புதன், 29 ஜனவரி, 2025

உங்கள் எழுத்துகள் படிப்போரின் உள்ளத்தில் உவகையை ஏற்படுத்தட்டும்


-------------------------------
ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு. நாம் ஒரு நகைச்சுவை சொன்னால் சிரிப்பார்கள்; துக்கமான செய்தியைச் சொன்னால் வருத்தப்படுவார்கள்; நாம் பிறரைத் திட்டினால் அவர்கள் நம்மைத் திட்டுவார்கள்; நாம் அடித்தால் அவர்கள் நம்மை அடிப்பார்கள்; நாம் பிறரிடம் மரியாதையாகவும் ஒழுக்கமாகவும் நடந்துகொண்டால் அவர்கள் நம்மை மரியாதையாக நடத்துவார்கள். நாம் அன்பாக நடந்துகொண்டால் அவர்களும் நம்மிடம் அன்பாக நடந்துகொள்வார்கள். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு. ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒருவர் நன்மை செய்தாலும் தீமை செய்தாலும் அவருக்கு அவர்கள் நன்மையே செய்வார்கள். அதுதான் அவர்களின் எதிர்வினை.
நான் அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றுகிற ஒரு முஸ்லிம் என்று சொல்லிக்கொள்வதில் நாம் பெருமிதமடைகிறோம். ஆனால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம்மை எதிர்த்தவனை என்ன செய்தார்கள்? தம்மைக் கொல்ல வந்தவனை என்ன செய்தார்கள்? தம்மைத் திட்டியவனை என்ன செய்தார்கள்? மன்னித்தார்கள். அந்தப் பண்பு நம்மிடம் இல்லையே.

நம்மைத் திட்டியவனைத் திட்டுவதைக்கூட நாம் ஒருபுறம் வைத்துவிடுவோம். நம்மை எதிர்த்தவனைக்கூட, நாம் திட்டித்தீர்க்கின்றோமே இது எந்த வகையில் நியாயம்?
இன்று சமூக வலைத்தளங்களில் அடுத்தவனைத் திட்டுவதும், அவனுடைய தனிப்பட்ட செய்திகளை அம்பலப்படுத்துவதுமான பதிவுகள்தாமே நிறைந்து கிடக்கின்றன? அடுத்தவனின் இதயத்தைக் கீறிக் கிழிக்கும் பதிவுகள், அந்தரங்கப் பதிவுகள் ஆகியவைதாமே மலிந்து கிடக்கின்றன?

நமக்கு நன்மை செய்தவனுக்கு ஒரு நன்மை செய்வது பெரிதன்று. நமக்குத் தீங்கு செய்தவனுக்கு நன்மை செய்வதுதான் பெரிதிலும் பெரிது.

உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள் என்னிடம், “உக்பா பின் ஆமிரே! உன் உறவைத் துண்டித்தவரோடு நீ சேர்ந்து வாழ்; உனக்குத் (தராமல்) தடுத்துக்கொண்டவருக்கு நீ கொடு; உனக்கு அநியாயம் செய்தவரை மன்னித்துவிடு” என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மத்: 17452)

உங்கள் எழுத்துகள் பிறரின் உள்ளத்தைக் கீறிக்கிழித்துவிட வேண்டா.
மாறாக உங்கள் எழுத்துகள்
படிப்போரின் உள்ளத்தில் உவகையை ஏற்படுத்தட்டும்.
முடங்கியோரின் வாழ்க்கையை முன்னுக்குக் கொண்டுவரட்டும்.

துவண்டுபோனோரின் உள்ளத்தில் துணிவை ஏற்படுத்தட்டும்.

சோர்ந்து போனோருக்கு ஆறுதலாக அமையட்டும்.

எழுதினால் அப்படி எழுதுங்கள். இல்லையேல் அமைதியாக இருங்கள்.

பேசினால் நல்லதைப் பேசுங்கள். இல்லையேல் அமைதியாக இருங்கள்.

-மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
29 01 2025

சனி, 25 ஜனவரி, 2025

உங்கள் கைப்பேசியை அமைதி நிலையில் வையுங்கள்

 



தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும்,

"உங்கள் ஸஃப்பு (அணி)களைச் சரி செய்து கொள்ளுங்கள்" என்று இமாம் அறிவிப்புச் செய்வது வழக்கம்.


தற்காலத்தில் "உங்கள் கைப்பேசியை அமைதி நிலையில் (Silent mode) வைத்துக் கொள்ளுங்கள்" என்று ஒவ்வொரு தொழுகைக்கும் இமாம் சொல்ல வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டுள்ளது.


அதைச் சொன்னாலும் சிலர் அமைதி நிலையில் வைக்க மறந்து விடுகின்றார்கள். அதனால் அது ஒரு பக்கம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நிம்மதியாகத் தொழ முடியவில்லை. 


"தொழுகையில் இருக்கும்போது கைப்பேசி ஒலித்தால், அதை உடனே அமைதிப் படுத்துங்கள்; அதனால் உங்கள் தொழுகை முறியாது" என்றெல்லாம் சொல்லிப் பார்த்துவிட்டோம். ஆனாலும் சிலருக்கு அச்சட்டம் புரிவதில்லை. முழுமையாக ஒலித்து அடங்கும் வரை அவர்கள் அதை எதுவும் செய்வதில்லை.


மன ஓர்மையோடும் மனநிம்மதியோடும் தொழுவதற்காகத்தான் பள்ளிவாசலுக்குச் செல்கின்றோம். அங்கும் அமைதியான சூழல் இல்லையென்றால் வேறு எங்குதான் அமைதியைத் தேடுவது?


சில பள்ளிவாசல்களில், "படைத்தவனோடு தொடர்பு கொள்ளும் போது படைப்புகளோடு தொடர்பைத் துண்டியுங்கள்" என்று அதன் நுழைவாயிலில் எழுதி வைத்திருக்கின்றார்கள்.


