புதன், 11 மே, 2011

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 21)

அல்லாஹ் இப்ராஹீம் நபியைப் புகழ்தல்

* இப்ராஹீம் (அலை) அவர்களை அவருடைய இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்ததை எண்ணிப்பாருங்கள். அவர் அவற்றை முழுமையாக நிறைவேற்றினார். (அதனால்,) உம்மை மனிதர்களுக்குத் தலைவராக ஆக்கப்போகிறேன் என்று அல்லாஹ் கூறினான். என்னுடைய வழித்தோன்றல்களிலும் (தலைவர்களை உருவாக்குவாயாக) என்று அவர் கோரினார். (அதற்கு, ஆம்! அப்படியே செய்கிறேன். ஆனால்,) எனது வாக்குறுதி (உம்முடைய வழித்தோன்றல்களுள்) அநீதி இழைத்தோரைச் சேராது என்று அவன் கூறினான். (2: 124)

அவருடைய இறைவன் அவருக்கு ஏவிய பெரும் சிரமமான செயல்களையும் அவர் முறையாகப் பூர்த்திசெய்துவிட்டபோது, மக்கள் அவரையும் அவருடைய வழிகாட்டுதல்களையும் பின்பற்றுகின்ற தலைவராக (இமாம்) அல்லாஹ் ஆக்கிவிட்டான். இந்த தலைமைத்துவம் அவரோடு சேர்ந்திருப்பதையும் அவருடைய சந்ததிகளுக்குத் தொடர்ந்து அது கிடைப்பதையும் அவருக்குப்பின் அது நிரந்தரமாக இருப்பதையும் அல்லாஹ்விடம் அவர் கேட்டார். அவர் விரும்பிக் கேட்டதை அல்லாஹ் அவருக்கு வழங்கினான்; அவருக்குத் தலைமைப்பதவியை ஒப்படைத்தான். எனினும் அநியாயக்காரர்கள் அதைப் பெறுவதிலிருந்து அல்லாஹ் விலக்களித்துவிட்டான். மேலும், அந்தத் தலைமைத்துவம் அவருடைய சந்ததிகளுள் நல்லறங்கள் செய்கின்ற அறிஞர்களுக்கு மட்டும் என்று வரையறுக்கப்பட்டது.

* மேலும் அவருக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் அளித்தோம். இன்னும் அவருடைய சந்ததியிலே நபித்துவத்தையும் வேதத்தையும் ஏற்படுத்தினோம். அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகிலும் கொடுத்தோம். மறுமையில் அவர் நல்லவர்களுள் ஒருவராவார். (29: 27)

* (இப்ராஹீமாகிய) அவருக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் பரிசளித்தோம். (இவர்கள்) அனைவருக்கும் நல்வழி காட்டினோம். (இதற்கு) முன்னர் நூஹுக்கும் நல்வழி காட்டினோம். அவருடைய வழித்தோன்றல்களுள் தாவூத், சுலைமான், அய்யூப், யூசுஃப், மூசா, ஹாரூன் ஆகியோருக்கும் (நல்வழி காட்டினோம்). இவ்வாறுதான், நன்மை செய்வோருக்கு நாம் நற்பலன் வழங்குகிறோம். மேலும் ஸகரிய்யா, யஹ்யா, ஈசா, இல்யாஸ் ஆகியோருக்கும் (நல்வழி காட்டினோம். இவர்கள்) அனைவரும் நல்லவர்கள் ஆவர். இஸ்மாயீல், அல்யசஉ, யூனுஸ், லூத் ஆகியோருக்கும் (நல்வழி காட்டினோம்). அகிலத்தாரைவிட (இவர்கள்) அனைவரையும் நாம் சிறப்பித்தோம். அவர்களுடைய மூதாதையர்கள், அவர்களுடைய வழித்தோன்றல்கள், அவர்களுடைய சகோதரர்கள் ஆகியோ(ருள் பல)ரைத் தேர்ந்தெடுத்து, அவர்களை நல்வழியில் நடத்தினோம். (6: 84-87)

மேற்கண்ட வசனத்தில் `வமின் துர்ரிய்யத்திஹி என்ற வார்த்தையில் உள்ள பிரதிப்பெயர்ச்சொல் இப்ராஹீம் என்பதையே சுட்டிக்காட்டுகிறது. இதுதான் பிரபலமான கருத்தாகும். லூத் நபி (அலை) இப்ராஹீம் (அலை) உடைய அண்ணன் மகன் என்றிருந்தாலும், பெரும்பான்மை அடிப்படையில் அவரும் இப்ராஹீம் (அலை) உடைய சந்ததிகள் எனும் வார்த்தைக்குள் வந்துவிடுவார். ஆனால் மற்றவர்கள், அந்தப் பிரதிப்பெயர்ச்சொல் நூஹ் நபியைத்தான் குறிக்கிறது என்று கூறுகின்றார்கள். நூஹ் நபியின் வரலாற்றில் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வே நன்கறிபவன்.

அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், திண்ணமாக நாமே நூஹையும் இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம். இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நபித்துவத்தையும் வேதத்தையும் ஏற்படுத்தினோம். (57: 26)

வேதங்கள் வழங்கப்பட்ட சந்ததிகள்

இப்ராஹீம் (அலை) அவர்களுக்குப்பின், இறைத்தூதர்களுக்கு அல்லாஹ் வானிலிருந்து இறக்கிய அத்துணை வேதங்களையும் அவருடைய சந்ததிகளுக்கும் அவருடைய வமிசத்தினருக்கும் அல்லாஹ் வழங்கினான். இது ஒப்பிடப்பட முடியாத ஒரு பெருமதிப்பாகும்; உயரிய தகுதியும் ஆகும். அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஒருவர் ஹாஜிர் (அலை) மூலம் பிறந்த இஸ்மாயீல் (அலை) ஆவார்; மற்றொருவர், சார்ரா (அலை) மூலம் பிறந்த இஸ்ஹாக் (அலை) ஆவார். இஸ்ஹாக்கிற்கு யஅகூப் எனும் மகன் பிறந்தார். யஅகூபுக்கு இஸ்ராயீல் என்ற பெயரும் உண்டு.

அவரோடுதான் அந்த வமிசத்திலுள்ள அனைவரும் சேர்க்கப்படுகின்றனர். அவர்களுக்கே நபிப்பட்டம் கொடுக்கப்பட்டது. அவர்களை அனுப்பிய அல்லாஹ்வுக்குத் தவிர அவர்களின் எண்ணிக்கை தெரியாது. அவர்களுக்கே நபிப்பட்டத்தையும் தூதுத்துவத்தையும் பிரத்தியேகமாக வழங்கினான். இறுதியில், பனூ இஸ்ரவேலர்களுள் கடைசி நபியாக ஈசா பின் மர்யம் (அலை) அவர்களை அனுப்பினான். அவர்தாம் அந்த வமிசத்தின் இறுதி நபி ஆவார்.

அரபியர்களின் தந்தை இஸ்மாயீல் (அலை)

இஸ்மாயீல் (அலை) மூலமே அரபியர்களின் பல்வேறு குலத்தினர் தோன்றினர். அல்லாஹ் நாடினால், இது பற்றி நாம் விளக்கமாகக் கூறவுள்ளோம். அவருடைய வமிசத்திலிருந்து இறுதி நபியான, நபிமார்களின் தலைவரான, இம்மையிலும் மறுமையிலும் ஆதமுடைய மக்களின் பெருமிதமிக்கவரான முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் அப்தில் முத்தலிப் பின் ஹாஷிம் அல்குரஷீ அல்மக்கீ பின்னர் அல்மதனீ (ஸல்) அவர்களைத் தவிர வேறு நபி யாரும் தோன்றவில்லை.

சிறப்புக்குரிய இந்தப் பிரிவிலிருந்து தேர்ச்சிமிகு இந்தக் கிளையிலிருந்து உயர்வுமிக்க, ஈருலகத் தலைவரான முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர யாரும் நபியாகக் காணப்படவில்லை. அவர்கள் புவிவாழ் மக்களெல்லாம் பெருமிதம் கொள்கின்ற தலைவர் ஆவார்கள். மறுமைநாளில் முந்தியோர்களும் பிந்தியோர்களும் அவர்களைக் கண்டு பொறாமைகொள்வர்.
நான் ஓர் (உயரிய) இடத்தில் நிற்பேன். இப்ராஹீம் உட்பட மக்கள் அனைவரும் என்னை விரும்புவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை முஸ்லிம் (ரஹ்) அவர்கள் தம்முடைய (முஸ்லிம்) நூலில் பதிவுசெய்துள்ளார்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் தம்முடைய தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களை மிக அதிகமாகப் புகழ்ந்துள்ளார்கள். நிச்சயமாக தமக்குப் பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள்தாம் அல்லாஹ்விடம் அவனுடைய படைப்பினங்களுள் மிகச் சிறப்பானவர் என்று அவர்கள் கூறியுள்ள கூற்று இதைத் தெரிவிக்கிறது. இச்சிறப்பு இவ்வுலகிலும், அல்லாஹ் தன்னுடைய கரண்டைக் காலைத் திறந்துகாட்டும் மறுமையிலும் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் (தம் பேரர்கள்) ஹசனுக்கும் ஹுசைனுக்கும் (ஓதிப் பார்த்துப்) பாதுகாப்புத் தேடினார்கள். மேலும் கூறினார்கள்: `நிச்சயமாக உம்முடைய தந்தை இதையே (ஓதிப் பார்த்து, தம்முடைய மகன்கள்) இஸ்மாயீல் மற்றும் இஸ்ஹாக்கிற்குப் பாதுகாப்புத் தேடினார்கள். அந்த வார்த்தைகளாவன: அவூது பி கலிமாத்தில்லாஹித் தாம்மா; மின் குல்லி ஷைத்தானின் வ ஹாம்மா; வமின் குல்லி அய்னின் லாம்மா-அல்லாஹ்வுடைய முழுமையான வார்த்தைகளால் எல்லா ஷைத்தானிடமிருந்தும் பழிக்கக்கூடிய எல்லா கண்களிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ )1


அல்லாஹ் அனுப்பிய பறவைகள்

அல்லாஹ் கூறுகின்றான்: என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக! என்று இப்ராஹீம் கேட்டபோது, (அதை) நீர் நம்பவில்லையா? என (அல்லாஹ்) கேட்டான். (அதற்கு) அவர் அவ்வாறன்று. (நம்பியிருக்கிறேன்). எனினும், எனது உள்ளம் நிம்மதியடைவதற்காகவே (கேட்கிறேன்) என்று கூறினார். (அப்படியானால்) நீர் நான்கு பறவைகளைப் பிடித்து அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக்கொள்வீராக; பின்னர் அவற்றின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு மலையில் வைப்பீராக! பின்னர் அவற்றை நீர் அழைப்பீராக! அவை உம்மிடம் விரைந்து வந்துவிடும். அல்லாஹ் வல்லமை மிக்கோனும் ஞானம் நிறைந்தோனும் ஆவான் என்பதை அறிந்துகொள்வீராக! என்று (அல்லாஹ்) கூறினான். (2: 260)

இப்ராஹீம் (அலை) கேட்ட இவ்வினாக்களுக்குப் பல காரணங்களை விரிவுரையாளர்கள் கூறுகின்றார்கள். அவை அனைத்தையும் நாம் திருக்குர்ஆன் விரிவுரையில் விரிவாகக் கூறியுள்ளோம்.

அந்த நிகழ்ச்சியின் சுருக்கம் என்னவெனில், நிச்சயமாக அல்லாஹ் இப்ராஹீம் (அலை) கேட்டதை உடனே நிறைவேற்றினான். எனவே, நான்கு பறவைகளைப் பிடிக்க அவரை ஏவினான். நான்கு பறவைகளை ஏன் பிடிக்க ஏவினான் என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆக, எத்தனை பறவைகளானாலும் நோக்கம் நிறைவேறப்போகிறது. அவற்றின் இறைச்சிகளையும் இறகுகளையும் சிதைத்து, அவற்றை ஒன்றோடொன்று கலந்து, அவற்றை (நான்கு) பங்குகளாகப் பிரித்து, அவற்றுள் ஒவ்வொரு பங்கையும் ஒரு மலைமீது வைக்க ஏவினான். அவருக்கு எவ்வாறு ஏவப்பட்டதோ அவ்வாறே அவர் செய்தார். பின்னர், இறைவனின் அனுமதியால் அவற்றை அவர் அழைக்க ஏவப்பட்டார்.

அவற்றை அவர் அழைத்தபோது, ஒவ்வோர் உறுப்பும் தத்தம் பகுதியை நோக்கிப் பறந்து வரத்தொடங்கின. ஒவ்வோர் இறகும் அது சார்ந்த பகுதியை நோக்கி வரத் தொடங்கின. இறுதியில், ஒவ்வொரு பறவையின் உடலும் அது முன்பிருந்தவாறே ஒன்றுசேர்ந்துவிட்டது. `ஆகு என்றால் ஆகிவிடும்’ எனும் ஆற்றலைக் கொண்ட இறைவனின் பேராற்றலை அவர் கண்டுகொண்டிருந்தார். அவை அவரை நோக்கி மிகவேகமாக ஓடி வந்தன.

அவை அவரிடம் பறந்து வருவதைவிட இது அவரின் பார்வைக்கு மிகத்தெளிவாக இருப்பதற்காகவே அல்லாஹ் அவ்வாறு ஓடி வரச்செய்தான்.
அப்பறவைகளின் தலைகளை அவர் தம் கையில் எடுத்துக்கொள்ள ஏவப்பட்டார். அவர் அழைத்தபோது, ஒவ்வொரு பறவையும் வந்து தத்தம் தலையோடு ஒட்டிக்கொண்டன; அவை முன்பிருந்தவாறு ஆகிவிட்டன என்று கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை.
இறந்தவர்களை உயிர்ப்பிக்கின்ற அல்லாஹ்வின் ஆற்றலை இப்ராஹீம் (அலை), மாற்றுக் கருத்துக்கு இடமின்றி மிக உறுதியாக அறிந்தே இருந்தார். எனினும், அவர் அதனைக் கண்கூடாகக் காண விரும்பினார். மனஉறுதி எனும் நிலையி லிருந்து நேரடிப்பார்வை எனும் நிலைக்கு உயர்த்திக்கொள்ள விரும்பினார். எனவே, அல்லாஹ் அவரின் வினாவுக்கு விடையளித்தான். அவரின் ஆழ்ந்த எண்ணத்தைப் பூர்த்திசெய்து கொடுத்தான்.

----------அடிக்குறிப்பு------------

1.  இந்த நபிமொழியை மன்ஸூர் என்பவரிடமிருந்து அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா போன்றோர் பதிவுசெய்துள்ளனர்.

அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.





கருத்துகள் இல்லை: