-முனைவர்
மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
இறைநேசர்கள்
என்றாலே முற்காலத்தில் வாழ்ந்து மறைந்தவர்களையே உதாரணம் காட்டுகிறோம். அண்மையில் வாழ்ந்து
மறைந்தோரை நாம் உதாரணம் காட்டுவதில்லை. அப்படியெனில் இறைநேசர்கள் ஆகுதல் எனும் கதவு அடைக்கப்பட்டுவிட்டதா? நம் காலத்தில் யாரும் இறைநேசர் ஆகமுடியாதா? என்ற வினாக்கள் எழுகின்றன. இல்லை. அது அடைக்கப்படவில்லை
என்பதே அதற்கான விடையாகும்.
அப்படியெனில்
நாம் எவ்வாறு இறைநேசர் ஆவது? நாம்
இறைநேசர் ஆக வேண்டுமெனில் அல்லாஹ்வின் கட்டளைகளை அப்படியே ஏற்று நடக்க வேண்டும். அவன்
எவற்றையெல்லாம் தடைசெய்திருக்கின்றானோ அவற்றிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். நல்லறங்கள்
செய்வதோடு, நற்பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒருவர்
இறைநேசர் ஆவதற்கு என்னென்ன நற்பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இக்கட்டுரையில்
காணலாம்.
இறைநேசர்கள்
என்றால், அவர்கள் அல்லாஹ்வை நேசிப்பார்கள். அல்லாஹ்வும்
அவர்களை நேசிப்பான். அவர்கள்தாம் இறைநேசர்கள். அல்லாஹ் நம்மை நேசிக்க வேண்டுமானால்
நாம் என்ன செய்ய வேண்டும்? அல்லாஹ்வை
மட்டுமே அஞ்ச வேண்டும்; எதிர்காலத்தைப்
பற்றிய கவலை இருக்கக்கூடாது. அது குறித்து அல்லாஹ் கூறுகின்றான்: “அறிந்துகொள்க! நிச்சயமாக அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கு
யாதொரு பயமுமில்லை; அவர்கள்
கவலைப்படவுமாட்டார்கள்.” (10:
62)
இறைநேசர்களுக்கு
எதனால் எந்த அச்சமும் இருப்பதில்லை. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வை மட்டுமே அஞ்சுபவர்கள்
ஆவர். அல்லாஹ்வை மட்டுமே அஞ்சுவோருக்கு வேறு எந்த அச்சமும் இருப்பதில்லை. எந்த அச்சமும்
இல்லையெனில் எதிர்காலத்தைப் பற்றிய எந்தக் கவலையும் இருக்காது. கடந்த காலத்தைப் பற்றிய
துக்கமோ எதிர்காலத்தைப் பற்றிய கவலையோ அவர்களின் மனத்தில் அறவே இருக்காது.
மதீனாவில்
ஒரு நாள் இரவு நேரத்தில் மக்கள் மத்தியில் ஒரு பேரச்சம் நிலவியது. அப்போது அல்லாஹ்வின்
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு குதிரைமீதேறி, தன்னந்தனியாகச் சென்று திரும்பி வந்து, எந்த அச்சமும் வேண்டாம் என்று மக்களைத்
தேற்றினார்கள். அது குறித்த நபிமொழி புகாரீ நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
(எதிரிகள்
படையெடுத்து வருவதாக) மதீனா நகரில் பீதி நிலவியது. உடனே, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் குதிரையில்
ஏறி (விவரமறிந்து வர)ப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள், “(பீதி ஏற்படுத்தும்) எதனையும் நாம் காணவில்லை. தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகவே நாம் இந்த
குதிரையைக் கண்டோம்'' என்று
கூறினார்கள். (நூல்: புகாரீ: 2968) அல்லாஹ்வின் மீதான அச்சம் மட்டுமே உள்ளோருக்கு
வேறு எந்த அச்சமும் இருப்பதில்லை என்பதற்கான சான்றாக இந்த நபிமொழி திகழ்கிறது.
இறைநேசர்களின்
நற்பண்புகளுள் ஒன்று அல்லாஹ்விற்காகவே எதையும் செய்தல் ஆகும். அவர்கள் எதையும் விரும்பினாலும், எதையேனும் வெறுத்தாலும், எதையேனும் யாருக்கேனும் கொடுத்தாலும், கொடுக்காமல் தடுத்து வைத்துக்கொண்டாலும்
எல்லாமே அல்லாஹ்வுக்காகவே இருக்கும். அவனது திருப்தியைப் பெற வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கி
இருக்கும். உலகாதாய நோக்கமோ, உலகாதாயப்
பயன்களைப் பெறுவதாகவோ இருக்காது.
இது
குறித்து ஒரு நபிமொழி இவ்வாறு கூறுகின்றது: “யார் அல்லாஹ்வுக்காகவே நேசித்தாரோ, அல்லாஹ்வுக்காகவே (ஒருவனை) வெறுத்தாரோ, அல்லாஹ்வுக்காகவே கொடுத்து, அல்லாஹ்வுக்காகவே தடுத்துக்கொண்டாரோ அவர்
ஈமானை (இறைநம்பிக்கையை) முழுமைப்படுத்திக்கொண்டுவிட்டார்”
என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் கூறினார்கள். (அபூதாவூத்: 4681)
எதைச்
செய்தாலும் அல்லாஹ்வுக்காகச் செய்வதே ஒருவர் தம் இறைநம்பிக்கையை முழுமைப்படுத்திக்கொள்வதற்கான
வழியாகும். அதை ஒருவர் செய்தால் அவர் இறைநேசர்களுள் ஒருவர் எனத் தம்மைக் கருதிக்கொள்ளலாம்.
அதாவது ஒருவர் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செவ்வனே நிறைவேற்றுகிறார்; அன்றாடம் ஐவேளைத் தொழுகைகளைத் தொழுகிறார்; உரிய முறையில் ஸகாத்தை வழங்கிவருகிறார்; உபரியான தான தர்மங்களைச் செய்து வருகிறார்; தீன்பற்று மிக்கவராகத் திகழ்கிறார்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுவதில்
முன்னிற்கிறார். இத்தகைய ஒருவரை நாம் நேசிப்பதே அல்லாஹ்வுக்காக நேசித்தல் ஆகும்.
அதேநேரத்தில்
ஒருவர் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்கிறார்; வட்டி வாங்குகிறார்; தடை செய்யப்பட்ட தொழில்களைச் செய்கின்றார்.
இத்தகையோரை நாம் வெறுக்க வேண்டும். இத்தகையோர்மீது நமக்கு இயல்பாகவே வெறுப்பு ஏற்பட்டால்
அதுதான் அல்லாஹ்வுக்காகவே ஒருவரை வெறுத்தல் ஆகும். ஆக அல்லாஹ்விற்காகவே விரும்புதலும்
அல்லாஹ்வுக்காகவே வெறுத்தலும் இறைநேசர்களின் பண்பாகும். இப்பண்பை நாம் கொண்டிருந்தால்
நாமும் இறைநேசர்களுள் ஒருவராக ஆகிவிடலாம்.
அடுத்து, அல்லாஹ் கடமையாக்கியுள்ள கடமையான வழிபாடுகளைச்
செவ்வனே நிறைவேற்றுவதோடு உபரியான (நஃபிலான)
வழிபாடுகளையும் நிறைவேற்ற வேண்டும். இவற்றைப் பார்க்கின்ற அல்லாஹ் அந்த அடியானை விரும்புகின்றான்.
இது குறித்து நபியவர்கள் கூறியுள்ள ஒரு செய்தி புகாரீ எனும் நபிமொழித் தொகுப்பு நூலில்
பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அல்லாஹ்
கூறியதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ...எனக்கு விருப்பமான
செயல்களில் நான் கடமையாக்கியதைவிட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை
ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம்
நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன்... (புகாரீ:
6502)
ஆக கடமையான
வழிபாடுகள் என்பதில் ஐவேளைத் தொழுகை, ரமளான் மாத நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகியவை அடங்கும். ஸகாத்தும் ஹஜ்ஜும்
வசதியுள்ளோருக்கு மட்டுமே பொருந்தும். அதன்பின் உபரியான தொழுகை என்பதில் கடமையான
ஐவேளைத் தொழுகைக்கு முன்-பின் உள்ள சுன்னத்துகள், நஃபில்கள், இஷ்ராக், லுஹா, அவ்வாபீன், தஹஜ்ஜுத் உள்ளிட்டவை அடங்கும். உபரியான
நோன்புகள், அவ்வப்போது ஏழைகளுக்குத் தர்மங்கள், தனிமையில் அமர்ந்து இறைவனைப் புகழ்ந்து
திக்ர் செய்தல் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும். அவரே இறைநேசராகத் திகழ முடியும்.
அல்லாஹ்வின்
வழியில் செலவு செய்தாலோ ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் பொருளாதார உதவிகள் செய்தாலோ
பொருட்செல்வம் குறைந்துவிடும் என்ற எண்ணம் ஏற்படக்கூடாது. அவர்களே இறைநேசர்கள் ஆவர். இறைநேசர்கள் பொய் பேச மாட்டார்கள்; வீண் விளையாட்டுகளில் ஈடுபட மாட்டார்கள்; வீண் வேடிக்கைகளைப் பார்க்க மாட்டார்கள்; அறிவிலிகள் ஏதாவது அரட்டையடிக்கும் விதமாகவோ
வம்பிழுக்கும் விதமாகவோ பேசினால் ‘ஸலாம்’
எனக் கூறி ஒதுங்கிவிடுவார்கள். இவ்வாறு
பற்பல நற்பண்புகள் அவர்களிடம் இருக்கும்.
இறைநேசர்கள்
தம்மைப் படைத்துப் பரிபாலிக்கின்ற பேரிறைவன் அல்லாஹ்வுக்கு அதிகமாக நன்றி செலுத்துவார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வுக்கு மிக அதிகமாக நன்றி செலுத்தி வந்தார்கள்
என்பதை நாம் அறிவோம். அது குறித்து முஃகீரா பின் ஷுஅபா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ள
ஒரு நபிமொழியைப் பார்க்கலாம்.
நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் "தமது பாதங்கள்' அல்லது "கணைக்கால்கள்' வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள்.
இது குறித்து அவர்களிடம் கேட்கப்படும்போது “நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?'' என்று கேட்பார்கள். (புகாரீ: 1130)
இறைத்தூதர்கள், இறைநேசர்கள் ஆகியோர் குறித்து அல்லாஹ்
திருக்குர்ஆனில் எங்கெல்லாம் கூறுகின்றானோ அங்கெல்லாம் நன்றி செலுத்துதல் குறித்துக்
கூறுகின்றான். அதாவது அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு மிகுந்த நன்றி செலுத்துபவர்களாக
இருந்தனர் என்று தெரிவிக்கின்றான்.
சுலைமான்
அலைஹிஸ்ஸலாம் சொன்ன செய்தி: ...இது நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா இல்லையா
என்று என்னைச் சோதிப்பதற்காக என் இறைவன் எனக்குப் புரிந்த பேரருளாகும். எவன் (இறைவனுக்கு)
நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான்... (27: 40)
லுக்மான்
அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறித்த ஒரு செய்தி: லுக்மானுக்கு நாம் ஞானத்தைக் கொடுத்து
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்படி கூறினோம். ஏனென்றால், எவர் நன்றி செலுத்துகிறாரோ அவர் தம் நன்மைக்காகவே
நன்றி செலுத்துகிறார். எவன் (அதனை) நிராகரிக்கிறானோ (அவன் தனக்குத் தீங்கைத் தேடிக்கொள்கிறான்.
அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நட்டமில்லை. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனும்
புகழுக்குரியோனும் ஆவான். (31: 12)
இப்ராஹீம்
அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறித்த ஒரு செய்தி: “இறைவனின் அருட்கொடைகளுக்கு (எந்நேரமும்)
நன்றி செலுத்துபவராக இருந்தார்.” (16:
121)
இவ்வாறு
இறைநேசர்களும் இறைத்தூதர்களும் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோராக
இருந்தார்கள். எனவே நாம் அல்லாஹ்வுக்கு நன்றிக்குரியோராக இருந்தால் அவனுடைய அடியார்களாக, இறைநேசர்களாக உருவாகலாம்.
படைத்த
இறைவனுக்கு நன்றி செலுத்துகிற அதேநேரத்தில் நம்மைச் சார்ந்த எத்தனையோ பேர் நமக்கு
உதவி செய்கின்றார்கள். அவர்கள் செய்கின்ற சின்னச்சின்ன உதவிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டே
இருக்க வேண்டும். நம்மால் இயன்ற கைம்மாறையும் செய்துவர வேண்டும். அதுதான் இறைவனுக்கு
நன்றி செலுத்தத் தூண்டுகோலாக அமையும். ஆக இத்தனை நற்பண்புகளையும் நாம் நம்முடைய அன்றாட
வாழ்வில் கடைப்பிடித்தால் நாமும் இறைவன் விரும்பும் இறையடியார்களாக-இறைநேசர்களாக ஆகிவிடலாம். அதற்காக
நாம் நாள்தோறும் முயன்றுகொண்டே இருப்போம்.
==========================