வியாழன், 16 நவம்பர், 2017

இலக்கை உயர்வாக்கு!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
==========================================

ஒவ்வொரு மனிதனும் தன் எண்ணத்திற்கேற்பவே உயர்வடைகின்றான்; முன்னேறுகிறான். மனதில் ஆழமான வேட்கையும் உயர்வான இலக்கும் இருந்தால் அவன் அதை நிச்சயம் அடைவான். மனதில் மிகச் சிறிய இலக்கும் தாழ்வான எண்ணமும் இருந்தால் தாழ்வான நிலையில்தான் அவனுடைய வாழ்க்கை அமையும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இலக்குகளில் உயர்வானதையே விரும்புகின்றான்; அவற்றில் மிகவும் கீழானதை வெறுக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஅஜமுல் அவ்சத்)

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு முஸ்லிமின் இறுதி இலக்கு சொர்க்கத்தை அடைவதுதான். சொர்க்கத்தில் எட்டு வகையான உயர்மதிப்பு உள்ளது. அதில் மிக உயர்ந்த எட்டாவது சொர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவ்சையே அல்லாஹ்விடம் கேளுங்கள் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: புகாரீ: 2790) இதன்மூலம் "இலக்கை உயர்வாக்கு' எனும் பாடத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தருகின்றார்கள்.

வெள்ளத் தனையது மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நீரின் அளவிற்கே மலரின் தண்டு நீண்டிருக்கும். அதுபோலவே ஒருவர் தம் உள்ளத்தில் எண்ணும் அளவிற்கே அவருடைய வாழ்க்கை உயர்ந்திருக்கும் எனும் வள்ளுவரின் வாக்கிற்கிணங்க உள்ளத்தின் எண்ணத்தை விசாலப்படுத்த வேண்டும்.

ஆரோக்கியமாக உள்ள ஒருவன் மக்களிடம் கையேந்தியே வாழ்ந்துவிடலாம் என்றெண்ணி, அதையே தன் தொழிலாகத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். காலப்போக்கில் நிறையப் பணத்தைச் சேர்த்துவிடுகின்றான். என்னதான் அவன் பணத்தைச் சேர்த்தாலும் "பிச்சைக்காரன்' எனும் பெயர்தான் அவனுக்குக் கிடைக்கும்.

அதேநேரத்தில் மாற்றுத்திறனாளியாக உள்ள ஒருவன், "பிறரிடம் கையேந்துவது இழுக்கு' என்றெண்ணி, தன்னால் இயன்ற வேலையைச் செய்கிறான்; சின்னச்சின்னப் பொருள்களை விற்பனை செய்கிறான்; அதில் கிடைக்கும் வருவாய் சொற்பமாக இருந்தாலும் அதை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு நிம்மதியோடும் தன்மானத்தோடும் வாழ்கிறான். மேற்கண்ட இரண்டு நிகழ்வையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எது உயர்வான வாழ்க்கை என்ற உண்மை புலப்படும்.

வாழ்வதற்கான வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது அவரவர் கையில் உள்ளது. அவர் தேர்ந்தெடுக்கும் வழியைப் பொறுத்து அவரின் வாழ்க்கை மதிப்புமிக்கதாகவோ தரம்தாழ்ந்ததாகவோ மாறுகிறது.  திருடுதல், பிச்சையெடுத்தல், ஏமாற்றுதல், பொய்சொல்லுதல், கொள்ளையடித்தல், கையூட்டுப் பெறுதல் உள்ளிட்ட எத்தனையோ இழிவான, கீழ்த்தரமான வழிகளில் பணத்தைச் சம்பாதிக்கலாம்.  ஆனால் இவையெல்லாம் அவனுக்கு உயர்மதிப்பைப் பெற்றுத்தரா. இவையெல்லாம் அவரவரின் தாழ்வான எண்ணத்தையும் கீழான மனோநிலையையுமே காட்டுகின்றன.

மேலான எண்ணமும் உயரிய இலக்கும் உடையோர் இத்தகைய இழிவான வாழ்வைத் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். நம்மால் பிறர் வாழ வேண்டும்; ஏழைகள் பயன்பெற வேண்டும்; நம் உழைப்பில் பிறர் உண்ண வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களே உயரிய இலக்குடையோர்.

உயர்வான இலக்கை அடைய வைராக்கியம் கொண்டோர், தம் வாழ்வில் எதிர்கொள்கின்ற தடைகளையோ சிக்கல்களையோ ஒரு பொருட்டாகக் கருதமாட்டார்கள். எத்தனை துன்பம் வந்தபோதிலும், இடர்ப்பாடுகள் குறுக்கிட்டபோதிலும் அடைய வேண்டிய இலக்கைத் தொடுகின்ற வரை ஓயமாட்டார்கள். அத்தகையோர் "வைராக்கிய மனம் கொண்டோர்' என்றும் "மனத்திட்ப மிக்கோர்' என்றும் அழைக்கப்படுகின்றார்கள்.

(நபியே!) மனத்திட்பமிக்க இறைத்தூதர்கள் கடைப்பிடித்த பொறுமையைப் போன்று நீரும் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக. (46: 35) தம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரும் நரகத்திற்குச் சென்றுவிடக்கூடாது என்ற உயர்ந்த இலக்கையும் இலட்சியத்தையும் கொண்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தாம் சந்தித்த ஒவ்வொருவரிடமும் ஏகத்துவக் கொள்கையை நயமாக எடுத்துரைத்தார்கள். அதனால் அவர்கள் எதிர்கொண்ட இடர்களும் துன்பங்களும் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு கட்டத்தில் சடைவும் சோர்வும் ஏற்பட்டபோதுதான், அல்லாஹ் மேற்கண்ட அறிவுரையை அவர்களுக்கு வழங்குகின்றான்.

உயரிய இலட்சியத்தையும் இலக்கையும் கொண்டோர் தாம் அதை நோக்கிச் செல்லும்போது எதிர்கொள்கின்ற பிரச்சனைகளையும் சிக்கல்களையும் கண்டு மிரண்டுபோய்விடக்கூடாது; சோர்ந்துபோய் உட்கார்ந்துவிடக்கூடாது. மாறாக எல்லாவற்றையும் பொறுமையோடு சகித்துக்கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதை மேற்கண்ட இறைவசனம் உள்ளூர உணர்த்துவதை அறியலாம்.

அவ்வாறு பல்வேறு சிரமங்களையும் தோல்விகளையும் எதிர்கொண்ட பின்னர்தான் பல்வேறு அறிஞர்கள் பற்பல கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் தம் ஆய்வின் தொடக்கத்திலேயே வெற்றியை எதிர்பார்த்திருந்தாலோ, தோல்வியைக் கண்டு துவண்டு  போயிருந்தாலோ அவர்கள் தம் கண்டுபிடிப்புகளை உலகோருக்குக் கொடையாகக் கொடுத்திருக்க முடியாது. பல்வேறு சிரமங்களையும் தொல்லைகளையும் சகித்துக்கொண்டு, தோல்விகளைத் தாங்கிக்கொண்டு முயற்சிக்குப்பின் முயற்சி எனக் கடுமுயற்சி செய்து, அடைய வேண்டிய இலக்கை அடைந்தே தீருவது என வைராக்கிய எண்ணம் கொண்டதால்தான் இன்று நாம் பல்வேறு வசதிகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டதால், மனம் நொந்து, நெக்குருகித் தம் இன்னுயிரை மாய்த்துக்கொள்வோர் உயரிய இலட்சியத்தைத் தம் மனத்தில் விதைத்துக்கொள்ளாதவர்கள்; தோல்வியை எதிர்கொள்ளத் தெரியாதவர்கள்; மதிப்பெண்ணுக்குள்தான் வாழ்க்கை உள்ளதென குறுகிய எண்ணம் கொண்டவர்கள். மாறாக, ஒரு தடவை தோற்றாலும் அதற்கான மாற்று வழியை அறிந்து மறுமுறை வென்று தம் இலட்சியத்தை அடைய முனைவதே உயரிய இலக்குடையோர் செய்யும் பணி.

மனத்தைத் தளர விட்டுவிட்டால் உயரிய இலட்சியத்தை ஒருபோதும் அடைய முடியாது. மன உறுதிதான் நம்முடைய உந்து சக்தி. அதை வைத்துக்கொண்டுதான் நாம் மேல்நோக்கி நகர முடியும். எனவே உயரிய இலட்சியத்தை அடையத் துடிப்போர் மனத்தையும் தன்னம்பிக்கையையும் வலுவாக வைத்துக்கொள்ள வேண்டும்.

நாம் கொள்ளும் இலக்கு உயர்வானதாக இருக்க வேண்டும் என்பதற்கான சான்றாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றை எடுத்துக்கொள்ளலாம்.
"எனக்காக அல்லாஹ்விடம் "வஸீலா'வைக் கேளுங்கள். "வஸீலா' என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களுள் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்)  கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.'' (நூல்: முஸ்லிம்: 628) ஒரே ஒரு பதவிதான். அது தமக்குக் கிடைக்க வேண்டுமென உயரிய இலக்கை எண்ணியுள்ளார்கள். அது அவர்களுக்கே கிடைக்க நாம் அல்லாஹ்விடம்  பரிந்துரை செய்தால் அதற்குப் பிரதிபலனாக, நமக்குச் சொர்க்கம் கிடைக்க அவர்கள் பரிந்துரை செய்வார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவு பெரிய இலக்கைக் கொண்டிருந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

உயரிய இலக்கைக் கொண்டிருப்பவர்கள் எப்போதும் சோர்ந்துவிடக் கூடாது என்பதற்கான சான்றாக உமர் (ரளி) அவர்களின் கூற்றை எடுத்துக்கொள்ளலாம்: "உங்கள் மனஉறுதி பலவீனமடைந்துவிட வேண்டாம். மனஉறுதி பலவீனமடைந்துவிட்டால் உயரிய இலக்கை அடைவதைவிட்டு அது உங்களைத் தூரமாக்கிவிடும்.'' 

நாம் கொள்ளும் இலக்கு உயர்வானதாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் உயர்வானதை அடைய முடியும். உயரிய இலக்கை மனத்தில் கொண்டோர், முன்னேற வேண்டும் என்ற ஆசையைப் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அடைய வேண்டிய குறிக்கோளை நோக்கி மனத்தைத் திருப்பிக்கொண்டே இருக்க வேண்டும். அடைய வேண்டிய இலக்கை மீண்டும் மீண்டும் மனத்தில் கொண்டுவந்து நிறுத்திப் பார்க்க வேண்டும். அதை அடையும் வரை அதற்கான முயற்சியைக் கைவிடக் கூடாது. இவ்வாறு செயல்பட்டால் யாரும் உயர்வான இலக்கை அடையலாம். அத்தோடு, "நீங்கள் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள். ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்புச் சாட்டுபவர்களை நேசிக்கின்றான்'' (3: 159) எனும் இறைவசனத்திற்கேற்ப அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வைத்து அடியெடுத்து வைத்தால் கொண்ட இலக்கை எளிதில் அடையலாம். 
=================================================================





நீடூர் அரபுக்கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் ஆய்வரங்கம்!


நீடூர்-நெய்வாசலில் அமைந்துள்ள ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக்கல்லூரியில் அக்கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி ஏ. முஹம்மது இஸ்மாயீல் ஃபாஸில் பாகவியின் தலைமையில் 01.11.2017 அன்று "அறிவியல் அரங்கில் அல்குர்ஆன்'  எனும் தலைப்பில் ஆய்வரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக மாணவர் நூருல் அமீன் கிராஅத் ஓதினார். ஜைனுல் ஆபிதீன் நபிபுகழ் கீதமிசைத்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரிப் பேராசிரியர் மௌலானா ஸஃபியுல்லாஹ் ஃபாஸில் பாகவி வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் இக்கல்லூரியின் மாணவர்கள் ஏழுபேர் ஆய்வுரையைச் சமர்ப்பித்தார்கள். எர்ணாகுளம் ஷபீர் "வானவியல் பேசும் வான்மறை' எனும் தலைப்பிலும், மலப்புரம் ஷாஃபி "மேகங்கள் பற்றி மாமறை' எனும் தலைப்பிலும், முஹம்மது அலீ "மரபணு பற்றி மறைகூறும் உண்மை' எனும் தலைப்பிலும், முஹம்மது அப்ரார் "நோய் பரவச் செய்யும் கிருமிகள்' எனும் தலைப்பிலும், பைஜுர் ரஹ்மான் "மனிதப் படைப்பைக் கூறும் திருமறை' எனும் தலைப்பிலும், ஷேக் நவ்தில் "புவியீர்ப்பு ஆற்றல் குறித்துப் புனிதக்குர்ஆன்' எனும் தலைப்பிலும், முஹம்மது அபூபக்கர் சித்தீக் "கடல்பற்றி எழில்மறை' எனும் தலைப்பிலும் ஆய்வுரை வழங்கினார்கள்.

இனிய திசைகள் துணையாசிரியர் முனைவர் மௌலானா மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி நடுவராகப் பங்கேற்று, மாணவர்கள் வழங்கிய ஆய்வுரையைக் கவனமாகக் கேட்டு, இறுதியில் தொகுப்புரை வழங்கினார். மரபணு பற்றி ஆய்வுரை வழங்கிய முஹம்மது அலீ முதலாம் பரிசையும் வானவியல் குறித்து ஆய்வுரை வழங்கிய எர்ணாகுளம் ஷபீர் இரண்டாம் பரிசையும் புவியீர்ப்பு ஆற்றல் குறித்து ஆய்வுரை வழங்கிய ஷேக் நவ்தில் மூன்றாம் பரிசையும் பெற்றனர். ஆய்வுரை வழங்கிய அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. 

மௌலானா மௌலவி முஹ்யித்தீன் அப்துல் காதர் ஃபாஸில் மன்பஈ, மௌலானா மௌலவி புகாரி ஃபாஸில் அன்வாரி, மௌலானா மௌலவி முஹம்மது ஷுஹைப் மிஸ்பாஹி, மௌலானா மௌலவி எம். ஒய். அப்துர் ரஹ்மான் பாகவி ஃபாஸில் மழாஹிரி, அப்துர் ரஹ்மான் பாகவி (சத்தியமங்கலம்) உள்ளிட்ட இக்கல்லூரிப் பேராசிரியர்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டார்கள். அவைத்தலைவரின் துஆவுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.      -பாகவியார்
=======================================================









சனி, 14 அக்டோபர், 2017

நஸாயீ நூல்கள் வெளியீட்டு விழா!


12.08.2017 சனிக்கிழமை மாலை ஆறு மணிக்குக் கவிக்கோ மன்றத்தில் நஸாயீ தமிழாக்கம் உட்பட ஆறு நூல்களின் வெளியீட்டு விழா நடந்தது.
நீங்கள் எத்தனையோ நூல் வெளியீட்டு விழாக்களுக்குச் சென்றிருப்பீர்கள். விழாத் தலைவர், நூல்களை வெளியிடுவோர், முதல்படி பெறுவோர், வாழ்த்துரை வழங்குவோர், பாராட்டுரை வழங்குவோர், தொகுப்புரை வழங்குபவர், நன்றியுரை வழங்குபவர் என்று மேடை நிறைந்திருக்கும். ஆனால் எந்த நூல் வெளியிடப்பட இருக்கிறதோ அந்த நூல் கண்ணிலேயே தென்படாது. அட்டைகூடத் தெரியாத அளவுக்கு வண்ணத்தாளில் சுற்றப்பட்டு, அது போதாதென்று அதன்மீது வண்ண ரிப்பனையும் இறுக்கமாகக் கட்டி, ஏதோ கைதி மாதிரி, மேடையில் உள்ள சிறிய மேசையில் வைக்கப்பட்டிருக்கும். வெளியீட்டின்போதுதான் அந்த நூல் மீண்டும் விடுதலை பெற்று நம் கைகளில் குழந்தையைப் போல் சிரிக்கும்.

புத்தகம் என்பது உயிருடன் வாழ்ந்த, வாழ்கின்ற மனிதனின் படைப்பாக்கம்தானே? அந்த உயிருள்ள மனிதனின் இதயம்தானே அந்த நூலினுள்ளும் துடித்துக்கொண்டிருக்கிறது? இன்னும் சொல்லப்போனால் அந்த நூலின் ஆசிரியர் இறந்துபோயிருக்கலாம். ஆனால் அவருடைய உயிரின், உணர்ச்சியின் துடிப்புகள்தாமே அந்த நூல்?  இதை முஸ்தபா அண்ணன் உணர்ந்திருப்பார் போல. நஸாயீ நூல் வெளியீட்டு விழாவில் மேடை நாயகர்கள் யார் தெரியுமா? நம்புங்கள், வெளியீடு கண்ட ஆறு புத்தகங்களும் மன்னர்கள் போல் ஆறு நாற்காலிகளில் கம்பீரமாய் அமர்ந்திருந்தன.

விழா விருந்தினர்களான முனைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், கவிஞர் மு. மேத்தா, பழ.கருப்பையா, பேராசிரியர் அ. மார்க்ஸ், முனைவர் சதக்கத்துல்லாஹ், ஆளூர் ஷா நவாஸ், ராணி இதழின் முன்னாள் ஆசிரியர் அ.மா. சாமி, அருட்தந்தை சேவியர், மௌலவி கம்பம் பீர்முஹம்மது பாகவி, இளம்முனைவர் மௌலவி சதீதுத்தீன் பாகவி, நஸாயீ நூலின் மேற்பார்வையாளர் மௌலவி யூசுஃப் மிஸ்பாஹி, நூலின் மொழிபெயர்ப்பாளர் முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி ஆகிய அனைவருமே மேடையில் அல்லாமல் அரங்கில்தான் அமர்ந்திருந்தனர். பேசும்போது மட்டும்தான் மேடை. உண்மையிலேயே இதுதான் வித்தியாசமான விழா.

நூல்கள் வெளியீட்டு விழா என்றால் இனி நூல்கள்தாம் மேடை நாற்காலிகளை அலங்கரிக்க வேண்டிய நாயகர்கள் என்பதை தமிழ் இலக்கிய உலகிற்கு ரஹ்மத் பதிப்பகமும் அண்ணன் முஸ்தபா அவர்களும் உணர்த்திவிட்டார்கள். இந்த வித்தியாசமான சிந்தனையையும் ஏற்பாட்டையும் வாழ்த்துவதற்குச் சொற்கள் இல்லை. உண்மையிலேயே புத்தகங்கள் மகிழ்ந்த புதிய திருநாள்!

மௌலவி மஸ்தான் அலீ பாகவி உமரி, மௌலவி பஸ்லுர் ரஹ்மான் உமரி, மௌலவி அப்துர் ரஹ்மான் மன்பயீ, மௌலவி வி.எஸ். முஹம்மது காசிம் பாகவி, மௌலவி அப்துல் ஸமது பாகவி, மௌலவி சைஃபுர் ரஹ்மான் பிலாலி, மௌலவி ஜீலானி மிஸ்பாஹி, மௌலவி அப்துர் ரஸ்ஸாக் பிலாலி, டாக்டர் ஜாகிர் ஹுசைன் பாகவி உள்ளிட்ட ஆலிம்கள், பிறதுறை அறிஞர்கள், பதிப்பாளர்கள் உள்ளிட்டோர் திரளாக வருகை புரிந்திருந்து வெளியீட்டு விழாவைச் சிறப்பித்தனர்.

-சிராஜுல் ஹஸன்


நூலின் பெயர்: சுனனுந் நஸாயீ (நபிமொழித் தொகுப்பு)
மூலநூலாசிரியர்: அஹ்மத் பின் ஷுஐப் அந்நஸாயீ (ரஹ்- 215-303 ஹிஜ்ரீ)
தமிழாக்கம்: முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
விலை: ரூ. 400/-
வெளியீடு: ரஹ்மத் பதிப்பகம், 6, இரண்டாவது பிரதானச் சாலை, சிஐடி காலனி, மயிலாப்பூர், சென்னை-4  
 தொடர்புக்கு: 94440 25000 
===================================



முனைவர் பட்டம் பெற்ற ஆலிம்கள்!


தற்காலத்தில் ஆலிம்கள் பலர் அரபிக் கல்லூரிகளில் மார்க்கக் கல்வியை முடித்ததோடு நின்றுவிடாமல் அரசுக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் சென்று அரபித்துறையில் பட்ட மேற்படிப்பைத் தொடரவும் செய்கின்றார்கள். அவர்களுள் பலர் இளம் முனைவர் (எம்.ஃபில்) பட்டமும் பலர் முனைவர் (பிஎச்.டி.) பட்டமும் பெற்று இன்றைய இளம் ஆலிம்களுக்கும் இஸ்லாமியச் சமுதாயத்திற்கும் ஒரு முன்னோடியாகத் திகழ்கின்றார்கள். அவர்கள் பிஎச்.டி. வரை சென்று முனைவர் பட்டம் பெற்றிருப்பது கல்விக்கு எல்லையில்லை என்பதைக் காட்டுவதோடு அவர்களின் விடாமுயற்சியையும் பறைசாற்றுகிறது. நம் சமுதாய மக்களுக்குக் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும், பட்டம் பெற்ற ஆலிம்களை மனதாரப் பாராட்டும் பொருட்டும் ஆலிம் பட்டம் பெற்றுமுனைவர் பட்டம் பெற்றவர்களின் பட்டியலை மட்டும் கீழே தருகின்றோம். அவர்களின் பெயர், முனைவர் பட்டம் பெற்ற ஆண்டு, அவர்கள் ஆய்வுமேற்கொண்ட தலைப்பு, தற்போதைய பணியிடம், தொடர்பு எண் ஆகியவை மட்டும் சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.        
1. பெயர்: முனைவர் மௌலவி பி.எஸ். சையது மஸ்வூத் ஜமாலி
பட்டம் பெற்ற ஆண்டு: 2006
ஆய்வுத் தலைப்பு: இஸ்லாமிய மார்க்கச் சட்டத்தின் பரிணாம வளர்ச்சி
பணி: தலைவர் இஸ்லாமியியல் துறை, பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் பல்கலைக் கழகம், வண்டலூர் சென்னை. 
செல்பேசி: 94442 22875

2. பெயர்: முனைவர் மௌலவி அப்துஸ் ஸமத் நத்வி
பட்டம் பெற்ற ஆண்டு: 2017
ஆய்வுத் தலைப்பு: சங்கைமிகு குர்ஆனின் அழகிய இலக்கிய உரைநடை
பணி: பேராசிரியர் இஸ்லாமியியல் துறை, பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் பல்கலைக் கழகம், வண்டலூர் சென்னை.
செல்பேசி: 98406 99131

3. பெயர்: முனைவர் மௌலவி அ. ஜாகிர் ஹுஸைன் பாகவி
பட்டம் பெற்ற ஆண்டு: 2005
ஆய்வுத் தலைப்பு: முதல் மூன்று நூற்றாண்டுகளில் ஹதீஸ் கலையின் வளர்ச்சி
பணி: அரபுத் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.  
செல்பேசி: 94444 27086 

4. பெயர்: முனைவர் மௌலவி  அல்ஹாஃபிழ் அன்வர் பாஷா உலவி
பட்டம் பெற்ற ஆண்டு: 2008
ஆய்வுத் தலைப்பு: இந்தியாவில் ஹதீஸ் கலை அறிஞர்களும் அவர்களின் சேவைகளும்
பணி: கௌரவப் பேராசிரியர் சென்னைப் பல்கலைக் கழகம், இமாம் ரஹ்மானிய்யா மஸ்ஜித் பெரம்பூர், சென்னை. 
செல்பேசி: 73588 88768

5. பெயர்: முனைவர் மௌலவி நூ.  அப்துல் ஹாதி பாகவி, ஃபாஸில் தேவ்பந்தி
பட்டம் பெற்ற ஆண்டு: 2015
ஆய்வுத் தலைப்பு: முஹம்மது பின் இஸ்ஹாக் பின் குஸைமா (ரஹ்) அவர்களின் ஹதீஸ் பணிகள்
பணி:  இமாம், மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார் மணலி, துணையாசிரியர் இனிய திசைகள் மாதஇதழ்
செல்பேசி: 94443 54429

6. பெயர்: முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் ஷம்சுத்தீன் ஜமாலி
பட்டம் பெற்ற ஆண்டு: 2008
ஆய்வுத் தலைப்பு: ஷாஃபிகளின் அரபு இலக்கியம் 
பணி:  இமாம், மஸ்ஜிதுல் ஹிதாயா, வியாசர்பாடி, சென்னை.
செல்பேசி: 98842 13220

7. பெயர்: முனைவர் மௌலவி எம். ஹபீபுல்லாஹ் ஜமாலி
பட்டம் பெற்ற ஆண்டு: 2012
ஆய்வுத் தலைப்பு: இந்திய நாட்டின் ஹதீஸ் கலை அறிஞர்கள்
பணி: பேராசிரியர், அரபுத்துறை, புதுக்கல்லூரி. இமாம்-ஷாஃபிய்யா மஸ்ஜித், இராயபுரம், சென்னை
செல்பேசி: 97898 81988

8. பெயர்: முனைவர் மௌலவி முஜீபுர் ரஹ்மான் உமரி
பணி:  பேராசிரியர் இஸ்லாமியியல் துறை, பிரிஸ்டன் கல்லூரி, ஆழ்வார்பேட்டை, சென்னை.  

9. பெயர்: முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் எஸ். முஹிப்புல்லாஹ் பாகவி
பட்டம் பெற்ற ஆண்டு: 2017
ஆய்வுத் தலைப்பு: அரபுமொழியின் அடிப்படை இலக்கணத்தைப் பயிற்றுவிக்கின்ற குர்ஆனிய எளிமையான உதாரணங்கள் 
பணி: அரபு ஆசிரியர், சதக் மெட்ரிக்குலேஷன் பள்ளி, அரும்பாக்கம். இமாம்-மஸ்ஜித் நூர்  பள்ளிவாசல், சாந்தி காலனி அண்ணா நகர், சென்னை.
செல்பேசி: 98847 79094 

10. பெயர்: முனைவர் மௌலவி  முஹம்மது ரஃபீக் ஹஸனி
பட்டம் பெற்ற ஆண்டு: 2013
ஆய்வுத் தலைப்பு: தமிழ்நாட்டில் அரபுமொழியின் வளர்ச்சியும் அரபியர்களின் கலாச்சாரத் தாக்கமும்
பணி: அரபுப் பேராசிரியர், கருத்த ராவுத்தர் கல்லூரி, திருநெல்வேலி.
செல்பேசி: 99525 99678

11. பெயர்: முனைவர் மௌலவி சையது ஃபஸ்லுல்லாஹ் பக்தியாரி உமரி நத்வி,
பட்டம் பெற்ற ஆண்டு: 2016
ஆய்வுத் தலைப்பு: நபிமார்களின் வரலாறு சார்ந்த இலக்கியத்தில் இந்திய உலமாக்களின் பங்கு
பணி:  உதவிப் பேராசிரியர், அரபுத்துறை, புதுக்கல்லூரி, சென்னை. 
செல்பேசி: 98940 83097 

12. பெயர்: முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் சயீதுத்தீன் ஜமாலி
பட்டம் பெற்ற ஆண்டு: 2016
பணி:  இமாம், தலைமை காஜி அலுவலக மஸ்ஜித், இராயப்பேட்டை, சென்னை.  

13. பெயர்: முனைவர் மௌலவி முஹம்மது யூசுஃப் ஜமாலி
பணி:  பேராசிரியர் இஸ்லாமியியல் துறை, பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் பல்கலைக் கழகம், வண்டலூர் சென்னை.
செல்பேசி: 72994 79842

14. பெயர்: முனைவர் மௌலவி ஏ. அப்துல் ரஷீத் ஹஸனி
பட்டம் பெற்ற ஆண்டு: 2014
ஆய்வுத் தலைப்பு: தஃப்சீர் கலையைப் பரப்பியதில் தற்காலச் சிறப்பு விரிவுரையாளர்களின் பங்கு
பணி: உதவிப் பேராசிரியர், ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி.  
செல்பேசி: 97866 03663

15. பெயர்: முனைவர் மௌலவி அப்துர் ரஹீம் ஹஸனி
பட்டம் பெற்ற ஆண்டு: 2016
ஆய்வுத் தலைப்பு: தமிழ்நாட்டில் அரசு-அரசுசாரா நிறுவனங்களில் அரபுமொழிச் சட்டங்களைப் பயிற்றுவிக்கும் முறைகளில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகள் 
பணி: பேராசிரியர்இன்ஸ்டிட்யூட் ஆஃப் அரபிக் அன்ட் கல்ச்சர், ஹைதராபாத்.  
செல்பேசி: 99520 43773

16. பெயர்: முனைவர் மௌலவி ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப்
பணி: தலைமை காஜி, இராயப்பேட்டை, சென்னை.  

17. பெயர்: முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் ஸஃபியுல்லாஹ் அன்வாரி
பட்டம் பெற்ற ஆண்டு: 2013
ஆய்வுத் தலைப்பு: யமன் நாட்டு ஹதீஸ்கலை, இஸ்லாமியச் சட்டத்துறை அறிஞர்களும் அவர்களின் சேவைகளும்
பணி: இமாம், அரபு ஆசிரியர்-ஆயிஷா மகளிர் அரபுக்கல்லூரி, செங்குன்றம், சென்னை. 
செல்பேசி: 99403 78783

18. பெயர்: முனைவர் மௌலவி ஷேக் இப்ராஹீம் ஹஸனி
பட்டம் பெற்ற ஆண்டு: 2012
ஆய்வுத் தலைப்பு: கவிதை, இலக்கியத்தைப் பரப்பியதில் ஷேக் அப்துல் அஸீஸ் சுவூத் பாப்தீன் அவர்களின் பங்களிப்பு
பணி: அரபிக் சீனியர் எக்ஸிக்யூட்டிவ், ஃபார்மாசெட்டிகல் கம்பெனி, சென்னை.  
செல்பேசி: 99860 53553

19. பெயர்: முனைவர் மௌலவி அபூசுலைம் முஹம்மது அஸ்லம் ஹஸனி
பட்டம் பெற்ற ஆண்டு: 2017
ஆய்வுத் தலைப்பு: இஸ்லாமிக் பாலியோகிராஃபி அன்ட் கோடிகாலஜி
பணி: அகாடமிக் எடிட்டர், இன்டர்நேஷனல் இஸ்லாமிக் யூனிவர்சிட்டி, மலேசியா.
செல்பேசி: 60 16 2244923

20. பெயர்: முனைவர் மௌலவி முஹம்மது சுலைமான் உமரி
பணி: பேராசிரியர் இஸ்லாமியியல் துறை, பிரிஸ்டன் கல்லூரி, ஆழ்வார்பேட்டை, சென்னை.

21. பெயர்: முனைவர் மௌலவி சையது கமாலுல்லாஹ் பக்தியாரி நத்வி
பட்டம் பெற்ற ஆண்டு: 2011
பணி: உதவிப் பேராசிரியர், அரபுத்துறை, புதுக்கல்லூரி, சென்னை.

                                                                    -தொகுப்பு:  நூ.  அப்துல் ஹாதி பாகவி

==========================================




ஞாயிறு, 8 அக்டோபர், 2017

அறியாமை ஆட்டம் போடுகிறது!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

உலகில் விஞ்ஞானம் வளர்ந்துகொண்டே சென்றாலும் மனிதன் விண்ணை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு அறிவுப் புரட்சி செய்தாலும் விண்ணுலகிலேயே வீடு கட்டிக் குடியேற முயலும் நிலைக்கு உயர்ந்தாலும் உலகை வியக்க வைக்கும் அரிய சாதனைகள் பலவற்றைச் செய்தாலும் பற்பல புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தினாலும் அறியாமை எனும் நோய் மனித சமுதாயத்தில் ஆட்டம் போட்டுக்கொண்டேதான் இருக்கிறது. காலம் செல்லச் செல்ல, அறிவுப் புரட்சி பெருகப் பெருக, மனிதன் மாபெரும் சிந்தனையாற்றலும் செயல்திறனும் பகுத்தறிவும் பெற்றுத் திகழ்வான் எனும் எண்ணம் தோன்றுவதற்குப் பதிலாக அவனிடம் அறியாமை  தனது காலை அகல விரிக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

இருண்ட காலம் எனும் அறியாமைக் காலத்தில் வாழ்ந்த நாகரிகமற்ற மனிதர்களைப்போல் மனிதன் மாறிக்கொண்டிருக்கிறான். காட்டு விலங்குகளைப் போல் ஒருவனை ஒருவன் அடித்துக்கொண்டும் அழித்துக்கொண்டும் இருக்கின்றான். தானே உயர்ந்தவன் எனக் கருதி, தனக்குப் போட்டியாக யாரும் வந்துவிடக் கூடாது எனும் எண்ணத்தில் எந்தவித ஈவிரக்கமும் இன்றிக் கொலை செய்கிறான். இது அவனுடைய அறியாமையன்றி வேறென்ன?

மார்க்கம் பற்றிய அறியாமை, மனித ஆற்றல் பற்றிய அறியாமை, தன்னைப் பற்றிய அறியாமை, கல்வியைப் பற்றிய அறியாமை, இறைவனைப் பற்றிய அறியாமை, இறைத்தூதர் போதனைகள் குறித்த அறியாமை, ஏகத்துவம் குறித்த அறியாமை உள்ளிட்ட பலவகை அறியாமைகள் பாரினில் உண்டு. ஒரு மனிதன் தனது அறியாமையால் அவன் மட்டும் துன்பப்படவில்லை. பிறரையும் துன்பப்படுத்திக்கொண்டிருக்கிறான்.

பள்ளிவாசல்களில் இமாம்களாகப் பணியாற்றுவோர் மேற்கொள்கின்ற சட்ட நடைமுறைகளில் சாதாரண மனிதர்கள் குறுக்கிட்டுப் பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர். மார்க்கத்தைக் கற்பிப்பதற்காகவே படித்துப் பட்டம் பெற்று வருகின்ற ஆலிம்களின் செயல்பாடுகளைச் சாதாரண மக்கள் எந்த முன்யோசனையுமின்றி எதிர்ப்பது அவர்களின் அறியாமையை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. சிலர் தமக்குத் தெரியாதுஎன்பதையே தெரியாமல் இருப்பதால்தான் பிரச்சனையே உருவாகிறது. பெரும்பாலான இடங்களில் இதுதான் பிரச்சனையின் மூலவேர் ஆகும்.

வணக்க வழிபாடுகளில் மக்களிடம் மிகப்பெரும் அளவில் அறியாமை தாண்டவமாடுகிறது. ஏக இறைவனை வணங்கி அவனிடமே தம் தேவையைக் கேட்டுப் பெற வேண்டிய முஸ்லிம்கள், குறிப்பிட்ட தர்ஹாக்களுக்குச் சென்று அங்கு துயில்கொள்கின்ற இறைநேசர்களிடம் தம் தேவைகளைக் கேட்பது அல்லது அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யுமாறு அவர்களிடம் கேட்பது முஸ்லிம்களின் அறியாமையாகும். இறைநேசர்களாக இருந்து இறந்துபோனவர்களிடம் சென்று தமது தேவைகளுக்காகப் பரிந்துரை தேடுமாறுஎந்த இறைக்கட்டளையும் நபிக்கட்டளையும் இல்லாதபோது அவ்வாறு செய்வது அறியாமையன்றி வேறென்ன?

தர்ஹா உள்ளதால் இவன் அங்கு சென்று, அங்கு துயில்கொள்கிற இறைநேசரிடம் தனக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யுமாறு கேட்டு, அவரும் அல்லாஹ்விடம் அவனுக்காகப் பரிந்துரை செய்து, அதன் காரணமாக அவனது தேவையை அல்லது வேண்டுகோளை அல்லாஹ் நிறைவேற்றிவிட்டான் என்றால், தனது ஊரிலோ, நாட்டிலோ தர்ஹா இல்லாதவன் என்ன செய்வான்? அவன் எப்படித் தனது தேவையை நிறைவேற்றிக்கொள்வான்.  யாரிடம் சென்று பரிந்துரை செய்யுமாறு வேண்டுகோள் விடுப்பான்? ஆக, உலகின் எல்லா இடங்களிலும்  வாழுகின்ற மானிடர்க்கு அவரவரின் தேவையை அறிந்து நிறைவேற்றுபவன் அல்லாஹ்வைத் தவிர யாருமுண்டோ?

அத்தோடு ஆண்டுக்கொரு முறை உரூஸ்என்ற பெயரில் ஒரு கோலாகலமான கண்கவர் விழா நடத்தப்படுகிறது.  இஸ்லாமிய மார்க்கத்திற்கெதிரான எல்லாச் செயல்களும் அரங்கேற்றப்படுகின்றன. ஆடல், பாடல், மேளம், வானவேடிக்கை உள்ளிட்ட எல்லாம் உண்டு. ஆணும் பெண்ணும் ஒருவடோருவர் கலந்து, கலைந்து செல்லும் விழாக்கோலம் அறியாமையின் உச்சம்தானே?

ஆந்திர மாநிலத்தில் ஓர் ஊரில் இறைநேசர் என்ற போர்வையில் ஒருவர் உள்ளார். மக்களை முட்டாளாக்கித் தமது பேச்சுக்கு இணங்க வைத்து, ஐம்பதாயிரம் செலுத்தித் தம்மிடம் சொர்க்கத்திற்கான நுழைவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்புச் செய்தார். அவர்மீது கொண்டுள்ள கண்மூடித்தனமான நம்பிக்கையால் சுற்றியுள்ள ஊர்மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு சொர்க்கத்திற்கான நுழைவுச்சீட்டைவாங்கிச் செல்கின்றார்கள். இது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட செய்தி. அதை வாங்கிச் சென்றவர் இறந்துவிடும்போது, அவருடைய பிரேதத்தோடு (ஜனாஸா) அந்த நுழைவுச் சீட்டையும் சேர்த்துவைத்துப் புதைத்துவிட வேண்டும்.  அதைப் பார்க்கும் மலக்கு-வானவர் அவரைச் சொர்க்கத்தில் நுழைய அனுமதித்துவிடுவார் என்று போதித்து வருகிறார். பகுத்தறிவை இழந்த மக்கள் அதையும் பணம் செலுத்தி வாங்கிச் செல்கின்றனர். இது அவர்களுடைய அறியாமையின் உச்சம் அல்லவா?

சிறப்பிற்குரிய முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாள்களில் மக்கள் மத்தியில் பரவியுள்ள மூடநம்பிக்கைகளும் அறியாமையும் வேறுவிதமானவை. பஞ்சா தூக்குதல், தீ மிதித்தல் உள்ளிட்ட மூடப்பழக்கங்களைக் கடைப்பிடிக்கின்றார்கள். ஷீஆ பிரிவினர் தம்மைத்தாமே வருத்திக்கொள்ளும்பொருட்டு தம் உடலைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திக்கொள்கின்றார்கள். தம் முன்னோர் ஹுஸைன் (ரளி) அவர்களுக்குக் கர்பலா களத்தில் செய்த நம்பிக்கைத் துரோகத்திற்குப் பாவமன்னிப்பாக அதைக் கருதுகின்றார்கள். மற்றொரு விதத்தில், ஹுஸைன்  (ரளி) அவர்கள்மீது கொண்டுள்ள அன்பின்மிகுதியால் அவர்கள் பட்ட துன்பத்தைப்போன்று தாமும் அனுபவித்து துக்கம் மேற்கொள்கின்றார்கள். இவையெல்லாம் அறியாமையின் ஆட்டம் இல்லையா?

ஸஃபர் ஒரு பீடை மாதம் என முஸ்லிம்கள் சிலர் கருதி வருகின்றார்கள். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தில்தான் நோய்வாய்ப்பட்டார்கள். அதன்பின் அந்நோயின் காரணமாகவே அவர்கள் மரணத்தைத் தழுவினார்கள். எனவே அம்மாதம் பீடை என்ற மூடப்பழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றார்கள். அம்மாதத்தில் திருமணம் உள்ளிட்ட மங்கலமான நிகழ்வுகளை நடத்த மாட்டார்கள். இது ஒரு வகை அறியாமைதானே?

ரஜப் மாதத்தில் முஸ்லிம்கள் சிலர் சில சடங்குகளைப் பின்பற்றுகின்றார்கள். இமாம் ஜஅஃபர் ஸாதிக் (ரளி) அவர்களின் நினைவாக கீர்-பூரி ஃபாத்திஹா ஓதப்படுகிறது. ஃபாத்திஹா மட்டும் ஓதினாலும் பரவாயில்லை. ஆனால் விறகு வெட்டியின் கதைபடிக்கப்படுவதுதான் அதில் முக்கியமானது. மண் சட்டிகளுக்குச் சந்தனம் தடவி அதில் கீர் எனும் இனிப்புப் பானத்தை ஊற்றி வைத்து, பயபக்தியோடும் புனிதமாகவும் மேற்கொள்ளப்படுகிறது. வீட்டிற்கு வந்துதான் அதை உண்ண வேண்டும். வெளியில் யாருக்கும் அதைக் கொடுத்தனுப்பக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளும் அதில் உண்டு. இதுவும் ஒரு வகை அறியாமைதானே?

நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்துச் செயலைத் தொடங்குதல், கைரேகை பார்த்து எதிர்காலத்தைக் கணித்தல், பிறந்த நேரத்தையும் நட்சத்திரத்தையும் குறித்து வைத்துக்கொண்டு திருமணப் பொருத்தம் பார்த்தல் உள்ளிட்ட ஏராளமான மூடப்பழக்கங்களும் அறியாமைகளும் முஸ்லிம்களிடமும் மண்டிக் கிடக்கின்றன. ஏக இறைவனை ஏற்றுக்கொண்டுள்ள இஸ்லாமியச் சமுதாயத்தில் சடங்கு சம்பிரதாயங்களும் மூடநம்பிக்கைகளும் கோலோச்சி நிற்பது அவர்களின் அறியாமையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. அவர்கள் திருக்குர்ஆனையும் நபிமொழிகளையும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை என்று தெரிகிறது.

பிற மதச் சகோதரர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய முஸ்லிம் சமுதாயத்தினர், அவர்களே முஸ்லிம்களைக் கேலி செய்யும் விதத்திலான மூடநம்பிக்கைகளைப் பின்பற்றிச் செல்வது எவ்வளவு பெரிய அறியாமை! நம்முடைய நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் இறைவழிபாட்டு முறையையும் பார்த்து, மூடப்பழக்கங்களையும் தவறான கடவுள் கொள்கைகளையும் பின்பற்றி வாழ்வோர் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிலைமை தலைகீழாக உள்ளது. பிற சமுதாய மக்களை மிஞ்சும் அளவிற்கு நம் சமுதாய மக்களிடம் மூடப்பழக்கங்களும் அறியாமைகளும் மேலோங்கி இருப்பதால் பிற சமுதாய மக்கள் நம்மால் ஈர்க்கப்படவில்லை.

ஏகத்துவச் சிந்தனையை முறியடிக்கும்விதமாக ஷைத்தானின் சூழ்ச்சி வலையில் சிக்குண்டு கிடக்கின்ற முஸ்லிம்களை மீட்பதும் அவர்களைச் சொர்க்கப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வதும் மார்க்க அறிஞர்களின்  தலையாய கடமையாகும். ஆனால் அது குறித்து வருத்தப்படாத அறிஞர்கள் சிலர் முஸ்லிம்களின் அறியாமைச் செயல்களுக்குச் சில வியாக்கியானங்களையும் விளக்கங்களையும் கூறி, அவற்றைச் சரியென வாதிக்கின்றனர். ஆதலால் அறியாமை எல்லா இடங்களிலும் ஆட்டம் போட்டுக்கொண்டே இருக்கிறது.
=======================================