-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
நாம் வாழும் இவ்வுலகில் நம்மோடு பலர் தொடர்பில் இருக்கின்றார்கள்; சிலர் நாள்தோறும் நம்மைத் தொடர்புகொள்பவர்கள்; சிலர் அவ்வப்போது தொடர்புகொள்பவர்கள்; வேறு சிலர் எப்போதாவது தொடர்புகொள்பவர்கள். சிலர் எப்போதும் நம்மோடு தொடர்பில் இருப்பவர்கள். நமது வீடு, அலுவலகம், பொதுவிடம் என ஆங்காங்கே பலருடன் தொடர்புடையவர்களாக, அவர்களோடு உறவாடுபவர்களாக, கருத்துப் பரிமாற்றம் செய்பவர்களாக இருக்கின்றோம்.
நம்முடைய பொது வாழ்க்கையில் எத்தனையோ பேர்களை நாள்தோறும் எதிர்கொள்கிறோம். சிலரோடு இணைந்து பணியாற்றுகிறோம்; சிலரோடு கருத்துகளைப் பரிமாறிக் கொள்கிறோம். சபைகளில் கலந்துகொள்ளும்போது ஒருவருக்கொருவர் கருத்துகளைப் பரிமாறிக்கொள்கிறோம். நம்முடைய கருத்தைக் கேட்கும்போது நாம் நம் கருத்தைத் தெரிவிக்கிறோம். சிலர் நம்முடைய கருத்துக்குச் சாதகமாகப் பேசுவார்கள்; வேறு சிலர் நம்முடைய கருத்துக்கு முரணான கருத்தை முன்வைப்பார்கள். நாம் அச்சபைக்குத் தலைவராக இருந்தால் இரண்டு சாராரையும் இணைத்துக்கொண்டு பயணிப்பதுதான் சாலச் சிறந்தது. அப்போதுதான் அந்த அமைப்போ இயக்கமோ சிதறாமல் தொடர்ந்து நீடிக்கும்.
நம்முடைய கருத்துக்கு எதிர்க்கருத்து கூறுபவர்கள் அல்லது நம் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் இருந்தால்தான் அவர்களின் கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு அச்செயலை அல்லது அத்திட்டத்தைச் செம்மையாகச் செயல்படுத்த இயலும். சிலர் தம்முடைய கருத்துக்கு ஒத்த கருத்துடையவர்களை மட்டும் தம்முடன் வைத்துக்கொள்வார்கள். தம்முடைய கருத்துக்கு எதிர்க்கருத்துடையவர்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள். அவ்வாறு ஒதுக்குவதால் தலைமைக் கழகம் பலவீனமடையுமே தவிர வலுவாக இருக்க வாய்ப்பில்லை. நாளடைவில் எதிர்க்கருத்துடையவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தனிக் குழுவை ஏற்படுத்திக்கொள்வார்கள். ஒன்றாக இருந்த குழு இரண்டாகப் பிரியும்; இரண்டு நான்காகும்; நான்கு எட்டாகும்; அது தொடரும்.
எதிர்க்கருத்துடையவர்களையும் நம்மோடு இணைத்துக்கொண்டு பயணிக்கும்போது நம்முடைய செயல்பாடுகள் தாமதமாகலாம்; ஆனால் தடைபட்டு நிற்கப்போவதில்லை. எதிர்க்கருத்துடையவர்களின் கருத்துகளையும் உள்வாங்கிக்கொண்டு அவற்றையும் பரிசீலித்து, அதற்கேற்பத் திட்டங்களை அமைத்தால் அந்தத் திட்டத்தைச் சீராகச் செயல்படுத்த முடியும். எதிர்க்கருத்துடையவர்கள் நம் குழுவில் இருந்தால்தான் தலைவர் தவறு செய்கிறபோது அதை அவர்கள் சுட்டிக்காட்டுவார்கள். அவரும் தம்மை எதிர்த்துக் கேட்க ஆள்கள் இருக்கின்றார்கள் என்ற எண்ணத்தோடு தம் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வார். இல்லையேல் தாம் எதைச் செய்தாலும் தம்மைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற துணிச்சல் ஏற்பட்டுவிடும். அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாகத் தவறுகள் தொடரும்.
ஒத்த கருத்துடையவர்களோடு மட்டுமே நான் பயணிப்பேன் என்று முடிவெடுப்பது தவறு என்பேன். மக்களுக்குப் பயன்படும் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்போது அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். அவற்றையெல்லாம் கேட்டு, அதன் சாதக, பாதகங்களை ஆய்ந்து, எதிர்க்கருத்துடையவர்களின் கருத்துகளையும் உள்வாங்கிச் செயல்படும்போதுதான் அந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும். அப்படிச் செய்வதால் அத்திட்டத்திற்கு எதிர்க்கருத்துடையவர்களின் ஆதரவும் கிடைக்கும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சபையில் ஒத்த கருத்துடையோரும் எதிர்க்கருத்துடையோரும் இருந்தார்கள். நபியவர்கள் தம் தோழர்களிடம் ஆலோசனை கேட்கும்போது நபியவர்களின் உள்ளத்தில் இருந்த கருத்துக்கு எதிரான கருத்தைத் தோழர்கள் சொல்லியிருக்கின்றார்கள். அதை நபியவர்கள் செயல்படுத்தியும் உள்ளார்கள். இதுதான் ஈருலகத் தலைவர் நமக்குக் கற்றுத்தந்த பாடம்.
ஒரு தடவை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் தோழர்கள் மத்தியில் ஆலோசனை கேட்டார்கள். அப்போது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு தம்முடைய கருத்தைத் தெரிவித்தார்கள். அதன்பின் அபூபக்ரின் கருத்துக்கு நேர்மாறானதொரு கருத்தை உமர் ரளியல்லாஹு அன்ஹு தெரிவித்தார்கள். அதைச் செவியுற்ற அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, “தாங்கள் எப்போதும் எனக்கு எதிரான கருத்தையே சொல்கிறீர்களே” என்று உமர் மீது சினம்கொண்டார்கள். அந்த நேரத்தில் உமர்மீது அபூபக்ர் அவர்கள் சினம் கொண்டாலும் அடுத்தடுத்த நாள்களில் அதையெல்லாம் மறந்துவிட்டார்கள். அத்தகைய ஒழுங்கைத்தான் நாம் இன்று கடைப்பிடிக்க வேண்டும். நமக்கெதிரான கருத்தை ஒருவன் சொல்லியிருந்தாலும் அவனோடும் நாம் ஒன்றுபட்டு அன்போடு வாழ வேண்டும்.
ஒரு சபையில் நாம் ஒரு கருத்தைச் சொல்லும்போது மற்றொருவர் நம்முடைய கருத்துக்குச் சாதகமாகவோ எதிராகவோ ஒரு கருத்தைக் கூறலாம். நமக்குச் சாதகமாகவே எல்லோரும் கருத்தைக் கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது நம் அறியாமை. ஒவ்வோர் உள்ளத்திலிருந்தும் ஒவ்வொரு கருத்தை ஏக இறைவன் தோற்றுவிக்கின்றான். அதை அவர்கள் வெளிப்படுத்துகின்றார்கள்; அவ்வளவுதான். எனவே மக்களுக்கு எது நன்மையோ அக்கருத்து செயல்பாட்டுக்கு வரட்டும் என்று நினைப்பதுதான் நம்முடைய அறிவு முதிர்ச்சிக்கு அழகாகும்.
இன்றைய முஸ்லிம்கள் மத்தியில் இருக்கக்கூடிய தவறான போக்கு என்னவெனில், சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முரணாக யார் எதைப் பேசினாலும் அவருக்கு ‘வஹ்ஹாபி’ என்ற முத்திரையைக் குத்தி ஒதுக்கி வைத்துவிடுவதுதான். உண்மையில் அவர்கள் சுன்னத் வல் ஜமாஅத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக எதையும் பேசவில்லை; மாறாக மக்கள் பின்பற்றி வருகின்ற மூடப்பழக்க வழக்கங்களையும் சடங்குகளையுமே சாடுகிறார்கள். அதற்காக முத்திரை குத்தி அவர்களைத் தனியே ஒதுக்கிவைப்பது சமுதாயத்தில் பிளவை உண்டாக்கி, நம்முடைய வலிமையைக் குறைக்குமே தவிர வேறு எந்தப் பயனும் இல்லை.
அதுபோலவே ஓர் இயக்கத்தின் தலைவர் தவறு செய்யும்போது அல்லது செயலாளர் தவறு செய்யும்போது, அதைக் கடைநிலைத் தொண்டர் ஒருவர் சுட்டிக்காட்டினால் அவரை அந்த இயக்கத்திலிருந்து நீக்கும் வரை ஓயமாட்டார்கள். எதிர்த்துக் கேள்வி கேட்போர் யாரும் இருக்கக்கூடாது என்றெண்ணும் போக்கு எல்லா இயக்கங்களிலும் எல்லாத் துறைகளிலும் காணப்படுகிறது. கேள்வி கேட்டவரை நீக்கியபின், அவர் தம்முடைய ஆதரவாளர்களோடு சேர்ந்து புதியதோர் இயக்கத்தைத் தொடங்கிவிடுகிறார். இதுதான் இன்றைய நிலைமை. இதனால் அரசியல்ரீதியாக நாம் நம்முடைய வலிமையை இழந்துகொண்டிருக்கிறோம் என்பதை நம் தலைவர்கள் ஏன் இன்னும் உணராதிருக்கின்றார்கள்?
முத்திரை குத்தப்பட்டவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு தனிக்குழுவாக-ஜமாஅத்தாக உருவாகி, தனித்தனி வழிபாட்டுத் தலங்களைக் கட்டிக்கொண்டு, தனி நிர்வாகம் நடத்தி வருகின்றார்கள். அதனால் முஸ்லிம்கள் மத்தியில் பிளவு பெரிதாகிக்கொண்டு செல்கிறதே தவிர ஒன்றிணைய வழியே இல்லை. அதனால் அவர்கள் தனி ஜமாஅத்தாக மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்டார்கள். இவ்வாறு கொள்கைரீதியாக ஏற்பட்ட பிளவு எல்லாவற்றிலும் பிளவாகவே தொடர்கிறது. முஸ்லிம்களுக்கு அரசியல்ரீதியாக ஒரு பிரச்சனை ஏற்படுகிறபோதுகூடப் பிரிந்து நின்றே குரல் கொடுக்கின்றார்கள். இவர்கள் ஒரு நாள், அவர்கள் ஒரு நாள், மற்றோர் இயக்கம் வேறொரு நாள், வேறோர் இயக்கம் இன்னொரு நாள் எனக் கோரிக்கை வைத்து முழக்கமிடுகின்றார்கள். ஆனால் எல்லோரும் முன்வைப்பதோ ஒற்றைக் கோரிக்கைதான். எல்லோரும் ஒரே குடையின்கீழ் ஒன்றிணைந்து மிக வீரியத்தோடு அந்த ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்திருந்தால் அரசு அதைப் பரிசீலனை செய்திருக்கும். அதற்குத் தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால் நடப்பது என்ன?
பிரிந்து செல்வதற்கும் தனித்தனியே நிற்பதற்கும் ஆயிரமாயிரம் கருத்து வேறுபாடுகளும் கொள்கை வேறுபாடுகளும் நமக்கு மத்தியில் இருந்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, ‘அவனும் முஸ்லிம் நானும் முஸ்லிம்’ என்ற ஒற்றைக் காரணத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்து ஒரே குடையின்கீழ் ஒன்றுபட்டு நிற்கக் கூடாதா? அவ்வாறு ஒன்றுபட்டு நின்றால்தான் எதிர்காலத்தில் எதையும் சாதிக்க முடியும் என்ற உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
‘முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள்’ என்ற ஒற்றைக் காரணத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்து ஒரே குடையின்கீழ் ஒன்றுபட்டு நிற்க முற்படாத ஜமாஅத் தலைவர்களும் இயக்கத் தலைவர்களும் ‘சமய நல்லிணக்கம்’ என்ற பெயரில் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி, சாமியார்களோடும், சந்நியாசிகளோடும், பாதிரியார்களோடும் தோளோடு தோள் சேர்த்து, கையோடு கை சேர்த்து ஒளிப்படம் எடுத்துக்கொள்கின்றனர். இது எவ்வாறு இருக்கிறதென்றால், ஈன்ற தாயைத் தவிக்க விட்டுவிட்டு, பொது மக்களுக்குத் தொண்டு செய்ய ஓடோடி உழைத்த தனயனின் செயலுக்கு ஒப்பாக உள்ளது.
ஒரு பள்ளிவாசலில் நாம் தொழுகின்றபோது எத்தனையோ வகையான மனிதர்கள் அங்கு வருகின்றார்கள். ஒருவர் காலை அகற்றி வைத்திருப்பார்; ஒருவர் தம் தலையில் தொப்பியின்றித் தொழுவார்; ஒருவர் விரலை ஆட்டுக்கொண்டே இருப்பார்; ஒருவர் நெஞ்சின்மீதும் மற்றொருவர் நெஞ்சுக்குக் கீழாகவும் மற்றொருவர் வயிற்றின்மீதும் கைவைத்து நிற்பார். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத நாம் அவர்களை ஒதுக்கிவைக்கத் தொடங்கினோம். தன் சொந்த மார்க்கச் சகோதரனின் செயல்களையே பொறுத்துக்கொள்ள முடியாத நம்மால் எவ்வாறு பிற சமய மக்களின் செயல்பாடுகளைப் பொறுத்துக்கொள்ள முடிகிறது? சொந்த மார்க்கத்திற்குள் ஏற்படுகிற முரண்பாடுகளைச் சகித்துக்கொள்ள முடியாத நம்மால் பிற சமயச் சசோதரர்களின் செயல்பாடுகளை எவ்வாறு சகித்துக்கொண்டு, ‘சமய நல்லிணக்கம் பேண வேண்டும்’ என்று பேச முடிகிறது?
இயக்கத் தலைவர்களே, மார்க்க அறிஞர்களே, படித்த மேதாவிகளே, இஸ்லாமியப் பிரிவுச் சட்டங்களில் கொண்டுள்ள கொள்கை முரண்பாடுகளுக்காக முஸ்லிம்களுள் எவரையும் ‘முத்திரை’ குத்தி ஒதுக்காதீர்கள். ஒத்த கருத்துடையோரை மட்டும் சேர்த்துக்கொண்டு வாழாமல், எதிர்க்கருத்துடையோருடனும் இணங்கி வாழ முற்படுங்கள்; அவர்களின் முரண்பாடான செயல்பாடுகளைச் சகித்துக்கொள்ளுங்கள். ‘முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள்’ என்ற ஒற்றைக் குடையின்கீழ் ஒன்றுபடுங்கள். எதிர்காலத்தில் எந்த மனித உயிரும் பாதிக்கப்படாமல் பாதுகாக்க ஒன்றிணையுங்கள். இந்திய மக்கள் அனைவரையும் காக்க முஸ்லிம்களாகிய நம்முடைய வலிமையான ஒற்றுமைதான் காரணமாக இருக்கப்போகிறது என்பதை உணருங்கள்.
=======================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக