புதன், 17 நவம்பர், 2021

தூண்டுகோலாக இருங்கள்!

 

-மௌலவி முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

(இமாம், மதீனா மஸ்ஜித்-பட்டினப்பாக்கம், சென்னை)

 

சிறு விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் என்ற பழமொழியை நாம் அறிந்துள்ளோம்.  விளக்கு நன்றாக எரிய வேண்டும் என்பதற்காகத் தூண்டுகோலால் அதை உயர்த்தி விடுவது வழக்கம்.  சுடர் மங்கும்போது அதைத் தூண்டிவிடுவதால் அது நன்றாகச் சுடர்விட்டு எரியும். அக்கால அரிக்கன் விளக்கு எனும் ஹரிக்கேன் விளக்கைப் பார்த்தவர்களுக்கும் பயன்படுத்தியவர்களுக்கும் இது எளிதில் விளங்கும். ஒரு விளக்கு நன்றாகச் சுடர்விட்டு எரிவதற்கே ஒரு தூண்டுகோல் வேண்டும் எனும்போது பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ள மனிதனுக்குத் தூண்டுகோல் தேவைப்படாதா?

 

ஒருவர் தொடர்ந்து நாளிதழ், வார இதழ், மாத இதழ் ஆகியவற்றிற்குக் கட்டுரைகள் எழுதிக்கொண்டே இருக்கிறார். ஆனால் அவரை யாரும் பாராட்டுவதில்லை. வாழ்த்துவதில்லை.  அதனால் அவர் சோர்ந்து போகிறார். என்னத்த எழுதி, என்ன செய்ய?” என்று எண்ணுகிறார். எழுதுவதில் ஒரு சடைவும் சோம்பலும் ஏற்படுகிறது. அதனால் எழுதுவதைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கிறார். இந்த நேரத்தில் அவரைச் சந்திக்கிற நாம், “என்ன ஐயா, இப்போதெல்லாம் உங்கள் கட்டுரைகளைப் பத்திரிகைகளில் காணமுடியவில்லையே. ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டீர்கள்? நன்றாகத் தானே எழுதி வந்தீர்கள்? நான் உங்களுடைய கட்டுரைகளைத் தவறாமல் வாசித்துவிடுவேன். மிகச் சிறந்த கருத்துகளை உங்கள் கட்டுரைகளில் எழுதி வருகின்றீர்கள். ஆகவே தொடர்ந்து எழுதுங்கள் ஐயா” என்று சொன்னால், சோர்ந்து போய்க்கிடந்த அவரது உள்ளம் துள்ளிக் குதித்து எழுந்து எழுதத் தொடங்கிவிடும்.

 

ஒருவர் பிறருக்கு உதவிகளைச் செய்துகொண்டே இருப்பார். திடீரென அதை நிறுத்திவிடுவார்.  ஏதாவது கசப்பான அனுபவம் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம். அவரிடம் உதவிகளைப் பெற்றவனே அவருக்கு உபத்திரவம் செய்திருக்கலாம். அதனால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் அவர் உதவி  செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தியிருக்கலாம். அவரைச் சந்திக்கிற நாம், “என்ன ஐயா, இப்போதெல்லாம் உங்கள் வீட்டிற்கு உதவி தேடி யாரும் வருவதில்லையே? யாரையும் உங்கள் வீட்டுக்குமுன் பார்க்க முடியவில்லையே? என்னாயிற்று? என்று கேட்டால் அவரது கசப்பான அனுபவங்களை நம்மிடம் கூறுவார்.

 

அதைக் கேட்கும் நாம், “அட விடுங்க ஐயா! மனிதர்களே அப்படித்தான். நாம் இவர்களிடம் நன்றியையோ பிரதிபலனையோ எதிர்பார்க்கக்கூடாது. நாம் செய்ய வேண்டியதை செய்துகொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ் அதற்கான நற்கூலியை ஈருலகிலும் உங்களுக்குத் தருவான். நீங்க கவலைப்படாதீங்க. நீங்க தொடர்ந்து செய்ய வேண்டிய உதவிகளைச் செய்துகொண்டே இருங்க” என்று சொல்லிவிட்டு வந்தால் அவரது மனம் மாறும். புத்தெழுச்சி பெறும். அடுத்தடுத்து அவர் உதவிகளைச் செய்யத் தொடங்கிவிடுவார்.

 

ஒருவர், தம் வீட்டிற்கு யார் வந்தாலும் உணவுண்ணச் செய்யாமல் அனுப்பமாட்டார். இதனால் ஏழைகள் பலர் பயன்பெற்று வந்தனர். திடீரெனச் சில நாள்களாக அதைச் செய்யாமல் விட்டுவிட்டார்.  என்ன காரணம் தெரியவில்லை. அவரைச் சந்திக்கின்ற நாம் அவரது சேவையின் தேவையையும் அதனால் ஏற்படுகின்ற பயன்களையும் அவரிடம் எடுத்துக் கூறி, “தொடர்ந்து செய்யுங்கள் ஐயா” என்று ஆர்வமூட்டும்போது அவரும் ஆவலோடு செய்யத் தொடங்குவார்.

 

ஓர் இளைஞர் போட்டித் தேர்வுகளுக்காகத் தொடர்ந்து போராடி வருபவர். அவர் எழுதிய தேர்வுகளில் தோற்றுப் போய்விட்டார். சோகத்தில் உள்ளார். அடுத்து எழுதலாமா, வேண்டாமா என்ற இருநிலையில் உள்ளார். இந்நேரத்தில் அவரைச் சந்திக்கிற நாம், அந்த இளைஞரை உற்சாகப்படுத்தி, “தோல்விதான் வெற்றியின் முதற்படி. இந்தத் தடவை தோற்றால் என்ன, அடுத்த தடவை வெற்றிபெறுவதற்கான நல்வாய்ப்பு உனக்கு இருக்கிறது. தொடர்ந்து படி. அடுத்த தடவை கூடுதல் கவனத்துடன் எழுது” என்று ஆர்வமூட்டினால், நிச்சயமாக நம் வார்த்தைகள் அந்த இளைஞருக்கு ஒரு புதுத்தெம்பூட்டும். நம்பிக்கையை ஏற்படுத்தும். 

 

இப்படிப் பல்வேறு மனிதர்கள் பற்பல கோணங்களில் சோர்ந்து போயிருக்கலாம். அவர்களைச் சந்திக்கிற நாம் அவர்களின் உள்ளுணர்வுகளைத் தூண்டி, தட்டியெழுப்பிவிட்டால் அவர்கள் தம் பாதையில் தொடர்ந்து பயணிக்க உதவியாக இருக்கும். அதுவே நாம் செய்யும் நல்லறமாகும்.

 

சிலர் எழுதுவதைக் கைவிட்டிருக்கலாம். சிலர் கவிதை எழுதுவதைக் கைவிட்டிருக்கலாம். சிலர் பிறருக்கு உதவி செய்வதை நிறுத்தியிருக்கலாம். சிலர் ஏழைகளுக்கு உணவளிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தியிருக்கலாம். சிலர் சமூகச் சேவைகள் செய்வதை நிறுத்தியிருக்கலாம். சிலர் போட்டித் தேர்வுகள் எழுதுவதில் சோர்ந்து போயிருக்கலாம். சிலர் படிப்பில் தேக்கமடைந்து துவண்டு போயிருக்கலாம். இப்படி எத்தனையோ பேர் எத்தனையோ விதமாக இருக்கலாம். அவர்களை நம்முடைய நல்வார்த்தைகள் மூலமும் நல்வாழ்த்துகள் மூலமும் தூண்டிவிட்டால் அவர்கள் உற்சாகமடைந்து, தம் பணிகளைச் செய்யத் தொடங்கிவிடுவார்கள். அதனால் அவர்களுக்கும் நன்மை. செய்யத் தூண்டிய நமக்கும் நன்மை.

சிலர் தாமும் நன்மை செய்வதில்லை. பிறரையும் நன்மை செய்யத் தூண்டுவதில்லை. வெறுமனே வெட்டியாய் இருப்பார்கள். இதுபோன்ற மனிதர்களை முன்வைத்தே இறைவன் இவ்வாறு கூறுகிறான்:  ஏழைகளுக்கு உணவளிக்குமாறு தூண்டவுமாட்டான். (107: 3)

ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டுதல் என்பது ஒரு குறியீடுதான். அதுபோன்று எத்தனையோ  நற்செயல்கள் இருக்கின்றன. அவற்றைச் செய்யுமாறு உரியோரை நாம் தூண்ட வேண்டும். தூண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அச்செயல்களைச் செய்யுமாறு அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அதனால் அவர்கள் அவற்றைச் செய்யத் தொடங்குவார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு நன்மை கிடைப்பதோடு சமுதாய மக்களுக்கும் மிகப்பெரும் பயன்கள் உண்டாகும். தூண்டிய நமக்கும் நன்மை உண்டு என்பதில் ஐயமில்லை.  

=======================


கருத்துகள் இல்லை: