-நூ. அப்துல் ஹாதி பாகவி
இது ஒருபுறம் சென்றுகொண்டிருக்க, அவர் தம் மொழிபெயர்ப்புப் பணியை உரிய முறையில் செய்துகொண்டே வந்தார். அதில் வந்த வருமானம்தான் அவர் ஸகாத் வாங்காமைக்குக் காரணம். அதாவது தமக்குத் தேவையான பணத்தை உழைத்து ஈட்டிக்கொள்ள வேண்டுமே தவிர பிறரிடம் கையேந்திப் பெறக்கூடாது என்று அவர்தம் ஆசிரியர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதனால்தான் பிறரிடம் அவர் கையேந்துவதில்லை. மேலும் ஸகாத் என்பது ‘மக்களின் அழுக்குகள்’ என்ற ஹதீஸை அவருடைய உஸ்தாத், சொன்னது அவர்தம் மனத்தில் ஆழமாகப் பதிவாகிவிட்டதால் அதை வாங்குவதை அவர் விரும்புவதில்லை.
அவர் இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழாக்கம் செய்துள்ளார். அரபியிலிருந்து தமிழிலும் ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் என இரண்டு மொழிகளிலிருந்தும் தமிழுக்கு மொழிபெயர்க்கும் திறன் பெற்றவர். அதனால்தான் இவரைத் தேடிப் பலர் வருகின்றனர். அது மட்டுமின்றித் தமிழ் இலக்கணத்தில் போதிய திறன் இருப்பதால் தமிழைப் பிழையின்றி எழுதவும் திருத்திக்கொடுக்கவும் தெரியும். அதனால் மொழிபெயர்ப்புப் பணி மட்டுமின்றி, நூலைச் செப்பனிட்டுத் தருகிற ‘மெய்திருத்துநர்’ பணியையும் செய்துவருகிறார்.
சென்னை தி.நகரில் புத்தகக் கடை வைத்துள்ள ஷாஹின் என்பவர், தம்முடைய கடைக்கு வருமாறு அஹதுக்கு அழைப்புக் கொடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று அவரது கடைக்குச் சென்றார். அங்கு ஒரு பேராசிரியரும் அமர்ந்திருந்தார். அப்போது அந்தக் கடை உரிமையாளர் ஷாஹின், “ஆன்மிகம் சார்ந்த ஓர் அரபி நூல் இருக்கு. அதன் சில பகுதிகள் ஏற்கெனவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இப்போது நாமே அதை முழுமையாகத் தமிழாக்கம் செய்து வெளியிட எண்ணியுள்ளோம். அப்பணியை நீங்கதான் எங்களுக்குச் செய்து கொடுக்கணும்” என்றார்.
“ஓகே பாய். இன் ஷாஅல்லாஹ் செய்யலாம்” என்றார் அஹத்.
“ஒரு பக்கத்துக்கு எவ்வளவு கேக்குறீங்க?” என்று ஷாஹின் கேட்க, ஒரு பக்கத்துக்கு ஐநூறு ரூபாய் ஆகும் பாய்” என்றார். அதைக் கேட்ட அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. “என்னது ஐநூறு ரூபாயா? ஏற்கெனவே செய்தவருக்கு நாங்க நூறு ரூபாய்தான் கொடுத்தோம். அவர் இப்போது இறந்துபோய்விட்டார் என்பதற்காகத்தான் உங்களிடம் கொடுக்கலாம்னு நெனக்கிறோம். நீங்க என்னன்னா இப்படிப் பேசுறீங்களே?” என்றார்.
“தம்பி அஹத், இந்த நூல் மிகப்பெரிசு. இவ்வளவு பணம் கேட்டா எப்டி? அவ்வளவு பணம் கொடுத்து, அதை வெளியிட்டு, விற்பனை செஞ்சா, அவருக்கு ஏதாவது மிஞ்சுமா என்ன? அவரும் அச்சிட்டு, வெளியிடப் பணத்தைச் செலவழிக்க வேண்டியுள்ளதா, இல்லையா? எனவே பார்த்துச் சொல்லுங்க அஹத்” என்று பேராசிரியர் பேசினார்.
“சரி, ஒரு பக்கத்துக்கு நானூறு ரூபாய் கொடுக்கச் சொல்லுங்க சார்” என்றார்.
“இந்த அளவிற்கு அதிகமா பணம் கேட்பது நீங்க மட்டும்தான். எத்தனையோ பேர் தமிழாக்கம் செய்யுறாங்க. இப்டி யாரும் கேட்டதே கிடையாது” என்றார் ஷாஹின்.
“அப்படின்னா, அவர்களுள் யாரையாவது அழைத்து, அவர்களிடமே இதை ஒப்படைத்திருக்கலாமே? என்னை ஏன் அழைச்சீங்க பாய்?” என்றார்.
“உங்களுக்கு இந்தத் துறையில் மிகுந்த அனுபவம் இருக்கு. நீங்க நல்லா, தெளிவா, எளிய நடையில் செய்வீங்கன்னு என் நண்பர் சொன்னார். அத்தோடு நம்ம பேராசிரியரும் சொன்னார். அது மட்டுமில்ல, நீங்க தமிழாக்கம் செய்த நூல்களை நான் படிச்சிருக்கேன். அது எளிமையா புரியும் வகையில் இருந்துச்சு. அதனாலதான் உங்களிடம் ஒப்படைக்கலாமேன்னு நெனச்சேன்” என்றார்.
“என்னைப் பத்தி நீங்களே சொல்லிட்டீங்க. அதாவது மத்தவங்க செய்யிற மொழிபெயர்ப்பும் நான் செய்யிற தமிழாக்கமும் சமம் கிடையாது. மத்தவங்க செய்யிறது மொழிபெயர்ப்பு; நான் செய்யிறது தமிழாக்கம். அது மட்டுமில்ல, மத்தவங்க செய்வதை, இன்னொருவர் டைப் செய்யணும். அதை ப்ரூஃப் பாக்கணும். ரெண்டு மூனு ஆள் தேவைப்படும். காலமும் கடந்து போய்க்கிட்டே இருக்கும். ஆனா நான் செய்யிற தமிழாக்கத்தை நானே தட்டச்சு செய்து, இலக்கணப் பிழைகளைக் களைந்து, வாசக அமைப்பைச் சீராக்கி, அச்சிடத் தயார்நிலையில் தந்துடுவேன். நீங்க லேஅவுட் போட்டு, அப்படியே அச்சிட்டு, விற்பனைக்கு அனுப்பிடலாம்” என்றார்.
“என்னதான் இருந்தாலும் நீங்க கேட்பது ரொம்ப அதிகம்தான்” என்றார் ஷாஹின்.
“பாய், இசையமைப்பாளர் தாஜ்நூரைத் தெரியுமா? என அஹத் கேட்க, “ஆம், தெரியும்” என்றார்.
“இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானைத் தெரியுமா பாய்?” என்று கேட்க, “ஆம், நன்றாகத் தெரியுமே” என்றார்.
“அந்த ரெண்டு பேர்ல யார் அதிகமா சம்பளம் வாங்குறவருன்னு தெரியுமா? ஒரு படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர். ரகுமானுக்கு எவ்வளவு சம்பளம்? அதேபோன்ற ஒரு படத்துக்கு இசையமைக்க தாஜ்நூருக்கு எவ்வளவு சம்பளம்? இருவரும் பாய்தான். இருவரும் இசையைத்தான் அமைத்துக்கொடுக்குறாங்க. இருவருள் ஒருவருடைய சம்பளம் கோடிகளில், மற்றொருவரின் சம்பளம் இலட்சங்களில்... ஏன் இந்த வித்தியாசம்னு தெரியிதா பாய்?” என்றார்.
பேச வார்த்தையின்றி அமைதியானார் ஷாஹின். இவ்வளவு சொல்லியும் அவர் தம்முடைய நூறு ரூபாயைத் தாண்டி வரவே இல்லை. இது ஒத்துவராது என்று எண்ணியவாறே அங்கிருந்து புறப்பட்டுவிட்டார் அஹத்.
புத்தக வியாபாரியான அவர் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், கவிஞர்கள் ஆகியோரின் உழைப்பைச் சாப்பிட நினைக்கிறாரே தவிர அவர்களும் வாழட்டும் என்ற எண்ணமே அவருக்கு இல்லை.
அஹத் அந்தப் பள்ளியில் இமாமாக நீண்ட காலம் இருப்பதோடு, ஜமாஅத்துல் உலமா சபையிலும் பொறுப்பு வகித்து வந்தார். மக்களுக்குச் சேவை செய்யும் எந்த வாய்ப்பையும் அவர் நழுவ விட்டதில்லை. அவ்வாறுதான் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருள்களை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை ஏற்பாடு செய்திருந்தது. அவற்றை நேரடியாகச் சென்று விநியோகிக்க ஆள் தேடியபோது அஹத் இமாம் முன்வந்தார். அப்பகுதியைச் சார்ந்த தலைவர், செயலாளர் ஆகியோருடன் இவரும் சென்று தேங்கிக் கிடந்த நீரில் நடந்து சென்று நிவாரணப் பொருள்களை வீடு வீடாக வழங்கினார்.
மாவட்ட அளவில் துணைத்தலைவர் பொறுப்பு வகித்தார். பின்னர் சென்னை மாவட்டத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றார். சென்னை மாவட்டத் தலைவர் ஆனதும் உலமாக்களுக்குப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார். உலமாக்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். அதற்குச் சில நிபந்தனைகளையும் முன்வைத்தார். ஏனெனில் மாற்றம் என்பது ஒவ்வொருவரிடமிருந்தும் சுயமாக வெளிப்பட வேண்டும். அதுதான் அவருக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக அமையும். எனவே “யார் டைப்பிங் சென்டர் சென்று தட்டச்சு பழகி, அதற்கான தேர்வை எழுதி, சான்றிதழ் பெற்று வருகின்றாரோ அவருக்கு லேப்டாப் இலவசம்” என்ற தகவலை வெளியிட்டார்.
ஜமாஅத்துல் உலமா சபையின் இந்த அதிரடித் திட்டத்தைச் சவாலாக ஏற்ற இளம் உலமாக்கள், ஆங்காங்கே உள்ள டைப்பிங் சென்டர் சென்று, தட்டச்சு பழகினார்கள். அதற்கான தேர்வையும் எழுதி, சான்றிதழ் பெற்றுவந்தார்கள். அவ்வாறு துடிப்போடு வந்தோர் இருபத்தைந்து பேர். எனவே அவர்கள் அனைவருக்கும் லேப்டாப் வழங்கப்பட்டது.
அடுத்து, பள்ளிவாசலில் இமாமாக உள்ளோர் தம் இருப்பிடத்திலிருந்தே கம்ப்யூட்டர், லேப்டாப் மூலம் செய்ய இயலுகிற பணிகள் என்னென்ன என்பதை ஒரு பயிலரங்கு மூலம் சொல்லிக் கொடுத்தார். அந்தப் பயிலரங்கில், ஆன்லைன் பணிகள், தட்டச்சுப் பணிகள், டிசைனிங், ஆன்லைன் வகுப்பு நடத்துதல், மொழிபெயர்ப்புச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களைக் கணினி நிபுணர் கற்பித்தார். அதனால் ஆலிம்கள் பலர் பயனடைந்ததோடு தொழில்களைத் தொடங்கிச் சம்பாதிக்கவும் செய்கின்றார்கள்.
***
ஒரு நாள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறப்போவதாகச் செய்தியறிந்து, குறிப்பிட்ட நாளில் அஹத் அங்கு சென்று கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் எழுத்தாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். அதில் கலந்துகொண்ட ஆலிம்கள் யார் யார் என்று பார்த்தால் அது அவர் மட்டுமே.
அதாவது தமிழ்மொழி நூல்களைப் பிறமொழிகளுக்குக் கொண்டுசெல்வதும் பிறமொழி நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவருவதும்தான் முக்கிய நோக்கம். அந்த நோக்கத்தின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு சார்பாக கூட்டப்பட்ட கூட்டம்தான் அது.
கூட்டத்தில் கலந்துகொண்ட
அஹத், இந்தத் திட்டத்திற்குப் பொறுப்பு
வகித்திருந்த ஐஏஎஸ் ஆஃபிஸரிடம், “சார், அரபியில் மொழிபெயர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கா?”
என்று கேட்டார். “ஆம். இருக்கு. நீங்க முஹம்மது அலியைச் சந்திங்க” என்று கூறினார்.
“யாருங்க முஹம்மது அலி?” என்று கேட்டுக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தார். அவர் அப்போதுதான் வேறு எங்கோ சென்றுவிட்டு உள்ளே நுழைந்தார். “இதோ அவர்தான் முஹம்மது அலி” என்று அவரை அறிந்தவர்கள் சுட்டிக் காட்டினார்கள். அவரைச் சந்தித்து, “அரபிக்கான வாய்ப்பு உண்டா? நான் அரபியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பவன்” என்று கூறினார்.
“அப்படியா? அரபி மட்டுமில்லை. உர்தூவுக்கும் எனக்கு ஆள் வேண்டும். நீங்க பிறகு பேசுங்க. இதோ என்னுடைய விசிட்டிங் கார்டு” என்று கூறி அவருடைய முகவரி அட்டையைக் கொடுத்துவிட்டு, “உங்களுடைய நம்பர் சொல்லுங்க” என்றார். அவர் தம் நம்பரைச் சொல்வதற்குப் பதிலாக, தம்முடைய விசிட்டிங் கார்டைக் கொடுத்தார். அதை வாங்கித் தம் சட்டைப்பையில் வைத்தவாறே அவசரமாக எங்கோ அவர் சென்றுகொண்டிருந்தார்.
அஹதுதான் எப்போதும் ‘பொதுநலம் விரும்பி’ ஆயிற்றே. அதனால் தாம் சென்றுவந்த கூட்டத்தைப் பற்றியும் அரபி, உர்தூ மொழியில் மொழிபெயர்ப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அத்தகைய திறன் உள்ளவர்கள் இவரைத் தொடர்புகொள்ளுங்கள் என்றும் முகநூலில் ஒரு பதிவு போட்டு, முஹம்மது அலியுடைய செல்பேசி எண்ணையும் பதிவிட்டுவிட்டார்.
அந்தப் பதிவைப் படித்த
ஆலிம்கள் பலர் முஹம்மது அலியைத் தொடர்புகொண்டு பேசினார்கள். “என்னுடைய நம்பரை உங்களுக்கு யார் கொடுத்தார்?
என்று கேட்க, “அஹத் இமாம்தான் தம்முடைய முகநூல் பதிவில் போட்டிருந்தார்” என்று கூறினார்கள்.
அதில் சென்று அந்தப் பதிவைப் படித்துவிட்டு, அப்துல் அஹதைத் தொடர்புகொண்டார். முகமன் கூறிவிட்டு நன்றி கூறினார். “அரபி மொழிபெயர்ப்பாளர்களை நாம் எங்கே போய்த் தேடுவது என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு எல்லா வேலைகளையும் எளிதாக்கிவிட்டீர்கள். ரொம்ப ரொம்ப நன்றி. நாம் ஒரு நாள் நேரடியாகச் சந்திப்போம். இது தமிழ்நாட்டு அரசின் மிகப்பெரும் திட்டம். இதன்மூலம் நானும் நீங்களும் மட்டும் பயன்பெறக் கூடாது. எல்லோருக்கும் இதனுடைய பயன் சென்று சேரணும்; அதற்காக நாம் முயற்சி செய்யணும்” என்றார்.
“அதனால்தான் பாய், நான் முகநூலில் பதிவுபோட்டேன். யாருக்கெல்லாம் திறமை இருக்கோ அவர்கள் அனைவரும் பயன்பெறட்டும். அதுதானே நமது நோக்கம்?” என்று அஹத் கூறினார்.
“சரி ஹஜ்ரத், ஒரு நாள் நாம் சந்திப்போம்” என்று கூறிவிட்டுத்
தொடர்பைத் துண்டித்தார்.
ஒரு வாரத்திற்குப்பின் அஹதுடைய இருப்பிடத்திற்கு வந்து அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது “நீங்க இதுவரை மொழிபெயர்ப்புச் செய்த நூல்களைக் காட்டுங்க பார்க்கலாம்” என்றார்.
அவர் இதுவரை செய்த நூல்களை எடுத்து அடுக்கி வைத்தார். அவற்றைப் பார்த்ததும், அவர் மலைத்துப் போனார். “என்னங்க ஹஜ்ரத், இவ்வளவு நூல்களா? இவையெல்லாமே நீங்க மொழிபெயர்த்தவையா?” என்று ஆச்சரியப்பட்டார். இவ்வளவு நூல்கள் மொழிபெயர்ப்புச் செய்தும் நீங்க தமிழ்நாட்டு அரசின் மொழிபெயர்ப்பு விருதுக்கு ஏன் விண்ணப்பிக்கல?” என்று கேட்டார்.
“அது பத்தியெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது. நீங்க வேண்டுமானால் வழிகாட்டுங்க. அதன்படி நான் செய்யிறேன்” என்றார்.
“இப்ப நாம செய்யப்போற பிராஜக்ட்ல ஒரு முக்கியமான நூல் இருப்பதாகச் சொன்னீங்களே அது என்ன?” என்று அவர் கேட்க, “அதுவா, ‘முஸ்லிம்களின் வியத்தகு கண்டுபிடிப்புகள்’ என்ற நூல்தான்” என்றார்.
“அதை முதலில் நீங்க மொழிபெயர்ப்புச் செய்யத் தொடங்குங்க. அதையே விருதுக்குரிய
நூலாக நாம் பரிந்துரை செய்வோம் இன் ஷாஅல்லாஹ்” என்று ஆர்வமூட்டினார்.
ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான அவரது பேச்சைக் கேட்ட அஹத், அந்த அரபி நூலை ஓராண்டுக் கால கடின உழைப்பில் தமிழாக்கம் செய்து முடித்தார். பின்னர் அது தமிழ்நாட்டு அரசு நூலகத்தின் சார்பாக வெளியிடப்பட்டது. அதன்பிறகு அந்த நூலின் பிரதி ஒன்றைச் சேர்த்து வைத்து, ‘சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது’க்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டது.
***
அஹத் தம் மாணவர்களைப் பார்த்துப் பொதுவாகச் சொல்லும் ஒரு கூற்று, “படிக்கின்ற புத்தகத்தையும் படித்துக்கொடுக்கின்ற ஆசிரியரையும் மதிக்கணும்” என்பதுதான். அந்த வகையில் அதை அவர் செயல்படுத்தவும் செய்தார். தம்முடைய ஆசிரியர்கள் சென்னை வந்தால் அவர்களைச் சென்று சந்திப்பதும் அவர்களுக்குப் பணிவிடை செய்து அவர்களின் துஆவைப் பெற முயல்வதும் அவரின் வழக்கம்.
அரபுக் கல்லூரியில் அஹதைச் சேர்க்கத் தயங்கிய முதல்வர் அவர்களைச் சென்னையில் அவரின் மகள் வீட்டில் சந்திக்கச் செல்வார். அவர் செல்லும்போதெல்லாம், அங்கே அவர் சேர்த்துக்கொள்ளப்பட்ட நிகழ்வைப் பற்றி அவரிடமே நெகிழ்ச்சியுடன் அந்த உஸ்தாத் கூறுவார். அவர் எழுதிய அல்லது தமிழாக்கம் செய்த நூல்களைப் பார்க்கும்போதெல்லாம், “அல்லாஹ் உன்னைக் கொண்டு வேலை வாங்குறான் அப்துல் அஹத்; ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று மகிழ்ச்சியுடன் கூறுவார். அவர் அண்மையில் நபிவழி மருத்துவம் எனும் அரபு-தமிழாக்க நூலைக் காட்டி, உஸ்தாதிடம் அணிந்துரை பெற்றபோதும், அதையே நெகிழ்ச்சியுடன் கூறிக் காட்டினார்.
“தயக்கத்தோடு என்னைச் சேர்த்த ஹஜ்ரத் அவர்களின் ‘மனங்குளிரும் விதமாக நான் உருவானதையே’ என் உஸ்தாதுக்கு நான் செய்யும் கைம்மாறாகக் கருதுகிறேன்” என்பார் அஹத்.
***
விண்ணப்பம் அனுப்பியதை மறந்துவிட்டுத் தமிழாக்கம் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார். ஒரு மாதத்திற்குப்பின் தமிழக அரசின் கடிதம் ஒன்று வந்தது. அதைப் பிரித்துப் படித்தபோது ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்று அல்லாஹ்வைப் புகழ்ந்து தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “இந்த ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுக்குத் தாங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர். விருதைப் பெற குறிப்பிட்ட தேதியில் நேரடியாக வந்து கலந்துகொள்ளுங்கள்” என்று அக்கடிதம் தெரிவித்தது.
இவ்வளவு காலம் அல்லாஹ்வின் திருப்தியையும் உவப்பையும் நாடிச் செய்து வந்த எழுத்துப் பணிக்கும் தமிழாக்கப்பணிக்கும் இன்று அவன் அங்கீகாரம் வழங்கியுள்ளதை ‘இறைநம்பிக்கையாளர்களுக்கு முன்னரே தெரிவிக்கப்படுகிற நற்செய்தி’யாக எடுத்துக்கொண்டார். இவ்வளவு காலம் செய்த கடின முயற்சிக்கும் உழைப்பிற்குமான பரிசாக இந்த விருதைக் கருதி மகிழ்ந்தார்.
இதோ குறிப்பிட்ட நாளும் வந்தது. ‘சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதை’ப் பெறத் தலைமைச் செயலகத்தை நோக்கிப் புறப்பட்டுவிட்டார். செய்தியறிந்த பலர் அஹதை வாழ்த்திப் பாராட்டினார்கள். (முற்றும்)
===================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக