திங்கள், 19 ஜனவரி, 2015
மருமகனும் மருமகளும் பிள்ளைகளே!
-மௌலவி நூ.அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்.,
ஓர் ஆண் திருமணம் செய்துகொண்டால் அவனுடைய மனைவியின் பெற்றோருக்கு மற்றொரு மகனாக ஆகிவிடுகின்றான். அதனால்தான் அவனுக்கு அவனுடைய மனைவியின் தாய்-மாமியார் திரையிட வேண்டிய அவசியமில்லை. அதேபோல் திருமணத்திற்குப் பின் ஒரு பெண் தன் கணவரின் பெற்றோருக்கு மற்றொரு மகளாக ஆகிவிடுகின்றாள். அதனாலேயே அவள் தன் கணவனின் தந்தைக்குமுன் திரையிட வேண்டிய அவசியமில்லை என்று இஸ்லாம் கூறுகிறது.
ஆக திருமணத்திற்குப்பின் பெண்வீட்டாருக்கு ஒரு மகனும் ஆண்வீட்டாருக்கு ஒரு மகளும் கிடைக்கின்றனர். இது இயல்பாக இறைவன் ஏற்படுத்திய உறவு. இந்த உறவை இருவீட்டாரின் பெற்றோரும் எந்த அளவுக்குப் பாதுகாக்கின்றனர். அல்லது எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதே இன்று நம்முன் நிற்கும் வினா.
மருமகனைப் பொறுத்தமட்டில் சில ஊர்களில் தம் மகனாகக் கருதுவோர் உண்டு. சில ஊர்களில் திருமணத்திற்குப்பின் மணமகளுக்குப் பதிலாக மணமகனே மணப்பெண் வீட்டிற்குக் குடிபெயர்கின்றார். இப்படிப்பட்ட நிலையில் அங்கு மருமகள் கொடுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் அவள் தாய் வீட்டிலேயே இருந்துவிடுகிறாள். பொதுவாக நாம் நாளிதழ்களில், மாமியார் தம் மருமகளுக்கு இழைக்கின்ற கொடுமையைத்தான் படிக்க நேரிடுகிறது. மிக அரிதாகவே மருமகள் தன் மாமியாரைக் கொடுமைப்படுத்துவது நடக்கிறது. இது எதனால்? ஒரு மாமியார் தம் மருமகளைத் தம் மகளாகக் கருதாததால் ஏற்படுகின்ற வினையையே நாம் அன்றாடம் காண்கிறோம். ஒவ்வொரு மாமியாரும் தம் மருமகளைத் தாம் ஈன்றெடுத்த மகளாகக் கருதத் தொடங்கிவிட்டால் இதுபோன்ற பிரச்சனைகள் அருகிவிடும். மேலும், ஒவ்வொரு மாமியாரும் தம் மருமகனை மகனாகக் கருதி வாழத் தொடங்கிவிட்டால் வாழ்க்கைப்பட்ட வீட்டிலிருந்து பிரச்சனையோ சிக்கலோ தலைதூக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.
திருமணத்திற்குப்பின் ஒவ்வொரு தாயும் தன் மகளைப் பார்த்து, எப்படிமா இருக்குறே? மாப்ளே உன்னெ நல்லா கவனிச்சுக்குறாரா? என்று கேட்பது வழக்கம். இதே வினாவைச் சற்று மாற்றி, அத்தாய் தன் மருமகனிடம், என்னங்க மருமகனே, என் மகள் உங்களை நல்லா கவனிச்சுக்குறாளா? நீங்க சொன்னபடி கேட்டு நடக்குறாளா? என்று கேட்கத் தொடங்கினால் மருமகன் மனது குளிரும். பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனுக்குடன் களைய வசதியாக இருக்கும். மணவிலக்கு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. ஆனால் இப்படிக் கேட்கின்ற துணிவு எத்தனை அன்னையருக்கு இருக்கிறது? அது போலவே ஓர் ஆணைப் பெற்றெடுத்த ஒரு தாய் தன் மகனின் வாழ்வையே முக்கியமாகக் கருதுகிறாளே தவிர தன் மருமகளைத் தன் மகன் நன்றாகக் கவனித்துக்கொள்கின்றானா, தாம்பத்திய உறவில் மருமகளுக்குத் திருப்தியளிக்கும் விதத்தில் நடந்துகொள்கின்றானா என்பதைக் கவனிப்பதில்லை. தன் மருமகளிடம் இதுகுறித்தெல்லாம் சாடைமாடையாகக் கேட்டுத்தெரிந்து கொள்ளத் துணிவதில்லை. ஆனால் இது குறித்துக் கேட்பது அவளது கடமை. இதே வினாவைப் பெண்ணைப் பெற்ற தாயும் தன் மருமகனிடம் சாடைமாடையாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். தாம்பத்திய வாழ்வில் பிணக்கு என்றால் அதை உடனடியாகத் தன் மகளிடம் பக்குவமாக எடுத்துக்கூறிச் சரிப்படுத்த முனைய வேண்டும். ஏனெனில் தம்பதியருக்கிடையே தாம்பத்திய உறவில் பிணக்கு ஏற்படாமல், இருவருக்கும் திருப்தி ஏற்படும் வகையில் ஏற்பாடு செய்துவிட்டால் மற்ற பிரச்சனைகள் நீர்த்துப் போய்விடும். இதை எத்தனை மாமியார்கள் செய்கின்றனர்?
இது போன்ற பிரச்சனைகளை ஒவ்வொரு மாமியாரும் முன்னின்று கவனித்து தன் மருமகனை மகனாகக் கருதி, தன் மருமகளை மகளாகக் கருதி வாழத் தொடங்கிவிட்டால் தம்பதியருக்கிடையே மணவிலக்கு ஏற்படாது. மாமியார்-மருமகள் சண்டையும் ஏற்படாது. மாறாக, இவைபோன்ற விசயங்களில் அக்கறை காட்டாமல், முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பிரச்சனைகளையெல்லாம் பெரிதாக வளரவிட்டு, இறுதியில் வெட்ட முற்படுவதால் பல மனங்கள் உடையத் தொடங்குகின்றன. பின்னர் அவற்றை ஒட்டவே முடிவதில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கின்றபோது தெளிவான படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ஒரு தடவை, அலீ-ஃபாத்திமா (ரளி-அன்ஹுமா) இருவருக்குமிடையே ஒரு சிறு பிணக்கு ஏற்பட்டுவிட்டது. அச்சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் நடந்துகொண்ட முறை ஒரு மாமனார் தம் மருமகனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
சஹ்ல் பின் சஅத் (ரளி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வி) ஃபாத்திமா (ரளி) அவர்களின் இல்லத்திற்கு வந்தபோது (மருமகனான) அலீ (ரளி) அவர்கள் வீட்டில் காணவில்லை. ஆகவே, உன் பெரிய தந்தையின் புதல்வர் எங்கே?'' என்று கேட்க, அதற்கு ஃபாத்திமா (ரளி) அவர்கள், "எனக்கும் அவருக்கும் இடையே சிறிய பிணக்கு ஏற்பட்டது. ஆகவே அவர் என்னைக் கோபித்துக்கொண்டு என்னிடம் ஏதும் சொல்லாமல் (வீட்டி-ருந்து) சென்றுவிட்டார் (அவர் பள்ளிவாசலுக்குள் இருக்கலாம்)'' என்று கூறினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், "அவர் எங்கே என்று பாருங்கள்'' என்று சொன்னார்கள். உடனே அந்த மனிதர் (சென்றுவிட்டு) வந்து, "அவர் பள்ளிவாசலில் உறங்கிக்கொண்டிருக்கிறார், அல்லாஹ்வின் தூதரே!'' என்றுரைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிக்குள்) வந்தபோது அவருடைய மேலங்கி அவரது முதுகிலிருந்து (தரையில்) விழுந்துவிட்டிருக்க அவரது மேனியில் மண் படிந்திருக்கும் நிலையில் அவர் ஒருக்களித்துப் படுத்திருக்கக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரளி) அவர்களின் மேனியிலிருந்த மண்ணைத் துடைத்தவாறே "எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே! எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே!!'' என்று கூறலானார்கள். (புகாரீ: 441)
தம் மகளிடம் கோபித்துக்கொண்டு சென்று பள்ளிவாசலில் படுத்திருந்த அலீ (ரளி) அவர்களை மெதுவாகத் தட்டியெழுப்பி மீண்டும் தம் மகளோடு சேர்த்து வைக்கின்றார்கள். இது போன்ற மென்மையான நடைமுறையை இன்றைய மாமனார்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
மற்றொரு நிகழ்வைப் பாருங்கள்: அலீ பின் அபீதாலிப் (ரளி) அவர்கள் கூறியதாவது: (என் துணைவியார்) ஃபாத்திமா அவர்கள் (மாவு அரைக்கும்) திரிகை சுற்றியதால் தமது கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (என்னிடம்) முறையிட்டார். (இது தொடர்பாக நபியவர்களிடம் தெரிவிக்கும்படி நான் கூறினேன்.) ஆகவே, ஒரு பணியாளரை (தமக்குத் தரும்படி) கேட்க நபி (ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா சென்றார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அப்போது (வீட்டில்) இல்லாததால் ஆயிஷா (ரளி) அவர்களிடம் அது பற்றிக் கூறி(விட்டுத் திரும்பலா)னார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களிடம் ஆயிஷா (ரளி) அவர்கள் விஷயத்தைத் தெரிவித்தார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (அவர்களைக் கண்டவுடன்) நான் எழுந்திருக்க முற்பட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள், "(எழுந்திருக்க வேண்டாம்) அந்த இடத்திலேயே இருங்கள்'' என்று கூறிவிட்டு எங்களுக்கு நடுவில் வந்து அமர்ந்துகொண்டார்கள். அப்போது (என்னைத் தொட்டுக்கொண்டிருந்த) அவர்களுடைய பாதங்களின் குளிர்ச்சியை எனது நெஞ்சின்மீது உணர்ந்தேன். (அந்த அளவுக்கு நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள்.) "பணியாளரைவிட உங்களிருவருக்கும் (பயனளிக்கும்) சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் படுக்கைக்குச் சென்றதும் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் பெரியவன்) என்று முப்பத்து நான்கு முறையும், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று முப்பத்து மூன்று தடவையும், அல்ஹம்து லில்லாஹ் (புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே) என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். இது பணியாளைவிட உங்கள் இருவருக்கும் சிறந்ததாகும்'' என்று சொன்னார்கள். (நூல்: புகாரீ: 6318).
நபி (ஸல்) அவர்கள் தம் ஈரக்குலையான மகளின் நலத்தைப் பெரிதெனக் கருதவில்லை. திரிகை சுற்றி மாவரைத்து, அதன்மூலம் தம் கணவருக்குச் செய்கின்ற பணிவிடை காரணமாக அவருடைய கையில் காய்ப்பு ஏற்பட்டுவிட்டது. அது குறித்து அலீ (ரளி) அவர்கள்மீது சினம் கொள்ளவில்லை. மாறாக, தம் மகளுக்கு இறைவனின் துதியைக் கற்றுக்கொடுக்கின்றார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரளி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். அப்போது அவள் மாதவிடாய்ப் பருவத்தில் இருந்தாள். ஆகவே (என் தந்தை) உமர் பின் கத்தாப் (ரளி) அவர்கள் இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையாரிடம், "உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்: அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும் வரை அவளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும். பிறகு அவர் விரும்பினால், (இரண்டாம் மாதவிடாயிலிருந்து தூய்மையான) பின்னர் (தொடர்ந்து அவளைத்) தம்மிடமே (தம் மனைவியாக) வைத்திருக்கட்டும். அவர் (மணவிலக்குச் செய்ய) விரும்பினால் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன்பாக அவளை மணவிலக்குச் செய்யட்டும். (மாதவிடாயிலிருந்து தூய்மையான) இந்தக் காலக் கட்டமே மனைவியரை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் (2: 228ஆம் வசனத்தில்) அனுமதித்துள்ள காலக் கட்டமாகும்'' என்று சொன்னார்கள். (நூல்கள்: முஸ்லிம், நசாயீ)
மணவிலக்குச் செய்யப்பட்டு நம்மை விட்டுப் போகப்போகின்றவள்தானே என்று விட்டுவிடாமல் தம் மகன் செய்த இச்செயல் ஷரீஅத் முறைப்படி சரியானதுதானா என்று தெரிந்துகொள்வதற்காகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்கின்றார்கள். அது ஷரீஅத் முறைப்படி சரியில்லை என்று அவர்கள் விளக்கமளித்தபின் தெளிவுபெறுகின்றார்கள். எப்போது தலாக் விட்டாலும் அது செல்லுபடியாகிவிடும் என்பது வேறு விசயம். ஆனால் அதிலும் ஓர் ஒழுங்குமுறையை இஸ்லாம் போதிக்கிறது. அது பெண்களுக்குச் சாதகமானது. அது அவர்களின் அடுத்த திருமணத்திற்கான வழியை எளிதாக்குகிறது. ஆக உமர் (ரளி) அவர்கள் தம் மருமகள்மீது கொண்ட அக்கறையை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மருமகன்மீது காட்டிய அக்கறையை இன்றைய மாமனார்கள், மாமியார்கள் தம் மருமகன்கள்மீதும் மருமகள்கள்மீதும் காட்ட வேண்டும். மருமகள்களும் மருமகன்களும் உங்களின் பிள்ளைகளே என்பதை உணருங்கள்.
லேபிள்கள்:
மருமகனும் மருமகளும்