செவ்வாய், 8 ஜனவரி, 2019

நபிகளார் நவின்ற மருத்துவம்



  -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மனிதனின் ஆரோக்கியம்தான் அவனது மிகப்பெரும் சொத்து. ஆரோக்கியமாக உள்ள மனிதனே மனச்சோர்வின்றி உழைக்க முடியும்; நினைத்த செயலை முடிக்க முடியும். அதனால்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தம் சிறிய தந்தை அப்பாஸ் (ரளி) அவர்களிடம், “தாங்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தைக் கேளுங்கள்என்று கூறினார்கள்.

மனிதனின் ஆரோக்கியத்தைக் கெடுத்து, நோயை ஏற்படுத்தி, அதன்மூலம் பணம் சம்பாதிக்கின்ற குயுக்தி கொண்ட மனிதர்கள் வாழும் காலமிது. மனிதர்கள் சாப்பிடும் உணவில் கலப்படம் செய்து, அளவுக்கதிகமான இரசாயனப் பொருள்களைக் கலந்து, உணவை நஞ்சாக்கி, அவற்றை விளம்பரப்படுத்தி உண்ணவைக்கின்றார்கள். விளம்பரத்தால் ஈர்க்கப்பட்ட நம் குழந்தைகள் அவற்றையே விரும்பிக் கேட்கின்றார்கள். நாமும் அவற்றின் தீங்குகள் தெரியாமல் வாங்கிக்கொடுத்துக்கொண்டிருக்கிறோம். மேலும் இரசாயன ஊசிகளைச் செலுத்தி வளர்க்கப்படுகின்ற கோழி இறைச்சி, மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள், பழங்கள் ஆகியவை மனித உடலுக்குக் கேடு விளைவிப்பவை. இவற்றையெல்லாம் அதிகமாக உற்பத்தி செய்து, சந்தையில் பரப்பிவைத்திருக்கிறார்கள். வேறு வழியின்றி நாம் அவற்றை வாங்கி உண்டுகொண்டிருக்கிறோம். 
இவையெல்லாம் நம் ஆரோக்கியத்திற்கு ஊறுவிளைவிப்பவை என்பதை நாம் எப்போது புரிந்துகொள்ளப் போகின்றோம்?

மனிதனின் இரத்த அழுத்தம் இவ்வளவுதான் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தாலும் அதற்குக் கீழ் குறைந்தாலும் அது நோய். சர்க்கரை அளவு இவ்வளவுதான் இருக்க வேண்டும்.  அதற்கு மேல் இருந்தாலும் அதற்குக் கீழ் குறைந்தாலும் அது நோய்- என்றெல்லாம் தவறான பரப்புரை செய்து மக்களைப் பதற்றப்பட வைத்து, நோயாளியாக்கி, பணம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் மாற்று வழி என்ன?  நபிவழி மருத்துவத்தை நோக்கிச் செல்வதுதான் ஒரே தீர்வு.
இறைவனைத் தொழுதல், நோன்பு நோற்றல் உள்ளிட்ட வழிபாடுகளுக்கு மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டவில்லை. மாறாக மனித வாழ்வின் எல்லாத் தேவைகளுக்கும் அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். அந்த வகையில் மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகளையும் ஆரோக்கியத்தைப் பேண வேண்டிய அவசியத்தையும் நோய் ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை முறைகளையும் மருந்துகளையும் சொல்லிச் சென்றுள்ளார்கள். அவற்றின்பால் நாம் இதுவரை கவனம் செலுத்தாமலே காலம் கடத்திவிட்டோம். அதனால்தான் இன்று மருத்துவர்களின் மாயவலையில் சிக்குண்டு தவிக்கிறோம். ஒவ்வொருவரும் மருந்துச் செலவுக்காகவே குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் ஒதுக்க வேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
 
ஒரு நோய் ஏற்பட்டால், அதற்கான காரணத்தைக் கண்டறிந்து நாமே அதைத் தீர்த்துக்கொள்வதற்கான வழிமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கும்போது, நாம் அதைக் கருத்தில்கொள்ளாமல், உடனடியாக ஆங்கில மருத்துவத்தை நாடி, மருத்துவரிடம் சென்று மாத்திரையை வாங்கிப் போட்டுக்கொள்கிறோம். இது சரியான முறையா என்பதை நாம் யோசிக்க வேண்டும்.   
    
அல்லாஹ் அறிவித்துக்கொடுத்த மருத்துவத் தகவல்களையும் மனித சமுதாயத்திற்குப் போதித்துச் சென்றுள்ளார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். மனிதப் பயன்பாட்டிற்காகவே யாவற்றையும் படைத்துள்ள உயர்ந்தோன் அல்லாஹ் அவனுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக்கொள்வதற்கான மருந்துகளையும் மூலிகைச் செடிகளையும் அவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் நபி (ஸல்) அவர்கள் மூலம் கற்பித்தான்.
மனநோய்களைக் களைந்து புத்துணர்வூட்ட மகத்தான வேதமான திருக்குர்ஆனையும் உடல் தொடர்பான நோய்களைத் தீர்த்துக்கொள்ள பல்வேறு மூலிகைகளையும் உயர்ந்தோன் அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு ஓர் அருட்கொடையாகவே வழங்கியுள்ளான்.  அவன் படைத்த ஒவ்வொரு பொருளும் பல்வேறு பயன்களைக் கொண்டுள்ளது. அதையே நபி (ஸல்) அவர்களின் மூலம் மனித சமுதாயத்திற்குத் தெளிவுபடுத்தியுள்ளான். 

நபி (ஸல்) அவர்களின் வாயிலாகச் செவியுற்றுப் பயன்பெற்ற அவர்கள்தம் உற்ற தோழர்கள்மூலம் அது விரிவடைந்து அதன்பின் மருத்துவர்களின் அனுபவங்கள் மூலம் அப்பொருள்களின் மருத்துவப் பயன்பாடுகள் வளர்ச்சியடைந்துள்ளன. ஆகவே நபி (ஸல்) அவர்கள் கூறியதை ஏற்றுக்கொண்ட மருத்துவர்கள் தம் அனுபவங்களையும் சேர்த்தே கூறியுள்ளார்கள். அதைப் பின்பற்றினால் ஆரோக்கியம் நம் கையில். 
  
நபிகளார் கூறிய மருத்துவ முறைகள் மூவகையாக உள்ளன. 1. குறிப்பிட்ட நோய்க்கு அதற்குரிய மருந்தை உட்கொள்ளச் சொல்லுதல், 2. குறிப்பிட்ட பிரார்த்தனைகள் (துஆக்கள்) மூலம் நிவாரணம் பெறச்செய்தல், 3. தனித்தனிப் பொருள்களின் மருத்துவப் பயன்கள். சான்றாக வயிற்றுப்போக்கிற்குத் தேனை உட்கொள்ளச் சொன்னது, இடுப்புக் கீல்வாதத்திற்கு, காட்டு ஆட்டின் வாலிலுள்ள கொழுப்பை எடுத்து உருக்கி உண்ணச் சொன்னது, பேதிக்கு  மருந்தாக ஆவாரை இலையை உண்ணச் சொன்னது, விலா வலிக்கு வெண்கோஷ்டத்தையும் ஒலிவ எண்ணெய்யையும் மருந்தாகப் பயன்படுத்தச் சொன்னது, தலைவலி ஏற்பட்டால் மருதாணியைப் பற்றுப்போடச் சொன்னது, அடிநாக்கு அழற்சிக்கு இந்திய (கோஷ்ட)க் குச்சியைப் பயன்படுத்தச் சொன்னது, உளநோய்க்குப் பேரீச்சம் பழங்களை விதைகளோடு அரைத்து உண்ணச் சொன்னது முதலானவை.

இரண்டாவது, பிரார்த்தனைகள் மூலம் ஓதிப் பார்த்து நோய்களைக் குணப்படுத்தும் சிகிச்சை முறையை மனித சமுதாயத்திற்கு அனுமதித்து, அதைத் தெளிவாகக் கற்றுக்கொடுத்துள்ளார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். மனித உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கிற உயிரானது ஒருவிதமான காற்றைப் போன்றதாகும். அதற்கு இடையூறளிக்கும் விதத்தில் கெட்ட ஆவிகள் அதனுள் புகுந்துகொள்ளும்போது திருக்குர்ஆன் வசனங்களை ஓதி ஊதுவதன்மூலம் அதனைக் குணப்படுத்தலாம்.
நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து கிடைக்கப்பெற்ற துஆக்கள் மூலம் ஓதிப் பார்த்தல், திருக்குர்ஆன் வசனங்களைக் கொண்டு ஓதிப் பார்த்தல் ஆகிய இரண்டு வகை உள்ளன. இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்தக் குர்ஆனை நிவாரணமாகவும் அருளாகவும் இறக்கியுள்ளோம் (17: 82) என்று அல்லாஹ் கூறுகின்றான். 

இவ்வசனத்தின்படி திருக்குர்ஆனின் வசனங்கள் அனைத்தும் ஒவ்வொரு நோய்க்கு மருந்தாகத் திகழ்கின்றன என்பது தெளிவாகிறது.

அந்த அடிப்படையில்தான், ஒரு குழுவின் தலைவரைத் தேள் கொட்டிவிட்டபோது அல்ஃபாத்திஹாஎனும் அத்தியாயத்தை ஓதி  அவர்மீது ஊதியதன்மூலம் அவருக்கு அதிலிருந்து நிவாரணம் கிடைக்கச் செய்துள்ளார் ஒரு நபித்தோழர். 

பொதுவாக நபி (ஸல்) அவர்கள் துயில்கொள்ளுமுன், அல்ஃபலக், அந்நாஸ் ஆகிய இரண்டு அத்தியாயங்களையும் ஓதி, தம் கையில் ஊதி, அதைத் தம் உடல் முழுவதும் தடவிக்கொள்வார்கள். இவ்வாறு செய்வதன்மூலம் கெட்ட ஆவிகள் தீண்டாதிருத்தல், சூனியம் தாக்காதிருத்தல் உள்ளிட்ட  எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள்.

ஒவ்வொரு நோயும் வெவ்வேறு விதமானது. எனவேதான் அந்தந்தத் தருணங்களுக்கேற்ற துஆவை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். தேள்கடி, சின்னம்மை, பாம்புகடி, கொப்புளம், காயம், உடல்வலி, துன்பம், துயரம், துக்கம், தூக்கமின்மை, திடுக்கம் உள்ளிட்ட ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவிதமான பிரார்த்தனை உண்டு. அதை நன்கறிந்து, உறுதியான நம்பிக்கையோடு ஓதி ஊதினால் நோய்கள் குணமாகும் என்பது உண்மை. ஏனெனில் பிரார்த்தனைகள், திருக்குர்ஆன் வசனங்கள் ஆகியவற்றின் ஆற்றல் மகத்தானது. இவற்றை ஓதி ஊதும்போது மனித உடலுக்குள் ஊடுருவியுள்ள வலுவற்ற கெட்ட ஆவிகள் அகன்றுவிடுகின்றன. இதுதான் ஓதிப் பார்த்தலின் பயனும் சூட்சுமமும் ஆகும்.

பேரறிஞர் ஷம்சுத்தீன் முஹம்மது பின் அபீபக்ர் பின் கய்யிம் (ரஹ் - 691-751) எழுதியுள்ள அத்திப்புன் நபவிய்யுஎனும் அரபி நூலை நபிவழி மருத்துவம்எனும் தலைப்பில் நான் தமிழாக்கம் செய்துள்ளேன். நூல் தேவைப்படுவோர் என்னைத் தொடர்புகொள்ளலாம்: 94443 54429
==============================





கருத்துகள் இல்லை: