செவ்வாய், 21 ஏப்ரல், 2015

கைத்தொழில் கற்போம்!




மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்.,

ஒவ்வொரு நபியும் ஏதேனும் கைத்தொழில் செய்துள்ளதாக அறிகிறோம். தாவூத் (அலை) அவர்கள் இரும்பை உருக்கி, அதன்மூலம் போர்க்கவசங்கள் செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கைத்தொழில் குறித்துக் கூறியுள்ளதைக் காணும்போது உழைப்பின் உயர்வையும் மேன்மையையும் உணரமுடிகிறது. அதில் ஒன்று: கையால் உழைத்துண்பதே உணவுகளில் மிகச் சிறந்தது. நபி தாவூத் (அலை) அவர்கள் தம் கையால் உழைத்துண்பவர்களாக இருந்தார்கள்.

ஒவ்வொரு நபியும் ஆடு மேய்த்துள்ளார்கள். தச்சராக, வணிகராக, தொழில்முனைவோராக, கப்பல் கட்டுநராக, ஆடை நெய்பவராக இப்படிப் பல்வேறு தொழில்களைச் செய்வோராக நபிமார்கள் இருந்துள்ளனர்.

இமாமத் பணி என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஓர் உன்னதமான பணி. ஆனால் அவர்கள் ஓர் இமாமாக இருந்து மக்களுக்குத் தொழுகை நடத்தியதோடு பல்வேறு பணிகளை மேற்கொண்டிருக்கின்றார்கள். மக்களை நிர்வகித்தல், எதிரிகளை எதிர்நோக்குதல், பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல், குடும்ப விவகாரங்களைக் கவனித்தல், சமுதாயப் பணிகளைச் செவ்வனே செய்தல் உள்ளிட்ட எத்தனையோ பணிகளை மேற்கொண்டிருக்கின்றார்கள். நாம் அந்த அளவிற்குச் செய்யவில்லையானாலும் பொருளாதாரத்தில் பிறரிடம் தேவையாகாத வகையில் சுயமாக ஏதேனும் கைத்தொழில் செய்து நம் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள முயற்சி செய்யலாமே? முயற்சியும் கடுமையான பயிற்சியுமிருந்தால் எந்தத் தொழிலையும் எளிதாகச் செய்யலாம்.

நவீன யுகத்தில் வாழ்ந்து வருகின்ற ஆலிம்கள் தம் வறுமையைச் சொல்லிக்கொண்டே இருப்பதைக் காண்கிறோம். நீங்கள் ஏன் உங்கள் பிள்ளையை, உங்களைப் போலவே ஆலிமாக ஆக்கவில்லை என்று வினவினால், நான்  பட்ட சிரமம் போதாதா? என்  பிள்ளையும் சிரமப்பட வேண்டுமா? என்று மறுவினாத் தொடுக்கின்றனர். இவர்கள் தம் ஓய்வு நேரங்களை முறையாகப் பயன்படுத்தினால் தம் வறுமையை ஓட ஓட விரட்டலாம். இமாம்களாக உள்ள ஆலிம்கள் தங்கள் தொழுகை நேரம் போக எஞ்சிய நேரங்களில் தமக்கு மிகவும் விருப்பமான ஏதேனும் தொழிலை மேற்கொண்டால் அவர்கள் தம் வாழ்வில் முன்னேற்றம் காணலாம்.

தற்காலத்தில் கணினியும் இணையதளச் சேவையும் மிகுந்துவிட்டதால் இருந்த இடத்திலிருந்தே செய்யக்கூடிய பணிகள் ஏராளம் உள்ளன. அதற்குத் தேவை ஒரு கணினியும் இணையதள இணைப்பும் ஆகும். இது இருந்தால் எங்கிருந்து கொண்டும் நம் வேலையைச் செய்து கொடுக்கலாம். பிறமொழிகளை மொழிபெயர்த்தல், நூல்களை எடிட்டிங் செய்தல், பிழைதிருத்தம் செய்துகொடுத்தல், கணினி வடிவமைத்தல், வரைதல், நூல்கள் எழுதுதல், நூல்களை வெளியிடுதல் முதலிய எண்ணற்ற பணிகள் உள்ளன.

மொழிபெயர்த்தல்

இது ஒரு கலை. மொழியில் ஆழ்ந்த புலமையும் ஆர்வமும் இருந்தால் இதை நல்ல முறையில் செய்யலாம்.  ஆலிம்களுக்கு அரபி தெரியும் என்பதால் தமிழை நன்றாகக் கற்றுக்கொண்டு மொழிபெயர்க்கத் தொடங்கலாம். அரபியில் ஏராளமான அரிய நூல்கள் குவிந்துகிடக்கின்றன. பல்வேறு துறைகளைச் சார்ந்த புதிய புதிய நூல்கள்  வெளிவந்த வண்ணம் உள்ளன. அவற்றையெல்லாம் தமிழுக்குக் கொண்டுவந்தால் தமிழ்மக்கள் மிகுந்த பயனடைவார்கள். முதலில் செய்யத் தொடங்கும்போது தயக்கமாக இருக்கும். போகப் போக எளிதாகிவிடும். முதலில் ஒரு பக்கம் அளவிற்குத் தமிழாக்கம் செய்து, இத்துறையில் நன்கு தேர்ச்சி பெற்றோரிடம் காட்டிச் சரிசெய்துகொண்டு பின்னர் நீங்கள் தொடர்ந்து செய்யலாம். ஒரு மொழிபெயர்ப்பாளர் தனியாக இருந்து பணியாற்றுவதோடு, பத்திரிகைத் துறையிலும் அயலகத் துறையிலும் புத்தக நிலையங்களிலும் பணியாற்றலாம்.  அது தவிர தமக்கு விருப்பமான நூலைத் தேர்ந்தெடுத்து அதைத் தமிழாக்கம் செய்து பதிப்பகங்களில் கொடுக்கலாம். அல்லது சுயமாகவும் வெளியிடலாம்.

நூல்கள் எடிட்டிங்

ஒருவர் எழுதிய நூலைச் செம்மைப்படுத்துதல் என்று சொல்லலாம். சிலர் நூல் எழுதுவார்கள். அதில் வாக்கிய அமைப்புகளை மாற்றி மாற்றி எழுதியிருப்பார்கள். தப்பும் தவறுமாக எழுதியிருப்பார்கள். இத்தகைய நூலைச் செம்மைப்படுத்தி, சீராக்கிக் கொடுப்பதே எடிட்டிங் பணியாகும். தமிழ் நன்றாகத் தெரிந்திருந்தால், இலக்கண விதிகளுக்கு உட்பட்டு ஒரு வாக்கியம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது  தெரிந்துவிடும். அதற்கேற்ப அவ்வாக்கியத்திலுள்ள வார்த்தைகளை மாற்றிப் போட்டுச் செம்மைப்படுத்திக் கொடுக்க வேண்டும். இதுவும்  தொடக்கத்தில் புதிதாகத் தோன்றும். பழகப் பழக எளிதாகிவிடும்.

பதிப்பகங்கள், புத்தகாலயங்களில் பல்வேறு நூல்கள் எடிட்டிங் செய்ய ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றை வாங்கி வந்து, நீங்கள் இருக்கின்ற இடத்தில் இருந்துகொண்டே எடிட்டிங் செய்து கொடுக்கலாம்.

பிழைதிருத்தம்

ஒரு நூல் எடிட்டிங் முடிந்து, இறுதியாகப் பிழைதிருத்தத்திற்கு வரும். தமிழ்மொழியில் நல்ல புலமையை வளர்த்துக்கொண்டால் இத்தொழிலை எளிதாகச் செய்யலாம். குறிப்பாகப் புணர்ச்சி விதிகள் தெரிந்திருக்க வேண்டும். அத்தோடு ன, ண வேறுபாடு, ள,ழ,ல வேறுபாடு, ர,ற வேறுபாடு ஆகியன செவ்வனே தெரிந்திருக்க வேண்டும். ஒற்றுப்பிழை, சந்திப்பிழை, இலக்கணப்பிழை, தட்டச்சுப் பிழை முதலிய பிழைகள் ஒரு நூலில் ஏற்பட வாய்ப்புண்டு. அவற்றைக் களைந்து படிப்பதற்கு இலகுவாக அமைத்துக்கொடுப்பதுதான் பிழைதிருத்தப் பணியாகும். சிலர் எடிட்டிங், பிழைதிருத்தம் இரண்டையும் சேர்த்து ஒருவரிடமே கொடுப்பர். வேறு சிலர் இரண்டிற்கும் தனித்தனி ஆளை நியமிப்பர். இரண்டும் தெரிந்திருந்தால் சிறப்பு. ஒரு நூலை நல்லமுறையில் நேர்த்தியாகக் கொண்டுவர பிழைதிருத்தம் உதவுகிறது. இப்பணிக்கு மற்றொரு தகுதி என்னவெனில் கூடுதல் கவனம் ஆகும். எல்லாம் தெரிவது மட்டுமல்ல, கூடுதல் கவனம் செலுத்திப் பார்க்கும் ஆர்வம் இருந்தால்தான் இப்பணியில் சிறக்க முடியும்.

வடிவமைப்பு (லே அவுட்)

கணினியில் ஒரு நூலை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்று தெரிந்துகொண்டு அதற்கேற்ப வடிவமைப்பதே நூல் வடிவமைப்பாகும். ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வடிவமைப்பில் வருகிறது. அந்த வடிவமைப்பின் அளவைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப வடிவமைக்க வேண்டும். அளவுகளை மட்டும் புரிந்துகொண்டால் இப்பணி மிக எளிது. ஒரு பக்கத்திற்கு இவ்வளவு ரூபாய் எனச் சம்பாதிக்கலாம். இன்றைக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏராளமான நூல்கள் வெளிவருகின்றன. எனவே அவற்றை வடிவமைக்கப் பெருமளவில் ஆள் தேவைப்படுகின்றார்கள். அதுதவிர, அரபியும் தமிழும் இணைந்தாற்போல் நூலை வடிவமைக்கும் பணி எல்லோருக்கும் தெரிவதில்லை. அதற்கு மிகுந்த ஆள் பற்றாக்குறை காணப்படுகிறது. ஆலிம்கள் அரபிமொழி அறிவார்கள் என்பதால் இப்பணியை அவர்களிடம் மிகுந்த நம்பிக்கையோடு ஒப்படைக்கக் காத்திருக்கின்றார்கள். செய்வதற்கு நாம்தாம் இன்னும் நம்மைத் தயார்படுத்திக்கொள்ளவில்லை. எனவே இந்தத் துறையில் மிளிர பேஜ்மேக்கர், இன்டிசைன் தெரிந்தால் போதும். நன்றாகச் செய்யலாம். கோரல் ட்ரா தெரிந்தால் கூடுதல் சிறப்பாகும்.

டைப்பிங்

தட்டச்சு என்பது அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அன்று தட்டச்சு இயந்திரம் இருந்தது. இன்று அந்த இடத்தைக் கணிப்பொறி ஆக்கிரமித்துக்கொண்டது. ஆனாலும் இன்றும்கூடத் தட்டச்சுப் பயிற்சி மையங்கள் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.  அத்தோடு அதற்கான தேர்வும் நடைபெறத்தான் செய்கிறது. இருந்தாலும் ஆலிம்கள் அதில் கவனம் செலுத்துகிறார்களோ இல்லையோ கணினியில் தட்டச்சு செய்யும் முறையைக் கற்றுக்கொண்டால் அதையே ஒரு கைத்தொழிலாக மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் அரபி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் தட்டச்சு செய்யத் தெரிந்தால் ஒரு பக்கத்திற்கு இவ்வளவு என நிர்ணயம் செய்துகொண்டு ஒரு கைத்தொழிலாகச் செய்துவரலாம். உர்தூ மொழியில் ஆர்வமிருந்தால் அதையும் தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் உங்கள் இருப்பிடத்திலேயே இருந்துகொண்டு வேலையை மட்டும் செய்துகொடுக்கலாம். பல்வேறு இடங்களுக்குத் தட்டச்சுப் பணியாளர் தேவைப்படுகிறார். ஆகவே தட்டச்சுப் பணி ஒரு சிறந்த கைத்தொழிலாகும். பெரிய நூலகங்களில் மிகப் பழைய நூல்களைப் புதிய பதிப்பாக வெளியிட எண்ணுகிறார்கள். அங்கே தொடர்புகொண்டு அந்நூல்களை நீங்கள் வாங்கித் தட்டச்சு செய்து கொடுக்கலாம். பல்வேறு புத்தக நிலையங்களில் தட்டச்சுப் பணி செய்ய ஆள்கள் தேவைப்படுகிறார்கள்.    பல்வேறு அலுவலகங்களில் தம்முடைய பழைய கோப்புகளைக் கணினியில் ஆவணப்படுத்த முடிவெடுத்துள்ளார்கள். அதுபோன்ற அலுவலகங்களில் டேட்டா என்ட்ரி செய்ய ஆள்கள் தேவைப்படுகிறார்கள். இப்படிப் பல்வேறு துறைகளில் தட்டச்சுப் பணிக்கு ஆள்கள் தேவைப்படுவதால் தட்டச்சுப் பணி ஒரு சிறந்த கைத்தொழிலாகும்.

டிசைனிங்

நூல்களுக்கான அட்டைகள், வாழ்த்து மடல்கள், சுய முகவரி அட்டைகள் உள்ளிட்ட எத்தனையோ பணிகள் கணினி டிசைனிங் மூலமே நடைபெறுகின்றன. கோரல் ட்ரா, இன் டிசைன், ஃபோட்டோஷாப் உள்ளிட்ட மென்பொருள்களை நல்ல முறையில் பயன்படுத்தத் தெரிந்தால் டிசைனிங் பணியைச் செவ்வனே செய்யலாம்.

நூல்கள் வெளியிடுதல்

மக்களுக்குத் தேவையான விசயங்களைத் தொகுத்து நூல்களாக வெளியிடுதல், சுயமாக நூல்கள் எழுதி வெளியிடுதல், பிறர் எழுதிய நூல்களை வாங்கி வெளியிடுதல் உள்ளிட்ட முறையில் நீங்கள் நூல்கள் வெளியிடும் பணியை மேற்கொள்ளலாம்.

இப்படி எத்தனையோ கைத்தொழில்கள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றை நம் வசதிக்கேற்ப, விருப்பத்திற்கேற்பச் செய்துவந்தால் பொருளாதார ரீதியாகப் பிறரிடம் தேவையாகும் நிலை ஏற்படாது. இங்கு நான் குறிப்பிட்டுள்ள சில கைத்தொழில்கள் தவிர வேறு பல தொழில்களும் உள்ளன. அதுவெல்லாம் அவரவர் விருப்பத்தையும் சூழ்நிலையையும் பொறுத்தது. வாழும் காலமெல்லாம் பிறரிடம் தேவையாகாமல் நாமே நம் பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்ள உயர்ந்தோன் அல்லாஹ் உதவிபுரிவானாக.
========================

வெள்ளி, 27 மார்ச், 2015

உணவு வழங்குங்கள்

இடம்:

மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார்,

மணலி, சென்னை 68

 நாள்: 27 03 2015

திங்கள், 23 மார்ச், 2015

பார்வைகள் பலவிதம்


                                மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்.

பார்வை இறைவன் கொடுத்த மாபெரும் வெகுமதி. எதையும் மிகத் துல்லியமாகப் பார்த்து அறிந்துகொள்ள கண்களை அல்லாஹ் படைத்துள்ளான். இன்றைக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட ஒளிப்படக் கருவியின் (கேமரா) அதிகப்பட்ச துல்லிய அளவு (மெகா பிக்சல்) 10 முதல் 15 வரை ஆகும். ஆனால் அல்லாஹ் வழங்கியுள்ள கண்களின் துல்லிய அளவு 576 ஆகும். ஒளிப்படக் கருவியில் அகப்படாத நுண்ணிய பொருள்களையெல்லாம் நம் கண்கள் பார்த்துவிடும். அவ்வளவு கலைநுட்பத்தோடு அல்லாஹ் நம் கண்களைப் படைத்துள்ளான்.

வீணாகவா அதை நமக்கு வழங்கியுள்ளான்? அந்தக் கண்களால் எதையெதைப் பார்க்க வேண்டும், எதையெதைப் பார்க்கக்கூடாது என்ற வரைமுறையையும் அல்லாஹ் தன் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்மூலம் வழங்கியுள்ளான். அந்த நியதிகளையும் நிபந்தனைகளையும் மீறினால் அதன் காரணமாக நம் வினைச்சுவடியில் தீமைகள் எழுதப்படும். அதே நேரத்தில் உரிய முறையில் அக்கண்களைப் பயன்படுத்தினால் வினைச்சுவடியில் நன்மைகள் எழுதப்படும்.
இவ்வுலகில் ஆண், பெண் என்ற ஈரினமே உண்டு. அந்த ஆணைத் தந்தையாக, தனயனாக, அண்ணனாக, தம்பியாக, கணவனாக வேறுபடுத்திக் காட்டுவது நாம் பார்க்கும் பார்வையில்தான் அடங்கியுள்ளது. அவர்கள் எல்லோரும் ஆண்கள்தாம். ஆனால் ஒவ்வொருவரையும் பார்க்கும் கோணம் வேறுபடுகிறது. அதுபோலவே ஒரு பெண்ணைத் தாயாக, தமக்கையாக, புதல்வியாக, அத்தையாக, சிற்றன்னையாக, தாரமாக வேறுபடுத்திக் காட்டுவது நம் பார்வைதான். எல்லோரும் பெண்கள்தாம். இருப்பினும் ஒவ்வொருவரையும் பார்க்கும் கோணம் வேறுபடுகிறது.

தாயைப் பார்க்கும் பார்வை வேறு; தமக்கையைப் பார்க்கும் பார்வை வேறு; தாரத்தைப் பார்க்கும் பார்வை வேறு. பார்க்கும் கண்கள் ஒன்றேயானாலும் பார்க்கும் கோணம் வேறுபடுகிறது. இவ்வாறு வேறுபடுத்திப் பார்க்காமல் போனால் எல்லோருமே பெண்களாகத்தான் தெரிவார்கள். அந்நிலைக்கு ஒருவன் சென்றுவிட்டால், தான் ஈன்றெடுத்த மகளையே மகளாகக் கருதாமல் ஒரு பெண்ணாகவே கருதுவான். அவளையும் புணர்ச்சிகொள்ளவே நாடுவான். புணர்ச்சி விதிகள் மீறப்படும். இதுவே இன்றைய நிலைப்பாடு.

எல்லோரும் பெண்கள்தாம். ஆனால் ஒருவன் திருமணத்தின்மூலமே ஒரு பெண்ணைத் தனக்குரியவளாக ஆக்கிக்கொள்ள முடியும்.  இது இறைவன் வகுத்த நியதி. இந்த நியதியை மீறுவதும் பார்வையால் ஏற்படுகின்ற விளைவுதான். இதற்கு ஆண், பெண் என்ற பாகுபாடும் இல்லை. இருவரும் ஒருவரையொருவர் ஈர்க்கின்றனர். இருவரும் தம் பார்வையால் மதியிழக்கின்றனர். எல்லை மீறுகின்றனர். இதை யாரும் மறுத்துப் பேச முடியாது. ஏனெனில் இன்றைய ஊடகம் அதை உண்மையென வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

இதனால்தான் ஆண், பெண் இருவருமே தத்தம் பார்வையைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும் எனத் திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது. பெண்ணுக்குக் கட்டளையிட்டுவிட்டு ஆணைக் கட்டுப்பாடின்றி விட்டுவிடவில்லை. இருவருக்குமே சமநிலையில் சட்டம் சொல்கிறது திருக்குர்ஆன். பார்வைதான் பாவத்திற்குக் காரணம் என்று பின்வரும் நபிமொழி உரைக்கிறது.

நபி (ஸல்) அவர்கள், அலீ (ரளி) அவர்களைப் பார்த்து, அலீயே, உம் பார்வையை மீண்டும் மீண்டும் என ஆக்காதீர். (எதார்த்தமாகப் பார்க்கும்) முதல் பார்வை உம்முடையது. அடுத்த(டுத்த) பார்வை உமக்குரியது இல்லை (அது ஷைத்தானுடையது) என்று கூறினார்கள். (நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ)

நாம் பாதையில் நடக்கின்றபோதும் நம்மைக் கடக்கின்றபோதும் ஒரு பெண்மீது எதார்த்தமாகப் படுகின்ற நம் முதல் பார்வை இயல்பானது. அவளையே மீண்டும் மீண்டும் பார்ப்பதுதான் ஷைத்தானின் பார்வை. அதாவது அவ்வாறு மீண்டும் மீண்டும் பார்ப்பதுதான் தவறு செய்யுமாறு அவனைத் தூண்டுகிறது. கண்கள் இரண்டும் விபச்சாரம் செய்கின்றன. அவ்விரண்டின் விபச்சாரம் பார்த்தல் ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்) பார்வை உள்ளத்தில் ஆசையை விதைக்கிறது. அவன் பாவம் செய்வதற்கு அதுவே போதும் என ஈசா பின் மர்யம் (அலை) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஈன்றெடுத்த அன்னையைப் பார்ப்பது பாசப் பார்வை; சகோதர, சகோதரிகளைப் பார்ப்பது அன்புப் பார்வை; உற்றார் உறவினரைப் பார்ப்பது பந்தப் பார்வை; இரக்கப்பட்டு ஏழைகளைப் பார்ப்பது பரிவுப்பார்வை; ஆசையோடு தாரத்தைப் பார்ப்பது மோகப் பார்வை; தனக்குரிமையில்லா அந்நியப் பெண்ணைப் பார்ப்பது காமப் பார்வை. இப்படிப் பார்க்கும் கோணத்தில் பார்வைகள் வேறுபடுகின்றன.  இருப்பினும் தகுந்த பார்வை, தகாத பார்வை என இரண்டுதான் உள்ளது. அதைப் புரிந்துகொண்டால் நம் பார்வைகளையே நன்மைகளாக மாற்றலாம்.

மூன்றைப் பார்ப்பதால் நன்மை உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அவை:) 1. பெற்றோரின் முகம், 2. கஅபா, 3. அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்).  (நூல்: அபூதாவூத்) 

ஈன்றெடுத்த பெற்றோரின் முகத்தை அன்போடும் பாசத்தோடும் பார்த்துக்கொண்டே இருப்பதும், ஆதி இறையாலயமான கஅபாவைப் பக்தியோடு கண்ணாரக் காண்பதும், அகில மக்களுக்கோர் அருட்கொடையாக வழங்கப்பட்ட அருள்மறைக் குர்ஆனைக் காண்பதும் நன்மையைப் பெற்றுத் தருவனவாகும். எனவே இனி ஒவ்வொருவரும் தம் பெற்றோரையும் அருள்மறைக் குர்ஆனையும் பார்ப்பதன் மூலமே நன்மையை ஈட்டிக்கொள்ள முயலலாமே?

திருக்குர்ஆனை ஓதத்தெரியாவிட்டாலும், இத்தகைய உயர்வேதத்தை என்னால் வாசிக்க இயலவில்லையே என்ற ஏக்கத்தோடும் கவலையோடும் அதைக் கையில் எடுத்துப் பார்த்துக்கொண்டே இருந்தாலும் அது நன்மையைப் பெற்றுத்தரும் நற்செயலாகும் என்பதை நினைவில் கொள்வோம்.

இன்னும் சற்று ஆர்வத்தோடு பார்வை குறித்த குறிப்புகளைக் காண முற்பட்டபோது திருக்குர்ஆனிலும் இறைத்தூதரின் போதனையிலும் பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன. "இறையச்சமுடையோரின் பார்வையைவிட்டுத் தவிர்ந்துகொள்ளுங்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நல்லடியார்களின் கண்கள் நல்லனவற்றையே பார்க்கக்கூடியவையாகும். ஆகவே அவர்களின் பார்வைக்கு ஒரு வசீகரத்தன்மையும் சுட்டெரிக்கும் திறனும் இருக்கும். அதனால் அவர்களிடம் வீண் வம்பிழுத்து அவர்களின் கோபப்பார்வைக்கு ஆளாகிவிடாதீர்கள் என்பதே நபிகளாரின் எச்சரிக்கையாகும்.

மனிதன் நேரடியாகப் பார்ப்பது ஒருவிதம். ஆனால் அவன் ஓரக்கண்ணால் சிலவற்றைப் பார்க்கிறான்.  குறிப்பாக, பார்க்கக்கூடாதவற்றைப் பார்க்கும்போது பிறர் தம்மைப் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக ஓரக்கண்ணால் பார்ப்பான். அல்லது பிறருக்குத் தெரியாமல் பார்ப்பான். குயுக்தி கொண்ட மனிதனின் இந்தச் செயலைக்கூட அல்லாஹ் திருக்குர்ஆனில் கோடிட்டுக் காட்டியுள்ளதைக் கண்டபோது வியப்புதான் மேலிட்டது.  "(மனிதர்களின்) கண்கள் செய்யும் சூதுகளையும், உள்ளங்களில் மறைந்து இருப்பவற்றையும் இறைவன் நன்கறிவான்.''  (40: 19)

சிலரின் கண்கள் கொள்ளிக்கண்களாக இருக்கும். அவர்கள் பார்த்தால் அவர்கள்தம் கண்களின் கேட்டால் பிறருக்குத் தீமையே விளையும். மயக்கம் கொண்டு கீழே விழுந்துவிடுவார்கள்; அல்லது காய்ச்சல் வரும்; நோய் ஏற்படும். இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கண்ணேறு உண்மைதான் என்று கூறியுள்ளார்கள்.  (நூல்கள்: புகாரீ: 5740, முஸ்லிம்: 4404)

ஆக, மனிதர்களின் பார்வைகள் பலவிதம் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். இருப்பினும்  அப்பார்வையால் நாம் சம்பாதிப்பது நன்மை அல்லது தீமை ஏதேனும் ஒன்றைத்தான். ஆகவே நாம் நம் பார்வைமூலம் நமது வினைச்சுவடியில் நன்மைகளைப் பெருக்கிக்கொள்ள முனைவோமாக.







ஞாயிறு, 22 மார்ச், 2015

அல்லுவுலுவு வல் மர்ஜான்

நான் தொகுத்துள்ள அல்லுவுலுவு வல் மர்ஜான் எனும் ஹதீஸ் நூலை சாஜிதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
பக்கம் 948

விலை  400

சனி, 14 மார்ச், 2015

கட்டுரை வாசித்தபின் சான்றிதழ் பெற்றபோது....

23 02 2015 அன்று பி எஸ் ஏ அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நாள் அரபி கான்பரன்ஸ் -இல் கலந்துகொண்டு கட்டுரை வாசித்தபின் சான்றிதழ் பெற்றபோது....

வியாழன், 19 பிப்ரவரி, 2015

உத்தம நபியும் உளவியலும்


          மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்.,

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மனங்களை அறிந்து அதற்கேற்பச் செயல்படுபவர்கள் என்பதை நாம் அறிவோம். மக்கள் மனங்களில் சிறு கீறல்கூட விழுந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். ஒவ்வொரு வார்த்தையாக நிதானமாகப் பேசும் பண்புடையவர்கள். மக்களுக்குப் புரிந்ததோ இல்லையோ என்பதற்காகப் பெரும்பாலும் மும்மூன்று தடவை கூறுவார்கள். உளவியல் என்பது என்ன? மக்களின் உளமறிந்து அவர்களுக்கேற்றவாறு நடந்துகொள்வதே ஆகும். இதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள்தாம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

பிறரின் உள்ளத்தை ஒரு கண்ணாடியைப்போல் பாவித்து, தாம் பேசும் சொற்கள் கடுமையாகவோ சூடாகவோ இருந்தால் அவைகூட அக்கண்ணாடியில் கீறலை ஏற்படுத்திவிடும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்திப் பேசுவார்கள். அதேநேரத்தில் மக்கள் இஸ்லாமிய ஷரீஅத்திற்கு முரணாகச் செயல்படுகிறபோது மிகுந்த சினம் கொண்டிருக்கின்றார்கள். அது அவர்கள் மக்கள்மீது கொண்ட வெறுப்பன்று.  ஷரீஅத் சட்டத்திற்குச் செலுத்திய மரியாதையும் கண்ணியமும் முக்கியத்துவமும் ஆகும்.

சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள், தோழர்கள், அயல்நாட்டினர், மனைவியர் எனப் பலதரப்பட்ட மக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள். அத்தனை பேரிடமும் மிகுந்த கவனத்தோடும் மரியாதையோடும் உரையாடியிருக்கிறார்கள் என்பதைக் காணும்போது நாம் மிகுந்த வியப்படைகிறோம்.

தொடர்ந்து தம்மீது குப்பையைக் கொட்டிய மூதாட்டி ஒரு நாள் குப்பையைக் கொட்டாததால், அவரைப் பற்றி அருகிலுள்ளோரிடம் விசாரித்து, அம்மூதாட்டிக்கு நோய் என்று கேள்விப்பட்டதும் அவர் தமக்குச் செய்த கொடுமையை மனதில் எண்ணாமல் மிகுந்த அக்கறையோடு சென்று அம்மூதாட்டியை நலம்  விசாரிக்கின்றார்கள். நபிகளாரின் வருகையைச் சற்றும் எதிர்பாராத அம்மூதாட்டி செய்வதறியாது மனமுருகுகிறாள். மனம் நெகிழ்ந்து இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்கிறாள். 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்த போது அருகே விளையாடிக்கொண்டிருந்த பேரர் ஹசன் (ரளி) நபிகளாரின் முதுகில் ஏறி அமர்ந்துகொண்டார். அச்சமயத்தில் அண்ணல் நபியவர்கள் சஜ்தா நிலையில் இருந்தார்கள். அன்று அவர்கள் தம் தலையை உயர்த்துவதற்கு நீண்ட நேரமாகிவிட்டது. தொழுகை முடிந்தபின், நீண்ட நேரம் சஜ்தாவிலிருந்து எழாதது குறித்து வினவப்பட்டபோது, என் பேரர் முதுகில் அமர்ந்துகொண்டிருந்தார். அவருடைய விளையாட்டை முடித்துக்கொண்டு இறங்கும் வரை நான் அவருடைய விளையாட்டை நிறுத்த விரும்பவில்லை என்று பதிலளித்தார்கள்.

ஒரு தடவை தம் துணைவியார் ஆயிஷா (ரளி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். திடீரென நடுநிசி நேரத்தில் அல்லாஹ்வின் உத்தரவுக்கிணங்க எழுந்து செல்ல எத்தனிக்கிறார்கள். எனவே மெதுவாக எழுந்து, மெதுவாக ஆடைகளை அணிந்துகொண்டு மெதுவாகக் கதவைத் திறந்து வெளியே சென்று மெதுவாகக் கதவை மூடினார்கள். உறங்கிக்கொண்டிருக்கிற தம் துணைவியாரின் உறக்கத்திற்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு எல்லாவற்றையும் மெதுவாகச் செய்தார்கள். அந்நேரத்தில் எதேச்சையாக விழித்துக்கொண்ட அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள்தாம் இச்செய்தியையே நமக்குத் தெரிவிக்கின்றார்கள்.

இன்றைய மனிதர்களின் நிலையைச் சற்று ஒப்பிட்டுப் பார்க்கிறோம். திடீரென வெளியே புறப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், உடனே தூங்கிக்கொண்டிருக்கிற மனைவியை எழுப்புவது அல்லது எல்லா மின்விளக்குகளையும் போட்டுவிட்டுத் தடதடவென ஒரு சப்தத்தோடு வெளியே புறப்படுவதுதான் நம்முள் பெரும்பாலோரின் நிலை.

ஒரு பெண்மணி அன்போடு நபிகளாருக்குத் திராட்சைப் பழத்தைக் கொண்டுவந்து கொடுத்தார்.  எப்போதும் தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கும் பழக்கமுடைய நபிகளார் அன்று எல்லாவற்றையும் தாமே உண்டு முடிக்கின்றார்கள். அதைப் பார்த்துக்கொண்டிருந்த அப்பெண்மணி மிக்க மகிழ்ச்சியோடு திரும்புகிறார். வழமைக்கு மாறான நபிகளாரின் செயலைக் கண்ட தோழர்கள் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  அப்பெண்மணி சென்றபின் அதற்கான காரணத்தைக் கேட்கின்றார்கள். அதற்கவர்கள், நான் முதல் பழத்தைச் சாப்பிடவுடனேயே அதன் புளிப்புச்சுவையை உணர்ந்துகொண்டேன். அதை உங்களிடம் கொடுத்தால், இது புளிக்கிறது என்று கூறி அப்பெண்மணியின் மனதைச் சங்கடப்படுத்தியிருப்பீர்கள். எனவேதான் நான் உங்களுக்குத் தராமல் நானே அனைத்தையும் சாப்பிட்டேன் என்று பதிலளித்தார்கள்.

ஒரு முஸ்லிமின் நாவிலிருந்தும் கையிலிருந்தும் எவர் பாதுகாப்புப் பெறுகின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் என்ற நபிகளாரின் கூற்றிற்கு அவர்களே முதல் உதாரணம். தம் நாவால் பிறர் மனதைப் புண்படுத்திவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமும் அக்கறையும் கொண்டிருக்கின்றார்கள்.

நாம் இன்றைக்கு எத்தனையோ உறவினர்களைச் சந்திக்கிறோம். அவர்களோடு உரையாடும்போது சூடான, கோபமான வார்த்தைகளால் அவர்களின் மனதை நாம் புண்படுத்திவிடுகிறோம். அவர்களின் இளகிய மனதைக் காயப்படுத்திவிடுகிறோம். நம்மிடம் நாள்தோறும் உரையாடக்கூடிய நம் அன்பான மனைவியின் உள்ளத்தை நம் வார்த்தைகளால் காயப்படுத்துகிறோம். சில பெண்கள் தம் கணவரின் புண்பட்ட உள்ளத்திற்கு மருந்திடுவதற்குப் பதிலாக வார்த்தைகளால் காயப்படுத்துவதைக் கேள்விப்படுகிறோம். இப்படியாக மனைவி, பிள்ளைகள், தாய், தந்தை, உறவினர்கள் முதலானோரின் உள்ளங்களைக் காயப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறோம். ஆனால் அவர்களின் அன்பான மனதை நாம் உணர்வதே இல்லை. நபிகளார்மீது ஆழிய அன்புகொண்டுள்ள நாம் பிறர் மனதைப் புண்படுத்தாமல் பண்படுத்தும் வார்த்தைகளைப் பேசுவோம். அதுவே நம்மை அவர்களின் மனதில் உயர்ந்தவராகக் காட்டும்.   ===


சனி, 31 ஜனவரி, 2015

வட்டியில்லா இஸ்லாமிய வங்கி




அணிந்துரை
 
                -மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்., (பிஎச்.டி.)
(மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர்)
-----------------------------------------------------------------------------------------
                ஹாஜி நூ. முஹம்மது கனி அவர்கள் வட்டியில்லா இஸ்லாமிய வங்கிஎனும் நூலை என்னிடம் கொடுத்து, இந்நூலைப் பிழைதிருத்தம் செய்து, தமிழ்நடையைச் செம்மைப்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று, நான் இந்நூலைப் புரட்டிய போது இந்நூலாசிரியரின் புலமை எனக்குப் புலப்பட்டது. இஸ்லாமிய வங்கியின் செயல்பாடுகளைப் பற்றித் தெளிவாகவும் அதே நேரத்தில் சுருக்கமாகவும் பல்வேறு நூல்களிலிருந்து தொகுத்துத் தந்திருக்கிறார். இந்நூல் இஸ்லாமிய வங்கியின் செயல்பாடுகள் குறித்துத் தெளிவாக விளக்குகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.
 
                ஹாஜி நூ. முஹம்மது கனி அவர்கள் எம். காம். பட்டதாரியாக இருப்பதால் பொருளாதாரப் பாடத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவராகத் திகழ்கிறார். இவர் ஏற்கெனவே பல ஆங்கில நூல்களையும்  டாக்டர் ஜாகிர் நாயக்கின் பேச்சுகள், விவாதங்கள் ஆகியவற்றையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அவ்வப்போது வெள்ளிக்கிழமைகளில் உரையாற்றுவதும் சமுதாயப் பணிகளில் ஈடுபடுவதும் சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதும் இவருக்குப் பிடித்தமானவை. காசு, பணம் என்ற எந்த எதிர்பார்ப்புமின்றி இவற்றை இவர் செய்துவருவதால் அல்லாஹ்வே இவருக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி கொடுக்கப் போதுமானவன். 
 
                இன்று வட்டியின் கோரப்பிடியில் சிக்குண்டு தவிப்போர் பலர். தம் அவசர உதவிக்காக என்று கூறி, அறவே சிந்திக்காமல் அவசரமாக வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாமல், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி, வட்டிக்கு வட்டி கட்டி நொந்து போவோர் பலர் நமக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். தெரியாமல் வாங்கிவிட்டு, இப்போது வட்டி கட்ட முடியாமல் சிரமப்படுகிறேன். இதி-ருந்து சீக்கிரம் மீள வேண்டுமே என்று மனதுக்குள் சஞ்சலத்தோடு வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அல்லாஹ் கூறியுள்ள அழகிய கடன் என்பதை அறவே மறந்துவிட்டார்கள் செல்வந்தர்கள். அதனால்தான் வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு முஸ்லிம்கள் ஆளாகின்றார்கள்.
 
                மற்றொரு புறத்தில், நாங்களெல்லாம் வட்டியிலிருந்து தப்பித்துக்கொண்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுபவர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே வட்டி எனும் தீமைக்குள் மூழ்கிக் கிடக்கின்றார்கள். உண்மையில், அதுவெல்லாம் வட்டிதான் என்று அவர்களுக்குத் தெரியாது. தம்மையும் அறியாமல் வட்டி எனும் தீமைக்குள் மூழ்கிக் கிடக்கின்றார்கள். இன்னும் சிலர், வட்டிக்கு வேறு பெயர்களை இட்டுக்கொண்டு அதை முழு மனதோடு அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய நிலைகளில் வாழ்வோர் மார்க்கச் சட்டப்படி எது வட்டி, எது வட்டியில்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
 
                முஸ்லிம்கள் அனைவரையும் வட்டி எனும் தீமைக்குள் கொண்டுவர யூதச் சமுதாயம் சூழ்ச்சி செய்தது; செய்துகொண்டிருக்கிறது. அதன் விளைவாக, நம்முள் பலர் தம்மை அறியாமலே அதனுள் நுழைந்துவிட்டார்கள். அது வட்டி என்று தெரியாமல் அதை வாங்கிக்கொண்டிருக்கின்றார்கள். அல்லது கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். வேறு சிலர் காலத்திற்கேற்ற மார்க்கத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில்  வட்டி சார்ந்த சில நடைமுறைச் செயல்பாடுகளைச் செல்லத்தக்கனவாக அறிவித்துள்ளனர். அது சமுதாய மக்களுக்குச் சாதகமாகப் போய்விட்டதால் உறுத்தல்இல்லாமல் உளப்பூர்வமாக அது சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
 
 
                வங்கி என்பதே ஒரு வட்டி நிறுவனம்தான். அங்கு முதலீட்டாளர்களுக்கு வட்டி கொடுப்பதும் கடன் பெற்றோரிடமிருந்து வட்டி வாங்குவதும்தான் அதன் முக்கியத்தொழில். எனினும் காலத்தின் கட்டாயத்தையும் அரசாங்க நிர்ப்பந்தத்தையும் கருதியே வங்கிக் கணக்கைத் தொடங்குகிறோம். அதாவது ஒருவருக்கு வங்கிக்கணக்கு இருந்தால்தான் வரைவோலை, காசோலை உள்ளிட்டவற்றை மாற்றுவது எளிதாகும். அது மட்டுமின்றி ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் நாம் பிறருக்குக் கொடுத்தால், அதைப் பணமாகக் கொடுக்கக்கூடாது. காசோலையாகவோ, வரைவோலையாகவோதான் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இது போன்ற காரணங்களுக்காக வங்கியில் கணக்கு வைத்துக்கொள்வது கூடும். எனினும் அது இஸ்லாமிய வங்கியாக இருந்துவிட்டால் தடைசெய்யப்பட்ட வட்டி எனும் பாவத்திலிருந்து நாம் முற்றிலும் விலகிக்கொள்ள முடியும்.
 
                இஸ்லாமிய வங்கி முறை எப்படி இயங்குகிறது என்றால் பொதுமக்கள் முதலீடு செய்கின்ற பணம் அனைத்தும் கூட்டாண்மை வணிகம் என்ற அடிப்படையில் பெறப்பட்டு, வங்கி ஈடுபடுகின்ற வியாபாரத்தில் கிடைக்கின்ற இலாபத்தொகை பொதுமக்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்படுகிறது. எனவே இது வட்டியாகாமல் இலாபத்தில் கிடைக்கின்ற பங்காகக் கருதப்படுகிறது. இந்தப் பங்கின் அளவு குறிப்பிட்ட அளவாக இருக்காது. வங்கிக்கு இலாபம் எவ்வளவு கிடைக்கிறதோ அதைப் பொறுத்து முதலீட்டாளர்களுடைய பங்கின் அளவு கூடலாம், குறையலாம் என்ற நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருப்பதால் யாருக்கும் எந்தச் சிரமமும் இல்லை. ஆக இஸ்லாமிய வங்கி முறை நம்மை வட்டியிலிருந்து காப்பதோடு பயனையும் நல்குகிறது. எனவே இஸ்லாமிய வங்கி முறையை நாம் ஊக்குவிக்கப் பாடுபடுவோம். இதை நாம் பிறருக்கு அறிமுகப்படுத்துவோம்.
 
                இந்நூலாசிரியருக்கும் இதைப் படிப்போருக்கும் இந்நூலைப் பிறருக்கு அறிமுகப்படுத்துவோருக்கும் ஏக இறைவன் அல்லாஹ் எல்லா நலன்களையும் இம்மையிலும் மறுமையிலும் குறைவின்றித் தருவானாக. ஆமீன்.
                                                                                                                அன்புடன்
                                                                                                                நூ. அப்துல் ஹாதி பாகவி (ஆலங்குடி)
                                                                                                                சென்னை 81
 
இந்நூலைப் பெறத் தொடர்புகொள்க: சாஜிதா புக் சென்டர் 248 தம்புச் செட்டித் தெரு, மண்ணடி, சென்னை-1 போன்: 044 2522 4821/ 98409 77758 விலை: ரூ. 40/-

திங்கள், 19 ஜனவரி, 2015

தாயும் சேயும்








மருமகனும் மருமகளும் பிள்ளைகளே!

-மௌலவி நூ.அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்., ஓர் ஆண் திருமணம் செய்துகொண்டால் அவனுடைய மனைவியின் பெற்றோருக்கு மற்றொரு மகனாக ஆகிவிடுகின்றான். அதனால்தான் அவனுக்கு அவனுடைய மனைவியின் தாய்-மாமியார் திரையிட வேண்டிய அவசியமில்லை. அதேபோல் திருமணத்திற்குப் பின் ஒரு பெண் தன் கணவரின் பெற்றோருக்கு மற்றொரு மகளாக ஆகிவிடுகின்றாள். அதனாலேயே அவள் தன் கணவனின் தந்தைக்குமுன் திரையிட வேண்டிய அவசியமில்லை என்று இஸ்லாம் கூறுகிறது. ஆக திருமணத்திற்குப்பின் பெண்வீட்டாருக்கு ஒரு மகனும் ஆண்வீட்டாருக்கு ஒரு மகளும் கிடைக்கின்றனர். இது இயல்பாக இறைவன் ஏற்படுத்திய உறவு. இந்த உறவை இருவீட்டாரின் பெற்றோரும் எந்த அளவுக்குப் பாதுகாக்கின்றனர். அல்லது எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதே இன்று நம்முன் நிற்கும் வினா. மருமகனைப் பொறுத்தமட்டில் சில ஊர்களில் தம் மகனாகக் கருதுவோர் உண்டு. சில ஊர்களில் திருமணத்திற்குப்பின் மணமகளுக்குப் பதிலாக மணமகனே மணப்பெண் வீட்டிற்குக் குடிபெயர்கின்றார். இப்படிப்பட்ட நிலையில் அங்கு மருமகள் கொடுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் அவள் தாய் வீட்டிலேயே இருந்துவிடுகிறாள். பொதுவாக நாம் நாளிதழ்களில், மாமியார் தம் மருமகளுக்கு இழைக்கின்ற கொடுமையைத்தான் படிக்க நேரிடுகிறது. மிக அரிதாகவே மருமகள் தன் மாமியாரைக் கொடுமைப்படுத்துவது நடக்கிறது. இது எதனால்? ஒரு மாமியார் தம் மருமகளைத் தம் மகளாகக் கருதாததால் ஏற்படுகின்ற வினையையே நாம் அன்றாடம் காண்கிறோம். ஒவ்வொரு மாமியாரும் தம் மருமகளைத் தாம் ஈன்றெடுத்த மகளாகக் கருதத் தொடங்கிவிட்டால் இதுபோன்ற பிரச்சனைகள் அருகிவிடும். மேலும், ஒவ்வொரு மாமியாரும் தம் மருமகனை மகனாகக் கருதி வாழத் தொடங்கிவிட்டால் வாழ்க்கைப்பட்ட வீட்டிலிருந்து பிரச்சனையோ சிக்கலோ தலைதூக்காமல் பார்த்துக்கொள்ளலாம். திருமணத்திற்குப்பின் ஒவ்வொரு தாயும் தன் மகளைப் பார்த்து, எப்படிமா இருக்குறே? மாப்ளே உன்னெ நல்லா கவனிச்சுக்குறாரா? என்று கேட்பது வழக்கம். இதே வினாவைச் சற்று மாற்றி, அத்தாய் தன் மருமகனிடம், என்னங்க மருமகனே, என் மகள் உங்களை நல்லா கவனிச்சுக்குறாளா? நீங்க சொன்னபடி கேட்டு நடக்குறாளா? என்று கேட்கத் தொடங்கினால் மருமகன் மனது குளிரும். பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனுக்குடன் களைய வசதியாக இருக்கும். மணவிலக்கு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. ஆனால் இப்படிக் கேட்கின்ற துணிவு எத்தனை அன்னையருக்கு இருக்கிறது? அது போலவே ஓர் ஆணைப் பெற்றெடுத்த ஒரு தாய் தன் மகனின் வாழ்வையே முக்கியமாகக் கருதுகிறாளே தவிர தன் மருமகளைத் தன் மகன் நன்றாகக் கவனித்துக்கொள்கின்றானா, தாம்பத்திய உறவில் மருமகளுக்குத் திருப்தியளிக்கும் விதத்தில் நடந்துகொள்கின்றானா என்பதைக் கவனிப்பதில்லை. தன் மருமகளிடம் இதுகுறித்தெல்லாம் சாடைமாடையாகக் கேட்டுத்தெரிந்து கொள்ளத் துணிவதில்லை. ஆனால் இது குறித்துக் கேட்பது அவளது கடமை. இதே வினாவைப் பெண்ணைப் பெற்ற தாயும் தன் மருமகனிடம் சாடைமாடையாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். தாம்பத்திய வாழ்வில் பிணக்கு என்றால் அதை உடனடியாகத் தன் மகளிடம் பக்குவமாக எடுத்துக்கூறிச் சரிப்படுத்த முனைய வேண்டும். ஏனெனில் தம்பதியருக்கிடையே தாம்பத்திய உறவில் பிணக்கு ஏற்படாமல், இருவருக்கும் திருப்தி ஏற்படும் வகையில் ஏற்பாடு செய்துவிட்டால் மற்ற பிரச்சனைகள் நீர்த்துப் போய்விடும். இதை எத்தனை மாமியார்கள் செய்கின்றனர்? இது போன்ற பிரச்சனைகளை ஒவ்வொரு மாமியாரும் முன்னின்று கவனித்து தன் மருமகனை மகனாகக் கருதி, தன் மருமகளை மகளாகக் கருதி வாழத் தொடங்கிவிட்டால் தம்பதியருக்கிடையே மணவிலக்கு ஏற்படாது. மாமியார்-மருமகள் சண்டையும் ஏற்படாது. மாறாக, இவைபோன்ற விசயங்களில் அக்கறை காட்டாமல், முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பிரச்சனைகளையெல்லாம் பெரிதாக வளரவிட்டு, இறுதியில் வெட்ட முற்படுவதால் பல மனங்கள் உடையத் தொடங்குகின்றன. பின்னர் அவற்றை ஒட்டவே முடிவதில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கின்றபோது தெளிவான படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ஒரு தடவை, அலீ-ஃபாத்திமா (ரளி-அன்ஹுமா) இருவருக்குமிடையே ஒரு சிறு பிணக்கு ஏற்பட்டுவிட்டது. அச்சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் நடந்துகொண்ட முறை ஒரு மாமனார் தம் மருமகனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகிறது. சஹ்ல் பின் சஅத் (ரளி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வி) ஃபாத்திமா (ரளி) அவர்களின் இல்லத்திற்கு வந்தபோது (மருமகனான) அலீ (ரளி) அவர்கள் வீட்டில் காணவில்லை. ஆகவே, உன் பெரிய தந்தையின் புதல்வர் எங்கே?'' என்று கேட்க, அதற்கு ஃபாத்திமா (ரளி) அவர்கள், "எனக்கும் அவருக்கும் இடையே சிறிய பிணக்கு ஏற்பட்டது. ஆகவே அவர் என்னைக் கோபித்துக்கொண்டு என்னிடம் ஏதும் சொல்லாமல் (வீட்டி-ருந்து) சென்றுவிட்டார் (அவர் பள்ளிவாசலுக்குள் இருக்கலாம்)'' என்று கூறினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், "அவர் எங்கே என்று பாருங்கள்'' என்று சொன்னார்கள். உடனே அந்த மனிதர் (சென்றுவிட்டு) வந்து, "அவர் பள்ளிவாசலில் உறங்கிக்கொண்டிருக்கிறார், அல்லாஹ்வின் தூதரே!'' என்றுரைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிக்குள்) வந்தபோது அவருடைய மேலங்கி அவரது முதுகிலிருந்து (தரையில்) விழுந்துவிட்டிருக்க அவரது மேனியில் மண் படிந்திருக்கும் நிலையில் அவர் ஒருக்களித்துப் படுத்திருக்கக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரளி) அவர்களின் மேனியிலிருந்த மண்ணைத் துடைத்தவாறே "எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே! எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே!!'' என்று கூறலானார்கள். (புகாரீ: 441) தம் மகளிடம் கோபித்துக்கொண்டு சென்று பள்ளிவாசலில் படுத்திருந்த அலீ (ரளி) அவர்களை மெதுவாகத் தட்டியெழுப்பி மீண்டும் தம் மகளோடு சேர்த்து வைக்கின்றார்கள். இது போன்ற மென்மையான நடைமுறையை இன்றைய மாமனார்கள் கடைப்பிடிக்க வேண்டும். மற்றொரு நிகழ்வைப் பாருங்கள்: அலீ பின் அபீதாலிப் (ரளி) அவர்கள் கூறியதாவது: (என் துணைவியார்) ஃபாத்திமா அவர்கள் (மாவு அரைக்கும்) திரிகை சுற்றியதால் தமது கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (என்னிடம்) முறையிட்டார். (இது தொடர்பாக நபியவர்களிடம் தெரிவிக்கும்படி நான் கூறினேன்.) ஆகவே, ஒரு பணியாளரை (தமக்குத் தரும்படி) கேட்க நபி (ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா சென்றார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அப்போது (வீட்டில்) இல்லாததால் ஆயிஷா (ரளி) அவர்களிடம் அது பற்றிக் கூறி(விட்டுத் திரும்பலா)னார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களிடம் ஆயிஷா (ரளி) அவர்கள் விஷயத்தைத் தெரிவித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (அவர்களைக் கண்டவுடன்) நான் எழுந்திருக்க முற்பட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள், "(எழுந்திருக்க வேண்டாம்) அந்த இடத்திலேயே இருங்கள்'' என்று கூறிவிட்டு எங்களுக்கு நடுவில் வந்து அமர்ந்துகொண்டார்கள். அப்போது (என்னைத் தொட்டுக்கொண்டிருந்த) அவர்களுடைய பாதங்களின் குளிர்ச்சியை எனது நெஞ்சின்மீது உணர்ந்தேன். (அந்த அளவுக்கு நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள்.) "பணியாளரைவிட உங்களிருவருக்கும் (பயனளிக்கும்) சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் படுக்கைக்குச் சென்றதும் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் பெரியவன்) என்று முப்பத்து நான்கு முறையும், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று முப்பத்து மூன்று தடவையும், அல்ஹம்து லில்லாஹ் (புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே) என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். இது பணியாளைவிட உங்கள் இருவருக்கும் சிறந்ததாகும்'' என்று சொன்னார்கள். (நூல்: புகாரீ: 6318). நபி (ஸல்) அவர்கள் தம் ஈரக்குலையான மகளின் நலத்தைப் பெரிதெனக் கருதவில்லை. திரிகை சுற்றி மாவரைத்து, அதன்மூலம் தம் கணவருக்குச் செய்கின்ற பணிவிடை காரணமாக அவருடைய கையில் காய்ப்பு ஏற்பட்டுவிட்டது. அது குறித்து அலீ (ரளி) அவர்கள்மீது சினம் கொள்ளவில்லை. மாறாக, தம் மகளுக்கு இறைவனின் துதியைக் கற்றுக்கொடுக்கின்றார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரளி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். அப்போது அவள் மாதவிடாய்ப் பருவத்தில் இருந்தாள். ஆகவே (என் தந்தை) உமர் பின் கத்தாப் (ரளி) அவர்கள் இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையாரிடம், "உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்: அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும் வரை அவளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும். பிறகு அவர் விரும்பினால், (இரண்டாம் மாதவிடாயிலிருந்து தூய்மையான) பின்னர் (தொடர்ந்து அவளைத்) தம்மிடமே (தம் மனைவியாக) வைத்திருக்கட்டும். அவர் (மணவிலக்குச் செய்ய) விரும்பினால் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன்பாக அவளை மணவிலக்குச் செய்யட்டும். (மாதவிடாயிலிருந்து தூய்மையான) இந்தக் காலக் கட்டமே மனைவியரை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் (2: 228ஆம் வசனத்தில்) அனுமதித்துள்ள காலக் கட்டமாகும்'' என்று சொன்னார்கள். (நூல்கள்: முஸ்லிம், நசாயீ) மணவிலக்குச் செய்யப்பட்டு நம்மை விட்டுப் போகப்போகின்றவள்தானே என்று விட்டுவிடாமல் தம் மகன் செய்த இச்செயல் ஷரீஅத் முறைப்படி சரியானதுதானா என்று தெரிந்துகொள்வதற்காகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்கின்றார்கள். அது ஷரீஅத் முறைப்படி சரியில்லை என்று அவர்கள் விளக்கமளித்தபின் தெளிவுபெறுகின்றார்கள். எப்போது தலாக் விட்டாலும் அது செல்லுபடியாகிவிடும் என்பது வேறு விசயம். ஆனால் அதிலும் ஓர் ஒழுங்குமுறையை இஸ்லாம் போதிக்கிறது. அது பெண்களுக்குச் சாதகமானது. அது அவர்களின் அடுத்த திருமணத்திற்கான வழியை எளிதாக்குகிறது. ஆக உமர் (ரளி) அவர்கள் தம் மருமகள்மீது கொண்ட அக்கறையை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மருமகன்மீது காட்டிய அக்கறையை இன்றைய மாமனார்கள், மாமியார்கள் தம் மருமகன்கள்மீதும் மருமகள்கள்மீதும் காட்ட வேண்டும். மருமகள்களும் மருமகன்களும் உங்களின் பிள்ளைகளே என்பதை உணருங்கள்.

திங்கள், 12 ஜனவரி, 2015

நபிகளார் நவின்ற மூன்றுகள் (தொடர் 19) (மூன்றே மனிதனின் சொத்து) மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., “அடியான், ‘என் செல்வம்; என் செல்வம்’ என்று கூறுகின்றான். அவனுடைய செல்வங்களில் மூன்று மட்டுமே அவனுக்குரியவையாகும். அவன் உண்டு கழித்ததும், அல்லது உடுத்திக் கிழித்ததும், அல்லது கொடுத்துச் சேமித்துக்கொண்டதும்தான் அவனுக்கு உரியவை. மற்றவை அனைத்தும் கைவிட்டுப் போகக்கூடியவையும், மக்களுக்காக அவன் விட்டுச் செல்லக்கூடியவையும் ஆகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 5666) நிலையில்லா இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் எல்லாமே என்னுடையது, எல்லாமே எனக்குரியது என்று அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றான். அதனால்தான் தான் சம்பாதித்தவற்றிலிருந்து பிறருக்குக் கொடுத்துதவ மறுக்கின்றான். எல்லாவற்றையும் தானே அனுபவித்துவிட வேண்டுமென எண்ணுகிறான். ஆனால் அதற்குள் மரணம் அவனைக் கவ்விப் பிடித்துக்கொள்கிறது. சரி, இதைப் பார்க்கின்ற மற்றொரு மனிதனாவது திருந்துகின்றானா என்றால் இல்லை. அவனும் அப்படித்தான் செயல்படுகின்றான். ஆக மனித இனமே அத்தகைய நிலையில்தான் உள்ளது என்பதை நாம் அறிய முடிகிறது. ஒருவன் தான் வாழ்கின்றபோது சம்பாதித்துச் சேர்த்து வைத்தவையெல்லாம் அவனுக்குரியவை அல்ல என்றும் அவன் நல்லபடியாக உண்டு கழித்ததும், சிறந்த ஆடைகளை உடுத்திக் கிழித்ததும், இயன்ற வரை பிறருக்குக் கொடுத்துச் சேமித்துக்கொண்டதும்தான் அவனுக்கு உரியவை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எவ்வளவு உயரிய தூரப்பார்வை. இத்தகைய தூரப்பார்வை எல்லா மனிதருக்கும் இருந்துவிட்டால் இவ்வுலகில் பொருளாதாரத்தை ஈட்டுவதில் அவர்களுக்கு மத்தியில் போட்டி, பொறாமை, வஞ்சகம், சூது இவையெல்லாம் நொடிப்பொழுதில் அற்றுப் போய்விடும். எல்லோரும் நிம்மதியாக வாழ்வார்கள். தர்மம் செய்வதிலும் பிறருக்கு வாரி வழங்குவதிலும் மனிதன் போட்டிபோடத் தொடங்கிவிடுவான். உண்டு கழித்தது என்றால் ஒருவன் தனக்காக உண்பதையே குறிக்கும். அதேநேரத்தில் தன் பிள்ளைகள், மனைவியர் ஆகியோருக்கு வாங்கிக் கொடுப்பது தர்மம் ஆகும். ஆம். நீ உன் மனைவிக்கு ஊட்டும் ஒரு கவள உணவும் உனக்கு தர்மம் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே மனைவிக்கு வழங்கும் உணவிற்காக அல்லாஹ் நன்மையைத் தந்துவிடுகின்றான். மனிதர்களுள் சிலர் தமக்காகவே வாங்கி உண்பதில்லை. பின்னர் தம் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் எப்படி வாங்கிக் கொடுப்பார்கள்? பிறகு சக மனிதர்களுக்கு எப்படிச் செலவு செய்வார்கள்? ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவருள் ஒருவர், “அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!’’ என்று கூறுவார். மற்றொருவர் “அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக்கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!’’ என்று கூறுவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 1442) பொதுவாக, செலவு செய்தல் என்ற பழக்கம் எல்லாருக்கும் வாய்க்காது. ஏனெனில் பணத்தைச் செலவு செய்தால் தீர்ந்து போகும் என்ற எண்ணமே முதலில் மனதில் வந்து நிற்கும். அந்த எண்ணத்தை நீக்கிவிட்டுச் செலவு செய்தல் அவ்வளவு எளிதானதன்று. ஏனெனில் அது மனம் சார்ந்தது. ஆகவே இறையச்சமும் இறைநம்பிக்கையும் மிகுதியாக உள்ளோரே செலவு செய்ய முனைவர். ஏனையோர் செலவு செய்ய யோசிப்பார்கள். சேர்த்து வைக்கவே எண்ணுவார்கள். அவ்வளவு எளிதில் தம் பணத்தைப் பிறருக்குச் செலவு செய்ய முனைய மாட்டார்கள். உடுத்திக் கிழித்தல் என்பது, ஒருவன் தன் வாழ்நாளில் நல்ல ஆடைகளையும் புத்தாடைகளையும் வாங்கி உடுத்தி அதற்காகச் செலவு செய்தலைக் குறிக்கிறது. ஆடை என்பது ஒருவர் தம் மானத்தை மறைப்பதற்காக என்றாலும் ஆள் பாதி, ஆடை பாதி என்பதற்கேற்ப நல்ல ஆடைகளை அணிவது பிறரின் பார்வைக்கு அழகாகத் தெரிவதற்கும் சேர்த்துத்தான் என்பதை அனைவரும் அறிவோம். எனவே பிறரின் பார்வைக்கு அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக உடுத்துகின்ற ஆடை நல்ல ஆடையாகவும் சுத்தமானதாகவும் இருக்க வேண்டும். அப்படியெனில் அதற்காக நாம் செலவு செய்துதான் ஆக வேண்டும். ஆதமுடைய மக்களே! உங்களுடைய மானத்தை மறைக்கக்கூடியதும் (உங்களை) அலங்கரிக்கக்கூடியதுமான ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றோம். எனினும், (பாவங்களை மறைத்துவிடக்கூடிய) இறையச்சம் எனும் ஆடைதான் மிக்க மேலானது (7: 26) என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். இருப்பினும் எல்லா ஆடைகளுக்கும் மேலாக ஒருவர் அணிந்துகொள்ளும் இறையச்சம் எனும் ஆடையே உயர்வானது, மேலானது என்று அல்லாஹ் கோடிட்டுக் காட்டாமல் விட்டுவிடவில்லை. ஆகவே நம்முடைய ஆடைக்காக நாம் செலவு செய்கிறோம். ஆனால் அது பிறரின் பார்வைக்கு அழகாகத் தென்பட வேண்டும் என்பதற்காக இருக்கலாமே தவிர பகட்டுக்காகவும் பெருமைக்காகவும் இருக்கக் கூடாது. இருப்பினும் சிலர் போதிய வசதியிருந்தும் தம் ஆடைக்காகச் செலவு செய்ய மாட்டார்கள். பழைய ஆடையையே உடுத்திக்கொண்டிருப்பார்கள். ஆடைக்காகச் செலவு செய்தால் பணம் தீர்ந்துபோகும் என்ற கவலை. அத்தகையோருக்காக நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தைதான் இது: திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய அடியானிடம் தன் அருட்கொடையின் வெளிப்பாட்டைக் காண விரும்புகிறான். (நூல்: திர்மிதீ: 2744) தான் உண்பது, தான் உடுத்துவது-இவ்விரண்டும் போக ஒருவன் இவ்வுலகில் வாழும் காலத்தில் பிறருக்காக எவ்வளவு செலவு செய்கின்றானோ அதுவெல்லாம் அவன் தனக்காகச் சேர்ப்பதாகும். இவ்வுலகில் ஒருவன் வங்கியில் சேமித்து வைத்து, தனக்குத் தேவையானபோது அதை எடுத்துச் செலவுசெய்வதுபோல் ஒருவன் இவ்வுலகில் பிறருக்காகச் செலவழித்ததையெல்லாம் மறுமையில் அவன் நன்மையாகப் பெற்றுக்கொள்வான். ஆகவே இம்மூன்றும்தான் ஒரு மனிதன் அனுபவிக்கின்ற தன்னுடைய சொத்து. மற்றவையெல்லாம் தான் சார்ந்த வாரிசுகளுக்கும் அல்லது பிற மக்களுக்கும்தான். அதிலிருந்து அவனுக்கு நன்மை சேருமா, சேராதா என்பது அவனுடைய வாரிசுகளைப் பொறுத்தே அமையும். பிறருக்காகச் செலவு செய்ய மனம் வராத மக்களுக்காக அல்லாஹ் கீழ்க்கண்ட இரண்டு வசனங்களைக் கூறுகிறான்: உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்துகொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்), “”என் இறைவனே! என் தவணையை எனக்குச் சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே’’ என்று கூறுவான். (63:10) இறைநம்பிக்கை கொண்டோரே! பேரங்களும் நட்புறவுகளும் பரிந்துரைகளும் இல்லாத அந்த (இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள். (2: 254) ஆக மனிதன் எவ்வளவு உழைத்துச் சேர்த்தாலும் அவனுக்கு மிஞ்சுவது அவன் சேர்த்த நல்லறங்கள்தாம். எனவே நாம் வாழும் காலத்தில் நல்ல முறையில் உண்டு, உடுத்தி, பிறருக்கு வழங்கி வாழ்வோம். ஈருலகிலும் நன்மையை அடைவோம். -இன்ஷா அல்லாஹ் தொடரும் ===========