-டாக்டர் அப்துர் ரஹ்மான் அரீஃபீ
சிறப்புவாய்ந்த மக்களோடு நான் ஒரு கூட்டத்தில்
கலந்துகொண்டேன். அவர்களுள் ஒருவர் தம்மைத்தாமே தன்னிறைவாளராகக் கருதிக்கொண்டார். அவர்
பேசத் தொடங்கியபோது தம் பேச்சில், நான் ஒரு பணியாளரைக் கடந்துசென்றேன். அவர் என் கையைக் குலுக்கத்
தம் கையை நீட்டினார். நான் சற்றுநேரம் தயங்கினேன். ஆனால் பின்னர் நான் அவருடைய கையைக்
குலுக்கினேன் என்று கூறினார். பின்னர் மிகவும் பெருமையோடு அவர், நான் யாரிடமும் கை குலுக்குவதில்லை
என்று தெரிவித்தார். மாஷா அல்லாஹ்! நான் எல்லாரிடமும் கை குலுக்குவதில்லை என்று அவர்
கூறியது கவனிக்கத்தக்கது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பலவீனமான ஓர் அடிமைப்பெண் தம்மை வழியில்
சந்தித்து, தன் முதலாளியின் அநியாயத்தையும் தான்
செய்ய வேண்டிய வேலைப்பளுவையும் பற்றி முறையிட்டபோது, அப்பெண்ணுடன் சென்று அவளுடைய முதலாளியைப் பார்த்து அவள் சார்பாகப்
பேசினார்கள்.
யாரிடம் ஓர் அணுவளவு பெருமை இருக்கிறதோ
அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார் என்று அவர்கள்
அடிக்கடி சொல்வதுண்டு.
சகோதரரே, இன்னவர் மிகுந்த பெருமைக்காரர். அவர் தம்மைத்தாமே பெரியவராகக்
கருதிக்கொள்பவர் என்று மக்கள் சொல்வதை நாம் எத்தனையோ தடவை கேள்விப்பட்டிருக்கிறோம்.
அம்மக்கள் அவரை வெறுக்கின்றார்கள். அவருடைய
செயல்பாட்டைக் கண்டிக்கின்றார்கள்.
நீங்கள் ஏன் உங்களுடைய அண்டைவீட்டாரின்
உதவியை நாடுவதில்லை? என்று நீங்கள் யாரேனும் ஒருவரிடம் கேட்கலாம்.
அதற்கவர், அவர் மிகவும் பெருமைக்காரர். அவர் எங்களுடன்
முகங்கொடுத்துப் பேசக்கூட விரும்புவதில்லை என்று பதிலளிப்பார்.
பெருமைக்காரர்களாக இருந்துகொண்டு, மற்றவர்களிடம் பேசும்போதும் முகத்தைத்
தொங்கப்போட்டுக்கொள்பவர்கள் எவ்வளவு மோசமானவர்கள்! தன்னைத்தானே தன்னிறைவு பெற்றவனாகக்
கருதிக்கொண்டு எல்லைமீறுபவன் நிராகரிக்கப்பட்டவன் இல்லையா?
பிறரை ஏளனமாகப் பார்ப்பவன் நிலத்தில்
மகிழ்ச்சியாக நடக்கிறான். அவன் தொழிலாளர்களையும் பணியாள்களையும் ஏழைகளையும் கீழ்த்தரமாகப்
பார்க்கிறான். அவன் அவர்களிடம் பேசவும் அவர்களிடம் கைகுலுக்கவும் அவர்களுடன் உட்காரவும்
விரும்பாமல் பெருமைகொள்கிறான்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றிகொண்டு வெற்றியாளராக நுழைந்தபோது-அங்குதான் அவர்கள் திட்டப்பட்டார்கள்.
ஏளனம் செய்யப்பட்டார்கள்-எல்லாப் பாதைகளிலும் அமைதியாக நுழையத் தொடங்கினார்கள். நபியவர்களைப்
பைத்தியக்காரனே, மாயவித்தைக்காரனே, சூனியக்காரனே, பொய்யனே என்றெல்லாம் எத்தனை தடவை அந்தப்
பள்ளத்தாக்குகளில் மக்காவாசிகள் கூறியிருப்பார்கள். மக்காவை வெற்றிகொண்ட நாளில், அதிகாரம்கொண்ட தலைவராக அவர்களைக் கடந்து
சென்றார்கள். நபியவர்களை எம்மக்கள் ஏளனம் செய்தார்களோ அவர்களின் கண்முன்னே அல்லாஹ்
அம்மக்களைத் தாழ்த்திவிட்டான்.
மக்காவை வெற்றிகொண்டு நபியவர்கள் அதனுள்
நுழைந்தபோது அவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்? அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
சிவப்புத் தலைப்பாகை அணிந்துகொண்டு பயணம் செய்து தீதுவா எனும் இடத்தை அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் அடைந்தபோது, அவர்களின் ஊர்தி ஒட்டகத்தில் இருந்தவாறே
சற்று நேரம் நின்றார்கள். பின்னர் அவர்கள் பணிந்த நிலையில் தம் தலையைத் தாழ்த்தியவாறே, அல்லாஹ் தமக்குக் கொடுத்த வெற்றியைப்
பார்த்துக்கொண்டு, தம் தாடி தம்முடைய குதிரையின் சேணத்தைத்
தொடுமளவுக்கு இருந்த நிலையில் சென்றார்கள்.
அனஸ் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றிகொண்ட நாளில் தம் பணிவை வெளிப்படுத்தும்வண்ணம்
குனிந்ததால் அவர்கள்தம் தாடை வாகனத்தின் முதுகைத் தொட்டுக்கொண்டிருந்தது.
இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு விஷயம் குறித்துப் பேசினார்.
அவர் நபியவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரின் உடல் நடுங்கியது. அதைக் கண்ட நபியவர்கள், இயல்பாக இருங்கள். காய்ந்த இறைச்சித்துண்டைச்
சாப்பிட்ட குறைஷிப் பெண்மணியின் மகன்தான் நான் என்று கூறினார்கள்.
ஓர் அடிமை அமர்வதைப்போல் நான் அமர்கிறேன்.
ஓர் அடிமை உண்பதைப்போல் நான் உண்கிறேன் என்று நபியவர்கள் சொல்வது வழக்கம். சுருக்கமாக, அல்லாஹ்விற்காக யார் பணிவாக இருக்கின்றாரோ
அல்லாஹ் அவரை உயர்த்துகின்றான். யார் பணிவாக இருக்கின்றாரோ அவரின் கண்ணியத்தைத்தான்
அல்லாஹ் அதிகரிக்கச் செய்கிறான்.
-தமிழில்: துணையாசிரியர், இனிய திசைகள்
==============================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக