வியாழன், 9 நவம்பர், 2023

ஏற்றத் தாழ்வுகள் களைந்த ஏந்தல் நபி

  

    

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28

--------------------------------------------

இந்தியாவில் தொழில்ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்படுவதும், மனிதர்களை அவர்கள் செய்யும் தொழிலை வைத்து மதிப்பதும் இகழ்வதும் காலங்காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. நாவிதர் ஒருவரின் பிள்ளை தன் தந்தையின் தொழிலையே செய்ய வேண்டும்; குயவர் ஒருவரின் பிள்ளை தன் தந்தையின் தொழிலான குயத்தொழிலையே செய்துவர வேண்டும். வாழையடி வாழையாகத் தொடர்கிற இப்பழக்கம் மக்கள் மத்தியில்  அவர்கள் செய்யும் தொழிலை வைத்து இழிவாகவும் கேவலமாகவும் நடத்தப்படுகிற நிலையை உண்டாக்கிவிட்டது.  பானை வனைதல், தலைமுடி சிரைத்தல், புதைகுழி தோண்டுதல், துணிதுவைத்தல் உள்ளிட்ட தொழில்களைக் குறிப்பிட்ட சாரார் மட்டுமே செய்ய வேண்டும் என்று சொல்லப்படாத விதி இருந்துவருகிறது.

 

பெரியார் உள்ளிட்ட சமூகச் சீர்திருத்தவாதிகள் தோன்றி, மக்கள் மத்தியில் புரையோடிப்போய்க் கிடந்த மூடப் பழக்கங்களையும், தீண்டாமைகளையும் ஒழிக்கப் பாடுபட்டார்கள். அப்படியிருந்தும் இன்று வரை மக்கள் மத்தியில் தீண்டாமையோ சாதிக்கொடுமைகளோ ஒழிந்த பாடில்லை; சாதிப் படுகொலைகள் இன்று வரை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன; தீண்டாமைக் கொடுமைகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

  

அந்தந்தத் தொழிலை அவரவர்தாம் செய்ய வேண்டும் என்ற சமூகக் கட்டுப்பாடும் இருந்து வருகிறது. எல்லோரின் தலைமுடிகளையும் களைந்து, சிகையலங்காரம் செய்கிற தொழிலாளி, ‘நாவிதன்என்ற பெயரால்  சிறுமைப்படுத்தப்படுகின்றான். புதைகுழி தோண்டி, ஒருவரின் இறுதிச் சடங்கை நிறைவேற்றுகிற தொழிலாளி வெட்டியான்என்ற பெயரால் சிறுமைப்படுத்தப்படுகின்றான். உணவு உள்ளிட்ட பொருள்களைச் சமைக்கப் பயன்படுத்துகிற பானைகளைச் செய்துகொடுக்கிற தொழிலாளி, ‘குயவன்என்ற பெயரால்  சிறுமைப்படுத்தப்படுகின்றான். இவ்வாறு ஒவ்வொரு தொழிலாளியும் அவரவர் செய்கிற தொழிலை முன்னிலைப்படுத்திச் சிறுமைப்படுத்தப்படும் நிலை இன்று வரை தொடர்கிறது. அதனால் மக்கள் மத்தியில் உயர்வு தாழ்வு நீடிக்கிறது.

 

அண்மையில் நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி விஸ்வகர்மா யோஜனா எனும் திட்டத்தை அறிவித்தார்.  நாடு முழுவதும் உள்ள பாரம்பரியக் கைவினைஞர்களுக்கு உதவுமுகமாக செப்டம்பர் 17, 2023 அன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இவர்கள் எந்தவிதப் பிணையமும் இல்லாமல் ஒரு இலட்சம் வரை நிதியுதவி பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இத்திட்டத்தைச் சிலர் வரவேற்றாலும் பலர் இதனை விமர்சனம் செய்துள்ளார்கள். மக்களுள் சில பிரிவினர் செய்துவந்த குலத்தொழிலை ஊக்கப்படுத்துவதும், அவர்களைத் தொழில்ரீதியாக இழிவடையச் செய்வதும்தான் அரசின் நோக்கம் என்கின்றனர்.

இந்தத் திட்டத்தின் அடிப்படையில் செருப்பு தைப்பவரின் பிள்ளை செருப்புத் தைக்கும் தொழிலையும் பானை செய்யும் குயவரின் பிள்ளை பானை செய்யும் தொழிலையும், பறையடிப்பவரின் பிள்ளை பறையடிக்கும் தொழிலையும், துணிவெளுக்கும் வண்ணான் பிள்ளை துணி வெளுக்கும் தொழிலையும் அந்தந்தத் தொழில் செய்வோரின் பிள்ளைகள் தத்தம் தந்தையின் குலத்தொழிலையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு அரசு நிதியுதவி செய்ய முன்வருகிறது. இது சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமா? அல்லது மனிதர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்குமா?


இஸ்லாமிய மார்க்கத்தில் எந்தத் தொழிலையும் யாரும் செய்யலாம். குறிப்பிட்ட இனத்தவர்தாம் இந்தத் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடோ நிபந்தனையோ கிடையாது. யாரும் எந்தத் தொழிலையும் செய்யலாம். செய்யும் தொழிலை வைத்து ஒருவரை மதிப்பதோ இழிவாகக் கருதுவதோ இங்கு கிடையாது.  அதாவது வண்ணான், குயவர், வெட்டியான் என்ற அடைமொழிப் பெயர்கள் இங்கு கிடையாது. எல்லோரும் முஸ்லிம் என்றே அறியப்படுகின்றார்கள். ஒருவர் அடக்கத்தலத்தில் புதைகுழி (கப்ர்) தோண்டுபவராக இருந்தாலும் சமூகத்தில் அவர் செய்யும் தொழிலைவைத்து அழைக்கப்பட மாட்டார். இதுதான் இஸ்லாம் மனித சமுதாயத்திற்குத் தந்த மிகப்பெரும் அருட்கொடை எனலாம்.


மேலும் ஒருவர் செய்யும் தொழிலை வைத்து ஏற்றத்தாழ்வு ஏற்படாத வகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிகாட்டியுள்ளார்கள். ஒவ்வொரு செயலையும் நன்மைக்குரிய அறச் செயல் என்ற வட்டத்திற்குள் கொண்டுவந்துள்ளார்கள். ஒவ்வொரு நற்செயலும் தர்மம் ஆகும் (புகாரீ: 6021) என்ற நபிமொழியின் அடிப்படையில் இறந்துவிட்ட சகோதரரின் பிரேதத்தை நல்லடக்கம் செய்வதற்காகப் புதைகுழி தோண்டுவதும் தர்மமே ஆகும். எனவே இறந்தவர் யாராக இருந்தாலும் அவர்தம் உறவினரோ மற்றவர்களோ புதைகுழி தோண்டத் தயாராகிவிடுவார்கள். அதற்கெனத் தனியாக ஓர் ஆள் நியமிக்கப்பட வேண்டிய கட்டாயம் முஸ்லிம்களுக்கு ஏற்படவில்லை. மேற்கண்ட நபிமொழியின் அடிப்படையில் முஸ்லிம்கள் செயல்படுவதால் யார் வேண்டுமானாலும் குழி தோண்டி, அந்த நன்மையை அடைந்துகொள்ளலாம். எனவே சில ஊர்களில் முஸ்லிம் இளைஞர்கள் பலர் புதைகுழி தோண்டப் போட்டிபோடுவர்.

 

அதுபோலவே இறந்துவிட்ட ஒருவரின் இறுதிக் கடமையை நிறைவேற்றுவதற்கு, பிற சமயங்களில் புரோகிதர் ஒருவர் தேவைப்படுவதைப் போலத் தனிப்பட்ட முறையில் ஆலிம் ஒருவர் தேவையில்லை.


இறந்துவிட்டவரின் மகன்களே அக்கடமையை நிறைவேற்றிவிடலாம். இறந்துவிட்ட தந்தைக்கு இறுதித் தொழுகையான பிரேதத் தொழுகை (ஜனாஸா) நடத்த மகனுக்கே முன்னுரிமை வழங்கப்படும். மகன் தொழுகை முறை குறித்து அறிந்திருக்கவில்லையானால் அவருடைய நெருங்கிய உறவினர்களுள் ஒருவர் தொழுகை நடத்தலாம். ஆக இஸ்லாமிய மார்க்கம் எல்லாவற்றையும் எளிமைப்படுத்தி, ஏற்றத்தாழ்வுகளை அகற்றிவிட்டது.

 

பிற சமயத்தவர் ஒருவர் இறந்துவிட்டால், அவர் ஏழையாக இருந்தால் வெகுசிலரே இடுகாடு வரை செல்வார்கள்.  செல்வாக்கு உள்ளவராக இருந்தால் ஒரு பெருங்கூட்டத்தினர் செல்வார்கள். ஆனால் முஸ்லிம் ஒருவர் இறந்துவிட்டால்-அவர் ஏழையாக இருந்தாலும் அந்த மஹல்லாவில் உள்ள பலர் அவரின் இறுதித் தொழுகையில் பங்கேற்பார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் கப்ரஸ்தான்-அடக்கத்தலம் வரை சென்று, அடக்கம் செய்யப்பட்டபின், இறந்தவருக்காகப் பிரார்த்தனை செய்துவிட்டுத் திரும்புவார்கள். காரணம், இச்செயலையும் நன்மைக்குரியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆக்கிவிட்டார்கள்.


 ஏனென்றால் நம் உறவினர் அல்லாத முஸ்லிம் ஒருவர் இறந்துவிட்டதற்காக நாம் ஏன் அவரின் இறுதித் தொழுகையில் கலந்துகொள்ள வேண்டும்; நாம் ஏன்  அடக்கத்தலம் வரை சென்று கால்கடுக்க நிற்க வேண்டும்; நாம் ஏன் நம் நேரத்தை வீணடிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றலாம். அந்த எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாகவே மறுமையின் நன்மையைக் கூறியுள்ளார்கள். அந்த நபிமொழி இதோ: 



யார் ஜனாஸா தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு; அடக்கம் செய்யப்படும் வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு''  என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  கூறினார்கள். அப்போது இரண்டு கீராத்கள் என்றால் என்ன?'' என வினவப்பட்டது. அதற்கவர்கள், “இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)'' என்றார்கள். (புகாரீ: 1325)

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அடிமைத்தளையை உடைத்து, மனிதர்களுக்கு மத்தியில் இருந்த ஏற்றத்தாழ்வுகளையெல்லாம் களைந்துவிட்டார்கள். எஞ்சியிருந்த சின்னச்சின்ன  ஏற்றத்தாழ்வுகளையும் தம் இறுதி உபதேசத்தின்மூலம் நிர்மூலமாக்கிவிட்டார்கள். அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது ஆற்றிய உரையின் ஒரு பகுதி இதோ:

 

மக்களே! அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் இறைவன் ஒருவனே; உங்கள் தந்தையும் ஒருவரே; அறிந்து கொள்ளுங்கள்! எந்த அரபியருக்கும் அரபியர் அல்லாதவரை விடவோ, அரபியர் அல்லாதவர் எவருக்கும் அரபியரைவிடவோ எந்தச் சிறப்பும் இல்லை. எந்த  வெள்ளையருக்கும் கருப்பரை விடவோ, எந்தக் கருப்பருக்கும் வெள்ளையரை விடவோ எந்தச் சிறப்பும் இல்லை. இறையச்சத்தைக் கொண்டே தவிர (யாரும் மற்றவரைவிடச் சிறப்பை அடைய முடியாது)... (முஸ்னது அஹ்மத்: 23489)

 

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். (49: 13) இவ்வுலகில் பிறந்த எல்லோரும் ஒரே பெற்றோரின் மூலமே பிறந்துள்ளோம். ஆகவே மனிதர்கள் மத்தியில் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை என்பதையே இந்த இறைவசனம் பறைசாற்றுகிறது. உன் தாய் உன்னைப் பெற்றாள்; என் தாய் என்னைப் பெற்றாள். இதில் உனக்கும் எனக்கும் என்ன ஏற்றத்தாழ்வு? “இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்கள்தாம் (49: 10) என்ற இறைவசனத்தின் அடிப்படையில் அனைவரும் சமம்தான். 

 

ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கைலாகு (முஸாஃபஹா) செய்தார். மரம் வெட்டியதால் அவருடைய கை காய்ச்சிப் போயிருந்தது. அந்த உழைப்பாளியின் கையில் நபியவர்கள் முத்தமிட்டார்கள். ஆக தொழில்ரீதியாக யாரையும் ஏற்றத்தாழ்வாக நபியவர்கள் நடத்தியதில்லை. எனவே நபியவர்களைப் பின்பற்றி வருகின்ற இந்தச் சமுதாயத்தில் எல்லோரும் சமமே. எத்தொழில் செய்வோரும் பள்ளிவாசலில் ஓரணியில் நின்று தோளோடு தோள் சேர்த்து ஒன்றாகத் தொழுவதைக் காணலாம்.

 

ஏற்றத்தாழ்வைக் களைய நபியவர்கள் கையாண்ட மற்றொரு வழிமுறை, ஒருவர் மற்றொருவரைச் சந்திக்கும்போது முகமன் கூறுதல் என்பதாகும். இதில் நான் ஏன் அவருக்கு முதலில் முகமன் கூற வேண்டும்; அவர் எனக்கு முதலில் முகமன் கூறட்டும் என்ற இறுமாப்பும் பெருமையும் ஏற்படும். வசதியானவன் ஏழையைப் பார்த்து, முதலில்  முகமன் கூற யோசிப்பான். நான் இந்தச் சாதாரண மனிதனுக்கு முதலில் முகமன் கூற வேண்டுமா, அவனே சொல்லட்டுமே என்று நினைப்பான். மாணவரைப் பார்த்த ஆசிரியர், அவன் நமக்கு முதலில் சொல்லட்டும் என நினைப்பார். இப்படி ஒவ்வோர் உயர்நிலையில் உள்ளோரும் தம் கீழ் நிலையில் உள்ளோரிடம் எதிர்பார்க்கலாம். இதையெல்லாம் முறியடிக்கும் வண்ணம், “அல்லாஹ்விடம், மக்களுள் மிகவும் சிறந்தவர் முதலில் முகமன் கூறுபவர் ஆவார் (அபூதாவூத்: 4522) என்று மொழிந்தார்கள்.

 

ஒவ்வொருவரும் தாமே அல்லாஹ்விடம் சிறந்தவராகவும் நெருக்கமானவராகவும் இருக்க விரும்புவார். ஆகவே முஸ்லிம்கள் யாரும் முதலில் முகமன் கூற யோசிப்பதில்லை. எதிரே வருபவர் முஸ்லிம் என்று தெரிந்துவிட்டால், இவர் அவருக்கு இயல்பாகவே முந்திக்கொண்டு முகமன் கூறிவிடுவார். ஆகவே இங்கு இவ்விஷயத்திலும் ஏற்றத்தாழ்வு முறியடிக்கப்படுகிறது என்பதை உணரலாம்.  

 

ஆகவே ஒருவர் செய்யும் தொழிலை வைத்தோ, பிறந்த குலத்தை வைத்தோ, நாட்டை வைத்தோ ஏற்றத்தாழ்வுகள் இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லை. மக்களின் பழக்கவழக்கங்களில், நடைமுறைகளில் சிற்சில வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கலாம். அவற்றையெல்லாம் இஸ்லாமிய மார்க்கத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடாது. எனவே எந்த முஸ்லிமும் பிறப்பால், மொழியால், குலத்தால், தொழிலால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை என்பதை மனத்தில் பதிய வைத்து, வாழ்க்கைப் பாதையில் நடைபோடுவோம்.

================================









கருத்துகள் இல்லை: