திங்கள், 30 மே, 2011

கற்பைக் காக்கும் பர்தா!

முஸ்லிம் பெண்கள் தம் கற்பைக் காக்கும் விதமாகவும், ஆடவர்க்கு மனக்கிளர்ச்சியைத் தூண்டாதிருக்கவும், தம் அழகைப் பிறருக்குக் காட்டாமல் மறைப்பதற்காகவும் `கருப்பங்கி எனும் பர்தா அணிகின்றார்கள். இந்தப் பர்தா முறையைச் செவ்வனே பின்பற்றுவோர் கணிசமாக இருந்தபோதிலும், இதைப் பற்றி முற்றிலும் அறியாதோர் பலர் நம் சமுதாயத்தில் இன்றும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

இது பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கிறது; பெண்களைக் கூண்டுக்குள் அடைக்கிறது என்பன போன்ற விமர்சனங்கள் மாற்றுச் சிந்தனையாளர்களிடமிருந்து வந்துகொண்டிருக்கின்ற அதே வேளையில், இஸ்லாமியச் சமுதாயத்தில் இருந்துகொண்டே இத்தகைய விமர்சனங்களை உதிர்க்கின்றவர்களும் இருக்கவே செய்கின்றனர். இது அவர்களின் அறியாமையைத்தான் காட்டுகிறது.

இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்காத அன்றைய அரபியர்கள், முஸ்லிம் பெண்கள் நடந்துசெல்லும் வேளையில் பாதைகளில் அமர்ந்துகொண்டு அவர்களைக் கேலியும் கிண்டலும் செய்துகொண்டிருந்தனர். அத்தகைய காலக்கட்டத்தில்தான் அல்லாஹ் இஸ்லாமியப் பெண்களுக்கு ஒரு விதியை வகுத்தான். அவர்கள் தம் ஆடைகளை முழுமையாகப் பேணிக்கொள்ள வேண்டும் எனக் கட்டளையிட்டான்.

 அண்மையில் ஃபிரான்ஸ் அதிபர் சர்கோஸி, பொது இடங்களில் பெண்கள் தம் முகத்தை மறைத்து வரத் தடைவிதித்தார். இது முஸ்லிம் பெண்களைப் பாதிக்கிறது என்று அங்குள்ள இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் தம் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதே நேரத்தில் அங்கு அவர்களைத் தவிர பல இலட்ச முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். அவர்கள் அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

இவ்விடத்தில் பர்தா பற்றிய நடுநிலையான கருத்தை நம்முள் பலர் விளங்காதிருக்கின்றார்கள் என்ற உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். பர்தா எப்படி அணிய வேண்டும் எனும் வரைமுறையில், அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

அது பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ள வசனத்தைப் பாருங்கள்! மேலும், நம்பிக்கையாளர்களான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக்கொள்ள வேண்டும்; தங்கள் அலங்காரத்தை-அதிலிருந்து (சாதாரணமாக வெளியில்) தெரியக்கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது. இன்னும் அவர்கள் தம் முன்றானைகளால் தம் நெஞ்சங்களை மறைத்துக்கொள்ள வேண்டும்... (24: 31)

 இது ஒரு தொடர் வசனம் ஆகும். ஒரு பெண் தன் வீட்டில் இருக்கின்றபோதும் வெளியில் செல்கின்றபோதும் பேண வேண்டிய ஒழுக்கங்களைப் பற்றி அல்லாஹ் விரிவாகக் கூறுகின்றான். மேலும், அவர்கள் யார் யார் முன்னிலையில் தம் அழகைக் காட்டலாம்; யார் யார் முன்னிலையில் தம் அழகைக் காட்டக்கூடாது என்றெல்லாம் இந்த வசனத்தில் தெளிவாக எடுத்துரைத்துள்ளான்.

இந்த வசனத்தின் அடிப்படையில், ஒரு பெண் வெளியில் செல்கின்றபோது, தன் இரண்டு முன்கைகள், இரண்டு கரண்டைக் கால்கள், முகம் இவை தவிர மற்றெல்லாப் பாகங்களையும் மூடி மறைக்க வேண்டியது கட்டாயமாகும். இந்தப் பாகங்களே சாதாரணமாக வெளியே தெரியக்கூடிய பாகங்கள் என்று அல்லாஹ் கூறுவதாக மார்க்க அறிஞர்கள் பலர் கூறியுள்ளனர்.

 ஆனால் அதேநேரத்தில் ஒரு பெண் தன் முகத்தையும் மறைத்துக்கொண்டு சென்றால், அது அவளுடைய தனிப்பட்ட உரிமையாகும். அதைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆக, கட்டாயம் என்பது வேறு; தனிப்பட்ட உரிமை என்பது வேறு. இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொண்டால், அல்லாஹ் கூறுகின்ற நடுநிலையான முறையை விளங்கிக்கொண்டால், பெண்கள் அனைவரும் புர்கா அணிவதில் எந்தச் சிரமமும் இருக்காது. இந்த நடுநிலையைப் புரிந்துகொள்ளாததால்தான் இஸ்லாமியப் பெண்கள் சிலர் புர்கா அணிவதே இல்லை. அது மட்டுமின்றி அதை விமர்சனமும் செய்கிறார்கள்.

                              


நம் சமுதாயத்தில் முகத்தை மூடிக்கொண்டு புர்கா அணிகின்ற பெண்கள் சிலர் இருக்கவே செய்கின்றனர். இதை முன்னுதாரணமாக வைத்துக்கொண்டு, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், மாற்று மதச் சகோதரிகள், தீவிரவாதிகள் உள்ளிட்ட பல வகையினர் பிறருக்குத் தம் முகம் தெரியாமல் இருப்பதற்காக முஸ்லிம் பெண்கள் அணிவதைப்போல் புர்கா அணிந்துகொண்டு `எல்லைமீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களைப் பார்ப்போர், அது முஸ்லிம் பெண்தான் என்று தவறாக எண்ணக்கூடிய துர்பாக்கிய நிலையும் ஏற்படத்தான் செய்கிறது. இந்த முறையில் புர்கா அணிவது ஒரு வகையில் மாற்றாருக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது என்பது உண்மையே.

கடமையான புர்காவை அணிவதில் யாரும் தலையிட முடியாது. இது இஸ்லாமிய மார்க்கச் சட்டம். அதைப் பின்பற்றக் கூடாதென யாரும் தடைபோட முடியாது. அப்படி ஆட்சியாளர் யாரேனும் செய்தால், அவருக்கெதிராக நாம் அணிதிரள்வோம் என்பது உறுதி. அதேநேரத்தில், நாட்டின் நலனையும் பாதுகாப்பையும் கருதி, ஷரீஅத் சட்டம் பாதிக்கப்படாத வகையில் ஒரு சட்டம் இயற்றினால் அதைப் பின்பற்றுவதில் தயக்கம் கொள்ளக்கூடாது.

ஆகவே, முஸ்லிம் பெண்கள் திருக்குர்ஆனின் கூற்றுப்படி புர்கா அணிந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அந்நிய சக்திகளின் தவறான செயல்களுக்கு நம் பெண்கள் பலிகடா ஆகிவிடக்கூடாது.
இது பெண்களைக் காக்கின்ற, அவர்களுக்குக் கண்ணியத்தையும் மரியாதையையும் வழங்கச் செய்கின்ற ஓர் உயர்வான ஆடை. ஒரு பெண் புர்காவை அணிந்து வெளியே சென்றால்தான் அவள் ஒரு முஸ்லிம் பெண்ணாக மதிக்கப்படுகிறாள் என்பது திண்ணம். ஆகவே பெண்கள் யாவரும் புர்கா அணிந்து கற்பைக் காத்துக்கொள்வீர்! அல்லாஹ்வின் அன்பைப் பெறுவீர்!




கருத்துகள் இல்லை: