சனி, 25 மார்ச், 2017

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்)

தாருல் உலூம் அஷ்ரபிய்யா அரபுக்கல்லூரி வெளியிட்ட பல்சுவை இதழில் எனது கட்டுரை. இதோ உங்கள் பார்வைக்கு ...

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்)

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
துணை ஆசிரியர்: இனிய திசைகள் மாதஇதழ்
இமாம், மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை-68

ஜூன் திங்கள் ஐந்தாம் நாள் (1896) கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயீல்  (ரஹ்) திருநெல்வேலியில் உள்ள பேட்டையில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் மியாகான் இராவுத்தர். திருவாங்கூர் அரசக் குடும்பத்தினருக்குத் துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முஸ்லிம் சமயத் தலைவர் (மவ்லவி) ஆகவும் இருந்தார். காயிதே மில்லத் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். அவரின் தாயாரே அரபு மொழியையும், திருக்குர்ஆனையும்  அவருக்குக் கற்றுக்கொடுத்தார். இவர் மனைவியின் பெயர் ஜமால் கமீதாபீவி. இவரின் ஒரே மகன் ஜமால் முகம்மது மியாகான் ஆவார். 

ஒரு தமிழனாக, ஒரு முஸ்லிமாக, ஓர் இந்தியனாக, ஒரு தலைவனாக, மனிதநேயம் உள்ள மாந்தராக எப்படி வாழ வேண்டும் என்ற இலக்கணங்களைத் தமக்குத் தாமே வகுத்துக்கொண்டு, அந்த இலக்கணங்களை விட்டு விலகாத இலக்கியமாகத் தாமே வாழ்ந்துகாட்டிய சிறப்பிற்குரியவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள்.

பிரிட்டிஷ் இந்தியா

தமது பி.ஏ. பொதுத்தேர்வை எழுதாமல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினார். இந்தியாவில் முஸ்லிம்களுக்காக 1906-இல் நவாப் சலீம் முல்லாகான் அகில இந்திய முஸ்லிம் லீக் என்ற கட்சியைத் தொடங்கினார். அவருக்குப் பின்னர் முகமது அலீ ஜின்னா, அதனை நடத்தி வந்தார், ஜின்னாவுக்கும் இந்தியப் பிரிவினைக்கும் முஸ்லிம் லீகின் பெரும் தலைவர்களுள் ஒன்றாக இருந்த இவர், ஆற்றிய உதவி அளப்பரிது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

சுதந்திர இந்தியா

1947இல் பாகிஸ்தான் உருவானபோது அங்கு புலம் பெயராமல் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இந்தியாவில் தங்கிவிட்டதால், அவர்களுக்காகக் கட்சிப் பெயரில் இருந்த அகிலஎன்பதை நீக்கிவிட்டு 1949இல் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்என்று மாற்றினார் காயிதே மில்லத். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள இராஜாஜி மண்டபத்தில் நடந்தது. காயிதே மில்லத் நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக இருந்தார்.

வகித்த பொறுப்புகள்

தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக, 1948ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகபழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக, டெல்லி மேல் சபை உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக இப்படிப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

இந்தியர்களைக் காத்த காவலர்

1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாள்களில், பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் அகில இந்திய முஸ்லிம் லீக் கவுன்சிலின் கடைசிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுத்த முடிவுகளின்படி கட்சி இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு ஒரு பொறுப்பாளரும், இந்தியாவுக்கு ஒரு பொறுப்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இரண்டு பொறுப்பாளர்களும் அவரவர் நாட்டில் மூன்று மாதங்களுக்குள்ளாகக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தான் பொறுப்பாளராக லியாகத் அலீகான் அவர்களும், இந்தியாவுக்கான பொறுப்பாளராக  கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இந்தியாவில் உள்ள நான்கு கோடி முஸ்லிம்களைப் பாதுகாக்கின்ற பெரும் பொறுப்பு ஒரு தமிழரின் தோள்களில், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் தோள்களில் அன்று கராச்சியில் சுமத்தப்பட்டது. காயிதே மில்லத் இந்திய முஸ்லிம்களைக் காப்பாற்றும் பணியை, அன்று, கராச்சியிலேயே தொடங்கிவிட்டார்.
ஆம், கூட்டம் முடிந்ததும் பாகிஸ்தான் பிரதமர் அனைவருக்கும் ஒரு விருந்தளித்தார். விருந்தின் முடிவில் லியாகத் அலீகான் காயிதே மில்லத்திடம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும், என்ன உதவி என்றாலும் நாங்கள் செய்யத் தயார் என்று கூறினார். அப்போது தெள்ளத் தெளிவாக, ஆணித்தரமாக காயிதே மில்லத் சொன்னார்:

நீங்கள் ஒரு நாட்டினர். நாங்கள் வேறு நாட்டினர். எங்கள் நாட்டு முஸ்லிம்களின் நன்மை தீமைகளை நாங்களே பார்த்துக் கொள்வோம். அதில் நீங்கள் தலையிட வேண்டியதில்லை. எங்கள் நாட்டு முஸ்லிம்களுக்கு நீங்கள் ஏதேனும் நன்மை செய்ய விரும்பினால், உங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்கு (இந்து, சீக்கியர், கிறிஸ்தவர்) ஒரு துயரமும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுபோதும்!எவ்வளவு ஆழமும், அர்த்தமும் பொதிந்த வேண்டுகோள் அது! இந்தியா திரும்பிய காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைக் கூட்டினார். அதில்தான் அவர் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தாய்மொழிப்பற்று மிக்கவர்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களுள் ஒருவராக 1948ஆம் ஆண்டு அவர் நியமிக்கப்பட்டார். 14.9.1949 அன்று அரசியல் நிர்ணய சபை கூடி இந்தியாவின் தேசிய மொழி பற்றி விவாதித்தபோது இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கும் தகுதி தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு என ஆணித்தரமாக எடுத்துரைத்தார். வரலாற்றின் பொன்னேட்டில் அன்று அவர் பொறித்துச் சென்ற வைர வரிகள் இவை:

ஒரு மொழி இந்திய மொழியாக மட்டும் இருந்தால் போதாது. அம்மொழி இந்நாட்டின் பழமையான மொழியாகவும் இருக்க வேண்டும். அத்தகைய மொழியையே இந்நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்து இங்கே முன்வைக்கப்பட்டது.

அக்கருத்தை ஏற்று அரசியல் நிர்ணய சபை தேசிய மொழி பற்றிய முடிவை எடுக்குமானால், ஓர் உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்பக் காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதைபொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது எனது தாய்மொழி என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன். அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எளிமை

காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் இறைவனுக்கு அஞ்சி, ஓர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். அவர் அரசியலில் இருந்தும் பிற அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார். அதற்குச் சான்றாக அவரது வாழ்க்கையைப் புரட்டிப் பார்ப்போம்.  
குரோம்பேட்டையில் ஒரு சிறிய வீடு. வந்தவர்களை அமரவைக்கப் போதுமான இடவசதி இருக்காது. குரோம்பேட்டையில் இருந்து மின்சாரத் தொடரியில் புறப்பட்டு, கடற்கரை இரயில் நிலையத்தில் இறங்கி, ரிக்ஷாவில் ஏறி மண்ணடி கட்சி அலுவலகம் செல்வார். அவருக்கு ஒரு மகிழுந்தை (கார்) வாங்கித் தரப் பலரும் முயன்றனர். அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு முறை மலேசியா சென்று ஓர் அன்பர் வீட்டில் தங்கியிருந்தபோது, அவர் காயிதே மில்லத்திடம் ஓர் உதவி கேட்டார். ஐயா என்னிடம் வெளிநாட்டு மகிழுந்து உள்ளது. அதைத் தங்கள் வீட்டில் நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். நான் சென்னை வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் இந்த உதவியைக் கோருகிறேன்என்று கேட்டார். அதற்கு என் வீட்டில் மகிழுந்தை நிறுத்துவதற்கான கொட்டகை இல்லையே என்று கூறினார் காயிதே மில்லத். மகிழுந்தை நிறுத்துவதற்கான கொட்டகையை நான் கட்டித் தருகிறேன்என்று தெரிவித்தார் மலேசிய அன்பர். நேரடியாக மகிழுந்தைப் பரிசளித்தால் காயிதே மில்லத் வாங்கிக்கொள்ள மறுத்துவிடுவார் என்பதற்காகவே அவர் சுற்றி வளைத்துப் பேசுகிறார் என்பதைப் புரிந்துகொண்ட காயிதே மில்லத் கண்டிப்புடன் அவரது வேண்டுகோளை நிராகரித்து விட்டார்.

கேரளாவில் ஒருமுறை அங்குள்ள கட்சிக்காரர்கள் ஒரு மகிழுந்தை வாங்கி, சாவியைக் காயிதே மில்லத் அவர்களின் கையிலேயே கொடுத்து விட்டார்கள். ஆனால் காயிதே மில்லத் அங்குள்ள இஸ்லாமியக் கல்லூரி ஒன்றின் பயன்பாட்டிற்கு அந்த மகிழுந்தை அங்கேயே கொடுத்துவிட்டார்.

இத்தகைய எளிமையான வாழ்க்கையை மேற்கொண்ட காயிதே மில்லத் அவர்களுக்குக் கிடைத்த மக்கள் பரிசு என்ன தெரியுமா? இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்கேற்ற காயிதே மில்லத் அவர்கள், ஓர் உலகச் சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். 1962, 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் கேரள மாநிலம் மஞ்சேரி தொகுதியில் நின்று தொடர்ந்து மூன்று முறை வென்று காட்டினார். தேர்தலின்போது ஒருமுறை கூட மஞ்சேரி தொகுதிக்குத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் செல்லவே இல்லை.

இறையச்சம்

ஒருமுறை கட்சி அலுவலகத்துக்கு வந்த காயிதே மில்லத் அவர்கள் அங்கிருந்த அலுவலகப் பொறுப்பாளரிடம் ஓர் உறையைக் கொடுத்து பையில் இருந்து இரண்டு அணாவையும் கொடுத்து உரிய தபால் தலைகளை ஒட்டி அஞ்சலில் சேர்த்து விடுமாறு கூறி இருக்கிறார். உடனே அலுவலகப் பொறுப்பாளர் இதனை அலுவலகச் செலவிலேயே அனுப்பலாமே எனக் கேட்டிருக்கிறார். அதற்குக் காயிதே மில்லத் அவர்கள், “இது என் சகோதரருக்கு எழுதுகின்ற கடிதம். எனவே அலுவலகப் பணத்தை இதற்குச் செலவழிக்கக் கூடாதுஎன்று சொல்லியிருக்கிறார்.  அலுவலகப் பொறுப்பாளர் உடனே, “தலைவரின் சகோதரரும் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்தாமே, எனவே கட்சிப் பணத்தைச் செலவு செய்வதில் என்ன தவறுஎனக் கேட்டிருக்கிறார். உடனே காயிதே மில்லத் அவர்கள், “இந்தக் கடிதத்தில் நான் கட்சி விஷயங்களை எழுதவில்லை. குடும்ப விஷயங்களை எழுதி இருக்கிறேன். எனவே கட்சிப் பணத்தை இதற்குச் செலவழிக்கக் கூடாது. நான் கொடுத்த இரண்டு அணாவில் அஞ்சல் தலைகளை வாங்கி, ஒட்டி அனுப்பி விடுங்கள்எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார்.

இதைப் படிக்கும்போது எனக்கு இரண்டாம் உமர் எனும் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை நெஞ்சில் நிழலாடுகிறது. அவர்கள் இரண்டு விளக்குகள் வைத்திருந்தார்கள்.  அலுவலகப் பணியில் ஈடுபடும்போது அலுவலகப் பணத்தில் வாங்கிய விளக்கைப் பற்றவைத்துக் கொள்வார்கள்.  பின்னர் தம்முடைய சொந்தப் பணியில் ஈடுபடும்போது தம் சொந்தப் பணத்தில் வாங்கிய விளக்கைப் பற்றவைத்துக் கொள்வார்கள். இது அவர்களின் இறையச்சத்துடன்கூடிய வாழ்க்கைக்குத் தக்க சான்றாக உள்ளது. இதுபோலவே  காயிதே மில்லத் அவர்களின் வாழ்வும் அமைந்திருந்தது என நினைக்கையில் உள்ளம் நெகிழ்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் வந்த நான்கு கலீஃபாக்கள் வாழ்ந்து காட்டிய நேர்மையான எளிமையான வாழ்க்கையைத் தாமும் வாழ முயன்று வெற்றி கண்டவர் காயிதே மில்லத் அவர்கள்.

மறைவு

காயிதே மில்லத்முஹம்மது இஸ்மாயில் ஸாகிபுக்கு 1972 மார்ச் 25 ஆம் தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குடல் புண் நோய்க்காக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. 1972, ஏப்ரல் 5 நள்ளிரவு 1.15 மணிக்கு காயிதே மில்லத் இஸ்மாயில் ஸாகிப் (ரஹ்) மரணமடைந்தார். அவரது உடல் அன்று காலை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வசதியாக இராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்டது. திராவிடக் கழகத் தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் உட்படப் பல அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் புதுக்கல்லூரியில் உள்ள மஸ்ஜிதுக்குக் காயிதே மில்லத்தின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ஜனாஸாத் தொழுகை நடைபெற்றது. பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் போனவர்கள் எண்ணிக்கை இலட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. திருவல்லிக்கேணியில் உள்ள வாலாஜா மஸ்ஜிதில் காயிதே மில்லத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நினைவுச் சின்னங்கள்

காயிதே மில்லத்தை நினைவுகூருமுகமாக, அவரது மறைவுக்குப்பின் தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு காயிதே மில்லத் நாகப்பட்டினம் மாவட்டம்என்று பெயர் சூட்டியது. பின்னர் 1996இல் அரசு பேருந்துக் கழகங்கள், மாவட்டங்களிலிருந்து தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட பின்னர் அதன் பெயர் நாகப்பட்டினம் மாவட்டம் என்று மாற்றப்பட்டு விட்டது. 2003ஆம் ஆண்டு அவர் நினைவாக தமிழக அரசு ஒரு மணிமண்டபத்தைக் கட்டியுள்ளது. காயிதே மில்லத்தின் பெயர் தற்போது தமிழகத்தில் பல கல்வி நிறுவனங்களுக்குச் சூட்டப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள காயிதே மில்லத் அரசினர் பெண்கள் கல்லூரி, சென்னை-மேடவாக்கத்தில் அமைந்துள்ள காயிதே மில்லத் கலைக் கல்லூரி ஆகியவை அவற்றுள் சில. காயிதே மில்லத் நினைவாக சென்னையில் காயிதே மில்லத் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, காயிதே மில்லத் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் காயிதே மில்லத்தை நினைவூட்டும் நினைவுச் சின்னங்களாகத் திகழ்கின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையைப் பின்பற்றி, மிக எளிமையாக வாழ்ந்து காட்டிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் போன்ற தலைசிறந்த, இறையச்சமுடைய இன்னொரு தலைவர் இச்சமுதாயத்திற்குக் கிடைப்பது அரிதிலும் அரிதாகும். அவர் சென்ற அரசியல் பாதையில் இன்றைய தலைவர்கள் செல்ல நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
=============








கருத்துகள் இல்லை: