சங்கர்-அமுதா இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அவன்
இராயபுரத்திலிருந்து பைக்கில் கல்லூரி வருவான். வரும் வழியில் திருவல்லிக்கேணியில்
அமுதாவை ஏற்றிக்கொண்டு நுங்கம்பாக்கத்திலுள்ள லயோலா கல்லூரிக்குச் செல்வான். படிக்கும்
காலத்திலேயே ஒருவரையொருவர் புரிந்துகொண்டு பழகியதால் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம்
நடந்தேறியது. ஈராண்டுகளுக்குப்பின் அவர்களுக்கு சுதா பிறந்தாள். சுதா துருதுருவென இருந்தாள்.
வாயைத் திறந்தால் மூட மாட்டாள். எதையும் எளிதில் புரிந்துகொள்வாள்.
சங்கர் ஒரு நிறுவனத்தில் கணக்கராகப் பணியாற்றுகிறான். அமுதா
பக்கத்து ஏரியாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறாள். சங்கரின்
பெற்றோர் அவனுடன்தான் இருக்கிறார்கள்.
இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். அமுதா தன் மாமனார்-மாமியாரிடம்
மரியாதையாக நடந்துகொண்டாள். அவர்களை அன்புடன் உபசரித்து அவர்களுக்குத் தேவையானதைச்
சரியாக நிறைவேற்றினாள். அவர்கள் கேட்பதற்கு முன்பே அவர்களுக்குத் தேவையான காபி, டீ எல்லாவற்றையும்
கொடுத்துவிடுவாள். அதனால் அவள்மீது அவர்களுக்கு எந்தக் கோபமும் இல்லை.
சுதாவுக்கு மூன்றரை வயது ஆகிவிட்டது. தான் வேலை செய்யும் பள்ளியிலேயே
அவளைச் சேர்த்துவிடலாம் என்று அமுதா கூறியதை சங்கர் ஏற்றுக்கொண்டான். இருவரின் வருமானம்
இருப்பதால் வீட்டு வாடகை கொடுப்பதிலும் பள்ளிக் கட்டணம் செலுத்துவதிலும் அவர்களுக்குச்
சிரமம் தெரியவில்லை.
சங்கரின் அம்மாவுக்குத் திடீரெனப் பக்கவாதம் ஏற்பட்டு, படுத்த படுக்கையானாள்.
அவளைக் கவனித்துக்கொள்ள எப்போதும் பக்கத்திலேயே ஓர் ஆள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதனால் அமுதாதான் எல்லாவற்றையும் செய்ய வேண்டியிருந்தது. தன் அம்மாவைப் போல் நினைத்து
மாமியாருக்குப் பணிவிடைகள் செய்துவந்தாள்.
காலப்போக்கில் இது அமுதாவுக்குச் சிரமமாக இருந்தது. பள்ளிக்குச்
சென்று அங்கு பாடம் நடத்திய களைப்போடு வந்து,
வீட்டு வேலைகளையும் கவனித்து, மாமியாரையும் கவனிக்க வேண்டியிருக்கிறதே
என்று மலைப்பாகக் கருதத் தொடங்கினாள். இது குறித்துத் தன் கணவன் வந்ததும் பேச வேண்டும்
என முடிவெடுத்தாள்.
அன்று இரவு,
"என்னங்க! ஒரே செரமமா இருக்குங்க. பள்ளிக்குப் போய் பாடம் நடத்திட்டு, வீட்டுக்கு வந்து
உணவு சமைத்து, வீட்டு வேலையெல்லாம்
பார்த்துட்டு, ஒங்க அம்மாவுக்கு
வேற பணிவிடை செய்வது ரொம்ப சுமையா இருக்குங்க. ஒங்க அம்மாவ மட்டும் கவனுச்சுக்குற மாதிரி
ஒரு வேலைக்காரி வச்சிட்டா எனக்குச் சிரமம் கொறையுமுங்க'' என்றாள்.
"சரி! நான் விரைவில் ஏற்பாடு பண்றேன்'' என்றான் சங்கர்.
வேலைக்காரி சேர்த்தும் எந்தப் பயனும் இல்லை. யாரும் சரியாக வேலை
செய்வதில்லை. பணத்துக்காகச் செய்பவளுக்கும் உறவாக இருந்து செய்பவளுக்கும் இடையே வித்தியாசம்
இல்லையா?
"அதெல்லாம் சரியா வராதுடா'' என்று அம்மா அவ்வப்போது குறைசொல்லி
வந்ததால், அவன் ஒரு முடிவுக்கு
வந்தான்.
"அமுதா! நீ இந்த வருஷத்தோட உன் வேலைய விட்டுடு. அம்மாவ
நல்லா கவனிச்சுக்க. வீட்டு வேலையப் பார்த்துட்டு, அம்மாவ கவனிச்சா போதும். நீ வேலைக்குப்
போயி சிரமப்பட வேண்டாம்''
என்று உறுதியாகக் கூறினான்.
"என்னங்க சொல்றீங்க? நானும் நீங்களும் வேலை செய்யுறதாலதான்
நம் பிள்ளைய நல்லாப் படிக்க வைக்க முடியிது. நாமும் நல்லபடியா குடும்பத்த நடத்துறோம்.
உங்களோட சம்பளத்தை மட்டும் வச்சு நாம் நல்லபடியா குடும்பம் நடத்த முடியாதுங்க. நமக்கு
ரொம்ப சிரமமாப் போயிடும். ஸ்கூல் பீஸ் கட்டணும். வீட்டு வாடகை கொடுக்கணும். அதனால வேண்டாங்க.
ஒங்க முடிவ மாத்திக்கங்க''
என்றாள்.
"இல்ல அமுதா! எனக்கு அம்மாதான் முக்கியம். நீ சம்பாதிக்கிற
பணம் தேவையில்ல. என்னோட சம்பளத்துல குடும்பம் நடத்திக்கலாம். நீ வேலைய விட்டுடு'' என்றான் சங்கர்
உறுதியாக.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. சங்கர் தன் அம்மாவுக்காக
அமுதாவை வேலையை விடுமாறு சொல்லிக்கொண்டே இருந்தான். அவள் எதிர்த்துப் பேசிக்கொண்டே
இருந்தாள். தன்னுடைய வருமானம் இல்லையென்றால் குடும்பம் நடத்துவதும் பிள்ளையை நன்றாகப்
படிக்க வைப்பதும் இயலாமல் போய்விடும் என்று எண்ணினாள். எனவே அவள் தொடர்ந்து தன் கணவனிடம்
எதிர்வாதம் செய்துகொண்டே இருந்தாள்.
இப்போது தம்பதியருக்கிடையே விரிசல் ஏற்பட்டுவிட்டது. சில நாள்களாக இருவருக்குமிடையே பேச்சு வார்த்தை
இல்லை. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் எதிரும்புதிருமாக இருந்துவந்தனர். இருப்பினும்
அவள் வேலைக்குப் போவதை நிறுத்தவில்லை. மாமியாருக்குப் பணிவிடை செய்வதைக் கொஞ்சம் கொஞ்சமாகக்
குறைத்துக்கொண்டாள். இது சங்கருக்குக் கோபத்தைத் தூண்டியது.
ஒரு நாள் தன் அம்மா அவனிடம் தன் மருமகள் பற்றிக் குறைபேசினாள்.
"டாய்லெட்டுக்குக் கூட்டிச் செல்ல ஆள் இல்லாமல் நான் தவிக்கிறேன்டா'' என்று அழுது
புலம்பினாள். அது சங்கரின் மனதைக் கரையச் செய்தது. அதேநேரத்தில் அது தன் மனைவிமீது
கோபத்தைத் தூண்டியது.
"ஏய்! அமுதா,
நீ ஒன்னோட மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கே? ஒழுங்கா நீ வேலைய
விட்டுட்டு, என் அம்மாவுக்கு ஒத்தாசையா இருக்குறதா இருந்தா இங்கெ இரு. இல்லைன்னா
நீ ஒன்னோட அம்மா வீட்டுக்குக் கௌம்பு''
என்று கடுமையாகப் பேசிவிட்டான்.
இது அமுதாவின் மனதை வெகுவாகக் காயப்படுத்திவிட்டது. காதலித்துக்
கல்யாணம் செய்துகொண்ட இவரே என்னைப் புரிந்துகொள்ளாமல் இப்படிக் கடுமையாகப் பேசிவிட்டாரே. இனி எனக்கு இந்த வாழ்க்கையே தேவையில்லை. என்னால்
தனியாக வாழ முடியும். நான் என் சம்பாத்தியத்தில் என் பிள்ளையை நன்றாகப் படிக்க வைப்பேன்
என்று மனதில் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு மறுநாள் தன் அம்மா வீட்டிற்குப் புறப்பட்டுவிட்டாள்.
இதோ அவள் தன்னோட தாய் வீட்டிற்கு வந்து ஈராண்டுகள் ஓடிவிட்டன.
அமுதாவின் தாய் வீட்டில் அவளுடைய அம்மாவும்,
அவளின் அண்ணன்-அண்ணியும் இருந்தனர். அவர்களோடுதான் அவள் தன்
பிள்ளையையும் வைத்துக்கொண்டு நாள்களைக் கழித்து வருகிறாள்.
சங்கர் தன் மகளைப் பார்ப்பதற்காக அவ்வப்போது வந்து சென்றான்.
இப்போது சுதா நன்றாக வளர்ந்து விட்டாள்;
நன்றாகப் பேசுகிறாள்;
அறிவு முதிர்ச்சியோடு நடந்துகொள்கிறாள்; அவ்வப்போது வந்து
சந்திக்கும் அப்பாவோடு சேர்ந்து ஊர் சுற்றுகிறாள்; தான் விரும்பியதை அப்பாவிடம் கேட்டு
வாங்கிக்கொள்கிறாள்.
அப்பாவை விட்டுப் பிரிந்தால், அவர் மீண்டும் எப்போது வருவார் என்ற
ஏக்கத்தில் இருந்தாள். அமுதாவோ தன் மகளோடு
அன்பாகக்கூடப் பேச முடியாத நிலையில் மனச்சுமையுடனும் மன இறுக்கத்தோடும் இருந்தாள்.
வேலைக்குப் போய் சம்பாதித்தும் நிம்மதி இல்லாமல் நாள்களைக் கழித்து வந்தாள்.
அம்மா வீட்டிலும் எவ்வளவு காலம்தான் வெட்டியாய்ப் பொழுதைக் கழிப்பது? சாடை மாடையாக
அக்கம் பக்கத்தினர் பேசுவதைக் கேட்டாள். காலப்போக்கில் காது கொடுத்துக் கேட்க முடியாத
அளவுக்கு அவர்களின் பேச்சு அவள் மனதைக் காயப்படுத்திவிட்டது. இதனால் மனமுடைந்தாள்.
ஒரு நாள் சுதாவைப் பார்க்க சங்கர் வந்தான். அப்போது அவள், "அப்பா! நான்
எப்போதும் ஒங்களோட இருக்க முடியாதா?
ஏன் மாதம் ஒரு தடவ வந்து என்னைப் பாக்குறீங்க? அம்மாவோட நீங்க
பேச மாட்டீங்களா?''
என்றாள்.
"சுதா கண்ணு! நானும் ஒங்க அம்மாவும் பிரிஞ்சுட்டோம். அதனாலதான்
நாங்க ரெண்டுபேரும் ஒருவருக்கொருவர் பேசாம இருக்கோம்'' என்றான்.
"நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர மாட்டீங்களா? எல்லாரும் சேர்ந்து
ஒண்ணா இருக்கலாம்ப்பா. எனக்கு ரொம்ப ஆசையா இருக்குப்பா'' என்று கெஞ்சும்
குரலில் கொஞ்சினாள்.
"அப்படின்னா,
நீ இதப் பத்தி உன் அம்மாவிடம் பேசிப்பாரு. அவர் சம்மதம் என்றால்
எனக்குச் சம்மதம்தான்''
என்றான்.
சுதா தன் அம்மாவிடம் மனம்விட்டுப் பேசினாள். தன் ஆசையைத் தன்
அம்மாவிடம் எடுத்துச் சொன்னாள். "அம்மா! நீயும் அப்பாவும் ஒண்ணா சேருங்கம்மா.
அப்பாவோட பேசும்மா. நாம் எல்லோரும் ஒண்ணா ஒரே வீட்ல இருப்போம்'' என்று கெஞ்சினாள்.
"அவரோடு என்னால வாழ முடியாது. அவர் என்னோட உணர்வுகளைப்
புரிஞ்சுக்கவே இல்ல. அவருக்கு என்மேல அன்பே இல்ல. அவரெ பார்த்தாலே எனக்குப் பிடிக்கல.
அவரெப் பத்தி என்னிடம் இனிமே பேசாதே!''
என்று கோபமாகக் கத்தினாள்.
அம்மாவின் கோபத்தைக் கண்டு சுதா பயந்துபோய்விட்டாள். இருந்தாலும்
அம்மா-அப்பா இருவரையும் ஒண்ணா சேர்க்க வேண்டுமென உறுதிகொண்டாள். அதற்கு என்ன செய்யலாம்
என்று யோசிக்கத் தொடங்கினாள். அன்றாடம் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு, குடும்ப உறவுகளை
எவ்வாறு வெட்டுவது,
ஒட்டுவது என்பதெல்லாம் தெரிந்திருப்பதில் வியப்பில்லை.
பிள்ளைகளுக்குப்
பாடநூல்களைவிடப் படக்காட்சிகள்தாம் மனதில் பசையாக ஒட்டிக்கொள்கின்றன. அதேபோலவே சுதாவின்
மனதிலும் பல்வேறு காட்சிகள் பதிவாகியிருந்தன. தன் பாட்டியோடு ஒன்றாக அமர்ந்து தொலைக்காட்சித்
தொடர்களைப் பார்த்துக்கொண்டே தன் அம்மா-அப்பா பற்றி யோசித்துக்கொண்டிருந்த அவளுக்குத்
திடீரென ஒரு யோசனை தோன்றியது.
அம்மா தன்னோட அப்பாவோடு ஒன்றாகச் சேர்கின்ற வரை தான் அவளிடம் பேசப்போவதில்லை என்று முடிவெடுத்தாள். அன்று முதல்
சுதா தன் அம்மாவிடம் பேசாமல் இருந்துவந்தாள்.
அது மட்டுமில்லாமல் அவள் பேச்சுக்கு முரணாகச் செயல்படத் தொடங்கினாள். இது அமுதாவின்
மனதை மிகவும் வருத்தியது.
கணவனும் பிரிந்துவிட்டான்; பெற்றெடுத்த பிள்ளையும் தன்னோடு பேசுவதில்லை; எதற்காக வாழணும்
என்ற எண்ணமெல்லாம் வந்து சென்றது;
தனித்து விடப்பட்டவளைப்போல் ஆகிவிட்டாள்; வாழ்க்கையே அவளுக்கு நெருக்கடியாகிவிட்டது; உலகமே இருட்டானதைப்
போன்று உணர்ந்தாள்.
மகளின் போக்கு நாளுக்கு நாள் கடுமையானது. நன்றாகச் சாப்பிடுவதில்லை; நன்றாகப் படிப்பதில்லை; யாருடனும் ஒழுங்காகப்
பேசுவதில்லை. இப்படியே போனால் அவள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுவாள். அவள் மனதில்
தன்னைப் பற்றிய தவறான பிம்பம் பதிவாகிவிடுமே என்று அஞ்சினாள்.
மனவேதனையுடன் வேலைக்குச் சென்று வந்து வீட்டினுள் நுழைந்தபோது, தன் அண்ணி அம்மாவிடம்
மிகக் கடுமையாக நடந்துகொண்டதைக் கண்ட அவள் பதறினாள். "ஏங்க அண்ணி, அம்மாவிடம் இப்டி
கடுமையா நடந்துக்கிறீங்க?
அவங்க காபிதானே கேட்டாங்க? அதுக்குப்போயி இப்டிச் சத்தமாக பேசுறீங்களே? அவங்களே உடம்பு சரியில்லாம இருக்காங்க? அவங்களிடம் இவ்வளவு
கடுமையா நடந்துக்கலாமா?''
என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.
"அவங்க,
அப்பப்ப காபி,
சுடுதண்ணி எல்லாம் கேட்டுட்டே இருக்காங்க. நானும் கொடுத்துட்டே
இருக்கேன். இன்னைக்குக் கொஞ்சம் லேட்டாயிடுச்சு. அதுக்குப்போயி ரொம்ப சத்தம் போட்டா
சும்மாவா இருப்பாங்க?
இவ்வளவு செய்யிற என்மீது அவங்களுக்கு ஒரு நன்றி உணர்வு இருக்க
வேண்டாமா?'' என்று அண்ணி கோபத்துடன் கேட்டாள்.
"சரி! அதுக்காக இவ்வளவு சத்தமாவா பேசுவீங்க? அவங்களுக்கு
உடம்பு சரியில்லைதானே?
அவங்களிடம் கொஞ்சம் கரிசனமா நடந்துக்கக் கூடாதா அண்ணி?'' என்றாள் அமுதா.
"ம்... கரிசனத்தப் பத்தி நீ சொல்ல வந்துட்டியாக்கும்? நீயே ஒன்னோட
மாமியாவ ஒழுங்கா கவனிச்சுக்காமத்தானே புருஷன் வீட்ட விட்டு வந்தே? நீ ஒன்னோட மாமியா
மேல கரிசனம் காட்டாம, நான் மட்டும் என்னோட மாமியா மேல கரிசனம் காட்டணுமாக்கும்? முதல்ல நீ இங்கிருந்து
ஒன்னோட புருஷன் வீட்டுக்குக் கௌம்பிப் போயி,
ஒன்னோட மாமியாவ ஒழுங்கா கவனிச்சுக்க. பிறகு வந்து நீ அறிவுரை
சொல்லு'' என்று காரசாரமாகப்
பேசினாள்.
அண்ணியின் பேச்சு அமுதாவின் மனதைத் தாக்கியது. பதிலேதும் பேச
முடியாத ஊமையாய் நின்றாள்.
தன்னுடைய அவசரப் புத்தியால், கணவனைப் பிரிந்து, வாழ்க்கையை இழந்து, எல்லோரிடமும்
பேச்சு வாங்க வேண்டியுள்ளதே என மனம் வெதும்பினாள். கணவனின் சொற்படி கேட்டு, நிம்மதியாக வாழ்ந்திருக்கலாமே
என்று எண்ணினாள்.
அம்மா அங்கிருந்து விலகிச் சென்றதும், அத்தையைப் பார்த்துப்
புன்முறுவல் பூத்தாள் சுதா. தான் சொன்ன மாதிரி தன் அம்மாவிடம் அத்தை பேசியதற்காகப்
புன்னகை மூலம் அவள் நன்றி தெரிவித்தாள். அம்மாவின் மனதை மாற்றுவதற்காக சுதா தன் அத்தையிடம்
அவ்வாறு பேசுமாறு அவள் கேட்டுக்கொண்டிருந்தாள்.
இரவு முழுக்க அமுதா யோசனையில் மூழ்கினாள். தூக்கம் வராமல் இப்படியும்
அப்படியும் புரண்டு புரண்டு படுத்தாள். என்னதான் சிரமமானாலும் கணவனோடு சேர்ந்து வாழ்வதே
தனக்கு மதிப்பைத் தரும் என்பதை உணர்ந்தாள். தீர்க்கமான முடிவு மனதுக்குள் தோன்றியதை
எண்ணி மகிழ்ந்து,
அந்த மகிழ்ச்சியில் உறங்கிவிட்டாள்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. காலை எட்டு மணி. சுதா தூக்கத்திலிருந்து
விழித்தெழுவதை எதிர்பார்த்திருந்தாள். அவள் எழுந்ததும், அவளிடம் சென்று, "சுதா! அம்மா
ஒரு குட் நியூஸ் சொல்லப் போறேன். நானும் ஒங்க அப்பாவும் ஒண்ணா சேரப்போறோம். நீ இப்பவே
ஒங்க அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லு''
என்றாள்.
அம்மாவின் மன மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த
சுதா, தன் அப்பாவுக்கு
போன் செய்து,
"அப்பா! நீங்க இப்பவே வந்து அம்மாவையும் என்னையும் நம்ம வீட்டுக்குக்
கூட்டிட்டுப் போங்கப்பா. சீக்கிரம் வாங்க!''
என்று சொல்- அழைப்பைத் துண்டித்தாள்.
சங்கர் வந்தவுடன்,
அமுதா பேசத் தொடங்கினாள். "என்னங்க! என்னெ மன்னிச்சுடுங்க.
இத்தனை நாள் ஒங்க அருமை தெரியாம நான் என்னோட வாழ்க்கைய வீணாக்கிட்டேன். நீங்க சொன்னமாதிரி நான் என்னோட வேலைய விட்டுறேன். ஒங்க அம்மாவ நல்லா
கவனிச்சுக்கிறேன். வீட்லயே டியூஷன் எடுத்துக்கிறேங்க. உங்களுக்குச் சம்மதமா?'' என்று பணிவோடு
கேட்டாள்.
"மன்னிப்பெல்லாம் எதுக்கு சுதா? நீ ஒன்னோட வேலைய
விட வேண்டாம். நீ உன் விருப்பம் போல வேலைக்குப் போகலாம். அம்மா இப்ப குணமாயிட்டு வர்றாங்க.
ஒரு பணிப்பெண் தினமும் வந்து கவனிச்சுட்டுப் போறா. அவமேல அம்மாவுக்கு ஒருவிதமான அன்பு
ஏற்பட்டுப் போச்சு. அதனால ஒனக்கு இனி சிரமம் இருக்காது. இத்தனெ வருஷமா நீ எவ்வளவோ சிரமப்பட்டுட்டே.
நீ சிரமப்பட்டது போதும். இனி நீ உன் விருப்பம்போல் நடந்துக்க அமுதா'' என்றான்.
சங்கர் பேசப்பேச அமுதாவின் கண்களில் கண்ணீர் கசிந்தது. அவனுடைய
கையை இறுகப் பற்றிக்கொண்டு தன் அன்பைப் பரிமாறினாள்.
அம்மாவைத் தன் அப்பாவோடு சேர்த்து வைத்த மகிழ்ச்சியில் சுதா
தன் அப்பாவின் செல்போனில் கார்ட்டூன் படம் பார்க்கத் தொடங்கினாள்.
-ஆலங்குடியார்
=========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக