார்கள். மிகுந்த நற்செயல்கள் செய்வதில் ஈடுபடுதல் அல்லது மிகுந்த வேலைப்பளு காரணமாகத் தம் மனைவியின் உரிமைகளை நிறைவேற்ற முடியாமல் இல்லற வாழ்வில் தோற்றுப்போன இளைஞர்கள் இருக்கின்றார்கள். அத்தகையோர் கவனிக்க வேண்டிய நபிமொழிதான் இது.

 

இரவெல்லாம் இறைவனை வணங்குவதும் பகலெல்லாம் நோன்பு நோற்பதும் தவறா என்றால், தவறில்லை. எனினும் ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய அன்றாட வாழ்க்கையை மேற்கொள்வதற்கு இதெல்லாம் தடையாக  இருக்கும் என்பது எல்லோருக்கும் புரியும். இவையெல்லாம் எல்லா மனிதர்களாலும் பின்பற்ற இயலாதவை. எனவேதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரைத் தடுத்தார்கள்.

 

ஒரே இரவில் முழுக் குர்ஆனையும் ஓதி முடிப்பது குறித்து யாரும் குறை சொல்ல முடியாது; அதைத் தவறென்று சொல்ல முடியாது. ஆனால் அது அவருடைய இல்லற வாழ்வைப் பாதிக்கும். மனைவியின் உரிமையைப் பறிக்கும்; கடைசியில் இல்வாழ்வு முறிந்துபோய்விடும். எனவேதான் நபியவர்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

 

ஒரு தடவை நபியவர்கள் மஸ்ஜிதுந் நபவியின் ஒரு தூணில் கயிறொன்று கட்டப்பட்டிருந்ததைக் கண்டு, அது குறித்து விசாரித்துவிட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். அது குறித்த முழுமையான செய்தி இதோ:

 

அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளி வாசலுக்குள்) வந்தபோது இரண்டு தூண்களுக்கிடையே நீண்ட கயிறு ஒன்று காணப்பட்டது. "இந்தக் கயிறு என்ன (ஏன்)?'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள். அதற்கு மக்கள், “இது (தங்கள் துணைவியார்) ஸைனப் பின் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும்போது) சோர்வடைந்தால் இந்தக் கயிற்றைப் பிடித்துக்கொள்வார்'' என்று கூறினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “வேண்டாம். இதை அவிழ்த்துவிடுங்கள். உங்களுள் ஒருவர் உற்சாகமான மனநிலையில் இருக்கும்போது (உபரியான தொழுகைகளைத்) தொழட்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்துகொள்ளட்டும்'' என்று கூறினார்கள். (புகாரீ: 1150)

 

பொதுவாக மனிதர்கள் யாவரும் பலவீனமானவர்கள். அவர்களுக்குத் தூக்கம் இன்றியமையாதது. அந்தத் தூக்கத்தோடு இறைவழிபாட்டில் ஈடுபட வேண்டாம் என்பதை  வலியுறுத்தியே நபியவர்களின் அறிவுரை இருந்தது. தூக்கத்தோடு ஒருவர் இறைவழிபாட்டில் ஈடுபட்டால், அவர் தொழும்போது கேட்கும் துஆகூட வார்த்தை மாற்றங்களால் தமக்கு எதிராக ஆகிவிடலாம். ஆகவே உற்சாக நிலையில் இருக்கும்போது மட்டுமே வழிபாட்டில் ஈடுபட வேண்டும்; தூக்கம் மேலிட்டால் தூங்கிவிட வேண்டும் என்ற எளிய வழிமுறையை இச்சமுதாயத்திற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டியுள்ளார்கள்.

 

இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக்கொண்டால், அது அவரை மிகைத்துவிடும். எனவே, (கூடுதலான வணக்கங்கள் உட்பட அனைத்துச் செயல்பாடுகளிலும்) நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; (கூடுதல் வணக்கங்களை உற்சாகத்துடனும் நிரந்தரமாகவும் நிறைவேற்றிட) காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் ஒத்தாசையாக்கிக் கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 39)

 

இந்த மார்க்கம் எளிதானது என்றும் இயன்றவற்றைக் கடைப்பிடியுங்கள் என்றும் காலை, மாலை, இரவு நேரங்களில் இயன்ற அளவிற்கு வழிபாட்டில் ஈடுபடுங்கள் என்றும் நபியவர்கள் இச்சமுதாய மக்களுக்கு நல்வழிகாட்டியுள்ளார்கள். ஆக நபியவர்கள் காட்டியுள்ள வழிமுறை அனைவரும் பின்பற்றும் விதத்தில் இருக்கிறது. அதுதான் இம்மார்க்கத்தின் சிறப்பு. ஆதலால் சமூக ஊடகங்களின் வெளிச்சத்திற்காக நாம் இம்மார்க்கத்தில் சிரமத்தை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. அது தனிப்பட்ட வழிபாடாக இருந்தாலும் சரி, கூட்டு வழிபாடாக இருந்தாலும் சரி.

கடமையான தொழுகை முடிந்ததும் எவ்வளவு வேண்டுமானாலும் திக்ரு செய்யலாம்; தஸ்பீஹ் ஓதலாம். அது அவரவர் விருப்பம். ஆனால் நபியவர்கள் கூறியுள்ள அளவு அனைவரும் பின்பற்றும் விதத்தில் உள்ளது. அதனால்தான் நபியவர்களை, ‘எளிய வழிகாட்டிய ஏந்தல் நபி என்று நாம் போற்றுகின்றோம்.

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? (அதை நீங்கள் செயல்படுத்திவந்தால் இந்தச் சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்டவர்களையும் உங்களுக்குப் பின்னால் வருபவர் களையும் நீங்கள் எட்டிவிடுவீர்கள். இதைப் போன்று செய்தால் தவிர, வேறு எவரும் நீங்கள் செய்ததற்கு நிகராகச் செய்திட முடியாது. (அது யாதெனில்,) நீங்கள் (கடமையான) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் பத்து முறை "சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும், பத்து முறை "அல்ஹம்து லில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்றும், பத்து முறை "அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் கூறுங்கள்'' எனச் சொன்னார்கள். (புகாரீ: 6329)

 

தொழுதுவிட்டு அவசரமாக அவசரமாக வெளியே புறப்படுவோரும்கூட இவ்வளவு குறைவான திக்ரை ஓதாமல் செல்ல மாட்டார். அந்த அளவிற்கு மிகக் குறைவான எண்ணிக்கையை நபியவர்கள் கூறியுள்ளார்கள். இன்றைய அவசர உலகில் வாழும் பலர், இமாம் கேட்கின்ற துஆவுக்குக்கூட ஆமீன் கூற நேரமில்லாதவர்களாக உள்ளனர். அத்தகையோரையும் சற்று நிதானமாகச் சிந்திக்க வைக்கின்ற நபிமொழிதான் இது. இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் நிறைவான நன்மை உண்டு என்பதை அவர்கள் அறிந்துகொண்டால் நிச்சயம் இதை நாள்தோறும் ஓதத் தொடங்கிவிடுவார்கள்.

 

அதுபோலவே திருக்குர்ஆனை ஓதி முடிப்பது குறித்து வழிகாட்டுகிறபோது, முதலில் நாற்பது நாள்களுக்கு ஒரு தடவை என்று கூறினார்கள். இது ஓதலில் ஆர்வமுடையோருக்கு மிகக் குறைந்த அளவுதான். 10 முதல் 15 நிமிடங்களில் ஓதிவிடலாம். அதன்பிறகு மிகுதியான ஓய்வுநேரம் உள்ளோருக்காக வழிகாட்டியுள்ளார்கள். அதன்படி முப்பது நாள்களில் அல்லது இருபது நாள்களில் அல்லது பதினைந்து நாள்களில் அல்லது பத்து நாள்களில் அல்லது ஒரு வாரத்தில் ஓதி முடிப்பதாக இருந்தாலும் முடிக்கலாம். அது அவரவர் ஓய்வுநேரத்தைப் பொருத்தது. ஆக முதன்முதலில் அவர்கள் கூறியது அனைவரும் பின்பற்றத்தக்க எளிய வழியாகும். அதன்பின்னர் மனிதர்கள் தத்தம் ஓய்வுநேரத்திற்கேற்ப அதனை அதிகப்படுத்திக்கொள்ளலாம். அது குறித்த நபிமொழி இதோ:

 

அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்கள் கூறியதாவது: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “எத்தனை நாள்களில் குர்ஆன் நிறைவாக ஓதி முடிக்க வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நாற்பது நாள்களில் ஒரு முறை என்றார்கள். பிறகு (நான் அதைவிடக் குறைவான காலத்தில் ஓதிமுடிக்க எனக்கு ஆற்றல் உள்ளது என்று கூறியபோது) மாதத்தில் ஒரு முறை என்றார்கள். பிறகு “(நான் அதைவிடக் குறைவான காலத்தில் ஓதி முடிக்க எனக்கு ஆற்றல் உள்ளது என்று கூறியபோது) இருபது நாள்களில் ஒரு முறை என்றார்கள். பிறகு, “பதினைந்து நாள்களில் ஒரு முறை என்றார்கள். பிறகு, “பத்து நாள்களில் ஒரு முறை என்றார்கள். பிறகு, “ஏழு நாள்களில் ஒரு முறை என்று கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதைவிடக் குறைவான காலத்தில் ஓதிமுடிக்க அனுமதிக்கவில்லை. (அபூதாவூத்: 1187)

 

ஒருவர் ஆர்வத்தோடு ஒரு நாள் அல்லது சில நாள்கள் இரவின் நடுநிசி நேரத்தில் எழுந்து, எட்டு ரக்அத்கள் தஹஜ்ஜுத் தொழுகிறார். பின்னர் பல நாள்கள் தொழாமல் விட்டுவிடுகிறார். இவரைவிட, நாள்தோறும் நடுநிசி நேரத்தில் எழுந்து ஆர்வத்தோடு இரண்டு ரக்அத்கள் மட்டும் தஹஜ்ஜுத் தொழுபவர் மேலானவர். ஏனெனில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது என்று நபியவர்களிடம் கேட்கப்பட்டபோது, “குறைவாக இருந்தாலும் நிரந்தரமாகச் செய்வது என்று சொன்னார்கள். (புகாரீ: 6465)

 

ஆக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம். ஆனால் மக்களோ அதை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கிக்கொள்கின்றார்கள்.  மிகக் குறைந்த செலவில் திருமணத்தை மஸ்ஜிதில் நடத்தி, எளிய முறையில் விருந்து ஏற்பாடு செய்து, எளிதாக முடிக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும் தம்முடைய கௌரவத்தை அதில் வெளிப்படுத்த முயன்று, வாழ்நாளெல்லாம் சம்பாதித்த பணத்தை அதிலேயே செலவழித்துவிடுகின்றார்கள்; தமக்குத்தாமே சிரமத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். எனவே இனி வரும் காலங்களிலாவது நாம் அனைவரும் மார்க்கத்தின் எல்லாச் செயல்களையும் எளிய முறையில் செய்து, இந்த மார்க்கம் மிக எளிமையானது என்பதை இந்தச் சமுதாய மக்களுக்கு உணர்த்தி, இறையன்பைப் பெற்று இன்புற்று வாழ்வோம்.

============================௦ 












கருத்துகள் இல்லை: