வியாழன், 18 ஆகஸ்ட், 2022

வாய்ப்புக் கிடைத்தால்...

 


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஒவ்வொரு மனிதனும் பாவம் செய்யும் இயல்பிலேயே படைக்கப்பட்டுள்ளான். எனவே பாவம் செய்வது மனித இயல்பு. அதேநேரத்தில் இறைத்தூதர்கள் பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் ஆவர். பாவம் செய்துவிட்டவன் அதை உணர்ந்து வருந்தி, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவதே அதற்கான பரிகாரமாகும்.  அத்தோடு மீண்டும் அப்பாவத்தைச் செய்யாமல் தவிர்ந்துகொள்ள வேண்டும். ஒருவேளை மீண்டும் அவன் அதே பாவத்தை அல்லது வேறு பாவத்தைச் செய்துவிட்டால், அதற்காக மீண்டும் அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. அதற்காக அல்லாஹ் அவனை வெறுத்து ஒதுக்கிவிடுவதில்லை. மீண்டும் மீண்டும் அவன் தன் அடியாரை மன்னிக்கத் தயாராக இருக்கின்றான்.

 

தவறு செய்பவரைக் கண்டால் அவரைச் சமுதாயம் கேவலமாகப் பார்ப்பதும் வெறுத்தொதுக்குவதும் இயல்பு.  ஆனால் வாய்ப்புக் கிடைத்தால் ஒவ்வொருவரும் பாவம் செய்பவரே. இறையச்சமுடையோருக்கு இதில் விதிவிலக்குண்டு. வாய்ப்புக் கிடைக்காத வரை எல்லோரும் நல்லவர்கள்தாம். வாய்ப்புக் கிடைத்துவிட்டால் மனிதன் பாவம் செய்யத் தலைப்பட்டுவிடுகின்றான். அதுவரை அவன் தன் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டிருக்கின்றான். ஆனால் மிகுந்த இறையச்சமுடையோருக்கு வாய்ப்புக் கிடைத்தாலும், ‘இறைவன் பார்த்துக்கொண்டிருக்கின்றான்; அவன் நம்மோடு இருக்கின்றான்என்ற அச்ச உணர்வின் மிகுதியால் பாவம் செய்வதிலிருந்து தவிர்ந்துகொள்கின்றார்கள்; ஷைத்தானின் தூண்டிலில் சிக்காமல் தப்பித்துக்கொள்கின்றார்கள்.

 

இறைத்தூதர் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அமைச்சரின் மனைவி தவறான எண்ணத்தோடு அவரைப் பிடித்து இழுத்தபோது அந்தத் தவறிலிருந்து தப்பியோடினார்கள். அவ்வாறு ஓடியபோது பின்புறத்திலிருந்து அவர்தம் சட்டையைப் பிடித்து இழுத்தார். அதில் அவரின் சட்டை கிழிந்துவிட்டது. பின்னர் அதுவே அவர் நிரபராதி என்பதற்கான ஆதாரமாக அமைந்தது. ஆக இறையச்சமுடையோர் பாவங்களிலிருந்து தப்பித்து ஓடிவிடுகின்றார்கள். மற்றவர்களோ வாய்ப்புக் கிடைத்தால் பாவத்தைச் செய்துவிடுகின்றார்கள். சராசரி மனிதனின் நிலை இதுதான்.

 

ஷைத்தானின் தூண்டலால் உந்தப்படுகின்ற மனிதன் பாவம் செய்துவிட்டாலும், அவன் அதனை உணர்ந்து வருந்தி, தன்னிடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும் என்பதே இறைவனின் நாட்டம். அவ்வாறு பாவமன்னிப்புக் கோருவதையே இறைவன் விரும்புகின்றான். ஏனெனில் ஷைத்தான் மனிதனின் பகிரங்க விரோதி. பாவம் செய்யுமாறு மனிதர்களைத் தூண்டிக்கொண்டே இருப்பதுதான் அவனுடைய வேலை. இறையச்சமுள்ளோர் அவனுடைய தூண்டலுக்கு ஆட்பட்டுவிடாமல் பாவம் செய்வதைவிட்டுத் தவிர்ந்துகொள்கின்றார்கள். சராசரி மனிதர்கள் அவனுடைய தூண்டலுக்கு இரையாகி, பாவம் செய்துவிடுகின்றார்கள். அவர்களுக்கான பரிகாரம்தான் பாவமன்னிப்புக் கோரிக்கை. இதைப் புரிந்துகொண்டால் பாவம் செய்தவரைப் பரிகாசம் செய்யும் போக்கிலிருந்து நாம் விலகிவிடுவோம்.

 

பாவம் செய்துவிட்டு அதற்கான தண்டனையைப் பெற்றுக்கொண்டவர் அப்பாவத்திலிருந்து தூய்மையடைந்துவிடுகிறார் என்பதற்கான சான்றாகப் பின்வரும் நபிமொழி அமைந்துள்ளது.

இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஒரு பெண், தாம் விபச்சாரம் புரிந்துவிட்டதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர். 'நான் கர்ப்பிணிஎன்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்பெண்ணின் காப்பாளரை அழைத்து(வரச் செய்து) இவரை நல்ல முறையில் கவனித்துவாருங்கள். இவர் குழந்தை பெற்றெடுத்ததும் எனக்குத் தெரிவியுங்கள்என்று கூறினார்கள். காப்பாளர் அவ்வாறே செய்தார்.

பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உத்தரவிட, அப்பெண்ணின் மீது அவருடைய துணிகள் கட்டப்பட்டன. பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை வழங்குமாறு உத்தரவிட, அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவருக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (ஜனாஸா) இறுதித் தொழுகை நடத்தினார்கள்.

 

அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு, “அல்லாஹ்வின் தூதரே! நீங்களே அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கி(டச் செய்து)விட்டு, பின்னர் நீங்களே அவருக்காகத் தொழவைக்கிறீர்களே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புத் தேடிவிட்டார். மதீனாவாசிகளில் எழுபது பேர்களுக்கு அது பங்கிடப்பட அவர்கள் அனைவருக்கும் அது போதுமானதாக அமையும். அல்லாஹ்வுக்குத் தன் உயிரையே அர்ப்பணித்த (இப்பெண்ணின் அர்ப்பணத்)தைவிடச் சிறந்த ஒன்றை நீர் பார்த்திருக்கிறீரா?” என்று கேட்டார்கள். (திர்மிதீ: 1355)

 

ஒருவன் பாவம் செய்துவிட்டு, உரிய முறையில் பாவமன்னிப்புக் கோரிவிட்டால் இறைவன் அவனது பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவனைத் தூய்மைப்படுத்திவிடுகின்றான். அதாவது அவனது பாவங்களை முற்றிலுமாக அழித்துவிடுகின்றான் என்பதை இதன் மூலம் அறிகிறோம்.  இது இருபாலருக்கும் பொதுவானதாகும்.

 

அலுவலகத்தில் இலஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டவரை நாம் கேவலமாகப் பார்க்கலாம்; பரிகாசம் செய்யலாம்கீழ்த்தரமானவன் எனக் கருதலாம். ஆனால் அவனுடைய இடத்தில் நாம் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். நாமும் ஒருவேளை அதே தவறைச் செய்திருக்கலாம் அல்லவா? அத்தகைய வாய்ப்பும் சூழ்நிலையும் நமக்கு அமையவில்லை. எனவே நாம் அந்தத் தவறைச் செய்யவில்லை.

விபச்சாரம் செய்துவிட்டுக் காவல்துறையால் பிடிக்கப்பட்ட பெண்ணைக் கேவலமாகப் பார்க்கிறோம். ஆனால் அவளுடைய சூழ்நிலை என்ன, எதற்காக அந்தச் செயலில் ஈடுபட்டாள் எனச் சிந்திப்பதில்லை. அவளுக்கு ஏற்பட்ட வறுமைநிலையோ, சிரமமோ, நிர்ப்பந்தமோ நமக்கு ஏற்பட்டிருந்தால் நம் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்று யோசிக்க வேண்டும்.

 

ஒருவன் பணத்தைத் திருடிவிட்டுக் காவல்துறையில் மாட்டிக்கொள்கிறான்; சிறையில் அடைக்கப்படுகின்றான். நாளிதழில் அவனுடைய நிழற்படத்தோடு செய்தி வருகிறது. அதைப் படிக்கின்ற நாம் அவனைக் கேவலமாகத் திட்டுகிறோம்; அசிங்கமாகப் பார்க்கிறோம். ஆனால் அவன் திருடியதற்கான காரணம் என்ன, ஏன் இந்தச் செயலைச் செய்தான் என்றெல்லாம் சிந்தித்தால், அவனது நிலை குறித்து விசாரித்தால் அவனுடைய உண்மை நிலை புரியும்; அவனுடைய சூழ்நிலையும் விளங்கும். எத்தனையோ பேர் சூழ்நிலைக் கைதிகளாய் மாட்டிக்கொண்டு தவறு செய்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

 

திருடுமாறும் பிச்சையெடுக்குமாறும் விபச்சாரம் செய்யுமாறும் அநியாயக்காரர்களால் பலர் தூண்டப்படுகின்றார்கள்; நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். அவர்களின் நிர்ப்பந்தத்தின் காரணமாகவே பலவீனர்கள் அந்தத் தவறைச் செய்துவருகின்றார்கள். ஓர் அதிகாரி நேர்மையாகச் செயல்படவில்லை என அவர்மீது நாம் கோபம் கொள்கின்றோம். ஆனால் நேர்மையாகச் செயல்படவிடாமல் அவரை அவர்தம் மேலதிகாரி நிர்ப்பந்தம் செய்யலாம். அதனால் அவரால் நேர்மையாகச் செயல்பட முடியாமல் போயிருக்கலாம் என்று நாம் யோசிப்பதில்லை.

 

ஒரு நீதிபதி நியாயமாகத் தீர்ப்புக் கூறவில்லை என அவர்மீது நாம் கோபம்கொள்கிறோம். ஆனால் அவர் நீதியோடும் நேர்மையோடும் தீர்ப்பளித்தால் அவருடைய குடும்பத்தைச் சிதைத்துவிடுவதாக ஓர் அநியாயக்கார அரசியல்வாதி மிரட்டுகிறான். எனவே அவரால் நேர்மையாகவும் நீதியாகவும் தீர்ப்பளிக்க இயலாமல் போகலாம். அந்த நிர்ப்பந்தத்தையும் மீறி ஒருவர் நீதியோடும் நேர்மையோடும் வழக்கை விசாரிக்கத் தொடங்கினால் அவர் அந்த அநியாயக்காரனால் கொல்லப்படுவார் என்பது உறுதி. கடந்த காலங்களில் இதைத்தான் நாம் கண்டிருக்கிறோம்.

 

ஆக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நிர்ப்பந்தம் இருக்கலாம். அரசியல் ரீதியான அழுத்தம், மேலதிகாரியின் நிர்ப்பந்தம், அநியாயக்காரர்களின் அடக்குமுறை என ஏதோ ஒரு வகையில் அழுத்தமோ நிர்ப்பந்தமோ நெருக்கடியோ இருக்கலாம். அதுவே அவர்கள் தவறு செய்யக் காரணமாக அமைந்துவிடுகின்றது; அல்லது நியாயமாக நடந்துகொள்ள முடியாமல் போய்விடுகிறது. ஆகவே அத்தகையோர்மீது நாம் கோபம்கொள்ளாமல் மேலாதிக்கம் செய்வோர்மீதுதான் நாம் கோபம் கொள்ள வேண்டும். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் பேருதவியாகும்.

 

ஆக ஷைத்தானின் தூண்டலாலும் அநியாயக்காரர்களின் வற்புறுத்தலாலும் பலர் தவறு செய்துகொண்டிருக்கின்றார்கள்; வாய்ப்புக் கிடைத்தால் பலர் தவறு செய்யத் துணிந்துவிடுகின்றார்கள்; பலர் வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் இறையச்சம் மிகுந்தோரே வாய்ப்புக் கிடைத்தாலும் இறைவனை அஞ்சி, தவறு செய்வதைவிட்டுத் தவிர்ந்துகொள்கின்றார்கள். அத்தகைய இறையச்சம் மிகுந்தோராகவும் இறைவன் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கின்றான்என்ற எண்ணத்தோடும் நம் கடமைகளைச் செய்ய முயல்வோம்.

=================================








கருத்துகள் இல்லை: