-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
==========================================
நாம் ஒருவரைச் சந்திக்கும்போது, “என்ன தம்பி, நல்லா இருக்கீங்களா?” என்று விசாரிப்பது வழக்கம். இது ஒரு நல்ல பழக்கம்தான். ஆனால் நாம் விசாரிக்க வேண்டியவர்களை விசாரிக்காமல் விட்டுவிடுகின்றோமே அதுதான் நாம் செய்யும் தவறாகும். அதாவது நம் மஹல்லாவைச் சார்ந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார் என்றால், அவரைச் சந்தித்து, உடல் நலம் விசாரிப்பதும் ஆறுதல் கூறுவதும், அவருக்காக துஆச் செய்வதும் நபிவழியாகும். மிக முக்கியமான சுன்னத்தை-நபிவழியை நம்முள் பெரும்பாலோர் கடைப்பிடிப்பதில்லை.
ஒரு நோயாளியின் மனநிலை விரக்தியாலும் மரணத்தை நோக்கியதாகவும் இருக்கும். அத்தகைய கடினமான மனநிலையில் உள்ளவரை நாம் நேரடியாகச் சந்தித்து ஆறுதல் கூறுவது அவர் விரைவில் நலம்பெறக் காரணமாக அமைகிறது. நாம் கூறும் ஆறுதல் வார்த்தைகள் அவரின் மனதுக்குத் தெம்பூட்டுவதாக அமைகின்றன. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் உடல் நலம் விசாரிப்போரைச் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.
“முஸ்லிம் ஒருவர் (உடல் நலிவுற்ற) தம் சகோதர முஸ்லிமைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தால், அவர் (திரும்பி வரும் வரை) சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டிருக்கிறார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 890)
ஒரு முஸ்லிம் சகோதரரை உடல் நலம் விசாரிப்பது சொர்க்கத்தின் கனிகளைப் பறிப்பதற்குச் சமம் என்றால் அதன் உயர்வுதான் என்ன! அந்த அளவிற்குச் சிறப்பும் மேன்மையும் வாய்ந்த நபிவழி நடைமுறைப் பழக்கத்தை முஸ்லிம்கள் பெரும்பாலோர் கடைப்பிடிப்பதில்லை. மேலோட்டமாகச் செய்யும் சிலரின் செயல்பாடு விதிவிலக்காகும். ஆனால் மருத்துவமனைகளுக்குச் சென்று, முஸ்லிம்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் சொல்வோர் அரிதிலும் அரிது. அவ்வாறு மருத்துவமனை சென்று ஆறுதல் தெரிவிப்பதன்மூலம் நோயாளியின் நோய் விரைவில் குணமாவது ஒருபுறம். மற்றொரு கோணத்தில், இறைவன் நமக்கு வழங்கியுள்ள ஆரோக்கியத்தின் அருமை அப்போதுதான் நமக்குப் புரியவரும். அவன் நமக்கு வழங்கியுள்ள ஆரோக்கியம் எனும் அருட்கொடை எவ்வளவு மகத்தானது என்ற வியப்பு மேலிடும்.
எத்தனையோ பேர் தமது ஆரோக்கியத்தை இழந்து, மருத்துவமனையில் அவதிப்பட்டுக்கொண்டும், சிறுநீர் கழிப்பதற்குக்கூட இயலாமல் சிரமப்பட்டுக்கொண்டும் இருக்கின்றார்கள். அவ்வாறிருக்க அல்லாஹ் நம்மை முற்றிலும் ஆரோக்கியமாக வைத்திருக்கின்றானே என்ற உணர்வு ஏற்பட்டு, அவனுக்குக் கூடுதலாக நன்றி செலுத்த வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் ஏற்படும். சிலருக்குச் சுயமாகச் சிறுநீர் கழிக்க இயலவில்லை; சிலருக்குச் சுயகட்டுப்பாட்டை இழந்து, தானாகவே சிறுநீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது. சிலருக்கு இயல்பாக மலம் கழிக்க இயலவில்லை; சிலருக்குச் சுயகட்டுப்பாட்டை மீறி மலம் வெளியேறிக்கொண்டிருக்கிறது. புற்றுநோய், சர்க்கரை நோய், தோல்நோய், தொண்டை வலி, கண்பார்வையின்மை, கை கால் முடம் உள்ளிட்ட எத்தனையெத்தனையோ நோய்களாலும் குறைபாடுகளாலும் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அந்த அவதியின் உச்சத்தில், “நாம் ஏன் வாழ வேண்டும்; இறந்துவிடலாமே” என்றெல்லாம் எண்ணத் தோன்றும். அத்தகைய தருணத்தில் நாம் கூறும் இதமான ஆறுதல் வார்த்தைகள் அவரை வாழ வைக்கும்; இன்னும் வாழ வேண்டுமென்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஆக, உடல் நலம் விசாரிப்பது ஓர் உயிரை வாழ வைப்பதற்குச் சமமானதாகும். அதனால்தான் நலம் விசாரிப்பதற்கு அவ்வளவு பெரிய நன்மையை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நோயுற்றவரை நலம் விசாரிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையென நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளதைப் பாருங்கள்: “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை: ஸலாமுக்கு பதிலுரைத்தல், நோயாளியை நலம் விசாரித்தல், ஜனாஸாவைப் பின் தொடர்தல், விருந்தழைப்பை ஏற்றுக் கொள்ளல், தும்முபவருக்கு (அவர் அல்ஹம்து லில்லாஹ் என்று சொன்னபின்) மறுமொழி கூறுதல் ஆகியவையாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 1240)
இந்த ஐந்து கடமைகளுள் பெரும்பாலானவற்றை நாம் மறந்து வாழ்கிறோம்; அசட்டையாக இருக்கிறோம். அதைத் தவிர்த்து, இந்நடைமுறையை நாம் நம்முடைய அன்றாடப் பழக்கமாக மாற்றிக்கொள்ள முனைய வேண்டும். ஏனெனில் ஒருவர் தம் நோயால் அவதிப்படுகின்றபோது நாம் கூறும் ஆறுதல் வார்த்தைகளால் அவர் புத்துணர்வு பெறுகிறார். தமக்கு ஆதரவாக இவ்வுலகில் உறவினர்களும் நண்பர்களும் இருப்பதாக உணர்கிறார். அதுவே அவர் துரிதமாக நிவாரணம் பெறுவதற்கான காரணியாக அமைகிறது. எனவேதான் நபி (ஸல்) அவர்கள் நலம் விசாரிப்பதை ஒரு கடமையாகக் கூறியுள்ளார்கள்.
நோயைக் கொடுப்பதும் அதைக் குணப்படுத்துவதும் இறைவன் ஒருவனே. நோயைக் கொடுத்த இறைவனே நோயாளியை நலம் விசாரிக்குமாறு கூறுகிறான். நலம் விசாரிக்காதவரை நாளை மறுமையில் அவன் விசாரணை செய்வதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய செய்தி ‘முஸ்லிம்’ எனும் நபிமொழித் தொகுப்பு நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), “ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?'' என்று கேட்பான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்'' என்று கூறுவான்... (நூல்: முஸ்லிம்: 5021)
நபி (ஸல்) அவர்கள் தொடங்கிவைத்த இந்நற்பழக்கத்தை அவர்களைப் பின்பற்றி வாழ்ந்த நபித்தோழர்களும் கடைப்பிடித்திருக்கின்றார்கள். ஒரு தடவை அலீ (ரளி) அவர்கள் தம் புதல்வர் ஹசன் (ரளி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றார்கள். அங்கே ஏற்கெனவே அவரை நலம் விசாரிக்க, அபூமூஸா அஷ்அரீ (ரளி) அவர்கள் வந்திருப்பதைக் கண்ட அலீ (ரளி) அவர்கள் அவரிடம், “தாங்கள் உடல்நலம் விசாரிக்க வந்தீர்களா? அல்லது (சாதாரணமாகச்) சந்திக்க வந்தீர்களா?” என்று கேட்டபோது, “இல்லை. நான் உடல் நலம் விசாரிக்கத்தான் வந்தேன்” என்று அபூமூஸா (ரளி) அவர்கள் கூறினார்கள். அப்போது அலீ (ரளி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
“முஸ்லிம் ஒருவர் மற்றொரு முஸ்லிமை உடல்நலம் விசாரிப்பதற்காக ஒரு காலை நேரத்தில் சென்றால், அவருக்காக மாலை நேரம் வரை எழுபதாயிரம் வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். அவர் மாலை நேரத்தில் உடல்நலம் விசாரிக்கச் சென்றால் அவருக்காகக் காலை நேரம் வரை எழுபதாயிரம் வானவர்கள் பிரார்த்தனை செய்கின்றார்கள். மேலும் அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு தோட்டமும் (வெகுமதியாகக்) கிடைக்கின்றது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன். (நூல்: திர்மிதீ: 891)
ஆக ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம் சகோதரரை உடல் நலம் விசாரிக்கச் செல்வதால் எவ்வளவு பெரிய நன்மையும் நலமும் அவருக்குக் கிடைக்கின்றன என்பதைப் பாருங்கள். எழுபதாயிரம் வானவர்கள் நமக்காகப் பிரார்த்தனை செய்வது எவ்வளவு பெரும் பாக்கியம்!
உடல் நலம் விசாரிக்கச் செல்வதில் மற்றொரு முக்கியமான விஷயமும் அடங்கியுள்ளது. இப்பழக்கத்தை நாம் கைவிட்டுவிட்டதால் அவ்விடத்தைக் கிறிஸ்தவத் தொண்டர்கள் பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் நோயுற்ற பிற சமயச் சகோதரர்களை மருத்துவமனைகளில் சந்தித்து ஆறுதல் கூறுவதோடு, ஜெபம் செய்வதாகக் கூறி, கர்த்தர் இயேசுவைத் துதிக்குமாறு கூறுகின்றார்கள். தம் மதநம்பிக்கையையும் அவர்களின் உள்ளத்தில் திணித்து விடுகின்றார்கள். “நமக்கு நோய் குணமானால் சரி” என்ற எண்ணத்தில் நம் சகோதரர்களும் இறைமறுப்புக்குரிய வார்த்தைகளை மொழிந்துவிடுகின்றார்கள். இதனால் அவர்களின் ஈமான் பறிபோய்விடுகின்ற சூழ்நிலை உண்டாகிவிடுகின்றது. இதிலிருந்து அவர்களைக் காப்பது நம் கடமையல்லவா?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு யூதச் சிறுவனை, அவன் நோயுற்றிருந்தபோது நலம் விசாரிக்கச் சென்று, நலம் விசாரித்தபின், “ஏகத்துவக் கலிமாவை ஏற்றுக்கொள்” என்று கூறினார்கள். அப்போது அருகில் மனவேதனையுடன் நின்றுகொண்டிருந்த அவனுடைய தந்தை, “அபுல் காஸிமுக்கு வழிப்படு” என்று கூற, அச்சிறுவன் கலிமாவை மொழிந்தான் என்பது வரலாறு.
ஏனெனில், “பசி வந்தால் பத்தும் பறக்கும்” என்பதைப்போல், நோய் வந்தால், எவ்வளவு மனஉறுதி மிக்கவனும் நிலை குலைந்து போவான். அச்சமயத்தில் மனம் இளகிப்போயிருக்கும். எதைச் சொன்னாலும் அதை நோக்கியே மனம் செல்லும். அதைச் சரியாகப் புரிந்துகொண்ட கிறிஸ்தவத் தொண்டர்கள் அப்பணியைச் செவ்வனே செய்து வருகின்றார்கள். எனவே இனிவரும் காலங்களிலாவது மறந்துவிட்ட நபிவழியைத் தவறாது கடைப்பிடித்து, அந்தந்த மஹல்லாவாழ் மக்கள் தத்தம் பகுதியில் யார் யார் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து, அவர்களை உடனடியாக நலம் விசாரிக்க முனைந்தால் எதிர்காலத்தில் நம் சகோதர, சகோதரிகளின் ஈமானைக் காக்க அது உதவும் என்பது திண்ணம்.
=====================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக