வியாழன், 4 நவம்பர், 2021

பிரார்த்தனையின் பலன்கள்-3

 

-மௌலவி முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி


(இமாம், மதீனா மஸ்ஜித்-பட்டினப்பாக்கம், சென்னை)

------------------


ஆடை அணிதல்: ஆடை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் முற்றிலும் அவசியம். ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்ற பழமொழி நமக்குத் தெரியும். ஆள் பாதி ஆடை பாதி என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.  இந்த ஆடை மூலம்தான் மக்கள் மத்தியில் மனிதனின் மதிப்பும் உயர்வும் நிர்ணயிக்கப்படுகின்றன. எனவே இந்த ஆடையைத் தேர்ந்தெடுப்பதிலும் அதை அணிவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.


உனக்காக உண், பிறருக்காக உடுத்து என்று கூறுவார்கள். அதாவது தனக்குப் பிடித்தவற்றை மட்டுமே உண்ண வேண்டும். பிறரின் விருப்பத்திற்காக உண்ணக்கூடாது. அதேநேரத்தில் பிறர் விரும்பும் வகையில் நம் ஆடை அமைந்திருக்க வேண்டும். இது அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் பின்பற்றும் நடைமுறையாகும்.இந்த ஆடை மூலமே மனிதன் தன் மானத்தை மறைத்துக்கொள்கிறான். பிறரின் பார்வையிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்கிறான். பிறரைக் கவர்வதும் ஈர்ப்பதும் இந்த ஆடையின் மூலமேயாகும்.  ஒரு செல்வர் எவ்வளவுதான் கவர்ச்சியாக ஆடை அணிந்தாலும் ஓர் ஏழை எவ்வளவு தரமற்றதாக ஆடை அணிந்தாலும் அல்லாஹ்வின் பார்வையில் லிபாசுத்தக்வா எனும் இறையச்ச ஆடையைத் தமதாகக் கொண்டிருப்பவரே மேலானவர். உடலை மறைக்கின்ற வெளிப்புற ஆடைகளை வைத்து அல்லாஹ்விடம் மேன்மையடைந்துவிட முடியாது என்பதை நாம் ஆடை அணிகின்றபோது கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த ஆடை மூலம் பெருமையோ செருக்கோ கொள்ளாமல் நம் மனம் அமைதியாகவும் அடக்கத்துடனும் இருக்கும். பிறரின் ஆடையைக் கண்டு மட்டமாக மதிக்கும் போக்கு மாறும்.ஆடை அணியும்போது: நாம் அணிகின்ற ஆடை இறைவன் நமக்குக் கொடுத்த ஓர் அருட்கொடையாகும். மாற்று ஆடையின்றி எத்தனையோ பேர் இத்தரணியில் வசிக்கின்றார்கள். அவர்களைவிட நம்மை அல்லாஹ் மேன்மைப்படுத்தியிருப்பதையும் கண்ணியப்படுத்தியிருப்பதையும் நாம் உணர்ந்து அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அதனால்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்,


 “யார் ஆடை அணிகின்றபோது 

اَلْحَمْدُ لِلَّهِ الَّذِيْ كَسَانِيْ هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّيْ، وَلَا قُوَّةٍ.

அல்ஹம்து லில்லாஹில்லதீ கசானீ ஹாதஸ் ஸவ்ப வ ரஸகனீஹி மின் ஃகைரி ஹவ்லிம் மின்னீ வலா குவ்வஹ் (பொருள்: இந்த ஆடையை எனக்கு அணிவித்த, என்னிலிருந்து எந்த ஆற்றலும் சக்தியுமின்றி எனக்கு இதை வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகட்டும்!)

என்று ஓதினாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன எனக் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்: 4023)


துணிக்கடையில் விற்கப்படுகின்ற ஆடைகளை நாம் பணம் கொடுத்து வாங்கிக்கொள்கிறோம். ஆனால் அதை வாங்குவதற்குரிய வருமானத்தையும் செல்வத்தையும் தந்தவன் இறைவன்தானே? அதனால்தான் அவனுக்கு நன்றிசெலுத்துகிறோம். ஓர் ஆடையை நெய்வதற்கோ செய்வதற்கோ நாம் எந்த முயற்சியையும் செய்வதில்லை. நமக்கு நாமே ஆடை செய்துகொள்ள எந்த ஆற்றலும் இல்லை. எந்தத் திறமையும் இல்லை. ஆடை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதை நாம் வாங்கி அணிந்துகொள்கிறோம். ஆக, அதைச் செய்பவனும் நெய்பவனும் யாரோ ஒருவன். 


ஆனால் நாம் அதை வாங்கி, நம்முடைய உடலமைப்புக்குத் தோதுவாக, அழகாக அணிந்துகொள்கிறோம். அத்தகைய நிலையில் நம்மை உயர்வாக வைத்துள்ள அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டுமல்லவா? அதனால்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்தப் பிரார்த்தனையைக் கற்றுத் தந்துள்ளார்கள். இருப்பினும் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அல்லாஹ்வின் அருளை நினைத்துப் பார்த்து அவனுக்கு நன்றி செலுத்துவோர் நம்முள் எத்தனை பேர்?


புத்தாடை அணியும்போது : நாம் பண்டிகைக் காலங்களில் புத்தாடை அணிகின்றோம். அல்லது ஏதேனும் விசேஷ நாள்களில் புத்தாடை அணிகின்றோம். புத்தாடை அணியும்போது அதை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி சொல்ல முயன்றிருக்கின்றோமா? புத்தாடை அணியும்போது அல்லாஹ்வை நினைத்துப் பார்த்திருக்கின்றோமா? அதை அவன் நமக்கு வழங்கியதற்காக அவனைப் புகழ்ந்திருக்கின்றோமா?அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புத்தாடை அணியும்போது அதன் பெயரைக் குறிப்பிட்டு-சட்டை அல்லது தலைப்பாகை-பின்னர் இந்தப் பிரார்த்தனையைச் செய்வார்கள்.

اَللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيْهِ أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ، وَشَرِّ مَا صُنِعَ لَهُ,

அல்லாஹும்ம லகல் ஹம்து, அன்த்த கசவ்த்தனீஹி அஸ்அலுக மின் கைரிஹி வ கைரி மா ஸுனிஅ லஹு வஅஊது பிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மா ஸுனிஅ லஹு.  (பொருள்: இறைவா! உனக்கே எல்லாப் புகழும். நீதான் எனக்கு இதை அணிவித்தாய். அதன் நன்மையையும் அது எதற்காகத் தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும் நான் உன்னிடம் கேட்கிறேன். அதன் தீமையிலிருந்தும் அது எதற்காகத் தயாரிக்கப்பட்டதோ அதன் தீமையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.)  (நூல்: அபூதாவூத்: 4020)பொதுவாக ஆடைகளில் பற்பல விதங்களும் வண்ணங்களும் உள்ளன. பருத்தி, கம்பளி, நைலான், பட்டு எனப் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்தில் இருக்கும். ஆடைகளுள் சில கோடைக்காலத்திற்காகவும் சில குளிர்காலத்திற்காகவும் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படுகின்றன. ஆடைகளுள் சில எல்லாக் காலத்திற்கும் உகந்ததாகத் தயாரிக்கப்படுகின்றன. அவற்றுள் சில சிலருக்கு இதமாக இருக்கும். வேறு சிலருக்கு எரிச்சலாக இருக்கும். சிலரின் உடல்தோல் அதை ஏற்றுக்கொள்ளும். சிலரின் உடல்தோல் அதை ஏற்றுக்கொள்ளாது. அந்த ஆடைகளே சிலருக்கு உபாதைகளை ஏற்படுத்தலாம். இப்படிப் பல்வேறு விஷயங்கள் நாம் அணிகின்ற ஆடையில் உள்ளன. எனவே இவற்றிலிருந்து நன்மையைத் தேடுவதும் தீமையிலிருந்து பாதுகாப்புத் தேடுவதும் கடமையாகின்றது.


 எனவேதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படி ஒரு வழிமுறையைக் கற்றுத் தந்துள்ளார்கள்.

சிலருடைய புத்தாடையின் அளவிலா அழகைக் கண்டு, பார்ப்போர் வியப்பதும் உண்டு. வேறு சிலர் பொறாமைக் கண்கொண்டு பார்ப்பதும் உண்டு. சிலர் உற்றுநோக்கிப் பார்ப்பதால் அதை அணிந்திருப்பவருக்குக் கண்ணேறு ஏற்பட்டு அதன்மூலம் தீமை விளைவதும் உண்டு. எனவே அதை அணிபவர் இந்தப் பிரார்த்தனையைச் செய்துகொண்டால் இதுபோன்ற பல்வேறு தீங்குகளிலிருந்தும் தீமைகளிலிருந்தும் அவர் பாதுகாப்புப் பெறலாம். எனவே புத்தாடையைக் கொடுத்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதோடு அவனிடமே நாம் அதன் மூலம் நன்மையையும் தீமையிலிருந்து பாதுகாப்பையும் கேட்க வேண்டும்.ஆடை களையும்போது: ஆடையைக் களைகின்றபோது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். நம்முடைய அந்தரங்க உறுப்புகளைப் பிறர் பார்வையிலிருந்து மறைப்பதற்காகவே நாம் ஆடை அணிகின்றோம். ஆதலால் ஆடை அணிகின்றபோதும் அதைக் களைகின்றபோதும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பொது இடங்களில் ஆடையைத் தூக்கிக்கொண்டு சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், பின்பகுதி தெரியாவண்ணம் மறைத்துக்கொண்டு அமர்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும். நம்முடைய அந்தரங்க உறுப்புகளைப் பிறருக்குக் காட்டி மகிழ்வதில் ஷைத்தான் ஈடுபடுகின்றான். எனவே அவனை விரட்டுவதற்காக நாம் ஆடையைக் களையும்போதும் தூக்கிக்கொண்டு சிறுநீர் கழிக்க நேரிடும்போதும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுத் தந்தபடி, ‘பிஸ்மில்லாஹ் என்று கூற மறந்துவிடக் கூடாது.ஆக, நாம் ஆடை அணிகின்றபோது அல்லாஹ்வின் புகழ்கூறி, அதைக் களைகின்றபோது அவனை நினைத்து அவன் பெயர்கூறி அவனுடைய திருப்தியை நாம் எப்போதும் பெற்றிட அவனே நமக்கு அருள்வானாக!                         

(தொடரும்)

==============கருத்துகள் இல்லை: