வியாழன், 11 ஆகஸ்ட், 2022

இமாம்களின் திறமைகள் முடக்கப்படலாமா?

 

ஒரு பள்ளிவாசலில் இமாமாக உள்ள ஓர் ஆலிம், அப்பள்ளியில் இமாமாக இருந்து, சேவை செய்வதோடு  தம் பணி முடிந்துவிடவில்லை. தம்மால் இயன்ற வேறு பணிகளையும் செய்ய வேண்டும் என எண்ணுகிறார்.   ஆனால் அந்த எண்ணத்திற்குச் சமுதாயம் மதிப்பளிக்கிறதா என்பதே இன்று நம்முன் உள்ள கேள்வி.

ஓர் ஆலிமிடம் எத்தனையோ திறமைகள் இருக்கலாம். இமாமாக இருந்து பணியாற்றுகிற ஓர் ஆலிம் அரபு நூல்களை நன்றாகக் கற்றுக்கொடுக்கும் திறமைமிக்கவராக இருக்கலாம்; மக்கள் மத்தியில் சொற்பொழிவாற்றும் நாவன்மைமிக்கவராக இருக்கலாம். கணிதத்தில் திறன்மிக்கவராக இருக்கலாம். இன்னும் வேறு பல திறமைகளைக் கொண்டவராக இருக்கலாம்.

லுஹர் தொழுகைக்கு விடுப்புப் போட்டுவிடக்கூடாது என்ற எண்ணமே, வேறு எந்தப் பணியையும் செய்யவிடாமல் அவர்களைத் தடுத்துவிடுகிறது. ஐவேளையும் ஒருவரே தொழுகை நடத்த வேண்டும் என்ற நிர்வாகத்தின் நிர்ப்பந்தச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ள அவர்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாமலும் எந்தப் பணியிலும் ஈடுபட முடியாமலும் தவிக்கின்றார்கள்.

அரபியில் எம்.ஏ. அல்லது எம்.ஃபில். படித்துப் பட்டம்பெற்றவராக உள்ள பலர் இன்று இமாமாகப் பணியாற்றுவதைக் காணலாம். அவர்கள் பக்கத்து ஏரியாவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஓர் ஆசிரியராகப்  பணியாற்றலாம் என்றால், அது முடியுமா? லுஹருக்கு விடுப்புக் கிடைக்காததால் சிலரால் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் பணியில் சேர முடியவில்லை என்பதை அறிந்து வருந்துகிறோம். 

இமாம் ஒருவர் மிகுந்த சிரமப்பட்டு, பல்வேறு போராட்டங்களுக்குப்பிறகு தம் நிர்வாகத்தில் லுஹருக்கு விடுப்பு  எடுத்துக்கொள்ள அனுமதி பெற்றுவிட்டார். மறுநாள் குறிப்பிட்ட அந்த முஸ்லிம் பள்ளிக்கூடத்தில் அரபி ஆசிரியராகச் சேர்வதற்காகச் செல்கிறார். வழமையான நேர்காணல் முடிந்து, ஆசிரியப் பணியை வழங்கப்போகிற நேரத்தில், திடீரென அந்த நிர்வாகி, “நீங்கள் எங்காவது இமாமாக இருக்கின்றீர்களா?” என்று கேட்க, “ஆம்என்று அவர் பதிலளிக்கிறார். நாங்கள் வெள்ளிக்கிழமை உங்களுக்கு விடுப்புத் தரமாட்டோம்; இங்குதான் நீங்கள் தொழ வேண்டும். சம்மதமா?” என்று கேட்டு, அவருடைய கழுத்தில் ஒரு சுருக்குக் கயிறைப் போடுகிறார்.  ஒரு மணி நேரமாவது விடுப்புத் தாருங்கள், போதும்என்று கெஞ்சிப் பார்க்கிறார். கடைசியில் தோல்வியே மிச்சம்.

இவ்வாறு திறமையான ஆலிம்கள்-இமாம்கள் பலர் ஆங்காங்கே பள்ளிவாசல்களுக்குள் முடங்கிக் கிடக்கின்றார்கள் என்பது நிதர்சன உண்மை. பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக வாழலாம் என்று முயன்றால் சமுதாயம் தடைக்கல்லாக இருக்கிறது. இரட்டைச் சம்பளம்பெற்று வாழ்க்கையில் முன்னுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் நம் சமுதாய மக்கள் எவ்வாறெல்லாம் செயல்படுகின்றார்கள் பாருங்கள்.

பள்ளிவாசல் நிர்வாகிகளில் மிக அரிதாக நல்லோர்கள் சிலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களின் தாராளத்தன்மையால் இமாம்கள் சிலர் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்களாகவும் பேராசிரியர்களாகவும் பணியாற்றி வருவதைக் காண முடிகிறது; பேச்சாளர்களாக ஒவ்வோர் ஊருக்கும் செல்ல முடிகிறது; சிறப்பு வகுப்பு நடத்த வெளியூருக்குப் பயணிக்க முடிகிறது. 

அரபுக் கல்லூரி நிர்வாகிகளும் அங்ஙனமே தம் கயிற்றை இறுக்குகின்றார்கள். அங்கு பணியாற்றுகிற பேராசிரியர்கள் தமக்குக் கிடைக்கின்ற வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறையைப் பயன்படுத்தித்தான் பேச்சாளர்களாக ஆங்காங்கே சென்று வருகின்றார்கள். விடுமுறை கிடைப்பதில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால்தான், ஆலிம்கள் சிலர் பெண்கள் மத்ரஸாக்களில் பெயரளவில் ஆசிரியர்களாக இருந்துகொண்டு, நட்சத்திரப் பேச்சாளர்களாக நாட்டுக்குள் வலம் வந்துகொண்டிருக்கின்றார்கள்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் பணியாற்றும் அனைவருக்கும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கிடைத்துவிடுகிறது. ஆனால் இமாமாக உள்ளோருக்குத்தான் கழுத்தில் கயிறு போட்டுச் சுருக்கப்படுகிறது; இறுக்கப்படுகிறது. இமாம்களை இவ்வாறு முடக்கிப்போடுவதால் யாருக்கு என்ன பயன்?

இமாம்கள் தொழுகை நடத்துவதற்காக அவர்களுக்குச் சம்பளம் தரப்படவில்லை; அவர்களின் வாழ்வாதாரத்திற்காகத்தான் சம்பளம் தரப்படுகிறது என்பதை நிர்வாகிகள் உணர்ந்து, அவர்களின் விடுப்பு விஷயத்தில் தளர்வுப்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். அதனால் இமாம்களாகிய அவர்களுக்கும்  சமுதாயத்திற்கும் பல்வேறு பயன்கள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. நிர்வாகிகள் யோசிப்பார்களா?

அன்புடன்

நூ. அப்துல் ஹாதி பாகவி

11.08.2022

12.01.1444

===============================

கருத்துகள் இல்லை: