மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி,
எம்.ஏ., எம்.ஃபில்.
பார்வை இறைவன் கொடுத்த மாபெரும் வெகுமதி. எதையும் மிகத் துல்லியமாகப் பார்த்து
அறிந்துகொள்ள கண்களை அல்லாஹ் படைத்துள்ளான். இன்றைக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட ஒளிப்படக்
கருவியின் (கேமரா) அதிகப்பட்ச துல்லிய அளவு (மெகா பிக்சல்) 10 முதல் 15 வரை ஆகும். ஆனால் அல்லாஹ்
வழங்கியுள்ள கண்களின் துல்லிய அளவு 576 ஆகும். ஒளிப்படக் கருவியில் அகப்படாத நுண்ணிய பொருள்களையெல்லாம்
நம் கண்கள் பார்த்துவிடும். அவ்வளவு கலைநுட்பத்தோடு அல்லாஹ் நம் கண்களைப் படைத்துள்ளான்.
வீணாகவா அதை நமக்கு வழங்கியுள்ளான்? அந்தக் கண்களால் எதையெதைப் பார்க்க வேண்டும், எதையெதைப் பார்க்கக்கூடாது
என்ற வரைமுறையையும் அல்லாஹ் தன் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்மூலம் வழங்கியுள்ளான்.
அந்த நியதிகளையும் நிபந்தனைகளையும் மீறினால் அதன் காரணமாக நம் வினைச்சுவடியில் தீமைகள்
எழுதப்படும். அதே நேரத்தில் உரிய முறையில் அக்கண்களைப் பயன்படுத்தினால் வினைச்சுவடியில்
நன்மைகள் எழுதப்படும்.
இவ்வுலகில் ஆண், பெண் என்ற ஈரினமே உண்டு. அந்த ஆணைத் தந்தையாக, தனயனாக, அண்ணனாக, தம்பியாக, கணவனாக வேறுபடுத்திக் காட்டுவது நாம்
பார்க்கும் பார்வையில்தான் அடங்கியுள்ளது. அவர்கள் எல்லோரும் ஆண்கள்தாம். ஆனால் ஒவ்வொருவரையும்
பார்க்கும் கோணம் வேறுபடுகிறது. அதுபோலவே ஒரு பெண்ணைத் தாயாக, தமக்கையாக, புதல்வியாக, அத்தையாக, சிற்றன்னையாக, தாரமாக வேறுபடுத்திக் காட்டுவது
நம் பார்வைதான். எல்லோரும் பெண்கள்தாம். இருப்பினும் ஒவ்வொருவரையும் பார்க்கும் கோணம்
வேறுபடுகிறது.
தாயைப் பார்க்கும் பார்வை வேறு; தமக்கையைப் பார்க்கும் பார்வை வேறு; தாரத்தைப் பார்க்கும் பார்வை
வேறு. பார்க்கும் கண்கள் ஒன்றேயானாலும் பார்க்கும் கோணம் வேறுபடுகிறது. இவ்வாறு வேறுபடுத்திப்
பார்க்காமல் போனால் எல்லோருமே பெண்களாகத்தான் தெரிவார்கள். அந்நிலைக்கு ஒருவன் சென்றுவிட்டால்,
தான் ஈன்றெடுத்த மகளையே
மகளாகக் கருதாமல் ஒரு பெண்ணாகவே கருதுவான். அவளையும் புணர்ச்சிகொள்ளவே நாடுவான். புணர்ச்சி
விதிகள் மீறப்படும். இதுவே இன்றைய நிலைப்பாடு.
எல்லோரும் பெண்கள்தாம். ஆனால் ஒருவன் திருமணத்தின்மூலமே ஒரு பெண்ணைத் தனக்குரியவளாக
ஆக்கிக்கொள்ள முடியும். இது இறைவன் வகுத்த
நியதி. இந்த நியதியை மீறுவதும் பார்வையால் ஏற்படுகின்ற விளைவுதான். இதற்கு ஆண்,
பெண் என்ற பாகுபாடும்
இல்லை. இருவரும் ஒருவரையொருவர் ஈர்க்கின்றனர். இருவரும் தம் பார்வையால் மதியிழக்கின்றனர்.
எல்லை மீறுகின்றனர். இதை யாரும் மறுத்துப் பேச முடியாது. ஏனெனில் இன்றைய ஊடகம் அதை
உண்மையென வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
இதனால்தான் ஆண், பெண் இருவருமே தத்தம் பார்வையைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும் எனத் திருக்குர்ஆன்
கட்டளையிடுகிறது. பெண்ணுக்குக் கட்டளையிட்டுவிட்டு ஆணைக் கட்டுப்பாடின்றி விட்டுவிடவில்லை.
இருவருக்குமே சமநிலையில் சட்டம் சொல்கிறது திருக்குர்ஆன். பார்வைதான் பாவத்திற்குக்
காரணம் என்று பின்வரும் நபிமொழி உரைக்கிறது.
நபி (ஸல்) அவர்கள், அலீ (ரளி) அவர்களைப் பார்த்து, அலீயே, உம் பார்வையை மீண்டும் மீண்டும் என
ஆக்காதீர். (எதார்த்தமாகப் பார்க்கும்) முதல் பார்வை உம்முடையது. அடுத்த(டுத்த) பார்வை
உமக்குரியது இல்லை (அது ஷைத்தானுடையது) என்று கூறினார்கள். (நூல்கள்: அபூதாவூத்,
திர்மிதீ)
நாம் பாதையில் நடக்கின்றபோதும் நம்மைக் கடக்கின்றபோதும் ஒரு பெண்மீது எதார்த்தமாகப்
படுகின்ற நம் முதல் பார்வை இயல்பானது. அவளையே மீண்டும் மீண்டும் பார்ப்பதுதான் ஷைத்தானின்
பார்வை. அதாவது அவ்வாறு மீண்டும் மீண்டும் பார்ப்பதுதான் தவறு செய்யுமாறு அவனைத் தூண்டுகிறது.
கண்கள் இரண்டும் விபச்சாரம் செய்கின்றன. அவ்விரண்டின் விபச்சாரம் பார்த்தல் ஆகும் என
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்) பார்வை உள்ளத்தில் ஆசையை
விதைக்கிறது. அவன் பாவம் செய்வதற்கு அதுவே போதும் என ஈசா பின் மர்யம் (அலை) அவர்கள்
கூறியுள்ளார்கள்.
ஈன்றெடுத்த அன்னையைப் பார்ப்பது பாசப் பார்வை; சகோதர, சகோதரிகளைப் பார்ப்பது அன்புப் பார்வை;
உற்றார் உறவினரைப் பார்ப்பது
பந்தப் பார்வை; இரக்கப்பட்டு ஏழைகளைப் பார்ப்பது பரிவுப்பார்வை; ஆசையோடு தாரத்தைப் பார்ப்பது மோகப்
பார்வை; தனக்குரிமையில்லா
அந்நியப் பெண்ணைப் பார்ப்பது காமப் பார்வை. இப்படிப் பார்க்கும் கோணத்தில் பார்வைகள்
வேறுபடுகின்றன. இருப்பினும் தகுந்த பார்வை,
தகாத பார்வை என இரண்டுதான்
உள்ளது. அதைப் புரிந்துகொண்டால் நம் பார்வைகளையே நன்மைகளாக மாற்றலாம்.
மூன்றைப் பார்ப்பதால் நன்மை உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அவை:) 1.
பெற்றோரின் முகம்,
2. கஅபா, 3.
அல்லாஹ்வின் வேதம்
(திருக்குர்ஆன்). (நூல்: அபூதாவூத்)
ஈன்றெடுத்த பெற்றோரின் முகத்தை அன்போடும் பாசத்தோடும் பார்த்துக்கொண்டே இருப்பதும்,
ஆதி இறையாலயமான கஅபாவைப்
பக்தியோடு கண்ணாரக் காண்பதும், அகில மக்களுக்கோர் அருட்கொடையாக வழங்கப்பட்ட அருள்மறைக் குர்ஆனைக்
காண்பதும் நன்மையைப் பெற்றுத் தருவனவாகும். எனவே இனி ஒவ்வொருவரும் தம் பெற்றோரையும்
அருள்மறைக் குர்ஆனையும் பார்ப்பதன் மூலமே நன்மையை ஈட்டிக்கொள்ள முயலலாமே?
திருக்குர்ஆனை ஓதத்தெரியாவிட்டாலும், இத்தகைய உயர்வேதத்தை என்னால் வாசிக்க இயலவில்லையே என்ற
ஏக்கத்தோடும் கவலையோடும் அதைக் கையில் எடுத்துப் பார்த்துக்கொண்டே இருந்தாலும் அது
நன்மையைப் பெற்றுத்தரும் நற்செயலாகும் என்பதை நினைவில் கொள்வோம்.
இன்னும் சற்று ஆர்வத்தோடு பார்வை குறித்த குறிப்புகளைக் காண முற்பட்டபோது திருக்குர்ஆனிலும்
இறைத்தூதரின் போதனையிலும் பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன. "இறையச்சமுடையோரின்
பார்வையைவிட்டுத் தவிர்ந்துகொள்ளுங்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நல்லடியார்களின்
கண்கள் நல்லனவற்றையே பார்க்கக்கூடியவையாகும். ஆகவே அவர்களின் பார்வைக்கு ஒரு வசீகரத்தன்மையும்
சுட்டெரிக்கும் திறனும் இருக்கும். அதனால் அவர்களிடம் வீண் வம்பிழுத்து அவர்களின் கோபப்பார்வைக்கு
ஆளாகிவிடாதீர்கள் என்பதே நபிகளாரின் எச்சரிக்கையாகும்.
மனிதன் நேரடியாகப் பார்ப்பது ஒருவிதம். ஆனால் அவன் ஓரக்கண்ணால் சிலவற்றைப் பார்க்கிறான். குறிப்பாக, பார்க்கக்கூடாதவற்றைப் பார்க்கும்போது
பிறர் தம்மைப் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக ஓரக்கண்ணால் பார்ப்பான். அல்லது பிறருக்குத்
தெரியாமல் பார்ப்பான். குயுக்தி கொண்ட மனிதனின் இந்தச் செயலைக்கூட அல்லாஹ் திருக்குர்ஆனில்
கோடிட்டுக் காட்டியுள்ளதைக் கண்டபோது வியப்புதான் மேலிட்டது. "(மனிதர்களின்) கண்கள் செய்யும் சூதுகளையும்,
உள்ளங்களில் மறைந்து இருப்பவற்றையும்
இறைவன் நன்கறிவான்.'' (40: 19)
சிலரின் கண்கள் கொள்ளிக்கண்களாக இருக்கும். அவர்கள் பார்த்தால் அவர்கள்தம் கண்களின்
கேட்டால் பிறருக்குத் தீமையே விளையும். மயக்கம் கொண்டு கீழே விழுந்துவிடுவார்கள்;
அல்லது காய்ச்சல் வரும்;
நோய் ஏற்படும். இது
குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கண்ணேறு உண்மைதான் என்று கூறியுள்ளார்கள். (நூல்கள்: புகாரீ: 5740, முஸ்லிம்: 4404)
ஆக, மனிதர்களின்
பார்வைகள் பலவிதம் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். இருப்பினும் அப்பார்வையால் நாம் சம்பாதிப்பது நன்மை அல்லது தீமை
ஏதேனும் ஒன்றைத்தான். ஆகவே நாம் நம் பார்வைமூலம் நமது வினைச்சுவடியில் நன்மைகளைப் பெருக்கிக்கொள்ள
முனைவோமாக.