திங்கள், 23 ஜூன், 2014

நபிகளார் நவின்ற மூன்றுகள்-13


 (மிஅராஜில் வழங்கப்பட்ட மூன்று வெகுமதிகள்)       

                        மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, ஃபாஸில் தேவ்பந்தீ, (பிஎச்.டி.)

அப்துர் ரஹ்மான் பின் ஷிப்ல் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: மூன்று செயல்பாடுகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அவை: (சிரவணக்கம் செய்யும்போது) காக்கை கொத்துவதைப் போன்று (வேக வேகமாகச்) செய்தல், (தொழுகையில் கையை வைக்கும்போது) விலங்கினங்கள் போன்று (முழங்கை வரை) விரித்துவைத்தல், ஒட்டகம் தனக்கென ஓரிடத்தை ஆக்கிக்கொள்வதைப்போல் (மஸ்ஜிதில்) தொழுவதற்கென ஓரிடத்தை நிர்ணயித்துக்கொள்ளுதல் ஆகியனவாகும். (இப்னுமாஜா: 1419)

மேற்கண்ட நபிமொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று விசயங்களைத் தடைசெய்துள்ளார்கள். தொழுகையில் சிரவணக்கம் செய்வோர் அதை முறையாகச் செய்யாமல் காக்கை கொத்துவதைப் போன்று மிகத் துரிதமாகச் செய்துவிட்டுத் தலையைத் தூக்கிக் கொள்கின்றனர். முறையாகவும் அமைதியாகவும் செய்வதில்லை. இது முற்றிலும் தடைசெய்யப்பட்டதாகும். இவ்வாறு செய்வதால் ஒருவருக்குத் தொழுகையில் கிடைக்க வேண்டிய அமைதியும் கண்குளிர்ச்சியும் அறவே கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே அதில் அதிகமாகக் கவனம் செலுத்திப் பொறுமையாகவும் அமைதியாகவும் செய்ய வேண்டும்.

இரண்டாவது, தொழுகையில் சிரவணக்கம் செய்வதற்காகக் கையை வைக்கும்போது விலங்கினங்கள் போன்று முழங்கை வரை விரித்துவைக்கின்றனர் சிலர். அவ்வாறு வைப்பதால் சுகமாக இருக்கலாம். ஆனால் அது முறையில்லையே. ஆகவே சிரவணக்கம் செய்வதற்காகக் கையைத் தரையில் வைக்கும்போது மணிக்கட்டு வரையுள்ள விரிவாக உள்ள கைப் பகுதியை மட்டுமே வைக்க வேண்டும். மணிக்கட்டிற்குக் கீழ் உள்ள பகுதியைத் தரையிலிருந்து தூக்கியவண்ணம் வைத்திருக்க வேண்டும். இதுதான் நபிவழியாகும்.

மூன்றாவது, ஒட்டகம் தனக்கென ஓரிடத்தை ஆக்கிக்கொள்வதைப்போல் மஸ்ஜிதில் தொழுவதற்கென ஓரிடத்தை நிர்ணயித்துக்கொள்கின்றனர் சிலர். நாள்தோறும் ஒரே இடத்தில் தொழுவதும் அமர்வதும் அவர்களின் வாடிக்கை. இவ்வாறு செய்வதால், பொதுவாக மஸ்ஜிதில் தமக்கு மட்டும் ஓரிடத்தை உரிமையாக்கிக்கொள்வதைப்போன்ற நிலை ஏற்படுகிறது. அவ்விடத்தில் மற்றவர் அமர்ந்துவிட்டால் அவரை ஒதுங்கிக்கொள்ளுமாறு சொல்வதும் நடைபெறுகிறது. இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆக மேற்கண்ட மூன்றுமே தொழுகையில் நடைபெறக்கூடிய நிகழ்வுகளாக இருப்பதால் நாம் அவற்றில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றை எவ்வளவு நுட்பத்தோடு கூறியிருப்பார்கள் என்பதை நாம் விளங்கிச் செயல்பட வேண்டும்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (விண்ணுலகப் பயணத்திற்காக) இரவில் அழைத்துச் செல்லப்பட்டபோது  (வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) சித்ரத்துல் முன்தஹா வரை அவர்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மூன்று (கட்டளைகள்) வழங்கப்பட்டன. அவையாவன: 1. ஐவேளைத் தொழுகைகள் வழங்கப்பட்டன. 2. அல்பகரா அத்தியாயத்தின் இறுதி (மூன்று) வசனங்கள் அருளப்பெற்றன. 3. அவர்களுடைய சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு இணையேதும் வைக்காதவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள் மன்னிக்கப்(படுவதாக அறிவிக்கப்)பட்டன. (நூல்: முஸ்லிம்)

முஸ்லிமாக உள்ள ஒவ்வொருவர்மீதும் ஐவேளைத் தொழுகை கடமை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை முறையாகப் பேணுவோர் மிகவும் குறைவு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்புவியில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற வேளையில் திருக்குர்ஆன் வசனங்கள் எத்தனையோ இறங்கின. அப்போதெல்லாம் தொழுகையைப் பற்றிய கட்டளையைக் கூறாமல் அவர்களை விண்ணுலகிற்கு அழைத்து, அங்கு வைத்து ஐவேளைத் தொழுகைகளை உயர்ந்தோன் அல்லாஹ் நபிகளாருக்கு வழங்கியதிலிருந்து இதன் முக்கியத்துவத்தையும் உயர்வையும் அறியலாம். அத்தகைய தொழுகையை முறைப்படி பேணுவோர் நம்முள் எத்தனைபேர்? ஏன் அதில் நம்முள் பலர் அசட்டையாக இருக்கிறோம்? அதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா? நேரம் குறிப்பிடப்பட்ட கடமை என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியும் நம்முள் பலர் அந்தந்த நேரத்தைத் தவறவிட்டு விடுகின்றோமே ஏன்?

அல்பகரா அத்தியாயத்தின் கடைசி மூன்று வசனங்கள் நபிகளாருக்கு வழங்கப்பட்டன. அம்மூன்று வசனங்களில் அல்லாஹ் என்ன கூறியுள்ளான். ஏன் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் என்று நம்முள் பலருக்கு வினா எழும். அவற்றுள் முதலாம் வசனத்தில் அல்லாஹ் தன்னுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் கூறுகின்றான். இரண்டாம் வசனத்தில் தன்னுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் மற்ற இறைநம்பிக்கையாளர்களும் எதையெல்லாம் நம்பிக்கை கொள்வார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றான். மூன்றாவது வசனத்தில், ஒரு மனிதன் தனக்காகத் தன் இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதையும் எப்படியெல்லாம் அவன் தன் இறைவனிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் கூறுகின்றான். ஆக, திருக்குர்ஆனின் சாரம் இவற்றுள் பொதிந்து கிடப்பதால்தான் இம்மூன்று வசனங்கள் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்ணுலகப் பயணத்தில் மூன்றாவதாக வழங்கப்பட்டதாவது, அவர்கள்தம் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு இணையேதும் வைக்காதவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுதல் ஆகும். பொதுவாகத் தமிழர்கள் பஞ்ச மாபாவங்கள் என்று கொலை, களவு, காமம், சூது, பொய் என்று கூறுவார்கள். இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரை சப்த மாபாவங்கள் உள்ளன. அதாவது பெரும்பாவங்கள் ஏழு உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் படைத்த அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் ஆகும். இறைவனுக்கு நிகராக மற்றொருவரை மனத்தால் எண்ணுவதும் வழிபடுவதும் மிகப்பெரும் பாவமாகும். ஆகவே அதைச் செய்யாத ஒருவன் வேறு ஏதேனும் பாவத்தைச் செய்துவிட்டாலும் உயர்ந்தோன் அல்லாஹ் அதை மன்னித்துவிடுகின்றான் என்பதே மேற்கண்ட நபிமொழியின் சாரமாகும்.

ஆகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு விண்ணுலகப் பயணத்தில் வழங்கப்பெற்ற மூன்றும் மனிதனுக்கு மிகவும் பயனுள்ளதாகும். எனவே நாம் ஐவேளைத் தொழுகையை வழுவாது நாள்தோறும் கடைப்பிடித்து, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி மூன்று வசனங்களை ஓதி, இறைவனின் அன்பையும் மன்னிப்பையும் பெற்றிட உயர்ந்தோன் அல்லாஹ் அருள்புரிவானாக!

                                                                        -இன்ஷாஅல்லாஹ் தொடரும்