ஆகவே இனி வரும் காலங்களில் நாம் ஒவ்வொருவரும் பள்ளிவாசலுக்குள் நுழையும்போதே நம் கைப்பேசியை அமைதி நிலையில் வைப்பதை உறுதி செய்து கொள்வோம்; அவசரத்தில் அதைச் செய்ய மறந்துவிட வேண்டாம். 


அன்புடன்

நூ.அப்துல் ஹாதி பாகவி

25.01.2025


#silentmode 

#switchoffyourmobile

#besilent

புதன், 22 ஜனவரி, 2025

இது சுன்னத் என்றால் அது சுன்னத் இல்லையா?

 


----------------------

முதல் மனைவி மணவிலக்கு அல்லது மரணம் அல்லது குலா உள்ளிட்ட ஏதேனும் காரணத்திற்காக ஆண்கள் மறுமணம் செய்துகொள்ள நாடுகின்றார்கள். அப்போது அவர்கள் தம்முடைய சுயவிவரக் குறிப்புகளை வாட்ஸ் அப் தளத்தில் பகிர்கின்றார்கள். அதில் அவர்கள் விதிக்கின்ற நிபந்தனைகளுள் ஒன்று நபிவழிக்கு முரணானது என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. அதாவது “முப்பது வயதுக்குட்பட்ட, குழந்தை இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும்” என்பதே அந்த நிபந்தனை. இந்த நிபந்தனையை ஆலிம்கள் அல்லாதோர் விதிப்பதில் வியப்பில்லை. ஆனால் ஆலிம்களும் தம் சுயவிவரக் குறிப்பில் தவறாமல் அந்த நிபந்தனையைச் சேர்ப்பதைக் கண்டு நான் பெரிதும் வியப்படைகிறேன். (இது குறித்து நான் ஏற்கெனவே எழுதியும் இருக்கிறேன்.)

 

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்வாதாரம் (ரிஸ்க்) வழங்குவது இறைவனின் பொறுப்பாகும். அது மனிதனின் பொறுப்பன்று. திண்ணமாக வாழ்வாதாரம் (ரிஸ்க்) ஒரு மனிதனை மரணம் தேடி வருவதைப் போன்று வருகிறது (ஷுஅபுல் ஈமான்: 1147) என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளதை நாம் நினைவில் கொள்வோம்.

 

நம் பிள்ளைகள் நம்மோடு வளர்வதால் அவர்களுக்கு நாம் உணவூட்டுவதாக எண்ணிக்கொள்கிறோம். அது உண்மையில்லை. மாறாக நம் மூலம் அவர்களுக்கு அல்லாஹ்வே உணவளிக்கிறான். இந்த உண்மையைப் புரிந்துகொண்டால், “எவனோ பெற்ற பிள்ளைக்கு நான் உணவு கொடுக்க வேண்டுமா?” என்ற எண்ணம் தோன்றாது.

 

மறுமணம் செய்துகொள்வது நபிவழி என்றால், அந்தப் பெண்ணின் முந்தைய கணவனின் பிள்ளைகளோடு  ஏற்றுக்கொள்வதும் நபிவழிதானே? அதை ஏன் அவர்கள் உணர்வதில்லை?

 

நபித்தோழர் அபூசலமா ரளியல்லாஹு அன்ஹு இறந்தபின் உம்முசலமா ரளியல்லாஹு அன்ஹா தம்முடைய மூன்று பிள்ளைகளோடு இத்தா (காத்திருப்புக் காலம்) இருந்தபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  தமக்காக அவரைப் பெண்கேட்டு அவரிடம் தூது அனுப்பினார்கள். அது குறித்த நபிமொழி இதோ.

 

உம்மு சலமா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: என்னுடைய இத்தா முடிந்தபோது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு தமக்காக என்னைப் பெண்கேட்டு ஆள் அனுப்பினார்கள். நான் அவர்களை மணமுடித்துக்கொள்ளவில்லை. பின்னர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை என்னிடம் அனுப்பித் தமக்காகப் பெண்கேட்டார்கள். நான் (கடுமையாகக் கோபம் கொள்கின்ற) ரோஷக்காரி. மேலும் (முந்தைய கணவர் மூலம்) எனக்குப் பிள்ளைகள் உள்ளனர். என்னுடைய (வலீ) பொறுப்பாளர்களுள் யாரும் ஊரில் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரிவியுங்கள் என்று சொல்லியனுப்பினேன்.

 

அவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று, (நான் சொல்லியனுப்பிய) அதைக் கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “அவரிடம் திரும்பச்சென்று, ‘நான் (கடுமையாகக் கோபம் கொள்கின்ற) ரோஷக்காரி’ என்று நீங்கள் கூறியதற்காக, தாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதாகவும் அவன் உங்களின் ரோஷத்தை நீக்கிவிடுவான் என்றும் ‘(முந்தைய கணவர் மூலம்) எனக்குப் பிள்ளைகள் உள்ளனர்’ எனக் கூறியதற்காக, நீங்களே உங்கள் பிள்ளைகளை (உங்களுடன் வைத்து)க் கவனித்துக்கொள்ளலாம் (அல்லாஹ் போதுமானவன்) என்றும், ‘என்னுடைய (வலீ) பொறுப்பாளர்களுள் யாரும் ஊரில் இல்லை’ என்று கூறியதற்காக, ஊரில் உள்ள அல்லது ஊரில் இல்லாத உங்களுடைய பொறுப்பாளர்களுள் யாரும் இதை வெறுக்கப்போவதில்லை என்றும் கூறுமாறு சொல்லியனுப்பினார்கள்... (நஸாயீ: 3202)

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உம்மு சலமாவை ஹிஜ்ரீ 4ஆம் ஆண்டு மணந்து கொண்டபோது அவருக்கு முப்பது வயது. அவருக்கு சலமா, உமர், ஸைனப் ஆகிய மூன்று பிள்ளைகள் இருந்தார்கள்.  அவரை அவருடைய பிள்ளைகளோடுதான் நபியவர்கள் மணமுடித்துக்கொண்டார்கள். நபியவர்களின் வீட்டில்தான் அக்குழந்தைகள் வளர்ந்தார்கள் என்பது வரலாறு.  

 

ஆகவே இனிவரும் காலங்களில் மறுமணம் முடிப்போர் தமக்கான துணையைத் தேடும்போது, “குழந்தை இல்லாத பெண் வேண்டும்என்ற நிபந்தனையை விதிக்காதீர். வாழ்வாதாரத்தை வழங்குபவன் வல்லோன் அல்லாஹ் என்பதை அறவே மறக்காதீர்.

                       

-மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

22 01 2025

வெள்ளி, 17 ஜனவரி, 2025

மாற்றுக் கருத்தையும் ஏற்றல் இனிது


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

நம்முள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு கருத்து உண்டு. ஒருவரின் கருத்து நம்முடைய கருத்துக்குத் தோதுவான கருத்தாக இருக்கலாம்; அல்லது எதிர்க்கருத்தாக இருக்கலாம்.  நம் கருத்துக்குத் தோதுவான கருத்தாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்கிற நாம், எதிராக இருந்தால்  ஏற்றுக்கொள்வதில்லை. எதிர்க்கருத்தில் உண்மை இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அதுதான் நம் அறிவு முதிர்ச்சியைக் காட்டும். உண்மையாகவே இருந்தாலும் நான் அவனது கருத்தை ஏற்க மாட்டேன் என்பதுதான் பெருமை ஆகும்.

தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்: 147)

 

 

ஒரு மேடையில் பேசுகிற வாய்ப்பு ஓர் அறிஞருக்குக் கிடைக்கிறது. அப்பகுதி மக்கள் தவறான கொள்கையைப் பின்பற்றி வருகின்றார்கள். அது அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அது குறித்தெல்லாம் எதுவும் பேசாமல், வேறு பல செய்திகளை அம்மேடையில் பேசுகிறார் என்றால் அவர் அம்மக்களின் வெறுப்பைச் சுமந்துகொள்ள விரும்பவில்லை என்று பொருள். ஏனெனில் ஒவ்வொருவரும்  தமக்குச் சாதகமான கருத்தையே எதிர்பார்க்கின்றார்கள்; விரும்புகின்றார்கள். எதிர்க்கருத்து சொல்லப்பட்டால் அது குறித்துச் சிறிதளவும் சிந்திக்காமல், அதைச் சொன்னவரிடம் சண்டையிடுவது இன்றைய இளைஞர்களின் வழக்கமாக உள்ளது.

 

 

நம் கருத்துக்கு எதிர்க்கருத்து  கூறுபவரை அணுகி, என் கருத்தை எதனால் எதிர்க்கின்றீர் என்று கேளுங்கள். அதற்கு அவர் சரியான காரணத்தைக் கூறினால், அல்லது அதன் பின்விளைவுகள் இன்னின்னவாறு இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்தினால், அதை ஏற்றுக்கொண்டு உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் நாம் வெளிப்படையாகச் சிந்தித்து ஒரு கருத்தைக் கூறுவோம். நம்மைவிட அனுபவசாலி, அதன் எதிர்விளைவுகள் என்னென்ன என்பதைச் சிந்தித்திருக்கலாம்; அதனால் நம் கருத்தை அவர் எதிர்த்திருக்கலாம். எனவே எல்லாக் கருத்துகளையும் புறந்தள்ளுவது ஏற்புடையதன்று.

 

 

இன்றைய இளைஞர்களின் பலவீனம் என்னவென்றால், தமக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரின் கருத்தை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமின்றி, அவர்களோடு பேசுவதையும் பழகுவதையும் அத்தோடு நிறுத்தி விடுகின்றார்கள். இத்தகைய போக்கு நம்மை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லாது. மாறாக நம்முடைய பின்னடைவுக்குத்தான் காரணமாகும். அதனால்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: நீங்கள் ஒருவருக்கொருவர் புறக்கணித்துச் செல்லாதீர்கள்; கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். (புகாரீ: 6064)

 

 

தம்பதியர் இருவர் நீண்ட காலம் வாழ்ந்து மூன்று பிள்ளைகளையும் பெற்றெடுத்து விட்டனர். ஆனால்  அதன்பின் அந்தக் கணவர், என் மனைவியிடமிருந்து எனக்கு விடுதலை பெற்றுக்கொடுங்கள் என்று பள்ளிவாசல் ஜமாஅத்தில் வேண்டுகோள் விடுக்கிறார். அங்குள்ள இமாம், அதற்கான காரணத்தைக் கேட்டபோது, என் மனைவி தாம்பத்திய உறவுக்கு ஒத்துழைப்பதில்லை என்கிறார். சரியான காரணமாக இருந்ததால், அந்த இமாம் அந்தத் தம்பதியரைப் பிரித்துவைக்க நிர்வாகக் குழுவிடம் ஆலோசனை தெரிவிக்கிறார். இந்நிகழ்வுக்குமுன் அந்தப் பெண்மணி, அந்த இமாமைத் தம்பிஎன்று அழைத்துப் பேசுபவர். இந்த நிகழ்வுக்குப்பின், அவரிடம் பேசுவதையும் அவருக்கு ஸலாம் கூறுவதையும் நிறுத்திவிட்டார். பிறரின் உரிமைக்காகக் குரல் கொடுத்தாலும், பிறரின் நீதிக்காகக் குரல் கொடுத்தாலும் இதுதான் நிலை.

 

திருமணப் பந்தத்தில் இருந்துகொண்டு ஒரு பெண் தன் கணவனுக்குரிய உரிமையைக் கொடுக்கா விட்டால், அவள் அதற்காக மறுமையில் தண்டிக்கப்படுவாள். அதேநேரத்தில் திருமணப் பந்தத்திலிருந்து விலகிவிட்டால், அப்பெண்ணுக்குக் கணவன் குறித்த விசாரணை கிடையாது. தன்னைத் தம்பிஎன்று அழைத்த அக்காவின் மறுமை வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான் அவர் அந்த யோசனையை நிர்வாகத்திற்குத் தெரிவித்தாரே தவிர அவருக்கு வேறு நோக்கம் இல்லை. ஆனால் தம்பியின் நோக்கத்தை அந்தப் பெண்மணி புரிந்துகொள்ளவில்லை.

 

ஒவ்வொருவருமே தமக்குச் சாதகமான கருத்தைத்தான் விரும்புகின்றனர்; எதிர்பார்க்கின்றனர். தமக்கு எதிராக யார் கருத்துக் கூறினாலும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. நிர்வாகத்திற்கு எதிராக இமாம் ஒரு கருத்தைச் சொன்னாலும், அண்ணனுக்கு எதிராக ஒரு கருத்தைத் தம்பி கூறினாலும், அலுவலகத்தில் முதலாளிக்கு எதிரான கருத்தைத் தொழிலாளி கூறினாலும், ஆசிரியருக்கு எதிராக மாணவர் ஒரு கருத்தைக்  கூறினாலும், அரசியல்வாதிக்கு எதிராக மக்கள் ஒரு கருத்தைக் கூறினாலும் அவர்கள்  அதை ஏற்பதில்லை. மேலும் பெரும்பாலோர் எதிர்க்கருத்துக் கூறுவோரிடம் மீண்டும் தொடர்பு வைத்துக்கொள்வதே இல்லை.

 

 

ஒரு வீட்டில் ரஜப் மாதத்தில் பூரியான் ஃபாத்திஹா ஆண்டுதோறும் ஓதுவது அவர்களின் வழக்கம்.  நான் அந்த ஆண்டுதான் அங்கு இமாமாகச் சேர்ந்திருந்தேன். சரி, ஏதோ ஓதுகிறார்கள்; சாப்பிடுகின்றார்கள் என விட்டுவிடலாம் என்று பார்த்தால், அவர்கள் அந்த ஃபாத்திஹாவிற்காகக் கடைப்பிடித்த நிபந்தனைகள் அறிவுக்கொவ்வாதவையாக இருந்தன. பதினாறு பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தைக் கொடுத்து, அதிலுள்ள கதையைப் படிக்கச் சொன்னார்கள். அதற்கு விறகு வெட்டியின் கதைஎன்று சொல்லப்படுகிறது. அதைப் படித்தால் அதிலுள்ள அனைத்தும் கற்பனைக் கதைகள். இமாம் ஜாஅஃபர் ஸாதிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பேரில் பூரி ஃபாத்திஹா ஓதியவருக்குக்  கிடைத்த அபிவிருத்தி; அதை மறுத்தவருக்கு ஏற்பட்ட இழப்பு என அனைத்தும் அதில் கதை கதையாக இருந்தன.

 

 

எல்லாம் ஓதி முடித்தபின் அங்கு வந்திருந்த அனைவருக்கும் அந்தப் பூரியும் இனிப்புக் கஞ்சியும் வழங்கப்பட்டன. சந்தனம் தடவப்பட்ட சில மண் கலயங்களில் அந்த இனிப்புக் கஞ்சி ஊற்றிவைக்கப்பட்டிருந்தது. அதை அங்கிருந்து நகர்த்தக்கூடாதாம். அந்த உணவுப் பொருள்களை வெளியில் எங்கும் கொண்டு செல்லக்கூடாதாம். இன்னும் பற்பல நிபந்தனைகள். எல்லாச் சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு, இறுதியில் நான் என்னுடைய கருத்துகளைச் சபையில் முன்வைத்தேன்.

 

 

இறந்துவிட்ட ஒருவருக்கு, அவருடைய பாவமன்னிப்பிற்காகவும் சொர்க்கத்தில் அவர்தம் உயர்பதவிக்காகவும் நாம் துஆ செய்யலாம். அதை அவருடைய பிறந்த நாளிலோ இறந்த நாளிலோதான் செய்ய வேண்டுமென்ற எந்த நிபந்தனையும் இல்லை. மேலும் இத்தகைய மூடநம்பிக்கையான கதைகளை வாசித்து, இந்த ஃபாத்திஹாமீது நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடாது. இவ்வாறான கற்பனைக் கதைகளை நம்பிக்கை என்ற பெயரில் நாம் வாசிக்கக் கூடாது. அல்லாஹ் தான் நாடியவருக்கு ஏராளமாகக் கொடுக்கிறான். (தான் நாடியவருக்கு) அளவோடு கொடுக்கிறான். எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையோ மறுமையோடு ஒப்பிட்டால் அற்பமேயன்றி வேறில்லை (அல்குர்ஆன் 13:26) என்று அல்லாஹ் கூறுகின்றான்.  எனவே இத்தகைய மூடநம்பிக்கைகளை இன்றோடு விட்டுவிடுங்கள் என்று முடித்தேன்.

 

 

அடுத்த ஆண்டு அவர்கள் அதை விட்டுவிட்டார்களா? ஆம். என்னை விட்டுவிட்டார்கள். வேறு ஓர் இமாமை அழைத்து, அதே கதையைப் படிக்க வைத்துக் கேட்டு மகிழ்ந்தார்கள். இன்றும் அது தொடர்கிறது. பெரும்பாலோர் மார்க்க விஷயங்களில் அறிவுப்பூர்வமாகச் சிந்திப்பதே இல்லை. மூடநம்பிக்கைகளையும் தவறான விஷயங்களையும் பின்பற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அதை விட்டுவிட்டால் வேறு ஏதேனும் நடக்கக்கூடாதது நடந்துவிடுமோ என்று அஞ்சுகின்றார்கள். யாரேனும் ஓர் இமாம் அதை எடுத்துக் கூறினாலும் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்குக் காரணம் மற்றொருவர் அதைத் தயக்கமின்றிச் செய்யத் துணிவதுதான். ஒவ்வோர் இமாமும் அதைக் கண்டித்தால், கண்டிப்பாக அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து விலகிவிடுவார்கள் என்பது திண்ணம். மாறாக மக்களின் அறியாமை நமக்கான வருமானம்என்று நினைப்போரால் தீமைகளும் மூடநம்பிக்கைகளும் வளரவே செய்யும்.

 

 

எதிர்க்கருத்துக் கூறியவரை, அவருடைய கருத்தை ஏற்றுக்கொள்வதோடு பாராட்டவும் செய்தால், அதுதான் அறிவு முதிர்ச்சியின் அடையாளமாகும். எத்தனையோ தருணங்களில் நபியவர்கள் தம் தோழர்கள் கூறிய கருத்தை ஏற்றுக்கொள்ளவும் பாராட்டவும் செய்திருக்கின்றார்கள். எனவே எதிர்க் கருத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற்றால்தான், நாம் தவறான வழியில் செல்லும்போது அதைத் திருத்திக்கொடுக்க மற்றவர்கள் முன்வருவார்கள். இல்லையேல் நமக்கு வழிகாட்ட யாரும் முன்வரமாட்டார்கள். ஆதலால் நாம் பிறரின் கருத்தை மதிக்கவும் ஏற்கவும் எப்போதும் தயாராகவே இருப்போம். அதுதான் நம் வாழ்வின் அடுத்தடுத்த வளர்ச்சிப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.

---------------------------------

சனி, 11 ஜனவரி, 2025

விடாமுயற்சியின் வெற்றிக்கனி (குறுநாவல் தொடர்-5)

 


-நூ. அப்துல் ஹாதி பாகவி

 

இது ஒருபுறம் சென்றுகொண்டிருக்க, அவர் தம் மொழிபெயர்ப்புப் பணியை உரிய முறையில் செய்துகொண்டே வந்தார். அதில் வந்த வருமானம்தான் அவர் ஸகாத் வாங்காமைக்குக் காரணம். அதாவது தமக்குத் தேவையான பணத்தை உழைத்து ஈட்டிக்கொள்ள வேண்டுமே தவிர பிறரிடம் கையேந்திப் பெறக்கூடாது என்று அவர்தம் ஆசிரியர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதனால்தான் பிறரிடம் அவர் கையேந்துவதில்லை. மேலும் ஸகாத் என்பது மக்களின் அழுக்குகள்என்ற ஹதீஸை அவருடைய உஸ்தாத், சொன்னது அவர்தம் மனத்தில் ஆழமாகப் பதிவாகிவிட்டதால் அதை வாங்குவதை அவர் விரும்புவதில்லை. 

 

அவர் இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழாக்கம் செய்துள்ளார். அரபியிலிருந்து தமிழிலும் ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் என இரண்டு மொழிகளிலிருந்தும் தமிழுக்கு மொழிபெயர்க்கும் திறன் பெற்றவர்.  அதனால்தான் இவரைத் தேடிப் பலர் வருகின்றனர். அது மட்டுமின்றித் தமிழ் இலக்கணத்தில் போதிய திறன் இருப்பதால் தமிழைப் பிழையின்றி எழுதவும் திருத்திக்கொடுக்கவும் தெரியும். அதனால் மொழிபெயர்ப்புப் பணி மட்டுமின்றி, நூலைச் செப்பனிட்டுத் தருகிற மெய்திருத்துநர்பணியையும் செய்துவருகிறார்.

 

சென்னை தி.நகரில் புத்தகக் கடை வைத்துள்ள ஷாஹின் என்பவர், தம்முடைய கடைக்கு வருமாறு அஹதுக்கு அழைப்புக் கொடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று அவரது கடைக்குச் சென்றார். அங்கு ஒரு பேராசிரியரும் அமர்ந்திருந்தார். அப்போது அந்தக் கடை உரிமையாளர் ஷாஹின், “ஆன்மிகம் சார்ந்த ஓர் அரபி நூல் இருக்கு. அதன் சில பகுதிகள் ஏற்கெனவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இப்போது நாமே அதை முழுமையாகத் தமிழாக்கம் செய்து வெளியிட எண்ணியுள்ளோம். அப்பணியை நீங்கதான் எங்களுக்குச் செய்து கொடுக்கணும்என்றார்.

                           

ஓகே பாய். இன் ஷாஅல்லாஹ் செய்யலாம்என்றார் அஹத்.

 

ஒரு பக்கத்துக்கு எவ்வளவு கேக்குறீங்க?” என்று ஷாஹின் கேட்க, ஒரு பக்கத்துக்கு ஐநூறு ரூபாய் ஆகும் பாய்என்றார். அதைக் கேட்ட அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்னது ஐநூறு ரூபாயா? ஏற்கெனவே செய்தவருக்கு நாங்க நூறு ரூபாய்தான் கொடுத்தோம். அவர் இப்போது இறந்துபோய்விட்டார் என்பதற்காகத்தான்  உங்களிடம் கொடுக்கலாம்னு நெனக்கிறோம். நீங்க என்னன்னா இப்படிப் பேசுறீங்களே?” என்றார்.

 

தம்பி அஹத், இந்த நூல் மிகப்பெரிசு. இவ்வளவு பணம் கேட்டா எப்டி? அவ்வளவு பணம் கொடுத்து, அதை வெளியிட்டு, விற்பனை செஞ்சா, அவருக்கு ஏதாவது மிஞ்சுமா என்ன? அவரும் அச்சிட்டு, வெளியிடப் பணத்தைச் செலவழிக்க வேண்டியுள்ளதா, இல்லையா? எனவே பார்த்துச் சொல்லுங்க அஹத்என்று பேராசிரியர் பேசினார்.

 

சரி, ஒரு பக்கத்துக்கு நானூறு ரூபாய் கொடுக்கச் சொல்லுங்க சார்என்றார்.

இந்த அளவிற்கு அதிகமா பணம் கேட்பது நீங்க மட்டும்தான். எத்தனையோ பேர் தமிழாக்கம் செய்யுறாங்க. இப்டி யாரும் கேட்டதே கிடையாதுஎன்றார் ஷாஹின்.

அப்படின்னா, அவர்களுள் யாரையாவது அழைத்து, அவர்களிடமே இதை ஒப்படைத்திருக்கலாமே? என்னை ஏன் அழைச்சீங்க பாய்?” என்றார்.

 

உங்களுக்கு இந்தத் துறையில் மிகுந்த அனுபவம் இருக்கு. நீங்க நல்லா, தெளிவா, எளிய நடையில் செய்வீங்கன்னு என் நண்பர் சொன்னார். அத்தோடு நம்ம பேராசிரியரும் சொன்னார். அது மட்டுமில்ல, நீங்க தமிழாக்கம் செய்த நூல்களை நான் படிச்சிருக்கேன். அது எளிமையா புரியும் வகையில் இருந்துச்சு. அதனாலதான் உங்களிடம் ஒப்படைக்கலாமேன்னு நெனச்சேன்என்றார்.

 

என்னைப் பத்தி நீங்களே சொல்லிட்டீங்க. அதாவது மத்தவங்க செய்யிற மொழிபெயர்ப்பும் நான் செய்யிற தமிழாக்கமும் சமம் கிடையாது. மத்தவங்க செய்யிறது மொழிபெயர்ப்பு; நான் செய்யிறது தமிழாக்கம். அது மட்டுமில்ல, மத்தவங்க செய்வதை, இன்னொருவர் டைப் செய்யணும். அதை ப்ரூஃப் பாக்கணும். ரெண்டு மூனு ஆள் தேவைப்படும். காலமும் கடந்து போய்க்கிட்டே இருக்கும். ஆனா நான் செய்யிற தமிழாக்கத்தை நானே தட்டச்சு செய்து, இலக்கணப் பிழைகளைக் களைந்து, வாசக அமைப்பைச் சீராக்கி, அச்சிடத் தயார்நிலையில் தந்துடுவேன். நீங்க லேஅவுட் போட்டு, அப்படியே அச்சிட்டு, விற்பனைக்கு அனுப்பிடலாம்என்றார்.

 

என்னதான் இருந்தாலும் நீங்க கேட்பது ரொம்ப அதிகம்தான்என்றார் ஷாஹின். 

பாய், இசையமைப்பாளர் தாஜ்நூரைத் தெரியுமா? என அஹத் கேட்க, “ஆம், தெரியும்என்றார்.

 

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானைத் தெரியுமா பாய்?” என்று கேட்க, “ஆம், நன்றாகத் தெரியுமேஎன்றார்.

 

அந்த ரெண்டு பேர்ல யார் அதிகமா சம்பளம் வாங்குறவருன்னு தெரியுமா? ஒரு படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர். ரகுமானுக்கு எவ்வளவு சம்பளம்? அதேபோன்ற ஒரு படத்துக்கு இசையமைக்க தாஜ்நூருக்கு எவ்வளவு சம்பளம்? இருவரும் பாய்தான். இருவரும் இசையைத்தான் அமைத்துக்கொடுக்குறாங்க. இருவருள் ஒருவருடைய சம்பளம் கோடிகளில், மற்றொருவரின் சம்பளம் இலட்சங்களில்... ஏன் இந்த வித்தியாசம்னு தெரியிதா பாய்?” என்றார்.

 

பேச வார்த்தையின்றி அமைதியானார் ஷாஹின். இவ்வளவு சொல்லியும் அவர் தம்முடைய நூறு ரூபாயைத் தாண்டி வரவே இல்லை. இது ஒத்துவராது என்று எண்ணியவாறே அங்கிருந்து புறப்பட்டுவிட்டார் அஹத்.

 

புத்தக வியாபாரியான அவர் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், கவிஞர்கள் ஆகியோரின் உழைப்பைச் சாப்பிட நினைக்கிறாரே தவிர அவர்களும் வாழட்டும் என்ற எண்ணமே அவருக்கு இல்லை.  

                                                                                                                                                                               

அஹத் அந்தப் பள்ளியில் இமாமாக நீண்ட காலம் இருப்பதோடு, ஜமாஅத்துல் உலமா சபையிலும் பொறுப்பு வகித்து வந்தார். மக்களுக்குச் சேவை செய்யும் எந்த வாய்ப்பையும் அவர் நழுவ விட்டதில்லை. அவ்வாறுதான்   சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருள்களை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை ஏற்பாடு செய்திருந்தது. அவற்றை நேரடியாகச் சென்று விநியோகிக்க ஆள் தேடியபோது   அஹத் இமாம் முன்வந்தார். அப்பகுதியைச் சார்ந்த தலைவர், செயலாளர் ஆகியோருடன் இவரும் சென்று தேங்கிக் கிடந்த நீரில் நடந்து சென்று நிவாரணப் பொருள்களை வீடு வீடாக வழங்கினார்.

 

மாவட்ட அளவில் துணைத்தலைவர் பொறுப்பு வகித்தார். பின்னர் சென்னை மாவட்டத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றார். சென்னை மாவட்டத் தலைவர் ஆனதும் உலமாக்களுக்குப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார். உலமாக்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். அதற்குச் சில நிபந்தனைகளையும்  முன்வைத்தார். ஏனெனில் மாற்றம் என்பது ஒவ்வொருவரிடமிருந்தும் சுயமாக வெளிப்பட வேண்டும். அதுதான் அவருக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக அமையும். எனவே யார் டைப்பிங் சென்டர் சென்று தட்டச்சு பழகி, அதற்கான தேர்வை எழுதி, சான்றிதழ் பெற்று வருகின்றாரோ அவருக்கு லேப்டாப் இலவசம்என்ற தகவலை வெளியிட்டார். 

 

ஜமாஅத்துல் உலமா சபையின் இந்த அதிரடித் திட்டத்தைச் சவாலாக ஏற்ற இளம் உலமாக்கள், ஆங்காங்கே உள்ள டைப்பிங் சென்டர் சென்று, தட்டச்சு பழகினார்கள். அதற்கான தேர்வையும் எழுதி, சான்றிதழ் பெற்றுவந்தார்கள். அவ்வாறு துடிப்போடு வந்தோர் இருபத்தைந்து பேர். எனவே அவர்கள் அனைவருக்கும் லேப்டாப் வழங்கப்பட்டது.

 

அடுத்து, பள்ளிவாசலில் இமாமாக உள்ளோர் தம் இருப்பிடத்திலிருந்தே கம்ப்யூட்டர், லேப்டாப் மூலம் செய்ய இயலுகிற பணிகள் என்னென்ன என்பதை ஒரு பயிலரங்கு மூலம் சொல்லிக் கொடுத்தார். அந்தப் பயிலரங்கில், ஆன்லைன் பணிகள், தட்டச்சுப் பணிகள், டிசைனிங், ஆன்லைன் வகுப்பு நடத்துதல், மொழிபெயர்ப்புச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களைக் கணினி நிபுணர் கற்பித்தார். அதனால் ஆலிம்கள் பலர் பயனடைந்ததோடு  தொழில்களைத் தொடங்கிச் சம்பாதிக்கவும் செய்கின்றார்கள்.  

 

***

 

ஒரு நாள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறப்போவதாகச் செய்தியறிந்து, குறிப்பிட்ட நாளில் அஹத் அங்கு சென்று கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் எழுத்தாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். அதில் கலந்துகொண்ட ஆலிம்கள் யார் யார் என்று பார்த்தால் அது அவர் மட்டுமே.

 

அதாவது தமிழ்மொழி நூல்களைப் பிறமொழிகளுக்குக் கொண்டுசெல்வதும் பிறமொழி நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவருவதும்தான் முக்கிய நோக்கம். அந்த நோக்கத்தின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு சார்பாக கூட்டப்பட்ட கூட்டம்தான் அது.

கூட்டத்தில் கலந்துகொண்ட அஹத், இந்தத் திட்டத்திற்குப் பொறுப்பு வகித்திருந்த ஐஏஎஸ் ஆஃபிஸரிடம், “சார், அரபியில் மொழிபெயர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கா?” என்று கேட்டார். ஆம். இருக்கு. நீங்க முஹம்மது அலியைச் சந்திங்கஎன்று கூறினார்.

 

யாருங்க முஹம்மது அலி?” என்று கேட்டுக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தார். அவர் அப்போதுதான் வேறு எங்கோ சென்றுவிட்டு உள்ளே நுழைந்தார். இதோ அவர்தான் முஹம்மது அலிஎன்று அவரை அறிந்தவர்கள் சுட்டிக் காட்டினார்கள். அவரைச் சந்தித்து, “அரபிக்கான வாய்ப்பு உண்டா? நான் அரபியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பவன்என்று கூறினார்.

 

அப்படியா? அரபி மட்டுமில்லை. உர்தூவுக்கும் எனக்கு ஆள் வேண்டும். நீங்க பிறகு பேசுங்க. இதோ என்னுடைய விசிட்டிங் கார்டுஎன்று கூறி அவருடைய முகவரி அட்டையைக் கொடுத்துவிட்டு, “உங்களுடைய நம்பர் சொல்லுங்கஎன்றார். அவர் தம் நம்பரைச் சொல்வதற்குப் பதிலாக, தம்முடைய விசிட்டிங் கார்டைக் கொடுத்தார். அதை வாங்கித் தம் சட்டைப்பையில் வைத்தவாறே அவசரமாக எங்கோ அவர் சென்றுகொண்டிருந்தார்.

 

அஹதுதான் எப்போதும் பொதுநலம் விரும்பிஆயிற்றே. அதனால் தாம் சென்றுவந்த கூட்டத்தைப் பற்றியும் அரபி, உர்தூ மொழியில் மொழிபெயர்ப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அத்தகைய திறன் உள்ளவர்கள் இவரைத் தொடர்புகொள்ளுங்கள் என்றும் முகநூலில் ஒரு பதிவு போட்டு, முஹம்மது அலியுடைய செல்பேசி எண்ணையும் பதிவிட்டுவிட்டார்.

 

அந்தப் பதிவைப் படித்த ஆலிம்கள் பலர் முஹம்மது அலியைத் தொடர்புகொண்டு பேசினார்கள். என்னுடைய நம்பரை உங்களுக்கு யார் கொடுத்தார்? என்று கேட்க, “அஹத் இமாம்தான் தம்முடைய முகநூல் பதிவில் போட்டிருந்தார்என்று கூறினார்கள்.

 

அதில் சென்று அந்தப் பதிவைப் படித்துவிட்டு, அப்துல் அஹதைத் தொடர்புகொண்டார். முகமன் கூறிவிட்டு நன்றி கூறினார். அரபி மொழிபெயர்ப்பாளர்களை நாம் எங்கே போய்த் தேடுவது என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு எல்லா வேலைகளையும் எளிதாக்கிவிட்டீர்கள். ரொம்ப ரொம்ப நன்றி. நாம் ஒரு நாள் நேரடியாகச் சந்திப்போம். இது தமிழ்நாட்டு அரசின் மிகப்பெரும் திட்டம். இதன்மூலம் நானும் நீங்களும் மட்டும் பயன்பெறக் கூடாது. எல்லோருக்கும் இதனுடைய பயன் சென்று சேரணும்; அதற்காக நாம் முயற்சி செய்யணும்என்றார்.

 

அதனால்தான் பாய், நான் முகநூலில் பதிவுபோட்டேன். யாருக்கெல்லாம் திறமை இருக்கோ அவர்கள் அனைவரும் பயன்பெறட்டும். அதுதானே நமது நோக்கம்?” என்று அஹத் கூறினார்.

 

சரி ஹஜ்ரத், ஒரு நாள் நாம் சந்திப்போம்என்று கூறிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தார்.

 

ஒரு வாரத்திற்குப்பின் அஹதுடைய இருப்பிடத்திற்கு வந்து அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது நீங்க இதுவரை மொழிபெயர்ப்புச் செய்த நூல்களைக் காட்டுங்க பார்க்கலாம்என்றார்.

 

அவர் இதுவரை செய்த நூல்களை எடுத்து அடுக்கி வைத்தார். அவற்றைப் பார்த்ததும், அவர் மலைத்துப் போனார். என்னங்க ஹஜ்ரத், இவ்வளவு நூல்களா? இவையெல்லாமே நீங்க மொழிபெயர்த்தவையா?” என்று ஆச்சரியப்பட்டார். இவ்வளவு நூல்கள் மொழிபெயர்ப்புச் செய்தும் நீங்க தமிழ்நாட்டு அரசின் மொழிபெயர்ப்பு விருதுக்கு ஏன் விண்ணப்பிக்கல?” என்று கேட்டார்.

 

அது பத்தியெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது. நீங்க வேண்டுமானால் வழிகாட்டுங்க. அதன்படி நான் செய்யிறேன்என்றார்.

 

இப்ப நாம செய்யப்போற பிராஜக்ட்ல ஒரு முக்கியமான நூல் இருப்பதாகச் சொன்னீங்களே அது என்ன?” என்று அவர் கேட்க, “அதுவா, ‘முஸ்லிம்களின் வியத்தகு கண்டுபிடிப்புகள்என்ற நூல்தான்என்றார்.

 

அதை முதலில் நீங்க மொழிபெயர்ப்புச் செய்யத் தொடங்குங்க. அதையே விருதுக்குரிய நூலாக நாம் பரிந்துரை செய்வோம் இன் ஷாஅல்லாஹ்என்று ஆர்வமூட்டினார்.

 

ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான அவரது பேச்சைக் கேட்ட அஹத், அந்த அரபி நூலை ஓராண்டுக் கால கடின உழைப்பில் தமிழாக்கம் செய்து முடித்தார். பின்னர் அது தமிழ்நாட்டு அரசு நூலகத்தின் சார்பாக வெளியிடப்பட்டது. அதன்பிறகு அந்த நூலின் பிரதி ஒன்றைச் சேர்த்து வைத்து, ‘சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டது.

 

***

அஹத் தம் மாணவர்களைப் பார்த்துப் பொதுவாகச் சொல்லும் ஒரு கூற்று, “படிக்கின்ற புத்தகத்தையும் படித்துக்கொடுக்கின்ற ஆசிரியரையும் மதிக்கணும்என்பதுதான். அந்த வகையில் அதை அவர் செயல்படுத்தவும் செய்தார். தம்முடைய ஆசிரியர்கள் சென்னை வந்தால் அவர்களைச் சென்று சந்திப்பதும் அவர்களுக்குப் பணிவிடை செய்து அவர்களின் துஆவைப் பெற முயல்வதும் அவரின் வழக்கம்.

 

அரபுக் கல்லூரியில் அஹதைச் சேர்க்கத் தயங்கிய முதல்வர் அவர்களைச் சென்னையில் அவரின் மகள் வீட்டில் சந்திக்கச் செல்வார். அவர் செல்லும்போதெல்லாம், அங்கே அவர் சேர்த்துக்கொள்ளப்பட்ட நிகழ்வைப் பற்றி அவரிடமே நெகிழ்ச்சியுடன் அந்த உஸ்தாத் கூறுவார். அவர் எழுதிய அல்லது தமிழாக்கம் செய்த நூல்களைப் பார்க்கும்போதெல்லாம், “அல்லாஹ் உன்னைக் கொண்டு வேலை வாங்குறான் அப்துல் அஹத்; ரொம்ப சந்தோஷமா இருக்குஎன்று மகிழ்ச்சியுடன் கூறுவார். அவர் அண்மையில் நபிவழி மருத்துவம் எனும் அரபு-தமிழாக்க நூலைக் காட்டி, உஸ்தாதிடம் அணிந்துரை பெற்றபோதும், அதையே நெகிழ்ச்சியுடன் கூறிக் காட்டினார்.

 

தயக்கத்தோடு என்னைச் சேர்த்த ஹஜ்ரத் அவர்களின் மனங்குளிரும் விதமாக நான் உருவானதையேஎன் உஸ்தாதுக்கு நான் செய்யும் கைம்மாறாகக் கருதுகிறேன்என்பார் அஹத்.

 

***

 

விண்ணப்பம் அனுப்பியதை மறந்துவிட்டுத் தமிழாக்கம் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார். ஒரு மாதத்திற்குப்பின் தமிழக அரசின் கடிதம் ஒன்று வந்தது. அதைப் பிரித்துப் படித்தபோது அல்ஹம்து லில்லாஹ்என்று அல்லாஹ்வைப் புகழ்ந்து தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுக்குத் தாங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர். விருதைப் பெற குறிப்பிட்ட தேதியில் நேரடியாக வந்து கலந்துகொள்ளுங்கள்என்று அக்கடிதம் தெரிவித்தது.

 

இவ்வளவு காலம் அல்லாஹ்வின் திருப்தியையும் உவப்பையும் நாடிச் செய்து வந்த எழுத்துப் பணிக்கும் தமிழாக்கப்பணிக்கும் இன்று அவன் அங்கீகாரம் வழங்கியுள்ளதை இறைநம்பிக்கையாளர்களுக்கு முன்னரே தெரிவிக்கப்படுகிற நற்செய்தியாக எடுத்துக்கொண்டார். இவ்வளவு காலம் செய்த கடின முயற்சிக்கும் உழைப்பிற்குமான பரிசாக இந்த விருதைக் கருதி மகிழ்ந்தார்.

 

இதோ குறிப்பிட்ட நாளும் வந்தது. சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதைப் பெறத் தலைமைச் செயலகத்தை நோக்கிப் புறப்பட்டுவிட்டார். செய்தியறிந்த பலர் அஹதை வாழ்த்திப் பாராட்டினார்கள்.                                                                                                                       (முற்றும்)

===================