திங்கள், 23 ஜூன், 2014

நபிகளார் நவின்ற மூன்றுகள்-13


 (மிஅராஜில் வழங்கப்பட்ட மூன்று வெகுமதிகள்)       

                        மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, ஃபாஸில் தேவ்பந்தீ, (பிஎச்.டி.)

அப்துர் ரஹ்மான் பின் ஷிப்ல் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: மூன்று செயல்பாடுகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அவை: (சிரவணக்கம் செய்யும்போது) காக்கை கொத்துவதைப் போன்று (வேக வேகமாகச்) செய்தல், (தொழுகையில் கையை வைக்கும்போது) விலங்கினங்கள் போன்று (முழங்கை வரை) விரித்துவைத்தல், ஒட்டகம் தனக்கென ஓரிடத்தை ஆக்கிக்கொள்வதைப்போல் (மஸ்ஜிதில்) தொழுவதற்கென ஓரிடத்தை நிர்ணயித்துக்கொள்ளுதல் ஆகியனவாகும். (இப்னுமாஜா: 1419)

மேற்கண்ட நபிமொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று விசயங்களைத் தடைசெய்துள்ளார்கள். தொழுகையில் சிரவணக்கம் செய்வோர் அதை முறையாகச் செய்யாமல் காக்கை கொத்துவதைப் போன்று மிகத் துரிதமாகச் செய்துவிட்டுத் தலையைத் தூக்கிக் கொள்கின்றனர். முறையாகவும் அமைதியாகவும் செய்வதில்லை. இது முற்றிலும் தடைசெய்யப்பட்டதாகும். இவ்வாறு செய்வதால் ஒருவருக்குத் தொழுகையில் கிடைக்க வேண்டிய அமைதியும் கண்குளிர்ச்சியும் அறவே கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே அதில் அதிகமாகக் கவனம் செலுத்திப் பொறுமையாகவும் அமைதியாகவும் செய்ய வேண்டும்.

இரண்டாவது, தொழுகையில் சிரவணக்கம் செய்வதற்காகக் கையை வைக்கும்போது விலங்கினங்கள் போன்று முழங்கை வரை விரித்துவைக்கின்றனர் சிலர். அவ்வாறு வைப்பதால் சுகமாக இருக்கலாம். ஆனால் அது முறையில்லையே. ஆகவே சிரவணக்கம் செய்வதற்காகக் கையைத் தரையில் வைக்கும்போது மணிக்கட்டு வரையுள்ள விரிவாக உள்ள கைப் பகுதியை மட்டுமே வைக்க வேண்டும். மணிக்கட்டிற்குக் கீழ் உள்ள பகுதியைத் தரையிலிருந்து தூக்கியவண்ணம் வைத்திருக்க வேண்டும். இதுதான் நபிவழியாகும்.

மூன்றாவது, ஒட்டகம் தனக்கென ஓரிடத்தை ஆக்கிக்கொள்வதைப்போல் மஸ்ஜிதில் தொழுவதற்கென ஓரிடத்தை நிர்ணயித்துக்கொள்கின்றனர் சிலர். நாள்தோறும் ஒரே இடத்தில் தொழுவதும் அமர்வதும் அவர்களின் வாடிக்கை. இவ்வாறு செய்வதால், பொதுவாக மஸ்ஜிதில் தமக்கு மட்டும் ஓரிடத்தை உரிமையாக்கிக்கொள்வதைப்போன்ற நிலை ஏற்படுகிறது. அவ்விடத்தில் மற்றவர் அமர்ந்துவிட்டால் அவரை ஒதுங்கிக்கொள்ளுமாறு சொல்வதும் நடைபெறுகிறது. இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆக மேற்கண்ட மூன்றுமே தொழுகையில் நடைபெறக்கூடிய நிகழ்வுகளாக இருப்பதால் நாம் அவற்றில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றை எவ்வளவு நுட்பத்தோடு கூறியிருப்பார்கள் என்பதை நாம் விளங்கிச் செயல்பட வேண்டும்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (விண்ணுலகப் பயணத்திற்காக) இரவில் அழைத்துச் செல்லப்பட்டபோது  (வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) சித்ரத்துல் முன்தஹா வரை அவர்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மூன்று (கட்டளைகள்) வழங்கப்பட்டன. அவையாவன: 1. ஐவேளைத் தொழுகைகள் வழங்கப்பட்டன. 2. அல்பகரா அத்தியாயத்தின் இறுதி (மூன்று) வசனங்கள் அருளப்பெற்றன. 3. அவர்களுடைய சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு இணையேதும் வைக்காதவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள் மன்னிக்கப்(படுவதாக அறிவிக்கப்)பட்டன. (நூல்: முஸ்லிம்)

முஸ்லிமாக உள்ள ஒவ்வொருவர்மீதும் ஐவேளைத் தொழுகை கடமை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை முறையாகப் பேணுவோர் மிகவும் குறைவு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்புவியில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற வேளையில் திருக்குர்ஆன் வசனங்கள் எத்தனையோ இறங்கின. அப்போதெல்லாம் தொழுகையைப் பற்றிய கட்டளையைக் கூறாமல் அவர்களை விண்ணுலகிற்கு அழைத்து, அங்கு வைத்து ஐவேளைத் தொழுகைகளை உயர்ந்தோன் அல்லாஹ் நபிகளாருக்கு வழங்கியதிலிருந்து இதன் முக்கியத்துவத்தையும் உயர்வையும் அறியலாம். அத்தகைய தொழுகையை முறைப்படி பேணுவோர் நம்முள் எத்தனைபேர்? ஏன் அதில் நம்முள் பலர் அசட்டையாக இருக்கிறோம்? அதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா? நேரம் குறிப்பிடப்பட்ட கடமை என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியும் நம்முள் பலர் அந்தந்த நேரத்தைத் தவறவிட்டு விடுகின்றோமே ஏன்?

அல்பகரா அத்தியாயத்தின் கடைசி மூன்று வசனங்கள் நபிகளாருக்கு வழங்கப்பட்டன. அம்மூன்று வசனங்களில் அல்லாஹ் என்ன கூறியுள்ளான். ஏன் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் என்று நம்முள் பலருக்கு வினா எழும். அவற்றுள் முதலாம் வசனத்தில் அல்லாஹ் தன்னுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் கூறுகின்றான். இரண்டாம் வசனத்தில் தன்னுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் மற்ற இறைநம்பிக்கையாளர்களும் எதையெல்லாம் நம்பிக்கை கொள்வார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றான். மூன்றாவது வசனத்தில், ஒரு மனிதன் தனக்காகத் தன் இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதையும் எப்படியெல்லாம் அவன் தன் இறைவனிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் கூறுகின்றான். ஆக, திருக்குர்ஆனின் சாரம் இவற்றுள் பொதிந்து கிடப்பதால்தான் இம்மூன்று வசனங்கள் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்ணுலகப் பயணத்தில் மூன்றாவதாக வழங்கப்பட்டதாவது, அவர்கள்தம் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு இணையேதும் வைக்காதவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுதல் ஆகும். பொதுவாகத் தமிழர்கள் பஞ்ச மாபாவங்கள் என்று கொலை, களவு, காமம், சூது, பொய் என்று கூறுவார்கள். இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரை சப்த மாபாவங்கள் உள்ளன. அதாவது பெரும்பாவங்கள் ஏழு உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் படைத்த அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் ஆகும். இறைவனுக்கு நிகராக மற்றொருவரை மனத்தால் எண்ணுவதும் வழிபடுவதும் மிகப்பெரும் பாவமாகும். ஆகவே அதைச் செய்யாத ஒருவன் வேறு ஏதேனும் பாவத்தைச் செய்துவிட்டாலும் உயர்ந்தோன் அல்லாஹ் அதை மன்னித்துவிடுகின்றான் என்பதே மேற்கண்ட நபிமொழியின் சாரமாகும்.

ஆகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு விண்ணுலகப் பயணத்தில் வழங்கப்பெற்ற மூன்றும் மனிதனுக்கு மிகவும் பயனுள்ளதாகும். எனவே நாம் ஐவேளைத் தொழுகையை வழுவாது நாள்தோறும் கடைப்பிடித்து, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி மூன்று வசனங்களை ஓதி, இறைவனின் அன்பையும் மன்னிப்பையும் பெற்றிட உயர்ந்தோன் அல்லாஹ் அருள்புரிவானாக!

                                                                        -இன்ஷாஅல்லாஹ் தொடரும்





திங்கள், 16 ஜூன், 2014

பிறர் நலம் பேணல்!


வியாழன், 8 மே, 2014

புதன், 30 ஏப்ரல், 2014

வியாழன், 3 ஏப்ரல், 2014

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (04 04 2014)

                                                                           அஸ்ஸலாமு அலைக்கும்
நாடறிந்த ஆலிம் பெருந்தகை, ஆன்மிகப் பேரொளி மௌலானா முஹம்மது அப்துல் கவி ஹழ்ரத் அவர்கள் குஜராத் காவல்துறையால் (மோடி அரசால்) கைது செய்யப்பட்டுள்ளார். எனவே அதைக் கண்டித்து சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அதில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்போடு 
கேட்டுக்கொள்கிறோம்.
.
நாள்: 04 04 2014
இடம்: சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை
நேரம்: 3: 30 மாலை (அஸ்ர் தொழுகைக்குப்பின்) 






புதன், 2 ஏப்ரல், 2014

உரையாடல்-2


(மக்தப் மத்ரசா ஆண்டுவிழாவில் இரண்டு  பெண்பிள்ளைகளுக்கு இடையே நடந்த உரையாடல்)

ஆமினா: ஆயிஷா! இன்னைக்கு மத்ரசா போனாயா?

ஆயிஷா: ஆம், போனேன். நீ ஏன் வரல?

ஆமினா: எனக்கு உடம்பு சரியில்ல. அதனால வரல ஆயிஷா. இன்னைக்கு உஸ்தாத் என்ன சொல்லிக் கொடுத்தாங்க?

ஆயிஷா: தும்மியபின் ஓதுற துஆ சொல்லிக் கொடுத்தாங்க.
ஆமினா: அதை நீ மனப்பாடம் செய்துவிட்டாயா?

ஆயிஷா: ஆம்! செய்துவிட்டேன். நான் உனக்குச் சொல்லித் தரவா ஆமினா?

ஆமினா: ஆமா ஆயிஷா! அவசியம் சொல்லித்தா. நானும் அதை மனப்பாடம் செய்துக்குறேன்.

ஆயிஷா: ஒருவர் தும்மியபின், அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்லணும். அவரின் அருகில் இருப்பவர் அதைக் கேட்டால், யர்ஹமுகல்லாஹ் என்று கூறி அவருக்கு துஆ செய்யணும். அதன்பின் அதைத் தும்மியவர் கேட்டால், யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹ் பாலகும் என்று சொல்லணும். புரிந்ததா ஆமினா?

ஆமினா: ஆமா! நன்றாகப் புரிந்தது.

ஆயிஷா: ஆமினா! நாம் தும்மியபிறகு அல்ஹம்து லில்லாஹ் என்று ஏன் சொல்கிறோம் தெரியுமா?

ஆமினா: எனக்குத் தெரியாதே ஆயிஷா. நீயே சொல்லு.

ஆயிஷா: நம்முடைய நுரையீரலுக்குள் செல்லக்கூடிய தூசுவை வெளியே தள்ளுவதற்காகத்தான் அல்லாஹ் தும்மலை ஏற்படுத்துறான். எனவேதான் நாம் அவனுக்கு நன்றை செலுத்துவதற்காக அல்ஹம்து லில்லாஹ் என்று கூறுகிறோம்.

ஆமினா: அப்படியா? இதில் இவ்வளவு பெரிய விஷயம் இருக்கா? சுப்ஹானல்லாஹ்.

ஆயிஷா: நெறைய பேர் இது பற்றி ஏதும் தெரியாம, தும்மியபிறகு அல்ஹம்து லில்லாஹ் சொல்லாம இருக்காங்க. எனவே நாம் இதை நம்முடைய வீட்டிலுள்ளோரிடம் எடுத்துச்சொல்லி அவர்களையும் இதச் சொல்ல வைக்கணும்.

ஆமினா: கண்டிப்பா. நானும் என்னுடைய வீட்ல சொல்லி, எல்லாருக்கும் இதைக் கற்றுக்கொடுக்குறேன் ஆயிஷா. வா போவோம்.

உஸ்தாத் நூ அப்துல் ஹாதி பாகவி

உரையாடல்-1


(மக்தப் மத்ரசா ஆண்டுவிழாவில் இரண்டு  பெண்பிள்ளைகளுக்கு இடையே நடந்த உரையாடல்)

ஆமினா: ஆயிஷா! விஷயம் தெரியுமா?

ஆயிஷா: என்ன விஷயம் ஆமினா? மார்க்க விஷயமா? உலக விஷயமா?

ஆமினா: மார்க்க விஷயமெல்லாம் இல்லை. உலகம் விஷயம்தான் ஆயிஷா.

ஆயிஷா: என்ன விஷயம்னு சொல்லு.

ஆமினா: பக்கத்துல வா! ஒரு இரகசியம். நம்மோட ஒன்னாப் படிச்சாலே நஃபீசா, அவ பக்கத்துத் தெருவுல உள்ள முருகேசனைக் கல்யாணம் செய்துகிட்டாளாம்.

ஆயிஷா: அஸ்தஃக்ஃபிருல்லாஹ்! நாம மூனு பேரும் ஒன்னாத்தானே ஸ்கூல் போவோம். அவ நல்லாப் படிப்பவளாச்சே? அவளா இப்படிச் செய்துட்டா? என்னாலே நம்பவே முடியலையே!

ஆமினா: ஆமா ஆயிஷா! அவளோட அப்பா, அம்மா ரெண்டு பேரும் அவளைச் செல்லமா வளர்த்தாங்க. அவ கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க. கூடவே செல்போனும் வாங்கிக் கொடுத்தாங்க. அதனால வந்த வெனைதான் இது.

ஆயிஷா: அப்படின்னா, அவளுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி எதுவும் தெரியாதா?

ஆமினா: ஆமா! அறவே தெரியாது. ஒரு பெண் பருவ வயதை அடைந்துவிட்டால் முகம், கை, கால் தவிர உடல் முழுவதும்  மறைக்க வேண்டும். பார்வையைத் தாழ்த்தி நடக்க வேண்டும் என்பதுதான் இஸ்லாம் கூறும் கட்டளை. இதைத்தான் நாம் நம்முடைய மக்தப் மத்ரசாவில் படித்தோம். அவதான் மத்ரசாவுக்கே வரவில்லையே?

ஆயிஷா: அது அவளுக்குத் தெரியாமல் போனதற்கு யார் காரணம்?

ஆமினா: அவளோட பெற்றோர்தான் காரணம். அவங்க அவளெ நாள்தோறும் மக்தப் மத்ரசாவுக்கு அனுப்பியிருந்தா அவள் இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றித் தெரிந்திருப்பா. அதனால் அவ தவறான பாதையில போயிருக்கமாட்டா.

ஆயிஷா: அப்படின்னா, பெற்றோருடைய கடமை என்ன?

ஆமினா: குழந்தை வளர்ந்து, பேசத் தொடங்கிவிட்டால் அதற்கு லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற ஏகத்துவக் கலிமாவைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். பிறகு படிப்படியா இஸ்லாமிய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்து, குர்ஆனைக் கற்பிக்க வேண்டும். பெற்றோருக்கு ஓதத் தெரியாவிட்டால் மத்ரசாவுக்கு அனுப்பி ஓத வைக்க வேண்டும். இப்படியெல்லாம் ஒரு பெற்றோர் செய்தால் பிள்ளைகள் வழிகெட்டுப் போகமாட்டாங்க. புரிந்ததா?

ஆயிஷா: நன்றாகப் புரிந்தது. அப்படின்னா, உலகப் படிப்பு படிக்க, பெண்பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பக் கூடாதா?

ஆமினா: அப்படியில்லை. தாராளமா அனுப்பலாம். ஆனால் பெண்பிள்ளைகளைப் பெண்கள் மட்டும் படிக்கிற ஸ்கூலில்தான் சேர்க்க வேண்டும். ஏனென்றால், ஆண்-பெண் கலந்து படிக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதால் நிறைய ஆபத்துகள் உண்டு.

ஆயிஷா: அப்படின்னா, பெண்கள் மட்டும் படிக்கிற ஸ்கூல் நம்ம மஹல்லாவில் இல்லையே? என்ன செய்வது?

ஆமினா: நம்ம மஹல்லாவில் பெண்கள் கல்விக் கூடங்களை நாமேதான் உருவாக்கணும். அது மட்டுமல்லாமல் மகளிர் அரபிக் கல்லூரியையும் நடத்தணும். அதில் படிக்கிற மாணவிகள் ஆலிமாக்களாகி நம் சமுதாய மக்களுக்கு தீன் பணி செய்வாங்க. தம்மோட பிள்ளைகளையும் ஷரீஅத்படி வளர்ப்பாங்க.

ஆயிஷா: இதையெல்லாம் நாம் இப்ப யாரிடம் சொல்வது?

ஆமினா: வா ஆயிஷா! நாம் நம்முடைய தோழிகளையும் சேர்த்துக்கொண்டு நம்ம மஹல்லா பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் மகளிர் கல்விக்கூடங்களை ஏற்படுத்துவதன் அவசியத் தேவையை எடுத்துச் சொல்லி இது போன்ற பிரச்சனை இனியும் ஏற்படாமல் தடுத்து நிறுத்துவோம்.

ஆயிஷா: சரி ஆமினா! கண்டிப்பா நானும் உன்னோட வாறேன். வா போவோம்!


 -உஸ்தாத் நூ அப்துல் ஹாதி பாகவி

செவ்வாய், 1 ஏப்ரல், 2014