-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
மனிதன் தன்னுடைய செய்தியைப் பிறருக்குத் தெரிவிக்கப் பயன்படும்
ஊடகமே மொழி. உலகில் பல்வேறு மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழிக்கும் பல்வேறு வார்த்தைகள்; ஒவ்வொரு வார்த்தைக்கும்
தனித்தனி பொருள்; அவற்றை எண்ணிப் பார்க்கும்போது வியப்பே மேலிடுகிறது. மொழி குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில்
கூறுகின்றான்: வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களுடைய மொழிகளும்
நிறங்களும் வெவ்வேறாக இருப்பதும் அவனுடைய சான்றுகளுள் உள்ளவையாகும். இதில் கல்வியாளர்களுக்கு
நிச்சயமாகப் பல சான்றுகள் இருக்கின்றன. (30: 22)
நபியவர்களின் மொழிபெயர்ப்பாளர்: நம்முடைய மொழியை அறியாதவருக்கு
அவருடைய மொழியில் தெரிவிக்க உதவுவதே மொழிபெயர்ப்பு. இது பன்னூறு ஆண்டுகளாக நடைபெற்று
வருகிறது. இஸ்லாத்தின் பார்வையில் மொழிபெயர்ப்பு குறித்து ஆய்வு செய்தபோது ஸைத் பின்
ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டிய தேவை ஏற்பட்டது. ஏனெனில்
இவர் ஹீப்ரு மொழி, சிரிய மொழி ஆகியவற்றைக் கற்றுக்கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு
மொழிபெயர்ப்பாளராக இருந்துள்ளார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வரும்
கடிதங்களைப் படித்துக்காட்டுதல்,
யூதர்கள் தம் வேதத்தில் ஹீப்ரு மொழியிலுள்ள சட்டத்தைத் தவறாகப்
படித்துக் காட்டும்போது அல்லது மறைக்கும்போது அதை வாசித்து, நபியவர்களுக்கு அரபியில்
மொழிபெயர்த்துச் சொல்பவராக இருந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.
வரலாற்று ரீதியாக ஆய்வு செய்யும்போது, மன்னர் ஹாரூன் ரஷீத்
(763-809) அவர்களின் காலத்தில்தான் அரபு நூல்களெல்லாம் ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கப்பட்டன
என்ற செய்தியை அறிகிறோம். அரபியர்கள் அறிவியலிலும் மருத்துவத்துறையிலும் சிறந்து விளங்கினார்கள்.
அது குறித்துப் பற்பல நூல்களை எழுதி வைத்திருந்தார்கள். அந்த அரபு நூல்கள்தாம் பிற்காலத்தில்
ஐரோப்பிய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டன என்பதற்கு அவற்றிலுள்ள
மூலவார்த்தைகளே சாட்சியாக உள்ளன. அதாவது அரபு வார்த்தைகள் ஆங்கில உச்சரிப்பில் எழுதப்பட்டுள்ளன.
பிற்காலத்தில் பைபிள், திருக்குர்ஆன் ஆகிய வேதங்கள் பிறநாட்டு மொழிகளில் மொழியாக்கம்
செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டில்தான் (1943) முதன்முதலாக ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்களால் திருக்குர்ஆன் தமிழாக்கம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு நூல்கள் பற்பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.
இன்று தமிழ்நாட்டில் இஸ்லாமிய மூலாதார நூல்களும்
வரலாற்று நூல்களும் தமிழில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நூல்கள் தமிழ் முஸ்லிம்கள்
வாழும் பல்வேறு நாடுகளுக்குச் சென்றுகொண்டிருக்கின்றன.
தமிழக அரசு நிதியுதவி: பன்னாட்டு நூல்கள் நம் தமிழ்மொழியில்
தமிழாக்கம் செய்யப்பட்டு, தமிழர்கள் பயன்பட வேண்டும் என்ற வகையில் மொழிபெயர்ப்பாளர்கள் பலர் இக்கலையில்
ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு அண்மையில் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.
அதாவது பிறநாட்டு நல்ல நூல்கள் தமிழுக்கு வரவேண்டும்; தமிழ் நூல்கள் பல்வேறு
மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு,
அயல்நாடுகளுக்குச் செல்வதன்மூலம், தமிழனின் பெருமையை
உலகறியச் செய்ய வேண்டும் என்ற நன்னோக்கத்தில் மொழிபெயர்ப்புத்துறைக்கு மூன்று கோடி
நிதியுதவி ஒதுக்கியுள்ளது. எனவே நல்ல மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பொன்னான எதிர்காலம்
உண்டு என்று நம்பலாம்.
வாய்ப்புகள் எங்கே: மொழிபெயர்ப்புக்கான வாய்ப்புகள் எங்கெங்கு
எந்தெந்தத் துறைகளில் உள்ளன என்று பலருக்குத்
தெரிவதில்லை. அதன் விசாலமான தளங்களை அறியும்போதுதான் அது மிகப்பெரும் கடல்
என்பது புரியும். நூல்கள் மட்டுமின்றி, திரைப்படங்கள், காணொலிகள், அரசு அலுவலக ஆவணங்கள், வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் மொழிபெயர்ப்புக்கான
தேவை உள்ளது.
யூடியூப் சேனல்கள்: காட்சி ஊடகம் வளர்ந்து வரும் இக்காலக் கட்டத்தில், யூடியூபில் பல்வேறு காணொலிக் காட்சிகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அவற்றுள் பொதுப்பயன்பாட்டு உரிமை வழங்கப்பட்டுள்ள
(cc) காணொலிகளும் உள்ளன. அவற்றை மொழிபெயர்த்து-அதாவது
சப்டைட்டில் இட்டு வெளியிடலாம். அரபியில், ஆங்கிலத்தில் பயனுள்ள பல்வேறு காணொலிகள் வெளியிடப்படுகின்றன.
அவற்றை மொழிபெயர்க்க வேண்டிய தேவை உள்ளது.
வலைதளங்கள்: பெரும் பெரு நிறுவனங்கள் தங்கள் வலைப்பக்கத்தைப்
பிறமொழிக்காரர்கள் படிக்கும் வகையில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டிய தேவை உள்ளது.
ஒவ்வொரு நாளும் புதிய புதிய செய்திகளைப் பதிவேற்றம் செய்யக்கூடிய நிறுவனங்கள் அவற்றைப்
பிறமொழிகளில் வெளியிட வேண்டியது உள்ளது. எனவே அங்கும் மொழிபெயர்ப்பாளர் தேவைப்படுகிறார்.
ஆவணங்கள்: இந்திய நாட்டின் தேசிய மொழிகளாக 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற நடவடிக்கைகள், நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளிட்ட அரசு ஆவணங்கள் 22 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுகின்றன.
அங்கும் மொழிபெயர்ப்பாளர் தேவைப்படுகிறார்.
இயந்திர மொழிபெயர்ப்பு: மொழிபெயர்ப்புப் பணியைச் செய்யத்தான்
கூகுள் உள்ளதே? நாம் ஏன் செய்ய வேண்டும்? என்று கேட்போர் உண்டு.
இயந்திரம் மனிதனைப் போல் உணர்வுகளைப் புரிந்து, இடத்திற்கேற்றார்போல் செய்வதில்லை. ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நிரல் அடிப்படையில்தான்
அது மொழிபெயர்க்கும். மனிதர்கள் அவ்வாறில்லை. எதை மொழிபெயர்க்க வேண்டும்; எதைச் செய்யக்கூடாது என்று புரிந்து செய்வதோடு, மனித உணர்வுகளை உணர்ந்து
செய்வார்கள். இயந்திரம் செய்வது மொழிபெயர்ப்பு; சிறந்த மொழிபெயர்ப்பாளர் செய்வதோ மொழியாக்கம் ஆகும். இரண்டுக்கும்
என்ன வித்தியாசம் என்றால், வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தல் இயந்திரம் செய்யக்கூடியது. வார்த்தைகளை
விளங்கி அதன் கருத்தை அந்த மொழிக்கேற்ற இலக்கண விதிகளுடன் கொண்டு வருவது மொழியாக்கம்
ஆகும்.
இயந்திரம் செய்யக்கூடிய மொழிபெயர்ப்புக்குச் சான்றாகச் சிலவற்றைக் கூறலாம். அரபுக் கட்டுரையை மொழிபெயர்க்கும்போது அபுல் ஹஸன் என்ற அரபி வார்த்தை இடம்பெற்றால், அதை ஆங்கிலத்தில் ஃபாதர் ஆஃப் ஹஸன் (Father of Hasan) என்று மொழிபெயர்த்துவிடும். தமிழ்க் கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது கல்யாண ராமன் என்ற தமிழ்ப்பெயரை மேரேஜ் ராமன் (Marriage Raman) என்று மொழிபெயர்த்துவிடும். இவ்விரண்டும் மனிதர்களுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்கள்; அவற்றை மொழிபெயர்க்கக்கூடாது என்று இயந்திரத்திற்குத் தெரியாது. இவை போன்ற பல்வேறு குளறுபடிகள் இயந்திர மொழிபெயர்ப்பில் நிகழும். எனவே அதை முழுமையாக நம்ப முடியாது.
மொழிபெயர்ப்பு நிறுவனங்கள்: மொழிபெயர்ப்புச் செய்வதற்கென்றே
பல்வேறு நிறுவனங்கள் பெரும் பெரு நகரங்களில் செயல்பட்டுவருகின்றன. அந்நிறுவனங்கள் அயல்நாடுகளிலிருந்து
திட்டப்பணிகளைப் பெற்று, இங்குள்ள மொழிபெயர்ப்பாளர்களிடம் கொடுத்து, மொழிபெயர்ப்புச் செய்து ஒப்படைக்கின்றன. இதுபோன்ற நிறுவனங்களுக்கு மொழிபெயர்ப்பாளர்கள்
தேவைப்படுகின்றார்கள்.
இஸ்லாமிய மொழிபெயர்ப்பு நிறுவனங்கள்: இஸ்லாமிய மூலாதார நூல்களை
மொழிபெயர்ப்பதற்காகத் தமிழ்நாட்டில் முதன்முதலாக
உருவாக்கப்பட்ட நிறுவனம் ரஹ்மத் பதிப்பகம் ஆகும். இது புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸாயீ, இப்னுமாஜா ஆகிய அறுபெரும்
நபிமொழித் தொகுப்பு நூல்களையும், உலகப் புகழ்பெற்ற திருக்குர்ஆன் விரிவுரையான தஃப்சீர் இப்னு
கஸீரையும் (பத்துப் பாகங்கள்) வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பார்த்து, தாமும் நன்மையைப் பெற
வேண்டுமென்ற நன்னோக்கத்தில் பல்வேறு நிறுவனங்கள் உருவாகின. அவையும் தம் பங்கிற்கு
இஸ்லாமிய நூல்களை வெளியிடத் தொடங்கின. ஆயிஷா பதிப்பகத்தின் மூலம் அல்பிதாயா வந்நிஹாயா
எனும் வரலாற்று நூல் தமிழில் வெளிவந்தது. ஆலிம் பப்ளிகேஷன்ஸ் முஸ்னது அஹ்மத் நூலைத்
தமிழில் வெளியிட்டது. கலாம் பதிப்பகம் ஜாமிஉஸ் ஸுன்னா எனும் நபிமொழித் தொகுப்பு நூலை
வெளியிட்டது. அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ் மஆலிமுஸ் ஸுன்னா எனும் நபிமொழித் தொகுப்பு
நூலை வெளியிட்டு வருகிறது. ஒரு முஸ்லிம் இவற்றைப் படிக்கத் தொடங்கினால் தம் வாழ்நாள்
முழுவதும் படித்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு நூல்களை இப்பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன.
மிக வேகமாக வளர்ந்து வரும் மொழிபெயர்ப்புத் துறை, தலைசிறந்த முஸ்லிம்
மொழிபெயர்ப்பாளர்கள் இன்றித் தேங்கி நிற்கிறது. வேலைவாய்ப்பு விசாலமாக இருந்தும், இத்துறையில் ஆர்வம்
செலுத்துவோர் மிகக் குறைவாகவே உள்ளனர். எனவே
“எதிர்காலத்தில் முஸ்லிம் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறையை நீக்க, அரபுக் கல்லூரிகள்
மொழிபெயர்ப்புக்கென்றே தனித் துறையை ஏற்படுத்தி, அதில் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்து மொழிபெயர்ப்பாளர்களை
உருவாக்க வேண்டும்” என்று பேராசிரியரும் தலைமை மொழிபெயர்ப்பாளருமான மௌலவி அ. முஹம்மது
கான் பாகவி கூறுகிறார். அதையே நானும் வழிமொழிகிறேன். மொழிபெயர்ப்புத் துறை வளர்ந்து
வரும் இக்காலத்தில் அரபுக் கல்லூரிகள் அதைச் செய்வது காலத்தின் கட்டாயமாகும்.
---------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக