-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம்,
சென்னை-28
வாழ்க்கையில் வெற்றி-தோல்வி
மாறி மாறி வரும். அதுதான் இயற்கை நியதி. வெற்றிபெறும்போது மகிழ்ச்சியடைகின்ற நாம்
தோல்வியடைகின்றபோது அதை ஏற்றுக்கொள்ளும் மனத்திட்பம் நமக்கு இருப்பதில்லை.
இன்று தோற்றவன் நாளை வெற்றிபெறலாம்; இன்று வென்றவன் நாளை
தோற்கலாம். ஆக இது ஒரு சுழற்சி முறையாகும். மனிதர்கள் சிலர் வெற்றியைப்
பார்த்துப் புளகாங்கிதம் அடைகின்றார்கள்; தோல்வியைக் கண்டால்
துவண்டுபோய் விடுகின்றார்கள். அதன்பின் அடுத்த தடவை போட்டியிலிருந்து
விலகிவிடுகின்றார்கள். தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவர்களிடம் இல்லை
என்பதையே இது காட்டுகிறது.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு
கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் "அள்பா' என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை
முந்த முடியாத(அளவுக்கு விரைவாக ஓடக் கூடிய)தாக இருந்தது. அப்போது கிராமவாசி
ஒருவர் ஆறு வயதுக்குட்பட்ட ஒட்டகம் ஒன்றின்மீது வந்தார். அது நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களின் ஒட்டகத்தை முந்திவிட்டது. இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை
அளித்தது. இதையறிந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “உலகில் உயர்ந்து விடுகின்ற பொருள் எதுவாயினும் (ஒரு நாள்) அதைக் கீழே
கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்'' என்று கூறினார்கள். (புகாரீ:
2872) தாம் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் தம்முடைய
ஒட்டகத்தை மற்றோர் ஒட்டகம் முந்திவிட்டதை மதிப்புக் குறைவாக எடுத்துக்கொள்ளாமல், ‘இதுதான் அல்லாஹ்வின் நியதி’ என்று கூறி, மனித மனங்களைச்
செம்மைப்படுத்தினார்கள். தோல்வியை ஏற்க எப்போதும் தயாராகவே இருந்தார்கள்.
உலக அதிவேக மனிதராக
அறியப்படுகிற உசேன் போல்ட்,
இலண்டனில் 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகத்
தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்றபோது ஜஸ்டின் கேட்லின் (Justin Gatlin) என்பவரிடம்
தோற்றுப்போனார். 2008 முதல் 2016 வரை மூன்று தடவை ஒலிம்பிக்
போட்டியில் தங்கம் வென்றவர்;
100மீ, 200மீ, பந்தயங்களில் பல உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர்; இறுதியில் ஒருவரிடம் தோற்க நேரிட்டபோது அந்தத் தோல்வியை மனதார
ஏற்றுக்கொண்டார். இதுவே பக்குவப்பட்ட மனிதர்களின் நிலைப்பாடு.
மின்சாரத்தின் மூலம்
எரிகின்ற மின்விளக்கைக் கண்டறிந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஆனால் அவர் அதைக்
கண்டறியுமுன் ஆயிரக்கணக்கான தடவை தோல்வி கண்டார். அந்தத் தோல்விகள் அவரை
முடக்கிவிடவில்லை. மாறாக ஒவ்வொரு தடவை
தோல்விக்குப் பின்னரும்,
‘இந்த முறைப்படி எரிய வைக்க முடியாது என்பதைக்
கண்டறிந்தேன்’ என்று கூறினார். அதைத் தோல்வியாக எடுத்துக்கொள்ளவில்லை.
தொடர்ந்து முயன்று இறுதியில் மின்விளக்கைக் கண்டுபிடித்துப் பொதுமக்களுக்குப்
பயன்படும்படி செய்தார்.
அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் ஒரு தடவை
ஓட்டப்போட்டி வைத்தார்கள். அதில் தம் மனைவியிடம் தோற்றுவிட்டார்கள். (இருப்பினும் அத்தோல்வியை
ஏற்றுக்கொண்டார்கள்.) பின்னர் ஒரு தடவை ஓட்டப்போட்டி நடத்தினார்கள். அப்போது
ஆயிஷாவின் உடல் பருமனாகிவிட்ட காரணத்தால், அவரைவிட முந்தி, வென்றுவிட்டார்கள். (அச்சமயத்தில் அவர் தம் மனம் வருத்தமடையக் கூடாது என்பதற்காக)
‘இது ஏற்கெனவே உள்ள உனது வெற்றிக்குச் சமமாக ஆகிவிட்டது’ என்று கூறித்
தேற்றினார்கள். (தாருகுத்னீ: 3819)
ஆக நபியவர்கள் தோற்றபோது, தாம் ஓர் இறைத்தூதராக இருப்பதால் தோல்வியை ஏற்றுக்கொள்ள மாட்டேன்
என்றெல்லாம் சொல்லவில்லை. மாறாக இயல்பாகத் தம் தோல்வியை ஏற்றுக்கொண்டார்கள்.
இதுதான் வாழ்க்கையின் எதார்த்தம். இருப்பினும் இதில் மற்றொரு செய்தியும் உள்ளது.
நபியவர்கள் தம் மனைவி ஆயிஷாவுக்காக வேண்டுமென்றே தோற்றார்கள். வெற்றிபெற்ற ஆயிஷா
மகிழ்ச்சியடைந்தார்கள். எனவே நாம் விட்டுக்கொடுப்பது மற்றவருக்கு மகிழ்ச்சியளிக்கும்
என்றிருந்தால்,
விட்டுக்கொடுப்பதே சிறந்தது. அதிலும்
குறிப்பாக மனைவிக்காக விட்டுக்கொடுப்பது சாலச் சிறந்தது.
வெற்றி, தோல்வி இரண்டும் ஒருவரது
வாழ்க்கையில் மாறி மாறி வரக்கூடியதுதான். ஒவ்வொன்றையும் அனுபவிக்கக்
கற்றுக்கொள்ள வேண்டும். நாம் வெற்றியடையும்போது, ‘மற்றவர் யாரும் நம்மைத்
தோற்கடிக்க முடியாது’ என்ற எண்ணம் நம் மனத்தில் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள
வேண்டும். ஏனெனில் ‘வல்லவனுக்கு மேல் வல்லவன் ஒருவன் இருப்பான்’ என்பதுதான் உலக
இயல்பு. இன்று வெற்றி பெற்றுள்ள நாம், நாளை யாரிடமாவது தோல்வியைத்
தழுவலாம். அத்தகைய உணர்வோடு உள்ள நம்மை யாரும் மனத்தளவில் சோர்வடையச் செய்துவிட
முடியாது. ஏனெனில் வெற்றி பெறுகிறபோது உவகைகொள்கிற நாம், தோல்வியைத் தழுவும்போது அதை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் பெற்றிருக்க
வேண்டும்.
பள்ளி மாணவ-மாணவியர் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். நிறைய மதிப்பெண்கள்
வரும் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு, அவரவரின் தேர்வு எண் வெளியிடப்பட்டதும் தேர்வில் தேர்ச்சி பெற்றோர்
மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். தோல்வியடைந்தோர் சிலர் தம் தோல்வியை ஏற்றுக்கொள்ள இயலாமல்
தம்மை மாய்த்துக் கொள்கின்றனர். அல்லது அத்தோடு பள்ளிப் படிப்பை
நிறுத்திவிடுகின்றனர். இப்போதெல்லாம் தேர்ச்சி பெறாதோர் தற்கொலை
செய்துகொள்வதைவிட,
எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவான
மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றோர்தாம் தம்மை மாய்த்துக் கொள்கின்றனர்.
இத்தகையோரைக் கண்டறிந்து அவர்களுக்கு மனநல ஆலோசனை (கவுன்சிலிங்) வழங்க வேண்டும்.
எதிர்பார்த்த இலாபம் கிடைக்காவிட்டாலோ, வியாபாரத்தில் இழப்பு ஏற்பட்டுவிட்டாலோ தாங்க முடியாத துயரத்தை
அடைகின்றார்கள். மனதளவில் துவண்டுபோய்விடுகின்றார்கள். இத்தகையோர் இத்தருணத்தில்
தம்மைத் தாமே திடப்படுத்திக்கொண்டு, தமக்குத்தாமே ஆறுதல்
கூறிக்கொண்டு,
‘படைத்தோன் இறைவன் நிச்சயம் இந்நிலையை
மாற்றியமைப்பான்’ என்ற நேர்மறை எண்ணத்தை வளர்த்துக்கொண்டு, தொடர்ந்து அவ்வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதுதான் பெரும்பாலான
வியாபாரிகளுக்கு இன்றையத் தேவை. ஒன்றில் தோற்று, மற்றொன்றைத் தொடங்குவது, அதிலும் தோற்று மற்றொன்றைத் தொடங்குவது எதிலும் ஆழ்ந்த அனுபவத்தைத் தராது. எனவே தோல்விக்கு என்ன காரணம் எனக்
கண்டறிந்து அதைச் சரிசெய்து,
மீண்டும் புத்துணர்வோடு வியாபாரத்தைத் தொடர
வேண்டும்.
பதவி உயர்வு கிடைத்தால் மகிழ்ச்சியடைகின்ற நாம்
பதவி இறக்கப்பட்டால்,
அல்லது உயர் பதவியிலிருந்து இரண்டுபடி
கீழ்நிலைப் பதவியில் போடப்பட்டால் அதிர்ந்துவிடுகின்றோம். ஆனால் பதவி என்பது
இறைவன் தருவது,
அவன் நாடினால் உயர்த்துவான்; அவன் நாடினால் கீழே தாழ்த்துவான் என்ற உறுதியோடு நடைபோட வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே! பிரார்த்தனை செய்து) நீங்கள் கூறுங்கள்: “எங்கள்
அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக்
கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ
விரும்பியவர்களைக் கண்ணியப்படுத்துகின்றாய். நீ விரும்பியவர்களை
இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ
அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். (3: 26)
இவ்வசனத்தின் கருத்தை மனத்தில் பதிய
வைத்துக்கொண்டு,
இறைநம்பிக்கையோடு பதவியில் இருப்போர்
எதிர்பாராவிதமாகப் பதவிநீக்கம் செய்யப்பட்டாலோ, உயர் பதவியிலிருந்து
கீழிறக்கப்பட்டாலோ தளர்ந்துபோய்விட மாட்டார்கள். மாறாக இயல்பாகச்
செயல்படுவார்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் அத்தகைய ஒருவரை நாம்
காணலாம். அவர்தாம் சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். படைத் தளபதியாக
நியமிக்கப்பட்ட அவர் தொடர்ந்து அல்லாஹ்வின் பாதையில் போராடி வெற்றிக்கு மேல்
வெற்றியைக் குவித்தார். பின்னர் உமர் இப்னு அல்-கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களால்
கூஃபா நகரத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
நல்லவிதமாகத் தம் ஆளுநர் பொறுப்பை
நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது,
ஏதோ ஒரு வகையில் அம்மக்களுக்கு அவர் செய்த
செயல் பிடிக்கவில்லை. அதனால் கூஃபாவின் மக்கள், ஸஅத் பின் அபீவக்காஸைப்
பற்றி உமர் பின் அல்-கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் முறையிட்டனர். அதனால், முஹம்மது பின் மஸ்லமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை ஸஅதிடம், “உமர் ரளியல்லாஹு அன்ஹு உங்களைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, உங்களுக்குப் பதிலாக வேறொருவரை நியமித்துவிட்டார்கள்” என்ற செய்தியைச்
சொல்லி,
அவரை "என்னிடம் வரச்சொல்லுங்கள்’ என்று
கூறி அனுப்பினார்கள்.
ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அங்கு வந்து, உமர் பின் அல்-கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்தபோது, உமர் ரளியல்லாஹு அன்ஹு, “அல்லாஹ்வின் மீது ஆணையாக,
நான் உம்மைத் திறமையின்மை அல்லது துரோகத்தின்
காரணமாகப் பதவியிலிருந்து நீக்கவில்லை; மாறாக, மக்கள் உம்மைப் பற்றித் தவறாகப் பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதாலும், அவர்களுக்கு என் நியாயத்தைக் கூற விரும்பியதாலும்தான்” என்று கூறினார்கள்.
(தாரீகுத் தபரீ)
அச்செய்தியைக் கேட்டதும், எவ்வித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இன்றி, உடனடியாக ஆளுநர்
பொறுப்பிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு, சாதாரண குடிமக்களுள் ஒருவராக
வாழத் தொடங்கினார். இதுதான் பக்குவம் என்பது. தோல்வியை-பதவி இறக்கத்தை மனதார
ஏற்றுக்கொண்டு அல்லாஹ்விற்காகவே போராடுவோர் எந்த நிலையிலும் அப்பதவியை
இழக்கவும் தோல்வியை ஏற்கவும் தயாராகவே இருப்பார்கள். ஏனெனில் அப்பதவி அவர்களின்
உள்ளத்தில் எவ்வித உயர்வையோ பெருமையையோ ஏற்படுத்தியிருக்காது.
உல்லாசப் பயணம் செல்வதாக முதல் நாள்
திட்டமிடுகின்றோம்;
பயணத்திற்கான எல்லாவித ஏற்பாடுகளும்
செய்யப்பட்டுவிட்டன;
பிள்ளைகள் எல்லோரும் ஆவலோடு
இருக்கின்றார்கள். மறுநாள் புறப்படுவதற்குமுன், கணவனுக்கோ மனைவிக்கோ அவசர
வேலை வந்துவிட்டது. அல்லது உறவினர்கள் யாரோ ஒருவர் இறந்துவிட்டார்; அல்லது நோய்வாய்ப்பட்டுவிட்டார். அவரைச் சந்திக்கச் செல்ல வேண்டும்.
அல்லது ஏதோ ஒரு தடங்கல் ஏற்பட்டு, அந்தப் பயணம்
தடைபட்டுவிட்டது. இந்த நேரத்தில் கணவனோ மனைவியோ ஒருவரையொருவர்
திட்டிக்கொள்வதோ கடுமையான வார்த்தைகளால் வசைபாடுவதோ கூடாது. “சரி, பரவாயில்லை. இன்னொரு நாள் நாம் செல்வோம்” என்று கூறி, தவிர்க்க முடியாக் காரணத்தால் தடைபட்ட அச்சூழ்நிலையைச் சமாளிக்கக் கற்றுக்கொள்ள
வேண்டும். அதுதான் தோல்வியைக் கண்டு மனந்தளராத மனத்திட்பம் உடையோர்க்கு அழகு.
உறவினர்கள் சிலர் நம் வீட்டிற்குக் குறிப்பிட்ட
நாளில் வருவதாகச் சொல்கிறார்கள். நாமும் அந்நாளில் உற்சாகமாக எழுந்து
அவர்களுக்காகவே சிறப்பான விருந்து ஏற்பாடு செய்கிறோம். திடீரெனச் செல்பேசியில்
ஓர் அழைப்பு வருகிறது. “அண்ணி,
எங்களால் இன்று உங்கள் வீட்டிற்கு வர இயலவில்லை; நாங்கள் இன்னார் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.
அங்கு நாங்கள் சாப்பிட்டுக்கொள்கிறோம். இன்னொரு நாள் உங்கள் வீட்டிற்கு
வருகிறோம்” என்று கூறித் தம் வருத்தத்தைத் தெரிவிக்கின்றார்கள்.
அதைக் கேட்ட நாம், மிகுந்த சினம்கொண்டு,
“உங்களுக்காகவே கறியெல்லாம் வாங்கி, பிரியாணி சமைத்து வைத்திருக்கிறோம். நீங்கள் வராவிட்டால் எப்படி, நாங்கள் அந்த உணவையெல்லாம் என்ன செய்வது” என்று சொல்லாமல், “சரி,
பரவாயில்லை. இன்னொரு நாள் கண்டிப்பாக
வாருங்கள்” என்று கூறி அவர்களுக்கு எதிர்பாரா விதமாக ஏற்பட்ட சூழ்நிலையை நாம்
புரிந்து,
அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்; நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டும். மாறாக “நீங்கள் எங்களை
மதிப்பதே இல்லை;
நீங்கள் ஏன் முன்னரே சொல்லவில்லை; நாங்கள் உங்களுக்காகவே சமைத்துவிட்டோமே; நாங்கள் இப்படிச்
செய்திருந்தால் நீங்கள் பொறுத்துக்கொள்வீர்களா; இனி உங்களோடு நான் பேசவே
மாட்டேன்” என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்கக்கூடாது.
ஆக இது போன்று எதிர்பாரா நிகழ்வுகள்
அவ்வப்போது நம் வாழ்வில் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். நாம் எதிர்பார்ப்பதுபோல்
வாழ்க்கை அமையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சூழ்நிலைகள் மாறிக்கொண்டே
இருக்கும். அதையெல்லாம் புரிந்துகொண்டால் நாம் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக
வாழலாம். மாறாக சின்னச் சின்ன விஷயங்களுக்காக நம் நண்பர்களையும் உறவினர்களையும்
கோபித்துக்கொண்டு,
அவர்கள் எதிர்பாராவிதமாகச் செய்ததை
வேண்டுமென்றே செய்ததாக,
எதிர்மறையாக எண்ணிக்கொண்டு, அதையே நம் மனத்தில்,
மாடு அசைபோடுவதுபோல் மீண்டும் மீண்டும் அதை
நினைவுகூர்ந்து நம்முடைய மகிழ்ச்சியைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது.
பாத்திரத்திற்கேற்பத் தண்ணீர் தன்னை
மாற்றிக்கொள்வதைப்போல் சூழ்நிலைக்குத் தக்கவாறு நம்மை நாம்
மாற்றிக்கொண்டால்-தகவமைத்துக்கொண்டால் நாம் நம் வாழ்வில் ஒருபோதும் தோல்வியடைய
மாட்டோம். மாறாக என்றென்றும் மகிழ்ச்சியாகவே வாழ்வோம். அத்தகைய மனநிலையை உயர்ந்தோன்
அல்லாஹ் நமக்கு வழங்குவானாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக