ஞாயிறு, 13 ஜனவரி, 2019

இஸ்லாமிய வங்கியியல்


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

முஸ்லிம்கள் தம் உணவை ஆகுமான (ஹலாலான) உணவாகச் சாப்பிட வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்திவருகின்றனர். குறிப்பாக, மாமிசம் சாப்பிடுவதில் முன்னெச்சரிக்கையோடு செயல்படுகின்றார்கள். ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி வாங்கும்போது அதை முஸ்லிம்தான் அறுத்தாரா என்பதை உறுதி செய்துகொண்டு வாங்குகின்றார்கள். உணவகங்களில் இறைச்சி சாப்பிட நேர்ந்தால், சாப்பிடுமுன்னர் அதை முஸ்லிம்தான் அறுத்தாரா என்பதை உறுதிசெய்துகொண்டு சாப்பிடுகின்றார்கள்.

ஆனால் அவர்கள் தாம் ஈட்டுகின்ற  பொருளாதாரம் ஆகுமானதா இல்லையா என்று சிந்திப்பதில்லை. அதற்கான வழிமுறைகளும் அவர்களுக்கு அவ்வளவாகத்  தெரிவதில்லை. சிலர்  தெரிந்தே தவறு செய்கின்றார்கள். வட்டி கூடாதென்று தெரிந்தே, அதைக் கண்மூடித்தனமாகச் செய்துவருகின்றார்கள். இதற்கான காரணம், இஸ்லாமியப் பொருளாதாரம் குறித்த போதிய விழிப்புணர்வின்மையே ஆகும். இஸ்லாமியப் பொருளாதாரம் முற்றிலும் வேறுபட்டது. அறவே வட்டி இல்லாதது. எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடியது. எல்லோரையும் வாழவைக்கக்கூடியது என்பதை பிற சமய மக்களே பாராட்டுகின்றார்கள். 

முஸ்லிம்கள் அனைவரையும் வட்டி எனும் தீமைக்குள் கொண்டுவர யூதச் சமுதாயம் சூழ்ச்சி செய்தது; செய்துகொண்டிருக்கிறது. அதன் விளைவாக, நம்முள் பலர் தம்மை அறியாமலே அதனுள் நுழைந்துவிட்டார்கள். அது வட்டி என்று தெரியாமல் அதை வாங்கிக்கொண்டிருக்கின்றார்கள். அல்லது கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். வேறு சிலர் காலத்திற்கேற்ற மார்க்கத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வட்டி சார்ந்த சில நடைமுறைச் செயல்பாடுகளைச் செல்லத்தக்கனவாக அறிவித்துள்ளனர். அது சமுதாய மக்களுக்குச் சாதகமாகப் போய்விட்டதால் உறுத்தல் இல்லாமல் உளப்பூர்வமாக அது சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.

 வங்கி என்பதே ஒரு வட்டி நிறுவனம்தான். அங்கு முதலீட்டாளர்களுக்கு வட்டி கொடுப்பதும் கடன் பெற்றோரிடமிருந்து வட்டி வாங்குவதும்தான் அதன் முக்கியத்தொழில். எனினும் காலத்தின் கட்டாயத்தையும் அரசாங்க நிர்ப்பந்தத்தையும் கருதியே வங்கிக் கணக்கைத் தொடங்குகிறோம். அதாவது ஒருவருக்கு வங்கிக்கணக்கு இருந்தால்தான் வரைவோலை, காசோலை உள்ளிட்டவற்றை மாற்றுவது எளிதாகும். அது மட்டுமின்றி ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் நாம் பிறருக்குக் கொடுத்தால், அதைப் பணமாகக் கொடுக்கக்கூடாது. காசோலையாகவோ, வரைவோலையாகவோதான் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இது போன்ற காரணங்களுக்காக வங்கியில் கணக்கு வைத்துக்கொள்வது கூடும். ஆனால் அங்கே கிடைக்கின்ற வட்டியை நாம் உண்ணக் கூடாது என்ற சட்டம் உள்ளது. எனினும் அது இஸ்லாமிய வங்கியாக இருந்துவிட்டால் தடைசெய்யப்பட்ட வட்டி எனும் பாவத்திலிருந்து நாம் முற்றிலும் விலகிக்கொள்ளலாம் அல்லவா?

 இஸ்லாமிய வங்கி முறை எப்படி இயங்குகிறது என்றால் பொதுமக்கள் முதலீடு செய்கின்ற பணம் அனைத்தும் கூட்டாண்மை வணிகம் என்ற அடிப்படையில் பெறப்பட்டு, வங்கி ஈடுபடுகின்ற வியாபாரத்தில் கிடைக்கின்ற இலாபத்தொகை பொதுமக்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்படுகிறது. எனவே இது வட்டியாகாமல் இலாபத்தில் கிடைக்கின்ற பங்காகக் கருதப்படுகிறது. இந்தப் பங்கின் அளவு குறிப்பிட்ட அளவாக இருக்காது. வங்கிக்கு இலாபம் எவ்வளவு கிடைக்கிறதோ அதைப் பொறுத்து முதலீட்டாளர்களுடைய பங்கின் அளவு கூடலாம், குறையலாம் என்ற நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருப்பதால் யாருக்கும் எந்தச் சிரமமும் இல்லை. ஓராண்டு குறைவாகக் கிடைக்கின்ற இலாபத் தொகை அடுத்த ஆண்டு அதைவிடக் கூடுதலாகக் கிடைக்கலாம். ஆக இஸ்லாமிய வங்கி முறை நம்மை வட்டியிலிருந்து காப்பதோடு பயனையும் நல்குகிறது. அப்படியிருக்கும்போது நாம் ஏன் அதை இன்னும் பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்கின்றோம்?

இஸ்லாமிய வங்கி எங்கே உள்ளது? இருந்தால்தானே அதில் நாங்கள் கணக்குத் தொடங்க முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். இஸ்லாமிய வங்கி முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் இன்று நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்திய நாட்டில் அதற்கு இதுவரை அனுமதியளிக்கப்படவில்லை. ஆனால் இஸ்லாமியச் சிந்தனையாளர்களின் கூட்டு முயற்சியின் பயனாக, இஸ்லாமியக் கூட்டுறவு வங்கி தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் 31 இடங்களில் இந்தக் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னையில் திருவல்லிக்கேணியில் ஒரு கிளை இயங்கிவருகிறது. அங்கு சென்று நாம் வங்கிக் கணக்கைத் தொடங்கலாம். (தொடர்புக்கு: 044-2855 5256)


 இந்த இஸ்லாமிய வங்கி முறை ஃபிக்ஹ் சட்ட முறைப்படி எந்த வகையைச் சார்ந்தது என்று ஆய்வு மேற்கொள்ளும்போது, இது முளாரபா எனும் ஒரு வகை வியாபாரத்தின் அடிப்படையில்தான் செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியலாம். ஆம்! இதில் முதலாளி ஒருவர் தம் பணத்தை ஒப்பந்த அடிப்படையில் முதலீடு செய்வார். ஆனால் அவர் அந்த வியாபாரத்தில் ஈடுபடமாட்டார். பணத்தை வாங்கியவர் ஒப்பந்தத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட தொழிலில் அதை முதலீடு செய்து வியாபாரம் செய்து சம்பாதிப்பார். உழைப்பதற்கான ஊதியத்தை எடுத்துக்கொண்டு, இலாபத் தொகையை ஒப்பந்த அடிப்படையில் பங்கு பிரித்து, முதலாளிக்கும் கொடுத்துவிட்டு, தாமும் வைத்துக்கொள்வார். இதுவே முளாரபா ஆகும்.

முதலீடு செய்வது தனிநபராக இருப்பது ஒரு வகை. பலரும் முதலீடு செய்து சிலர் வியாபாரம் செய்து பொருளீட்டுவது மற்றொரு வகை. அந்த வகையில்தான் இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. அதாவது வங்கியில் பணம் செலுத்துவோர் அனைவரும் முதலீட்டாளர்களே. அவர்கள்  செலுத்தும் தொகை அனைத்தும் வியாபாரத்தில் முதலீடு செய்யப்பட்டு, அதிலிருந்து கிடைக்கின்ற இலாபத் தொகை, ஆண்டுக்கொரு முறை, முதலீட்டாளர்கள் அனைவருக்கும் பிரித்து வழங்கப்படுகிறது. எனவே வணிகத்தில் கிடைக்கின்ற இலாபத் தொகைதான் வங்கிக் கணக்காளர்களுக்கு வழங்கப்படுகிறதே தவிர வட்டி கிடையாது. ஏனென்றால் "அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி, வட்டியைத் தடை செய்துள்ளான்.'' (2: 275) இந்த முளாரபாவில் இலாபம் என்பது குறிப்பிட்ட தொகையாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை செல்லாது. இலாபம் கூடலாம், குறையலாம் என்ற நிபந்தனையை ஏற்றுக்கொண்டால்தான் இந்த ஒப்பந்தமே செல்லும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆக வட்டியிலிருந்து விலகி, நன்மையும் இலாபமும் கிடைக்கின்ற மாற்று வழியை நோக்கி நாம் ஏன் இன்னும் செல்லாமல் இருக்கிறோம்? இறைவன் அருளால் இனி வரும் காலங்களிலாவது நாமும் நம்மைச் சுற்றியுள்ளோரும் வட்டியிலிருந்து முற்றிலும் விலகி வாழ முனைவோம்! 
===========================================





கருத்துகள் இல்லை: