புதன், 17 ஜனவரி, 2024

வளர்ந்துவரும் மொழிபெயர்ப்புக் கலை

  


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

மனிதன் தன்னுடைய செய்தியைப் பிறருக்குத் தெரிவிக்கப் பயன்படும் ஊடகமே மொழி. உலகில் பல்வேறு மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழிக்கும் பல்வேறு வார்த்தைகள்; ஒவ்வொரு வார்த்தைக்கும் தனித்தனி பொருள்; அவற்றை எண்ணிப் பார்க்கும்போது வியப்பே மேலிடுகிறது. மொழி குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:  வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களுடைய மொழிகளும் நிறங்களும் வெவ்வேறாக இருப்பதும் அவனுடைய சான்றுகளுள் உள்ளவையாகும். இதில் கல்வியாளர்களுக்கு நிச்சயமாகப் பல சான்றுகள் இருக்கின்றன. (30: 22)

 

நபியவர்களின் மொழிபெயர்ப்பாளர்: நம்முடைய மொழியை அறியாதவருக்கு அவருடைய மொழியில் தெரிவிக்க உதவுவதே மொழிபெயர்ப்பு. இது பன்னூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இஸ்லாத்தின் பார்வையில் மொழிபெயர்ப்பு குறித்து ஆய்வு செய்தபோது ஸைத் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டிய தேவை ஏற்பட்டது. ஏனெனில் இவர் ஹீப்ரு மொழி, சிரிய மொழி ஆகியவற்றைக் கற்றுக்கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்துள்ளார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வரும் கடிதங்களைப் படித்துக்காட்டுதல், யூதர்கள் தம் வேதத்தில் ஹீப்ரு மொழியிலுள்ள சட்டத்தைத் தவறாகப் படித்துக் காட்டும்போது அல்லது மறைக்கும்போது அதை வாசித்து, நபியவர்களுக்கு அரபியில் மொழிபெயர்த்துச் சொல்பவராக இருந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.

 

வரலாற்று ரீதியாக ஆய்வு செய்யும்போது, மன்னர் ஹாரூன் ரஷீத் (763-809) அவர்களின் காலத்தில்தான் அரபு நூல்களெல்லாம் ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கப்பட்டன என்ற செய்தியை அறிகிறோம். அரபியர்கள் அறிவியலிலும் மருத்துவத்துறையிலும் சிறந்து விளங்கினார்கள். அது குறித்துப் பற்பல நூல்களை எழுதி வைத்திருந்தார்கள். அந்த அரபு நூல்கள்தாம் பிற்காலத்தில் ஐரோப்பிய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டன என்பதற்கு அவற்றிலுள்ள மூலவார்த்தைகளே சாட்சியாக உள்ளன. அதாவது அரபு வார்த்தைகள் ஆங்கில உச்சரிப்பில் எழுதப்பட்டுள்ளன.

 

பிற்காலத்தில் பைபிள், திருக்குர்ஆன் ஆகிய வேதங்கள் பிறநாட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டில்தான் (1943) முதன்முதலாக ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்களால் திருக்குர்ஆன் தமிழாக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நூல்கள் பற்பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. இன்று தமிழ்நாட்டில்  இஸ்லாமிய மூலாதார நூல்களும் வரலாற்று நூல்களும் தமிழில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நூல்கள் தமிழ் முஸ்லிம்கள் வாழும் பல்வேறு நாடுகளுக்குச் சென்றுகொண்டிருக்கின்றன. 

 

தமிழக அரசு நிதியுதவி: பன்னாட்டு நூல்கள் நம் தமிழ்மொழியில் தமிழாக்கம் செய்யப்பட்டு, தமிழர்கள் பயன்பட வேண்டும் என்ற வகையில் மொழிபெயர்ப்பாளர்கள் பலர் இக்கலையில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு அண்மையில் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது பிறநாட்டு நல்ல நூல்கள் தமிழுக்கு வரவேண்டும்; தமிழ் நூல்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அயல்நாடுகளுக்குச் செல்வதன்மூலம், தமிழனின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும் என்ற நன்னோக்கத்தில் மொழிபெயர்ப்புத்துறைக்கு மூன்று கோடி நிதியுதவி ஒதுக்கியுள்ளது. எனவே நல்ல மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பொன்னான எதிர்காலம் உண்டு என்று நம்பலாம்.

 

வாய்ப்புகள் எங்கே: மொழிபெயர்ப்புக்கான வாய்ப்புகள் எங்கெங்கு எந்தெந்தத் துறைகளில் உள்ளன என்று பலருக்குத்  தெரிவதில்லை. அதன் விசாலமான தளங்களை அறியும்போதுதான் அது மிகப்பெரும் கடல் என்பது புரியும். நூல்கள் மட்டுமின்றி, திரைப்படங்கள், காணொலிகள், அரசு அலுவலக ஆவணங்கள், வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் மொழிபெயர்ப்புக்கான தேவை உள்ளது.

 

யூடியூப் சேனல்கள்: காட்சி ஊடகம் வளர்ந்து வரும் இக்காலக் கட்டத்தில், யூடியூபில் பல்வேறு  காணொலிக் காட்சிகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.  அவற்றுள் பொதுப்பயன்பாட்டு உரிமை வழங்கப்பட்டுள்ள (cc) காணொலிகளும் உள்ளன. அவற்றை மொழிபெயர்த்து-அதாவது சப்டைட்டில் இட்டு வெளியிடலாம். அரபியில், ஆங்கிலத்தில் பயனுள்ள பல்வேறு காணொலிகள் வெளியிடப்படுகின்றன. அவற்றை மொழிபெயர்க்க வேண்டிய தேவை உள்ளது.

 

வலைதளங்கள்: பெரும் பெரு நிறுவனங்கள் தங்கள் வலைப்பக்கத்தைப் பிறமொழிக்காரர்கள் படிக்கும் வகையில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டிய தேவை உள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய செய்திகளைப் பதிவேற்றம் செய்யக்கூடிய நிறுவனங்கள் அவற்றைப் பிறமொழிகளில் வெளியிட வேண்டியது உள்ளது. எனவே அங்கும் மொழிபெயர்ப்பாளர் தேவைப்படுகிறார்.

 

ஆவணங்கள்: இந்திய நாட்டின் தேசிய மொழிகளாக 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற நடவடிக்கைகள், நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளிட்ட அரசு ஆவணங்கள் 22 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுகின்றன. அங்கும் மொழிபெயர்ப்பாளர் தேவைப்படுகிறார்.

 

இயந்திர மொழிபெயர்ப்பு: மொழிபெயர்ப்புப் பணியைச் செய்யத்தான் கூகுள் உள்ளதே? நாம் ஏன்  செய்ய வேண்டும்? என்று கேட்போர் உண்டு. இயந்திரம் மனிதனைப் போல் உணர்வுகளைப் புரிந்துஇடத்திற்கேற்றார்போல் செய்வதில்லை. ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நிரல் அடிப்படையில்தான் அது மொழிபெயர்க்கும். மனிதர்கள் அவ்வாறில்லை. எதை மொழிபெயர்க்க வேண்டும்எதைச் செய்யக்கூடாது என்று  புரிந்து செய்வதோடு, மனித உணர்வுகளை உணர்ந்து செய்வார்கள். இயந்திரம் செய்வது மொழிபெயர்ப்பு; சிறந்த மொழிபெயர்ப்பாளர் செய்வதோ மொழியாக்கம் ஆகும். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்றால், வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தல் இயந்திரம் செய்யக்கூடியது. வார்த்தைகளை விளங்கி அதன் கருத்தை அந்த மொழிக்கேற்ற இலக்கண விதிகளுடன் கொண்டு வருவது மொழியாக்கம் ஆகும். 

 

இயந்திரம் செய்யக்கூடிய மொழிபெயர்ப்புக்குச் சான்றாகச் சிலவற்றைக் கூறலாம். அரபுக் கட்டுரையை மொழிபெயர்க்கும்போது அபுல் ஹஸன் என்ற அரபி வார்த்தை இடம்பெற்றால், அதை ஆங்கிலத்தில் ஃபாதர் ஆஃப் ஹஸன் (Father of Hasan) என்று மொழிபெயர்த்துவிடும். தமிழ்க் கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது கல்யாண ராமன் என்ற தமிழ்ப்பெயரை மேரேஜ் ராமன் (Marriage Raman) என்று மொழிபெயர்த்துவிடும். இவ்விரண்டும் மனிதர்களுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்கள்; அவற்றை மொழிபெயர்க்கக்கூடாது என்று இயந்திரத்திற்குத் தெரியாது. இவை போன்ற பல்வேறு குளறுபடிகள் இயந்திர மொழிபெயர்ப்பில் நிகழும். எனவே அதை முழுமையாக நம்ப முடியாது.

 

மொழிபெயர்ப்பு நிறுவனங்கள்: மொழிபெயர்ப்புச் செய்வதற்கென்றே பல்வேறு நிறுவனங்கள் பெரும் பெரு நகரங்களில் செயல்பட்டுவருகின்றன. அந்நிறுவனங்கள் அயல்நாடுகளிலிருந்து திட்டப்பணிகளைப் பெற்று, இங்குள்ள மொழிபெயர்ப்பாளர்களிடம் கொடுத்து, மொழிபெயர்ப்புச் செய்து ஒப்படைக்கின்றன.  இதுபோன்ற நிறுவனங்களுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகின்றார்கள்.

 

இஸ்லாமிய மொழிபெயர்ப்பு நிறுவனங்கள்: இஸ்லாமிய மூலாதார நூல்களை மொழிபெயர்ப்பதற்காகத்  தமிழ்நாட்டில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட நிறுவனம் ரஹ்மத் பதிப்பகம் ஆகும். இது புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸாயீ, இப்னுமாஜா ஆகிய அறுபெரும் நபிமொழித் தொகுப்பு நூல்களையும், உலகப் புகழ்பெற்ற திருக்குர்ஆன் விரிவுரையான தஃப்சீர் இப்னு கஸீரையும் (பத்துப் பாகங்கள்) வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பார்த்து, தாமும் நன்மையைப் பெற வேண்டுமென்ற நன்னோக்கத்தில் பல்வேறு நிறுவனங்கள் உருவாகின. அவையும் தம் பங்கிற்கு இஸ்லாமிய நூல்களை வெளியிடத் தொடங்கின. ஆயிஷா பதிப்பகத்தின் மூலம் அல்பிதாயா வந்நிஹாயா எனும் வரலாற்று நூல் தமிழில் வெளிவந்தது. ஆலிம் பப்ளிகேஷன்ஸ் முஸ்னது அஹ்மத் நூலைத் தமிழில் வெளியிட்டது. கலாம் பதிப்பகம் ஜாமிஉஸ் ஸுன்னா எனும் நபிமொழித் தொகுப்பு நூலை வெளியிட்டது. அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ் மஆலிமுஸ் ஸுன்னா எனும் நபிமொழித் தொகுப்பு நூலை வெளியிட்டு வருகிறது. ஒரு முஸ்லிம் இவற்றைப் படிக்கத் தொடங்கினால் தம் வாழ்நாள் முழுவதும் படித்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு நூல்களை இப்பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன.

 

மிக வேகமாக வளர்ந்து வரும் மொழிபெயர்ப்புத் துறை, தலைசிறந்த முஸ்லிம் மொழிபெயர்ப்பாளர்கள் இன்றித் தேங்கி நிற்கிறது. வேலைவாய்ப்பு விசாலமாக இருந்தும், இத்துறையில் ஆர்வம் செலுத்துவோர்  மிகக் குறைவாகவே உள்ளனர். எனவே எதிர்காலத்தில் முஸ்லிம் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறையை நீக்க, அரபுக் கல்லூரிகள் மொழிபெயர்ப்புக்கென்றே தனித் துறையை ஏற்படுத்தி, அதில் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்து மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்க வேண்டும் என்று பேராசிரியரும் தலைமை மொழிபெயர்ப்பாளருமான மௌலவி அ. முஹம்மது கான் பாகவி கூறுகிறார். அதையே நானும் வழிமொழிகிறேன். மொழிபெயர்ப்புத் துறை வளர்ந்து வரும் இக்காலத்தில் அரபுக் கல்லூரிகள் அதைச் செய்வது காலத்தின் கட்டாயமாகும்.

---------------------








ஞாயிறு, 17 டிசம்பர், 2023

மாற்றுத்திறனாளிகளை மதிப்போம்/ we should respect physically challeged pe...

மாற்றுத்திறனாளிகளை மதிப்போம்!

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இனிய திசைகள்

டிசம்பர் 2023 மாத

இதழில்

இடம்பெற்ற கட்டுரை

காட்சி வடிவில்...



மாற்றுத்திறனாளிகளை மதிப்போம்!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

அல்லாஹ்வின் படைப்புகள் ஒவ்வொன்றும் அவனுடைய மதிநுட்பமான படைப்புத்திறனுக்குச் சான்றுகளாக இருக்கின்றன; அவன் எல்லோரையும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் படைத்துள்ளான்.  அவனுடைய படைப்புகளைப் பார்த்துப் பிரமித்தோர் அவனைப் புகழ்வர். அதனால்தான் அவன், ‘என் படைப்புகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் என்கிறான். அவனுடைய படைப்புகளைப் பற்றிச் சிந்திப்போர் கூறும் வார்த்தைகள் இவைதாம்: எங்கள் இறைவா! நீ இவற்றை வீணாகப் படைக்கவில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக!” (3: 191) 

 

அதேநேரத்தில் இவ்வுலகில் எத்தனையோ பேர் உடலுறுப்புகள் ஊனமுற்ற நிலையில் பிறந்துள்ளார்கள். கை முடமானோர், காது கேளாதோர், கண் பார்வையற்றோர், நடக்க இயலாதோர், வாய்பேச இயலாதோர் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான குறைபாட்டோடு இப்புவியில் பிறந்துள்ளார்கள். அல்லது பிறந்தபோது எவ்விதக் குறைபாடுமின்றிப் பிறந்து, வாழும் காலத்தில் ஏதேனும் எதிர்பாரா விபத்து ஏற்பட்டு, அதில் தம் உடலுறுப்புகளை இழந்தோர் இருக்கின்றார்கள். அவர்கள் கையை இழந்து, கால்களை இழந்து, கண்பார்வையை இழந்து சிரமப்படுகின்றார்கள். இத்தகையோரை நாம் காணும்போது அவர்களைக் கேலி செய்வதோ, அவர்களின் மனம் வேதனைப்படுமாறு பேசுவதோ, அவர்களின் குறைகளைக் குத்திக் காட்டிப் பேசுவதோ கூடாது. மாறாக அந்நேரத்தில் நாம் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து, நம்மை ஆரோக்கியமாகப் படைத்துள்ள அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்; அவனைப் புகழ வேண்டும். அதுவே நாம் அவனுக்குச் செய்யும் நன்றிக் கடனாகும். 

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: (நோய் அல்லது சோதனைகளால்) பாதிப்புக்குள்ளானவரைப் பார்த்தவர், “அல்ஹம்து லில்லாஹில்லதீ ஆஃபானீ மிம்மப்தலாக்க பிஹி வஃபள்ளலனீ அலா கஸீரிம் மிம்மன் ஃகலக தஃப்ளீலா (பொருள்: உமக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிலிருந்து எனக்கு நிவாரணம் தந்த, அவனுடைய படைப்புகளில் அதிகமானோரைவிட என்னைச் சிறப்பாக்கி வைத்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரித்தாகுக!) என்று ஓதினால், அவர் வாழும் காலமெல்லாம் அந்தப் பாதிப்பிலிருந்து பாதுகாப்புப் பெறுவார். (திர்மிதீ: 3343) இந்த துஆவையே மாற்றுத்திறனாளிகளைப் பார்க்கும்போதும் நாம் ஓதிக்கொள்ள வேண்டும்.

 

மனிதர்களுள் சிலரைச் சோதிக்கும் பொருட்டு, அவர்களைச் சிற்சில குறைகளோடு படைத்து, அவர்களுக்கு வேறு வகையான திறனை அல்லாஹ் வழங்கியுள்ளான். அதனால்தான் அவர்களை மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்கிறோம். கைகளால் செய்யக்கூடிய வேலைகளைக் கால்களால் மிகவும் இலாவகமாக மாற்றுத் திறனாளிகள் செய்வார்கள். கண்களை இழந்தவர்கள், கண்களின்றியே மிகத் தெளிவாக நடந்து செல்வதை நாம் காணலாம். அத்தோடு அவர்களுக்கு அல்லாஹ் நினைவாற்றலையும் மிகுதியாக வழங்கியுள்ளான்.

 

அல்லாஹ் தன் அடியார்கள் சிலரைச் சில குறைபாடுகளால் சோதிக்கின்றான். அந்தச் சோதனையை அவர்கள் உவப்போடு ஏற்றுக்கொண்டு, பொறுமையாக இருந்தால் அவர்களுக்குச் சொர்க்கத்தைத் தருவதாகத் தன்னுடைய தூதர் மூலம் வாக்களித்துள்ளான்.

 

அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: நான் என் அடியானை, அவனது பிரியத்திற்குரிய இரு பொருட்களை(ப் பறித்து)க்கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்குப் பதிலாகச் சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன். (அவனுடைய பிரியத்திற்குரிய இரு பொருட்கள் என்பது) அவருடைய இரு கண்களைக் குறிக்கும். (புகாரீ: 5653)

 

ஒரு நாள் குறைஷி குலத் தலைவன் ஒருவனிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவன் இஸ்லாத்தில் சேர்ந்துவிட வேண்டும் என நபியவர்கள் ஆவல் கொண்டிருந்தார்கள். அவ்வாறு  அவனிடம் அவர்கள் உரையாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்த நேரத்தில் இப்னு உம்மி மக்தூம் ரளியல்லாஹு அன்ஹு நபியவர்களிடம் முன்னோக்கி வந்தார். முன்பே இஸ்லாத்தில் சேர்ந்தவர்களுள் அவரும் ஒருவர். ஏதோ ஒரு விஷயத்தைக் குறித்து நபியவர்களிடம் கேட்கத் தொடங்கினார்.

 

அந்தக் குறைஷித் தலைவனிடம் உரையாடுகிற இந்நேரத்தில் இவர் தம்மிடம் எதுவும் கேட்காமல் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நபியவர்கள் விரும்பினார்கள். அதன் நோக்கம் அந்தக் குறைஷித் தலைவன் இஸ்லாத்தில் சேர்ந்து நேர்வழி பெறுவதில் நபியவர்கள் கொண்ட ஆவலும் ஆசையும்தான்.  அதனால் இப்னு உம்மி மக்தூம் எனும் தோழரை நோக்கி நபியவர்கள் முகம் சுளித்தார்கள்; அவரை விட்டு அந்த நேரத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அப்போதுதான் அபஸ எனும் 80ஆம் அத்தியாயத்தின் முதல் நான்கு வசனங்களை அல்லாஹ் இறக்கியருளினான். 

 

அவர் முகம் சுளித்தார்; புறக்கணித்தார்; (எதற்காக எனில்) அந்தப் பார்வை இழந்தவர் அவரிடம் வந்ததற்காக. (நபியே உம்மிடம் வந்த) அவர் (பாவத்திலிருந்து) தூய்மை பெற்றிடலாம் என்பது குறித்து உமக்குத் தெரியுமா? அல்லது அவர் நல்லுணர்வு பெறலாம். (அதன் மூலம்) அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கும் என்பது குறித்து (உமக்கு என்ன தெரியும்?) (80: 1-4) அதன்பிறகு அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நபியவர்கள் மிகவும் கண்ணியப்படுத்தினார்கள். பிற்காலத்தில் நபியவர்கள் தம் தோழர்களோடு மதீனாவிலிருந்து போருக்குப் புறப்பட்டபோது  இரண்டு தடவை அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தமக்குப் பிரதிநிதியாக (கலீஃபா) நியமித்தார்கள்.

 

பிறவியிலேயே சிலர் குறைபாடு உடையவர்களாகப் பிறந்திருக்கலாம்; அல்லது நல்லவிதமாகப் பிறந்து ஏதேனும் எதிர்பாரா விபத்து காரணமாக உடல் உறுப்புகளில் குறைபாடு ஏற்பட்டிருக்கலாம். அல்லது வாழும் காலத்தில் தீராத நோய்க்கு ஆட்பட்டுச் சோதிக்கப்படலாம். இத்தகையோர் அல்லாஹ்வின் விதியை உவப்போடு ஏற்றுக்கொண்டு, பொறுமை காத்தால் அவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் இடமளிக்கின்றான். அது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வொன்றைப் படியுங்கள்.

 

அதாஉ பின் அபீரபாஹ்  ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு என்னிடம், “சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்; (காட்டுங்கள்)என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கருப்பு நிறப் பெண்மணிதான் அவர். இவர் (ஒரு தடவை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் (அடிக்கடி) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்குப் பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, “நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்துகொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொன்னார். அவ்வாறே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். (புகாரீ: 5652)

 

மாற்றுத் திறனாளிகளுக்கான பாதையை உருவாக்குவோம்: சென்னை மெரினா கடற்கரையில் அண்மையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பாதை மூலம் கடற்கரைக்குச் சென்று தங்கள் மகிழ்ச்சியை மாற்றுத்திறனாளிகள் வெளிப்படுத்தியதைப் பார்த்திருப்போம். இவ்வாறு தமிழ்நாட்டில் எல்லா அலுவலகக் கட்டடங்களும், வழிபாட்டுத் தலங்களும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் விதத்தில் உள்ளனவா? பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல முடியும். அவர்களுக்கான பாதையை உரிய முறையில் அமைத்துக்கொடுப்பதும் அவர்களுக்கு உதவி செய்வதும் வழிகாட்டுவதும் இஸ்லாமியப் பார்வையில் தர்மம் ஆகும். ஆம்! அது குறித்து அல்லாஹ்வின் தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ள செய்தி கவனிக்கத்தக்கது.

 

திக்குத் (முகவரி) தெரியாத பகுதியில் தடுமாறும் ஒருவருக்கு வழிகாட்டுவதும் நீ செய்யும் தர்மம் ஆகும்; கண்பார்வை தெரியாதவரைக் கவனிப்பதும் (வழிகாட்டுவதும்) நீ செய்யும் தர்மம் ஆகும்...என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் (திர்மிதீ: 1956/ 1879). அதேநேரத்தில் கண்பார்வை தெரியாதவருக்குத் தவறான வழிசொல்லி, அவரைப் பள்ளத்தில் விழ வைத்து, கேலி செய்து சிரிப்பது மிகப்பெரும் குற்றமாகும் என அல்லாஹ்வின் தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரித்துள்ளார்கள். கண்பார்வையற்றவரை வழிதவறச் செய்தவன் சபிக்கப்பட்டவன் ஆவான்.” (முஸ்னது அஹ்மத்: 2914)

 

ஒவ்வொரு மஸ்ஜிதிலும் மாற்றுத் திறனாளிகள் வந்து செல்லும் வகையில் பாதையை அமைப்பது  நிர்வாகிகளின் கடமையாகும். ஏனெனில் மாற்றுத்திறனாளிகளுக்கும் கூட்டுத் தொழுகைக்கு (ஜமாஅத்) விதிவிலக்கு இல்லை. அவர்களும் கூட்டுத் தொழுகையில் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும் என்றே நபிமொழி கூறுகிறது.

 

இப்னு உம்மி மக்தூம் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! என் வீடு மிகவும் தூரமாக உள்ளது. நானோ பார்வையற்றவராக உள்ளேன். (அதேவேளையில்) நான் பாங்கு சத்தத்தைக் கேட்கிறேன் (நான் வீட்டிலேயே தொழுதுகொள்ளலாமா, அவ்வாறு செய்தால் எனக்குக் கூட்டுத்தொழுகையின் நன்மை கிடைக்குமா) என்றார்கள். அப்போது நபியவர்கள், “நீங்கள் பாங்கு சத்தத்தைக் கேட்டால், தவழ்ந்தாவது வந்து, பதிலளியுங்கள்- கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மத்: 14948)

 

பார்வையற்றவராக இருந்தாலும் கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அதில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை என்றும் இந்த நபிமொழிமூலம் அறிகிறோம். அதேவேளையில் இத்பான் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குறித்த நபிமொழியில் இதற்கு முரணான செய்தி இடம்பெற்றுள்ளது. அதாவது இத்பான் பின் மாலிக் அவர்கள் ஒரு சமூகத்தாருக்குத் தொழுகை நடத்துகிற இமாமாக இருந்தார்; அவர் பார்வையற்றவராக இருந்தார். அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, தாம் பார்வையற்றவராக இருப்பது குறித்தும், மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக இருப்பதால் தம்மால் அங்கு சென்று தொழுகை நடத்த இயலவில்லை என்றும், தாங்கள் என் வீட்டில் வந்து தொழுகை நடத்தினால் அவ்விடத்தைத் தொழுமிடமாகத் தாம் ஆக்கிக்கொள்வதாகவும் கூறினார். அவரின் கோரிக்கையை ஏற்று, நபியவர்கள் அவ்வாறே அவர்தம் வீட்டிற்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள் என்ற செய்தி புகாரீயில் (667) பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதற்கு மார்க்க வல்லுநர்கள் சொல்லுகிற விளக்கமாவது, இப்னு உம்மி மக்தூம் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கேட்டபோது, “நான் வீட்டிலேயே தொழுதுகொள்ளலாமா; அவ்வாறு வீட்டிலேயே தொழுதுகொண்டாலும் எனக்குக் கூட்டுத்தொழுகையின் நன்மையான 25 அல்லது 27 மடங்கு நன்மை கிடைக்குமா என்ற பொருளில் அவர் அனுமதி கேட்டார். அதைத்தான் நபியவர்கள் மறுத்து, வீட்டில் தொழுதால் 25 மடங்கு நன்மை கிடைக்காது; மஸ்ஜிதிற்கு வந்து தொழுங்கள் என்று கூறினார்கள். இத்பான் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களோ 25 மடங்கு நன்மையை எதிர்பார்க்கவில்லை; மாறாக அவர் தம் இயலாமையை மட்டுமே நபியவர்களிடம் வெளிப்படுத்தினார். ஆகவே அவர் தம் வீட்டிலேயே தொழுதுகொள்ள அவருக்கு அனுமதி வழங்கினார்கள்.

 

ஆக மாற்றுத் திறனாளிகள் பலர் தம்மால் இயன்ற அளவிற்குச் சுயமாக உழைத்துச் சம்பாதிக்கின்றார்கள்; தம்மால் இயன்ற சாதனைகளைச் செய்கின்றார்கள்; சிலர் பிறருக்கு உந்து சக்தியாகத் திகழ்கின்றார்கள்; ஆரோக்கியமான உடலுறுப்புகளைக் கொண்டவர்களைப் போன்றே சுறுசுறுப்போடு செயல்படுகின்றார்கள். அவர்களை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதிக்கின்றார்கள். எனவே நாமும் அவர்களை மதிப்போம்; அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வோம்.

========================











திங்கள், 27 நவம்பர், 2023

அல்லாஹ்வின் உதவி எப்போது?

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

கடுமையான சோதனையில் சிக்கி, பல்வேறு சிரமங்களுக்கு ஆளானோர் கேட்கின்ற கேள்வி, அல்லாஹ்வின் உதவி எப்போது கிடைக்கும் என்பதுதான். அல்லாஹ் தன் அடியார்களைச் சோதித்துப் பார்க்கின்றான். அந்தச் சோதனைக் காலத்தில் மனிதர்கள் எவ்வாறு நடந்துகொள்கின்றார்கள்; சோதனைக் காலத்தில் ஈமான் (இறைநம்பிக்கை) கூடுகிறதா, குறைகிறதா அல்லது நடுநிலை வகிக்கிறதா என்பதைத் தெளிவுபடத் தெரிந்துகொள்வதற்காகவே அல்லாஹ் சோதிக்கிறான். அந்தச் சோதனையைப் பொறுமையோடு தாங்கிக்கொண்டு சகித்துக்கொண்டால் அல்லாஹ் தன் உதவியை அவனுக்கு வழங்குவான்.

அல்லாஹ் கூறுகின்றான்: (இறைநம்பிக்கை கொண்டோரே!) சிறிதளவு பயத்தாலும், பசியாலும்செல்வங்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் சேதத்தாலும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருக்கிற பொறுமையாளர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள். (2: 155)

 

சோதனைகளைச் சகித்துக்கொண்டு பொறுமையோடு இருப்பவர்களுக்கு அல்லாஹ் நற்செய்தி கூறச் சொல்கிறான். ஆம்! பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி நற்கூலி வழங்கப்படும் (39: 10) என்ற இறைவசனம் இதனை உறுதிப்படுத்துகிறது.

 

அல்லாஹ் தன் அடியார்களுக்குச் சோதனையை ஏற்படுத்துவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன.  அதாவது பல்வேறு சோதனைகளைத் தாங்கிக்கொண்டு அவன் இந்த மார்க்கத்திலேயே நீடித்திருக்கின்றானா, அல்லது இம்மார்க்கத்தைப் புறக்கணித்துவிடுகின்றானா என்பதைச் சோதித்தறிகின்றான்.

 

 

மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்: பொய்யர்கள் யார், உண்மையாளர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே அல்லாஹ் சோதனையைக் கொடுக்கின்றான். லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறி ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டுவிட்டால் சோதனை செய்யப்படாமல் விட்டுவிடப் படுவார்கள் என்று எண்ணிக்கொண்டார்களா? எனக் கேட்கின்றான். (29: 2-3) இந்த ஏகத்துவக் கலிமாவைச் சொல்லிவிட்டாலே சொர்க்கம் கிடைத்துவிடும் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது.

 

கப்பாப் பின் அல்அரத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கஅபாவின் நிழலில் தமது சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, “எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின்மீது நம்பிக்கைகொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, இரம்பம் கொண்டு வரப்பட்டு அவரது தலைமீது வைக்கப்பட்டு அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமை யான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.

 

(பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்துவிடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் தீ)தும்கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ஸன்ஆவிலிருந்து ஹளர மவ்த்வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தம் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார். ஆயினும், நீங்கள்தாம் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகிறீர்கள்என்று சொன்னார்கள். (புகாரீ: 3612)

 

பிலால், கப்பாப் பின் அரத், அபூதர் ஃகிஃபாரீ ரளியல்லாஹு அன்ஹும் உள்ளிட்ட நபித்தோழர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டதற்காகப் பல்வேறு முறைகளில் மிகக் கடுமையாகச் சோதிக்கப்பட்டார்கள்; அவர்களுடைய உரிமையாளர்களால் தண்டிக்கப்பட்டார்கள். அவற்றையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து முறையிட்டார்கள். அப்போதுதான் நபியவர்கள், அவர்களுக்குமுன் வாழ்ந்தவர்கள் எப்படியெல்லாம் சோதனைக்கும் வேதனைக்கும் உள்ளாக்கப்பட்டார்கள் என்பதை விளக்கிக் கூறினார்கள்.

 

ஆக ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்ட யாரும் சோதனைக்கு உள்ளாக்கப்படாமல் இல்லை.  அவர்கள் காலத்தில் அவர்களுடைய இறைநம்பிக்கைக்கு ஏற்ப அவர்கள் சோதிக்கப்பட்டார்கள். நாம் நம்முடைய இறைநம்பிக்கைக்கு ஏற்பத் தற்காலத்தில் சோதிக்கப்படுகிறோம். அளவு வேண்டுமானால் கூடுதல் குறைவாக இருக்கலாம். ஆனால் சோதனை ஒன்றுதான். முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று ஊடகங்களால் முத்திரை குத்தப்பட்டு வஞ்சிக்கப்படுகிறோம்; சோதிக்கப்படுகிறோம். அதனால்  முஸ்லிம்களுக்குப் பிற சமய மக்கள் வாடகைக்கு வீடு கொடுப்பதில்லை; அல்லது தயங்கித் தயங்கி வாடகைக்கு விடுகின்றார்கள். எளிதான முறையில் தொழில் செய்ய முடிவதில்லை; உரிய நீதியைப் பெற முடியவில்லை. எல்லாத் தளங்களிலும் அநியாயம் செய்யப்படுகின்றோம். இதுபோன்ற சோதனைகளைத் தாங்கிக்கொண்டு பொறுமையோடு நாம் நம் ஈமானைக் காத்துக்கொண்டு இருந்தால் நிச்சயம் நமக்கான மாற்றுவழி பிறக்கும்.

 

அல்லாஹ் கூறுகின்றான்: இறுதியில் இறைத்தூதர்கள் (மக்கள்மீது) நம்பிக்கை இழந்து அவர்க(ளின் ஆதரவாளர்க)ளும் தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டதோ என்று எண்ணத்தொடங்கியபோது, அவர்களுக்கு நம் உதவி வந்தடைந்தது. நாம் நாடியவர்கள் பாதுகாக்கப்பட்டனர். குற்றம் செய்யும் மக்களைவிட்டு நம் வேதனையை எவராலும் நீக்கிவிட முடியாது. (12: 110)

 

இறைத்தூதர்களை நம்பிக்கைகொண்டவர்கள் நிராசையாகிவிட்ட நேரத்தில் திடீரென இறைவனின் உதவி வந்தது. இறைநம்பிக்கையாளர்கள் காப்பாற்றப்பட்டார்கள்; இறைமறுப்பாளர்கள் அழிக்கப்பட்டார்கள். இந்த  நிகழ்வு ஒவ்வோர் இறைத்தூதரின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. நபி நூஹ் அலைஹிஸ் ஸலாம் தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்து களைப்படைந்துவிட்ட நிலையில்இறுதியாக இறைவனின் ஆணைக்கேற்பக் கப்பல் செய்து அதில் இறைநம்பிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டபோது, மிகக் கடுமையான வெள்ளப் பிரளயம் ஏற்பட்டு, இறைமறுப்பாளர்கள் அனைவரும் அழிக்கப்பட்டார்கள் என்பது குர்ஆன் கூறும் வரலாறு.

 

அதுபோலவே நீண்ட காலப் பிரச்சாரத்திற்குப் பின்னும் இறைத்தூதர் லூத் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் போதனையை ஏற்றுக்கொள்ளாத இறைமறுப்பாளர்கள் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். இறுதியில், “நீங்கள் இவ்வூரைவிட்டுப் புறப்பட்டுவிடுங்கள்  என்ற அல்லாஹ்வின் கட்டளைக்கேற்பத் தம்மை நம்பிக்கைகொண்டவர்களை மட்டும் தம்மோடு அழைத்துக்கொண்டு அவ்வூரை விட்டுப் புறப்பட்டார்கள். அதன்பின் அவர்களுடைய மனைவி உள்பட அனைவரும் அழிக்கப்பட்டார்கள் என்பது வரலாறு. இவ்வாறே ஒவ்வோர் இறைத்தூதரும் சோதனைக்கு ஆளாக்கப்பட்டு, கடைசியில் இறையுதவியைப் பெற்றார்கள்; காப்பாற்றப்பட்டார்கள் என்றே குர்ஆன் கூறுகிறது.

 

 

இன்று உலக அளவில் முஸ்லிம்கள் பின்தங்கியவர்களாகவும் வலிமை குன்றியவர்களாகவும் இருக்கின்றார்கள். மிக விரைவில் இந்நிலை மாறும் என்ற நம்பிக்கையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யூதர்கள் ஃபலஸ்தீனில் முஸ்லிம்களைக் கொன்று குவிக்கின்றார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்படப் பலர் கொல்லப்படுகின்றார்கள். மருத்துவமனைகளையும் குறிவைத்துத் தாக்குகின்றார்கள்; போர் மரபையே யூதர்கள் மீறுகின்றார்கள். போரை நிறுத்துங்கள்என்று ஐ.நா. சபை கேட்டுக்கொண்டபின்னும் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கொன்று குவிக்கின்றார்கள். இத்தகைய கடினமான நேரத்திலும் அசைக்க முடியாத இறைநம்பிக்கையோடு ஃபலஸ்தீனர்கள் அங்கு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

 

அவர்களுடைய ஈமானின் உறுதியைக் கண்டு, விரைவில் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்வான்; அக்கிரமக்காரர்களான இஸ்ரேலிய யூதர்களிடமிருந்து ஃபலஸ்தீன் மக்களுக்கு விடுதலை கொடுப்பான். அதுவரை அவர்கள் அமைதி காக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள ஃபலஸ்தீன் மக்களுக்காகவும் நமக்காகவும் நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதுதான் நம்முடைய ஒரே ஆயுதம். ஏந்திய கைகளை வெறும் கைகளாக அல்லாஹ் திருப்பிவிட மாட்டான் என்று உறுதியாக நம்புவோம்.

0000000000000000







வியாழன், 9 நவம்பர், 2023

ஏற்றத் தாழ்வுகள் களைந்த ஏந்தல் நபி

  

    

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28

--------------------------------------------

இந்தியாவில் தொழில்ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்படுவதும், மனிதர்களை அவர்கள் செய்யும் தொழிலை வைத்து மதிப்பதும் இகழ்வதும் காலங்காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. நாவிதர் ஒருவரின் பிள்ளை தன் தந்தையின் தொழிலையே செய்ய வேண்டும்; குயவர் ஒருவரின் பிள்ளை தன் தந்தையின் தொழிலான குயத்தொழிலையே செய்துவர வேண்டும். வாழையடி வாழையாகத் தொடர்கிற இப்பழக்கம் மக்கள் மத்தியில்  அவர்கள் செய்யும் தொழிலை வைத்து இழிவாகவும் கேவலமாகவும் நடத்தப்படுகிற நிலையை உண்டாக்கிவிட்டது.  பானை வனைதல், தலைமுடி சிரைத்தல், புதைகுழி தோண்டுதல், துணிதுவைத்தல் உள்ளிட்ட தொழில்களைக் குறிப்பிட்ட சாரார் மட்டுமே செய்ய வேண்டும் என்று சொல்லப்படாத விதி இருந்துவருகிறது.

 

பெரியார் உள்ளிட்ட சமூகச் சீர்திருத்தவாதிகள் தோன்றி, மக்கள் மத்தியில் புரையோடிப்போய்க் கிடந்த மூடப் பழக்கங்களையும், தீண்டாமைகளையும் ஒழிக்கப் பாடுபட்டார்கள். அப்படியிருந்தும் இன்று வரை மக்கள் மத்தியில் தீண்டாமையோ சாதிக்கொடுமைகளோ ஒழிந்த பாடில்லை; சாதிப் படுகொலைகள் இன்று வரை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன; தீண்டாமைக் கொடுமைகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

  

அந்தந்தத் தொழிலை அவரவர்தாம் செய்ய வேண்டும் என்ற சமூகக் கட்டுப்பாடும் இருந்து வருகிறது. எல்லோரின் தலைமுடிகளையும் களைந்து, சிகையலங்காரம் செய்கிற தொழிலாளி, ‘நாவிதன்என்ற பெயரால்  சிறுமைப்படுத்தப்படுகின்றான். புதைகுழி தோண்டி, ஒருவரின் இறுதிச் சடங்கை நிறைவேற்றுகிற தொழிலாளி வெட்டியான்என்ற பெயரால் சிறுமைப்படுத்தப்படுகின்றான். உணவு உள்ளிட்ட பொருள்களைச் சமைக்கப் பயன்படுத்துகிற பானைகளைச் செய்துகொடுக்கிற தொழிலாளி, ‘குயவன்என்ற பெயரால்  சிறுமைப்படுத்தப்படுகின்றான். இவ்வாறு ஒவ்வொரு தொழிலாளியும் அவரவர் செய்கிற தொழிலை முன்னிலைப்படுத்திச் சிறுமைப்படுத்தப்படும் நிலை இன்று வரை தொடர்கிறது. அதனால் மக்கள் மத்தியில் உயர்வு தாழ்வு நீடிக்கிறது.

 

அண்மையில் நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி விஸ்வகர்மா யோஜனா எனும் திட்டத்தை அறிவித்தார்.  நாடு முழுவதும் உள்ள பாரம்பரியக் கைவினைஞர்களுக்கு உதவுமுகமாக செப்டம்பர் 17, 2023 அன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இவர்கள் எந்தவிதப் பிணையமும் இல்லாமல் ஒரு இலட்சம் வரை நிதியுதவி பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இத்திட்டத்தைச் சிலர் வரவேற்றாலும் பலர் இதனை விமர்சனம் செய்துள்ளார்கள். மக்களுள் சில பிரிவினர் செய்துவந்த குலத்தொழிலை ஊக்கப்படுத்துவதும், அவர்களைத் தொழில்ரீதியாக இழிவடையச் செய்வதும்தான் அரசின் நோக்கம் என்கின்றனர்.

இந்தத் திட்டத்தின் அடிப்படையில் செருப்பு தைப்பவரின் பிள்ளை செருப்புத் தைக்கும் தொழிலையும் பானை செய்யும் குயவரின் பிள்ளை பானை செய்யும் தொழிலையும், பறையடிப்பவரின் பிள்ளை பறையடிக்கும் தொழிலையும், துணிவெளுக்கும் வண்ணான் பிள்ளை துணி வெளுக்கும் தொழிலையும் அந்தந்தத் தொழில் செய்வோரின் பிள்ளைகள் தத்தம் தந்தையின் குலத்தொழிலையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு அரசு நிதியுதவி செய்ய முன்வருகிறது. இது சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமா? அல்லது மனிதர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்குமா?


இஸ்லாமிய மார்க்கத்தில் எந்தத் தொழிலையும் யாரும் செய்யலாம். குறிப்பிட்ட இனத்தவர்தாம் இந்தத் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடோ நிபந்தனையோ கிடையாது. யாரும் எந்தத் தொழிலையும் செய்யலாம். செய்யும் தொழிலை வைத்து ஒருவரை மதிப்பதோ இழிவாகக் கருதுவதோ இங்கு கிடையாது.  அதாவது வண்ணான், குயவர், வெட்டியான் என்ற அடைமொழிப் பெயர்கள் இங்கு கிடையாது. எல்லோரும் முஸ்லிம் என்றே அறியப்படுகின்றார்கள். ஒருவர் அடக்கத்தலத்தில் புதைகுழி (கப்ர்) தோண்டுபவராக இருந்தாலும் சமூகத்தில் அவர் செய்யும் தொழிலைவைத்து அழைக்கப்பட மாட்டார். இதுதான் இஸ்லாம் மனித சமுதாயத்திற்குத் தந்த மிகப்பெரும் அருட்கொடை எனலாம்.


மேலும் ஒருவர் செய்யும் தொழிலை வைத்து ஏற்றத்தாழ்வு ஏற்படாத வகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிகாட்டியுள்ளார்கள். ஒவ்வொரு செயலையும் நன்மைக்குரிய அறச் செயல் என்ற வட்டத்திற்குள் கொண்டுவந்துள்ளார்கள். ஒவ்வொரு நற்செயலும் தர்மம் ஆகும் (புகாரீ: 6021) என்ற நபிமொழியின் அடிப்படையில் இறந்துவிட்ட சகோதரரின் பிரேதத்தை நல்லடக்கம் செய்வதற்காகப் புதைகுழி தோண்டுவதும் தர்மமே ஆகும். எனவே இறந்தவர் யாராக இருந்தாலும் அவர்தம் உறவினரோ மற்றவர்களோ புதைகுழி தோண்டத் தயாராகிவிடுவார்கள். அதற்கெனத் தனியாக ஓர் ஆள் நியமிக்கப்பட வேண்டிய கட்டாயம் முஸ்லிம்களுக்கு ஏற்படவில்லை. மேற்கண்ட நபிமொழியின் அடிப்படையில் முஸ்லிம்கள் செயல்படுவதால் யார் வேண்டுமானாலும் குழி தோண்டி, அந்த நன்மையை அடைந்துகொள்ளலாம். எனவே சில ஊர்களில் முஸ்லிம் இளைஞர்கள் பலர் புதைகுழி தோண்டப் போட்டிபோடுவர்.

 

அதுபோலவே இறந்துவிட்ட ஒருவரின் இறுதிக் கடமையை நிறைவேற்றுவதற்கு, பிற சமயங்களில் புரோகிதர் ஒருவர் தேவைப்படுவதைப் போலத் தனிப்பட்ட முறையில் ஆலிம் ஒருவர் தேவையில்லை.


இறந்துவிட்டவரின் மகன்களே அக்கடமையை நிறைவேற்றிவிடலாம். இறந்துவிட்ட தந்தைக்கு இறுதித் தொழுகையான பிரேதத் தொழுகை (ஜனாஸா) நடத்த மகனுக்கே முன்னுரிமை வழங்கப்படும். மகன் தொழுகை முறை குறித்து அறிந்திருக்கவில்லையானால் அவருடைய நெருங்கிய உறவினர்களுள் ஒருவர் தொழுகை நடத்தலாம். ஆக இஸ்லாமிய மார்க்கம் எல்லாவற்றையும் எளிமைப்படுத்தி, ஏற்றத்தாழ்வுகளை அகற்றிவிட்டது.

 

பிற சமயத்தவர் ஒருவர் இறந்துவிட்டால், அவர் ஏழையாக இருந்தால் வெகுசிலரே இடுகாடு வரை செல்வார்கள்.  செல்வாக்கு உள்ளவராக இருந்தால் ஒரு பெருங்கூட்டத்தினர் செல்வார்கள். ஆனால் முஸ்லிம் ஒருவர் இறந்துவிட்டால்-அவர் ஏழையாக இருந்தாலும் அந்த மஹல்லாவில் உள்ள பலர் அவரின் இறுதித் தொழுகையில் பங்கேற்பார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் கப்ரஸ்தான்-அடக்கத்தலம் வரை சென்று, அடக்கம் செய்யப்பட்டபின், இறந்தவருக்காகப் பிரார்த்தனை செய்துவிட்டுத் திரும்புவார்கள். காரணம், இச்செயலையும் நன்மைக்குரியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆக்கிவிட்டார்கள்.


 ஏனென்றால் நம் உறவினர் அல்லாத முஸ்லிம் ஒருவர் இறந்துவிட்டதற்காக நாம் ஏன் அவரின் இறுதித் தொழுகையில் கலந்துகொள்ள வேண்டும்; நாம் ஏன்  அடக்கத்தலம் வரை சென்று கால்கடுக்க நிற்க வேண்டும்; நாம் ஏன் நம் நேரத்தை வீணடிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றலாம். அந்த எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாகவே மறுமையின் நன்மையைக் கூறியுள்ளார்கள். அந்த நபிமொழி இதோ: 



யார் ஜனாஸா தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு; அடக்கம் செய்யப்படும் வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு''  என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  கூறினார்கள். அப்போது இரண்டு கீராத்கள் என்றால் என்ன?'' என வினவப்பட்டது. அதற்கவர்கள், “இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)'' என்றார்கள். (புகாரீ: 1325)

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அடிமைத்தளையை உடைத்து, மனிதர்களுக்கு மத்தியில் இருந்த ஏற்றத்தாழ்வுகளையெல்லாம் களைந்துவிட்டார்கள். எஞ்சியிருந்த சின்னச்சின்ன  ஏற்றத்தாழ்வுகளையும் தம் இறுதி உபதேசத்தின்மூலம் நிர்மூலமாக்கிவிட்டார்கள். அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது ஆற்றிய உரையின் ஒரு பகுதி இதோ:

 

மக்களே! அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் இறைவன் ஒருவனே; உங்கள் தந்தையும் ஒருவரே; அறிந்து கொள்ளுங்கள்! எந்த அரபியருக்கும் அரபியர் அல்லாதவரை விடவோ, அரபியர் அல்லாதவர் எவருக்கும் அரபியரைவிடவோ எந்தச் சிறப்பும் இல்லை. எந்த  வெள்ளையருக்கும் கருப்பரை விடவோ, எந்தக் கருப்பருக்கும் வெள்ளையரை விடவோ எந்தச் சிறப்பும் இல்லை. இறையச்சத்தைக் கொண்டே தவிர (யாரும் மற்றவரைவிடச் சிறப்பை அடைய முடியாது)... (முஸ்னது அஹ்மத்: 23489)

 

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். (49: 13) இவ்வுலகில் பிறந்த எல்லோரும் ஒரே பெற்றோரின் மூலமே பிறந்துள்ளோம். ஆகவே மனிதர்கள் மத்தியில் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை என்பதையே இந்த இறைவசனம் பறைசாற்றுகிறது. உன் தாய் உன்னைப் பெற்றாள்; என் தாய் என்னைப் பெற்றாள். இதில் உனக்கும் எனக்கும் என்ன ஏற்றத்தாழ்வு? “இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்கள்தாம் (49: 10) என்ற இறைவசனத்தின் அடிப்படையில் அனைவரும் சமம்தான். 

 

ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கைலாகு (முஸாஃபஹா) செய்தார். மரம் வெட்டியதால் அவருடைய கை காய்ச்சிப் போயிருந்தது. அந்த உழைப்பாளியின் கையில் நபியவர்கள் முத்தமிட்டார்கள். ஆக தொழில்ரீதியாக யாரையும் ஏற்றத்தாழ்வாக நபியவர்கள் நடத்தியதில்லை. எனவே நபியவர்களைப் பின்பற்றி வருகின்ற இந்தச் சமுதாயத்தில் எல்லோரும் சமமே. எத்தொழில் செய்வோரும் பள்ளிவாசலில் ஓரணியில் நின்று தோளோடு தோள் சேர்த்து ஒன்றாகத் தொழுவதைக் காணலாம்.

 

ஏற்றத்தாழ்வைக் களைய நபியவர்கள் கையாண்ட மற்றொரு வழிமுறை, ஒருவர் மற்றொருவரைச் சந்திக்கும்போது முகமன் கூறுதல் என்பதாகும். இதில் நான் ஏன் அவருக்கு முதலில் முகமன் கூற வேண்டும்; அவர் எனக்கு முதலில் முகமன் கூறட்டும் என்ற இறுமாப்பும் பெருமையும் ஏற்படும். வசதியானவன் ஏழையைப் பார்த்து, முதலில்  முகமன் கூற யோசிப்பான். நான் இந்தச் சாதாரண மனிதனுக்கு முதலில் முகமன் கூற வேண்டுமா, அவனே சொல்லட்டுமே என்று நினைப்பான். மாணவரைப் பார்த்த ஆசிரியர், அவன் நமக்கு முதலில் சொல்லட்டும் என நினைப்பார். இப்படி ஒவ்வோர் உயர்நிலையில் உள்ளோரும் தம் கீழ் நிலையில் உள்ளோரிடம் எதிர்பார்க்கலாம். இதையெல்லாம் முறியடிக்கும் வண்ணம், “அல்லாஹ்விடம், மக்களுள் மிகவும் சிறந்தவர் முதலில் முகமன் கூறுபவர் ஆவார் (அபூதாவூத்: 4522) என்று மொழிந்தார்கள்.

 

ஒவ்வொருவரும் தாமே அல்லாஹ்விடம் சிறந்தவராகவும் நெருக்கமானவராகவும் இருக்க விரும்புவார். ஆகவே முஸ்லிம்கள் யாரும் முதலில் முகமன் கூற யோசிப்பதில்லை. எதிரே வருபவர் முஸ்லிம் என்று தெரிந்துவிட்டால், இவர் அவருக்கு இயல்பாகவே முந்திக்கொண்டு முகமன் கூறிவிடுவார். ஆகவே இங்கு இவ்விஷயத்திலும் ஏற்றத்தாழ்வு முறியடிக்கப்படுகிறது என்பதை உணரலாம்.  

 

ஆகவே ஒருவர் செய்யும் தொழிலை வைத்தோ, பிறந்த குலத்தை வைத்தோ, நாட்டை வைத்தோ ஏற்றத்தாழ்வுகள் இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லை. மக்களின் பழக்கவழக்கங்களில், நடைமுறைகளில் சிற்சில வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கலாம். அவற்றையெல்லாம் இஸ்லாமிய மார்க்கத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடாது. எனவே எந்த முஸ்லிமும் பிறப்பால், மொழியால், குலத்தால், தொழிலால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை என்பதை மனத்தில் பதிய வைத்து, வாழ்க்கைப் பாதையில் நடைபோடுவோம்.

================================