திங்கள், 27 நவம்பர், 2023

அல்லாஹ்வின் உதவி எப்போது?

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

கடுமையான சோதனையில் சிக்கி, பல்வேறு சிரமங்களுக்கு ஆளானோர் கேட்கின்ற கேள்வி, அல்லாஹ்வின் உதவி எப்போது கிடைக்கும் என்பதுதான். அல்லாஹ் தன் அடியார்களைச் சோதித்துப் பார்க்கின்றான். அந்தச் சோதனைக் காலத்தில் மனிதர்கள் எவ்வாறு நடந்துகொள்கின்றார்கள்; சோதனைக் காலத்தில் ஈமான் (இறைநம்பிக்கை) கூடுகிறதா, குறைகிறதா அல்லது நடுநிலை வகிக்கிறதா என்பதைத் தெளிவுபடத் தெரிந்துகொள்வதற்காகவே அல்லாஹ் சோதிக்கிறான். அந்தச் சோதனையைப் பொறுமையோடு தாங்கிக்கொண்டு சகித்துக்கொண்டால் அல்லாஹ் தன் உதவியை அவனுக்கு வழங்குவான்.

அல்லாஹ் கூறுகின்றான்: (இறைநம்பிக்கை கொண்டோரே!) சிறிதளவு பயத்தாலும், பசியாலும்செல்வங்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் சேதத்தாலும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருக்கிற பொறுமையாளர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள். (2: 155)

 

சோதனைகளைச் சகித்துக்கொண்டு பொறுமையோடு இருப்பவர்களுக்கு அல்லாஹ் நற்செய்தி கூறச் சொல்கிறான். ஆம்! பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி நற்கூலி வழங்கப்படும் (39: 10) என்ற இறைவசனம் இதனை உறுதிப்படுத்துகிறது.

 

அல்லாஹ் தன் அடியார்களுக்குச் சோதனையை ஏற்படுத்துவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன.  அதாவது பல்வேறு சோதனைகளைத் தாங்கிக்கொண்டு அவன் இந்த மார்க்கத்திலேயே நீடித்திருக்கின்றானா, அல்லது இம்மார்க்கத்தைப் புறக்கணித்துவிடுகின்றானா என்பதைச் சோதித்தறிகின்றான்.

 

 

மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்: பொய்யர்கள் யார், உண்மையாளர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே அல்லாஹ் சோதனையைக் கொடுக்கின்றான். லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறி ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டுவிட்டால் சோதனை செய்யப்படாமல் விட்டுவிடப் படுவார்கள் என்று எண்ணிக்கொண்டார்களா? எனக் கேட்கின்றான். (29: 2-3) இந்த ஏகத்துவக் கலிமாவைச் சொல்லிவிட்டாலே சொர்க்கம் கிடைத்துவிடும் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது.

 

கப்பாப் பின் அல்அரத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கஅபாவின் நிழலில் தமது சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, “எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின்மீது நம்பிக்கைகொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, இரம்பம் கொண்டு வரப்பட்டு அவரது தலைமீது வைக்கப்பட்டு அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமை யான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.

 

(பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்துவிடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் தீ)தும்கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ஸன்ஆவிலிருந்து ஹளர மவ்த்வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தம் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார். ஆயினும், நீங்கள்தாம் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகிறீர்கள்என்று சொன்னார்கள். (புகாரீ: 3612)

 

பிலால், கப்பாப் பின் அரத், அபூதர் ஃகிஃபாரீ ரளியல்லாஹு அன்ஹும் உள்ளிட்ட நபித்தோழர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டதற்காகப் பல்வேறு முறைகளில் மிகக் கடுமையாகச் சோதிக்கப்பட்டார்கள்; அவர்களுடைய உரிமையாளர்களால் தண்டிக்கப்பட்டார்கள். அவற்றையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து முறையிட்டார்கள். அப்போதுதான் நபியவர்கள், அவர்களுக்குமுன் வாழ்ந்தவர்கள் எப்படியெல்லாம் சோதனைக்கும் வேதனைக்கும் உள்ளாக்கப்பட்டார்கள் என்பதை விளக்கிக் கூறினார்கள்.

 

ஆக ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்ட யாரும் சோதனைக்கு உள்ளாக்கப்படாமல் இல்லை.  அவர்கள் காலத்தில் அவர்களுடைய இறைநம்பிக்கைக்கு ஏற்ப அவர்கள் சோதிக்கப்பட்டார்கள். நாம் நம்முடைய இறைநம்பிக்கைக்கு ஏற்பத் தற்காலத்தில் சோதிக்கப்படுகிறோம். அளவு வேண்டுமானால் கூடுதல் குறைவாக இருக்கலாம். ஆனால் சோதனை ஒன்றுதான். முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று ஊடகங்களால் முத்திரை குத்தப்பட்டு வஞ்சிக்கப்படுகிறோம்; சோதிக்கப்படுகிறோம். அதனால்  முஸ்லிம்களுக்குப் பிற சமய மக்கள் வாடகைக்கு வீடு கொடுப்பதில்லை; அல்லது தயங்கித் தயங்கி வாடகைக்கு விடுகின்றார்கள். எளிதான முறையில் தொழில் செய்ய முடிவதில்லை; உரிய நீதியைப் பெற முடியவில்லை. எல்லாத் தளங்களிலும் அநியாயம் செய்யப்படுகின்றோம். இதுபோன்ற சோதனைகளைத் தாங்கிக்கொண்டு பொறுமையோடு நாம் நம் ஈமானைக் காத்துக்கொண்டு இருந்தால் நிச்சயம் நமக்கான மாற்றுவழி பிறக்கும்.

 

அல்லாஹ் கூறுகின்றான்: இறுதியில் இறைத்தூதர்கள் (மக்கள்மீது) நம்பிக்கை இழந்து அவர்க(ளின் ஆதரவாளர்க)ளும் தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டதோ என்று எண்ணத்தொடங்கியபோது, அவர்களுக்கு நம் உதவி வந்தடைந்தது. நாம் நாடியவர்கள் பாதுகாக்கப்பட்டனர். குற்றம் செய்யும் மக்களைவிட்டு நம் வேதனையை எவராலும் நீக்கிவிட முடியாது. (12: 110)

 

இறைத்தூதர்களை நம்பிக்கைகொண்டவர்கள் நிராசையாகிவிட்ட நேரத்தில் திடீரென இறைவனின் உதவி வந்தது. இறைநம்பிக்கையாளர்கள் காப்பாற்றப்பட்டார்கள்; இறைமறுப்பாளர்கள் அழிக்கப்பட்டார்கள். இந்த  நிகழ்வு ஒவ்வோர் இறைத்தூதரின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. நபி நூஹ் அலைஹிஸ் ஸலாம் தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்து களைப்படைந்துவிட்ட நிலையில்இறுதியாக இறைவனின் ஆணைக்கேற்பக் கப்பல் செய்து அதில் இறைநம்பிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டபோது, மிகக் கடுமையான வெள்ளப் பிரளயம் ஏற்பட்டு, இறைமறுப்பாளர்கள் அனைவரும் அழிக்கப்பட்டார்கள் என்பது குர்ஆன் கூறும் வரலாறு.

 

அதுபோலவே நீண்ட காலப் பிரச்சாரத்திற்குப் பின்னும் இறைத்தூதர் லூத் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் போதனையை ஏற்றுக்கொள்ளாத இறைமறுப்பாளர்கள் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். இறுதியில், “நீங்கள் இவ்வூரைவிட்டுப் புறப்பட்டுவிடுங்கள்  என்ற அல்லாஹ்வின் கட்டளைக்கேற்பத் தம்மை நம்பிக்கைகொண்டவர்களை மட்டும் தம்மோடு அழைத்துக்கொண்டு அவ்வூரை விட்டுப் புறப்பட்டார்கள். அதன்பின் அவர்களுடைய மனைவி உள்பட அனைவரும் அழிக்கப்பட்டார்கள் என்பது வரலாறு. இவ்வாறே ஒவ்வோர் இறைத்தூதரும் சோதனைக்கு ஆளாக்கப்பட்டு, கடைசியில் இறையுதவியைப் பெற்றார்கள்; காப்பாற்றப்பட்டார்கள் என்றே குர்ஆன் கூறுகிறது.

 

 

இன்று உலக அளவில் முஸ்லிம்கள் பின்தங்கியவர்களாகவும் வலிமை குன்றியவர்களாகவும் இருக்கின்றார்கள். மிக விரைவில் இந்நிலை மாறும் என்ற நம்பிக்கையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யூதர்கள் ஃபலஸ்தீனில் முஸ்லிம்களைக் கொன்று குவிக்கின்றார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்படப் பலர் கொல்லப்படுகின்றார்கள். மருத்துவமனைகளையும் குறிவைத்துத் தாக்குகின்றார்கள்; போர் மரபையே யூதர்கள் மீறுகின்றார்கள். போரை நிறுத்துங்கள்என்று ஐ.நா. சபை கேட்டுக்கொண்டபின்னும் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கொன்று குவிக்கின்றார்கள். இத்தகைய கடினமான நேரத்திலும் அசைக்க முடியாத இறைநம்பிக்கையோடு ஃபலஸ்தீனர்கள் அங்கு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

 

அவர்களுடைய ஈமானின் உறுதியைக் கண்டு, விரைவில் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்வான்; அக்கிரமக்காரர்களான இஸ்ரேலிய யூதர்களிடமிருந்து ஃபலஸ்தீன் மக்களுக்கு விடுதலை கொடுப்பான். அதுவரை அவர்கள் அமைதி காக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள ஃபலஸ்தீன் மக்களுக்காகவும் நமக்காகவும் நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதுதான் நம்முடைய ஒரே ஆயுதம். ஏந்திய கைகளை வெறும் கைகளாக அல்லாஹ் திருப்பிவிட மாட்டான் என்று உறுதியாக நம்புவோம்.

0000000000000000







கருத்துகள் இல்லை: