புதன், 8 ஜனவரி, 2025

தடைகளை உடைக்காதீர்!

   

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28  

 

படைத்தோன் அல்லாஹ் மக்கள் அனைவரும் சீராகவும் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்காகவே வரையறைகளை அமைத்தான். அந்த எல்லைக்குள் இருந்தவாறே எல்லோரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகவே கட்டுப்பாடுகளை விதித்தான். அந்த வரையறைகளையும் கட்டுப்பாடுகளையும் மீறினால் மனித வாழ்க்கை சீரழியும். அவ்வாறு இறைவன் விதித்த வாழ்வியல் கட்டுப்பாட்டை மீறித்தான் இன்றைய சமூக மக்கள் பலர் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்; அதனால் பற்பல சிரமங்களையும் சங்கடங்களையும் நாள்தோறும் அனுபவித்து வருகின்றார்கள்.

 

விருப்பத்தோடு கூடிவாழ்தல்: ஆண்-பெண் சேர்ந்து வாழ்வதற்கான மிக எளிதான வழிமுறையை இஸ்லாம் வகுத்துள்ளது; பிற சமயங்களும் வகுத்துள்ளன. ஓர் ஆண் உரிய மஹர் கொடுத்து, ஒரு பெண்ணைச் சாட்சிகளின்  முன்னிலையில் திருமண ஒப்பந்தம் செய்துகொண்டு அப்பெண்ணைக் கைப்பிடிப்பதே இஸ்லாமியத் திருமண முறை. இந்தச் சமூகக் கட்டமைப்பை உடைக்கிறது இன்றைய ஊடகம். கட்டற்ற சுதந்திரம்என்ற மாயையை இன்றைய இளைஞர்கள்-இளைஞிகள் மத்தியில் பரப்பிவருகிறது.

 

ஓர் இளைஞனும் இளைஞியும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு, “நாங்கள் இருவரும் நண்பர்களாகச் சேர்ந்து (Living together) வாழ்கிறோம்; எங்களுக்குப் பிடித்திருந்தால் திருமணம் செய்துகொள்வோம்; இல்லையேல் பிரிந்துவிடுவோம்என்று சாதாரணமாகக் கூறுகின்றார்கள். சமூகக் கட்டமைப்புகளை உடைக்கின்ற இந்தப் பழக்கமானது மேலை நாட்டுப் பழக்கமாகும். இத்தகைய விபச்சார வலைக்குள் முஸ்லிம் இளைஞர்களும் இளைஞிகளும் சிக்கியுள்ளது அவர்களின் அறியாமையாகும்.

 

ஒரு காஃபி குடிக்க, அந்தக் கடையையே யாராவது வாங்குவாங்களா?” என்பது போன்ற திரைப்பட வசனங்களுக்குள் சமூகச் சீர்கேடு ஒளிந்துள்ளது. சமூகக் கட்டமைப்புகளை உடைக்கும் சதிவேலையைத்தான் இன்றைய திரைப்பட வசனங்கள் செய்துகொண்டிருக்கின்றன. இளைஞர்கள் மத்தியில் விபச்சாரத்தை ஊக்குவிக்கின்றன. திருமணத்திற்கான சமூக வரையறைகளை மீறுகின்றன.

 

தற்கால இளைஞர்களின் போக்கிற்கேற்பச் சென்னை உயர்நீதி மன்றமும் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது மனவிருப்பத்தோடு ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது குற்றமாகாது என்று தீர்ப்பளித்துள்ளது. அதேநேரத்தில் இது சமூக நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழும் தம்பதிகளுக்கிடையே ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால்  அவர்கள் முறைப்படி குடும்ப நல நீதிமன்றத்தை நாட முடியாது. ஏனெனில் அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. எனவே அவர்கள் வழக்குத் தொடுக்க  எந்தத் தார்மிக உரிமையும் இல்லை எனச் சென்னை உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. ஆகவே சமூக வரையறைகளையும் வரம்புகளையும் மீறும் போக்கை இன்றைய இளைஞர்களும் இளைஞிகளும் கைவிட வேண்டும். 

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களுள் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள். எனவே யார் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக்கொள் கிறார்; மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். யார் சந்தேகத்திற்கிடமானவற்றில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவற்றில் தலையிடுகிறார்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர்  வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது; அல்லாஹ்வின் நாட்டில் அவனது எல்லை (வேலி) அவனால் தடைவிதிக்கப்பட்டவையே... (புகாரீ: 52)

 

உணவுக் கட்டுப்பாடு: படைத்தோன் அல்லாஹ் மனித இனம் உண்ணத் தகுந்தவற்றையும், உண்ணத்தகாதவற்றையும் தெளிவுபடுத்தியுள்ளான். உண்ண அனுமதிக்கப்பட்டவை மனித உடலின் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யக்கூடியவை; உண்ணத்தகாதவை என்று இறைவன் தடைவிதித்தவை  மனித உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை ஆகும். அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாதவற்றை உண்பது கூடாது என இறைவன் தடைவிதித்திருக்கின்றான். ஆனால் இன்றைய முஸ்லிம் இளைஞர்கள் உணவகங்களில் அசைவ உணவுகளை எந்தவிதத் தடை உணர்வும் இல்லாமல் உண்கின்றார்கள். அதை அறுத்தவர் யார்? அது முறைப்படி அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதா என்றெல்லாம் எவ்வித ஆய்வுமின்றி, உறுத்தலுமின்றி உண்கின்றார்கள்.

 

சந்தேகமான அசைவ உணவுகளைச் சாப்பிடும்போது, ‘பிஸ்மில்லாஹ்என்று கூறிவிட்டால் அது ஹலால் ஆகிவிடும் என்று மக்கள் சிலர் தவறாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர். அது அவர்களின் அறியாமையையே பறைசாற்றுகிறது. அதற்கான ஆதாரமாகப் பின்வரும் நபிமொழியை முன்வைக்கின்றனர்.

 

இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்துள்ளதாவது: அல்லாஹ்வின் தூதரே! மக்கள் சிலர் எங்களிடம் இறைச்சியை (அன்பளிப்பாக)க் கொண்டுவருகின்றார்கள். அதில் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதா, இல்லையா என்று எங்களுக்குத் தெரியவில்லை (நாங்கள் என்ன செய்வது)? என்று மக்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறிச் சாப்பிடுங்கள்என்று கூறினார்கள். அதாவது அம்மக்கள் இஸ்லாத்திற்குப் புதிதாக வந்தவர்கள் ஆவர். (இப்னுமாஜா: 3174/ 3165) 

 

இந்த நபிமொழியில் பதிவுசெய்யப்பட்டுள்ள  புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள்என்ற வாக்கியம்  கூர்ந்து நோக்கத்தக்கது. அதாவது புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் அறுத்த இறைச்சியில் சந்தேகம் வந்தால், அங்கு பிஸ்மில்லாஹ் சொல்லிவிட்டுச் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்பதைத்தான் இந்நபிமொழி கூறுகிறதே தவிர அறுத்தவர் யாராக இருந்தாலும் பரவாயில்லை; பிஸ்மில்லாஹ் சொல்லிச் சாப்பிட்டுக்கொள்ளுங்கள்என்பது பொருளன்று.

 

ஹலால் சான்றிதழ் ஒழிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளும் அமைச்சர்களும் கூறிக்கொண்டிருக்கின்ற  இக்காலத்தில், நாம் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். ஷைத்தான்கள் முஸ்லிம்களை ஹராம் இறைச்சியைச் சாப்பிட வைக்க முயல்கின்றார்கள். அதிலிருந்து நாம் முற்றிலும் விலகிக்கொள்ள வேண்டும். பின்வரும் நபிமொழி கூர்ந்து நோக்கத்தக்கது. இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: திண்ணமாக ஷைத்தான்கள் தம்முடைய நேசர்களிடம் (மறைவான செய்திகளை) அறிவிக்கின்றார்கள் (என்று அல்லாஹ் கூறுகின்றான். அல்அன்ஆம்: 121). “எதில் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதோ அதை உண்ணாதீர்கள். எதில் அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைச் சாப்பிடுங்கள்என்று (ஷைத்தான்களின் நேசர்கள் ஆகிய) அவர்கள் கூறிக்கொண்டிருந்தார்கள். எனவேதான் அல்லாஹ் (இறைநம்பிக்கையாளர்களுக்குக்) கூறுகின்றான்: எதில் அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைச் சாப்பிடாதீர்கள்.  (இப்னுமாஜா: 3173/ 3164) 

 

யாருக்கும் கட்டுப்படாமை: இன்றைய இளைஞர்கள்-இளைஞிகள் பெரும்பாலோர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறிச் செயல்படுவோராகவே உள்ளனர். பெற்றெடுத்துப் பராமரித்து வளர்த்துப் பாதுகாக்கின்ற பெற்றோருக்கும் கட்டுப்படுவதில்லை; அறிவைக் கற்றுக் கொடுத்து, ஒழுக்கத்தைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கும் கட்டுப்படுவதில்லை; மதிப்பதில்லை. இந்த இரு சாரார்தாம் பிள்ளைகளைக் கண்டிக்கக்கூடிய இடத்தில் இருக்கின்றார்கள். இந்த இரு சாராருக்கும் கட்டுப்படாத அவர்கள் வேறு யாருக்குக் கட்டுப்படப்போகிறார்கள்? ‘தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளதுஎன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதையோ தந்தை சொர்க்கத்தின் நடுக்கதவுஎன்று கூறியதையோ அவர்கள் ஊன்றிப் படிக்கவில்லை. அதனால்தான் பெற்றோருக்குக் கட்டுப்படாத நிலை நீடிக்கிறது.

 

தேர்வுக்காகப் படிப்பதற்கு விடுமுறை விட்டுள்ள அந்நாள்களில், படிக்காமல் செல்ஃபோன் பார்த்துக்கொண்டிருந்த மகனைப் பார்த்து, “படிக்கின்ற நேரத்தில் ஏன் செல்ஃபோன் பார்த்துக்கொண்டிருக்கிறாய்என்று பெற்றோர் கண்டித்ததற்காக, அவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டான். நீண்ட நேரம் செல்ஃபோன் பார்த்துக்கொண்டிருந்த மகனைக் கண்டித்த தாய், அவன் கையிலிருந்த செல்ஃபோனைப் பறித்துக்கொண்டதால் அத்தாயைத் தாக்குகிறான் மகன். இவ்வாறு சிறுவர் முதல் இளைஞர்கள் வரை செல்ஃபோனுக்குள் மூழ்கிக் கிடக்கின்றார்கள். அதிலிருந்து அவர்களால் வெளிவர இயலவில்லை.

 

பெற்றோர், ஆசிரியர் ஆகியோரின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமலும், சமூகக் கட்டுப்பாட்டிற்குள் சிக்காமலும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று கருதுகிறார்கள். அதனால்தான் யார் கண்டித்தாலும் பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்த்துத் தாக்குகின்றார்கள்; அல்லது தற்கொலை செய்துகொள்கிறார்கள். குற்றங்களைச் செய்துவிட்டு, காவல்துறையில் மாட்டிக்கொண்டபின் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகின்றார்கள்.

 

வரம்புமீறிய கலந்துரையாடல்: இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் பயனால் அந்நிய ஆண்-பெண் ஒருவருக்கொருவர் எளிதில் தொடர்புகொண்டு பேச முடிகிறது. செல்ஃபோனில் வாட்ஸ்ஆப் மூலம் ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப் பேசக்கூடிய வசதி உள்ளது. அதனால் ஒரு பெண் தனக்குத் தொடர்பு இல்லாதவர்களோடு பேசத் தொடங்குகிறாள்.  ஆண் வீசுகின்ற வலையில் சிக்கிக்கொள்கிறாள். இதனால் ஆண்-பெண்ணுக்கென இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வகுத்த எல்லைக்கோடு தாண்டப்படுகிறது; மீறப்படுகிறது.

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்ஸாரிகளுள் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்துத் தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' (அதாவது அறவே சந்திக்கக் கூடாது) என்று கூறினார்கள். (புகாரீ: 5232)

 

கள்ளத்தொடர்பு: திருமணம் முடிக்கப்பெற்ற ஆணுக்கும் பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டு, அவ்விருவரும் வரம்புமீறிய பேச்சில் ஈடுபட்டு வருகின்றனர். காலப்போக்கில் அவ்விருவரும் ஒருவரோடொருவர் கலந்துவிடுகின்றார்கள். அது கணவனுக்குத் தெரிந்துவிட்டால், அவனைக் கொலை செய்யவும் தயங்குவதில்லை. அதன் பின்னர், அவ்விருவரும் எந்தத் தொல்லையுமின்றித் தம் கள்ள உறவைத் தொடர்கின்றார்கள். இத்தகைய சமூக விரோதிகள் பெருகிவரும் காலமிது.

 

மணமுடித்த கணவன் சற்று வேட்கை குறைந்தவனாகவோ அயலூரில் அல்லது அயல்நாட்டில் வேலை செய்பவனாகவோ இருந்தால், அவனை மணமுடித்த பெண் வேலி தாண்டிச் செல்லும் அபாயநிலை இன்று பரவலாகக் காணப்படுகிறது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விதித்துள்ள வரையறைகளைத் தாண்டிச் செல்லும் பெண்களும் ஆண்களும் சற்று நிதானத்துடன் செயல்பட்டு, ஷைத்தான் தூண்டும் பாதையில் சென்றுவிடாமல் தம்மைத் தற்காத்துக் கொள்வது அவசியமாகும்.

 

ஒருபால் திருமணம்: ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளும் கலிகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வியாதி முஸ்லிம் இளைஞர்களையும் சிறிதளவு தொற்றிக்கொண்டுள்ளதாக, ஆங்காங்கே கேள்விப்படுகிற செய்திகள் மூலம் அறிகிறோம். இது இயற்கைக்கு விரோதமான, அருவருக்கத்தக்க செயல் மட்டுமல்ல, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடைசெய்துள்ள, அவர்களின் சாபத்திற்குரிய செயல் என்பதை  நம்முடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் உணர்த்த வேண்டியது நம் கடமையாகும்.

 

ஓரினப் புணர்ச்சி செய்த சமுதாய மக்களை அழித்த விதத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:  அச்சமயம் அவர்கள்மீது செங்கற்களைப் பொழியச் செய்து அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டிவிட்டோம். (15: 74) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: லூத் சமுதாய மக்களின் செயலைச் செய்தவரை நீங்கள் கண்டால், அச்செயலைச் செய்தவனையும் செய்யப்பட்டவனையும் கொன்றுவிடுங்கள். (இப்னுமாஜா: 2561/2551.) ஆக, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனையை இஸ்லாம் வரையறுத்துள்ளது.  

 

இவ்வாறு பல்வேறு வரம்புகள் உடைக்கப்படுகின்றன. மீறப்படுகின்றன. இனிவரும் காலங்களிலாவது நம் இளைஞர்களும் இளைஞிகளும் வழிதவறிச் சென்றிடாமல் பாதுகாக்க ஒவ்வொரு மஹல்லாவிலும் இளைஞர்கள்-இளைஞிகளுக்குத் தனிப்பட்ட முறையில் தஸ்கிய்யா (ஒழுக்கப்பயிற்சி) வகுப்புகள்நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களைச் சீரிய பாதைக்கு அழைத்து வர முடியும். இது மஹல்லாவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஒவ்வொருவர்மீதும் கடமையாகும்.

====================================


கருத்துகள் இல்லை: