வியாழன், 18 நவம்பர், 2021

அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்படுவோம்!

  

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

-------------------------------------------

இறைநம்பிக்கை கொண்டோரே, அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். அவனுடைய தூதருக்கும் உங்களுள் அதிகாரமுடையோருக்கும் கட்டுப்படுங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். (4: 59)

இத்தூதருக்குக் கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டுவிட்டார். (4: 80)

அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டவர் மகத்தான வெற்றியைப் பெற்றுவிட்டார். (33: 7)

மேற்கண்ட இறைவசனங்கள், மக்கள் எல்லோரும் இறைத்தூதருக்குக் கட்டுப்பட வேண்டுமென வலியுறுத்துகின்றன. அவ்வாறு கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர் என்றும் அவர் மகத்தான வெற்றியைப் பெற்றுவிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இறைநம்பிக்கை கொண்ட ஒருவர் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எதையெல்லாம் கட்டளையிட்டுள்ளனரோ அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். அதில்தான் வெற்றி உள்ளது என்பதை மனதார நம்பிக்கை கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நாம் ஒவ்வொருவரும் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஏவல்களை ஏற்று நடப்பதும் அவர்கள் தடை செய்தவற்றைவிட்டுத் தவிர்ந்துகொள்வதும் ஈமானின் வெளிப்பாடாகும்; அன்பின் அடையாளமாகும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ள எத்தனையோ  வழிமுறைகளை இன்று நம்முள் பலர் கைவிட்டுவிட்டனர். மிகச் சிலரே அவற்றைத் தம் அன்றாட வாழ்க்கையில் பின்பற்றி வருகின்றார்கள்.

பல்துலக்குவது வாய்க்குச் சுத்தமாகும். இறைவனுக்கு விருப்பமானதாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா: 289) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  மிஸ்வாக் குச்சியைப் பயன்படுத்தியே பல்துலக்கியுள்ளார்கள் என்பதை பல்வேறு நபிமொழிகளின் மூலம் அறிகிறோம். ஆனால் நம்முள் எத்தனை பேர் அதனைப் பயன்படுத்துகின்றனர்? மிஸ்வாக் குச்சியைப் பயன்படுத்துவது தப்லீஃக்காரர்களுக்கு மட்டும் சொந்தமான சுன்னத்தா? நபியவர்களின் வழிமுறை அனைவருக்கும்தானே?

ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று கூறுவார்கள். தமிழர்கள் இரண்டு விதமான குச்சிகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். அவை ஆலங்குச்சி, வேப்ப மரக்குச்சி ஆகியவை ஆகும். அவற்றால் நாம் பல் துலக்கினால் நம் பற்கள் பாதுகாக்கப்படும். அவற்றின் ஆரோக்கியம் மேம்படும். அதேநேரத்தில் நபியவர்கள் அராக் எனும் மரக்குச்சியைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை அறிகிறோம்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் மரணத்தறுவாயில் மிஸ்வாக் குச்சியைப் பயன்படுத்தி, பல் துலக்கியுள்ளதை நபிமொழித் தொகுப்பு நூல்களில் காணலாம். நபியவர்களின் இறுதித் தருணத்தில் அவர்களைக் காண, அப்துர் ரஹ்மான் வருகிறார். அவர் தம் கையில் மிஸ்வாக் குச்சி வைத்திருந்தார். அதைப் பார்த்துத் தம் கண்களால் சைகை செய்த நபியவர்களின் இறுதி விருப்பத்தை அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா நிறைவேற்றினார்கள். அவரிடமிருந்து அந்தக் குச்சியை வாங்கித் தம் பற்களால் கடித்து மிருதுவாக்கி, நபியவர்களிடம்  கொடுக்க, அதைப் பெற்றுக்கொண்ட நபியவர்கள், தம் பற்களைத் தேய்த்துக்கொண்டார்கள். தம் வாழ்வின் கடைசி நேரம் வரை பல் துலக்குவதன் முக்கியத்துவத்தை இந்தச் சமுதாயத்துக்குக் கற்பித்துச் சென்றுள்ளார்கள். அதை நாம் இன்று மறந்துபோய்விட்டோம்.

 இன்று பல்வேறு வகையான பற்பசை (பேஸ்ட்)களும் பல்துலக்கிகளும் (பிரஷ்) சந்தைக்கு வந்துவிட்டன. அந்தப் பற்பசைகளில் மனித ஆரோக்கியத்திற்கு ஒவ்வாத, பற்களைக் கெடுத்துவிடுகிற எத்தனையோ வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. அதனால் இன்று பலர் பல்வலியால் அவதிப்படுவதைக் காண்கிறோம். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய வழிமுறையைக் கைவிட்டதாலேயே பல்வேறு இன்னல்களுக்கும் இடுக்கண்களுக்கும் ஆளாக நேரிடுகிறது என்பதை உணர மறுக்கிறோம்.

தொப்பி என்பது ஒவ்வொரு முஸ்லிம் ஆணும் தானாகவே விரும்பி அணிந்துகொள்கிற ஒரு காலம் இருந்தது. இன்றும் பலர் தொப்பி அணிந்துகொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் இன்றைய நவீன இளைஞர்கள் தொப்பி அணிய வெட்கப்படுகின்றனர். பிற சமுதாய மக்கள் மத்தியில் தான் ஒரு முஸ்லிம் என்று காட்டிக்கொள்ள வெட்கப்படுகின்றனர். தொப்பி போடாமல் தொழுவதையே விரும்புகின்றார்கள். அதையே எளிய வழியாகக் கருதுகின்றார்கள். முஸ்லிம் என்றால் தாடியும் தொப்பியும் வெளிப்படையான அடையாளங்கள் என்பதையும்  அடிப்படையான சுன்னத்துகள் என்பதையும் அவர்கள் மறந்துவிட்டார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்கா வெற்றி நாளில் தலையில் கருப்புத் தலைப்பாகை அணிந்துகொண்டு (மக்காவினுள்) நுழைந்தார்கள். (முஸ்லிம்: 2638) 

அம்ர் பின் ஹுரைஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (மக்கா வெற்றி நாளில்) தலையில் கருப்புத் தலைப்பாகை கட்டி, அதன் இரு ஓரங்களையும் தம் தோள்களுக்குமிடையே தொங்கவிட்டவர்களாகச் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீதிருந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. (முஸ்லிம்: 2640) 

ஆக தலையை மறைப்பதையே நபியவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் மூலம் அறிய முடிகிறது. ஆதலால் தொப்பியோ தலைப்பாகையோ அணிந்து தலையை மறைப்பது சுன்னத்தாகும். அதனால்தான் ஹஜ்ஜின்போது தலை திறக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையே இடப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்வோம்.

தொப்பி போடாவிட்டால் தொழுகை கூடாதா என்று கேட்கின்றனர். தொப்பி போடாமல் தொழுதால் தொழுகை கூடும் என்றாலும் பள்ளிவாசலில் எல்லோருடனும் சேர்ந்து தொழும்போது ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுகூடவா அவர்களுக்குத் தெரியாது? சட்டை போடாமல் தொழுதாலும் தொழுகை கூடும். அதற்காக அவர் சட்டை அணியாமல் வருவாரா? பனியன் அணியாமல் தொழுதாலும் தொழுகை கூடும் என்பதற்காக யாரேனும் வெற்று உடம்போடு வருவாரா? பனியனோ, மேல்சட்டையோ அணியாவிட்டாலும் தொழுகை கூடும் என்பது உறுதியான செய்தியாகும். இருப்பினும் யாராவது அவ்வாறு வருவாரா?

பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள், பொது இடங்கள் முதலான இடங்களில் இந்து சமயச் சகோதரர்கள் தம் நெற்றியில் பட்டை தீட்டுதல், திருநீறு இட்டுக்கொள்ளுதல், பொட்டு வைத்தல் மூலம் தம் மத அடையாளங்களை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். கிறிஸ்தவச் சகோதரர்கள் தம் கழுத்தில் சிலுவையை அணிந்துகொண்டு மத அடையாளத்தை வெளிப்படுத்துகின்றார்கள். ஆனால் முஸ்லிம்கள் தம் அடையாளத்தை வெளிப்படுத்தும் பொருட்டு தலையில் தொப்பி அணிந்துகொள்வதில்லையே ஏன்?

பள்ளிக்கூடங்களுக்குச் செல்லக்கூடிய பிள்ளைகள் பிற சமயப் பிள்ளைகளைப் போல் முஸ்லிம்கள் தொப்பி அணிந்துசெல்லவும் முஸ்லிம் பெண்கள் முழுமையாக மறைத்தவாறு செல்லவும் எந்தத் தடையும் இல்லை என அண்மையில் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டீஐ) மூலம் கேட்ட கேள்விக்கு, தகவல் வந்திருந்தது. அரசாங்கமே அனுமதித்தும் நாம் நம் பிள்ளைகளுக்குத் தொப்பி அணியச் செய்து, பள்ளிக்கு அனுப்பினோமா?

உங்கள் மத்தியில் ஸலாமைப் பரப்புங்கள் என்றும் நீங்கள் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுங்கள் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருப்பதை அறிவோம். ஆனால் முஸ்லிம்கள் தொப்பி அணியாமல் சென்றால், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் எப்படி நாம் முகமன் கூற முடியும்? புற அடையாளம் எதுவுமே இல்லாதபோது அவர் முஸ்லிம் என்று எப்படிக் கண்டறிய முடியும்

புற அடையாளங்கள் ஒருவன் தவறான செயல்களைச் செய்யவிடாமல் தடுக்கும் என்பதே உண்மை. தொப்பி போட்டுக்கொண்டு ஒருவன் தன் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு தவறான பழக்கங்களில் ஈடுபடமாட்டான்.  தவறு  செய்வோரோடு  சேரமாட்டான். அவன் தானாகவே விலகிச்செல்ல அவனுடைய புற அடையாளங்கள் காரணமாக அமைகின்றன. எனவே அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்படும்பொருட்டு ஒவ்வொருவரும் தாடியை வளர்ப்பதோடு தொப்பியும் அணிந்துகொள்ள வேண்டும்.

ஏன் நாம் அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற வினாவிற்கு விடையாக, “நிச்சயமாக நீர் அவர்களை நேரிய பாதை நோக்கி அழைக்கின்றீர். (23: 73) என்று அல்லாஹ் கூறுகின்றான். மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக நீர் நேரிய பாதையை நோக்கி வழிகாட்டுகிறீர். (42: 52) ஆகவே நேரிய பாதையை நோக்கி வழிகாட்டுகிற இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி நடப்பது நமது கடமையாகும்.

அதே வேளையில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தால் நம் நிலை என்னவாகும் என்பது குறித்து அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகின்றான். யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவர் தெளிவான வழிகேட்டில் சென்றுவிட்டார். (33: 36)

மேலும் நபியவர்கள் கூறுவதைப் பாருங்கள். அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர'' என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?'' என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்'' என்று பதிலளித்தார்கள். (புகாரீ: 7280)

ஆக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு சுன்னத்தை மறுத்தாலும் அவரும் நபிவழியை மறுத்தவராகவே கருதப்படுவார். எனவே நபிவழியை மனமுவந்து ஏற்றுப் பின்பற்ற வேண்டும். அதற்கு இன்றைய இளைஞர்கள் முன்வர வேண்டும்.

==================================

    

 

 

 

 

 

கருத்துகள் இல்லை: